disalbe Right click

Sunday, December 3, 2017

ஒரே நாளில் இரு முரண்பட்ட தீர்ப்பு

வருத்தம் தெரிவித்தது சுப்ரீம் கோர்ட் 
புதுடில்லி: உத்தரகண்ட் உயர் நீதிமன்றம், ஒரே நாளில், ஒன்றுடன் ஒன்று, தொடர்புடைய இரு வெவ்வேறு வழக்குகளில், முரண்பட்ட இரு உத்தரவுகளை பிறப்பித்ததால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 10 ஆண்டுக்கு மேல் தீர்வு கிடைக்காததற்கு, உச்ச நீதிமன்றம் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், ரூர்க்கி நகரை சேர்ந்த பெண், ஷ்யாம் லதா. இவர், 2004ல், ஹரித்துவார் போலீஸ் உயரதிகாரியிடம் அளித்த புகாரில், தன் இரு சகோதரர்கள், தன் கையெழுத்தை போலியாக போட்டு, தனக்கு சொந்தமான கடையில் வாடகைக்கு இருப்பதாக ஆவணம் தயாரித்திருப்பதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதற்கிடையே, குற்றஞ் சாட்டப்பட்ட சகோதரர்களில் ஒருவர், போலியாக தயாரித்த வாடகை ரசீதை தாக்கல் செய்து, கடையில் இருந்து தன்னை காலி செய்யக்கூடாது எனக் கோரி, சிவில் வழக்கு தொடர்ந்தார்.
அதேசமயம், பெண் அளித்த புகாரை விசாரித்த விசாரணை அதிகாரி, வாடகை ரசீதுகளை அனுப்பி, கையெழுத்து நிபுணர் மூலம் சோதிக்க வேண்டும் எனக்கூறி, சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த சிவில் நீதிமன்றம், வாடகை ரசீதில் உள்ள கையெழுத்துகளை புகைப்படம் எடுத்து, சோதனை நடத்த அனுமதி அளித்தது.
இருப்பினும், தடயவியல் துறையை சேர்ந்த கையெழுத்து நிபுணர், வாடகை ரசீதில் உள்ள கையெழுத்துகளை புகைப்படம் எடுக்க நீதிமன்றம் சென்றபோது, அதற்கான அனுமதியை, நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால், வாடகை ரசீதில் உள்ள கையெழுத்தை சோதிக்காமல், போலியான கையெழுத்தை கண்டுபிடிக்க ஆதாரம் இல்லை என, இறுதி அறிக்கையை, விசாரணை அதிகாரி அளிக்க நேரிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண், கையெழுத்தை சோதிக்க அனுமதி மறுத்த சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை ஏற்று, வழக்கின் அனைத்து ஆவணங்களையும், ஜுடிஷியல் நீதிமன்றத்துக்கு மாற்றும்படி, செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, பெண்ணின் சகோதரர், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேசமயம், பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, ஜுடிஷியல் மாஜிஸ்திரேட், விசாரணை அதிகாரியின் விசாரணையை தொடர, அனுமதி அளித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்தும், பெண்ணின் சகோதரர், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் வேறு ஒரு மனு தாக்கல் செய்தார். இதனால், தொடர்புடைய ஒரே வழக்கில், இரண்டு வெவ்வேறு மனுக்கள், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகி இருந்தன.
இந்த மனுக்கள் மீது, 2006ல், ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஒரு நீதிபதி, வாடகை ரசீதில் உள்ள கையெழுத்துகளை புகைப்படம் எடுத்து ஆய்வு செய்ய, கையெழுத்து நிபுணருக்கும், விசாரணை அதிகாரிக்கும், அனுமதி அளித்தார். மற்றொரு நீதிபதி, அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்தார்.
முரண்பட்ட இரு உத்தரவுகளை எதிர்த்து, 2009ல், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்குகளை தொடர்ந்த பெண், தற்போது இறந்து விட்டார். அவரது சட்டரீதியிலான பிரதிநிதி, வழக்கை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆர்.கே.அகர்வால், சஞ்சய் கிஷண் கவுல் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில், ஒரே நாளில், தொடர்புடைய இரு வழக்குகளில், இரண்டு நீதிபதிகள் அளித்த முரண்பட்ட உத்தரவுகளால், கடை உரிமையாளரான பெண்ணுக்கு, அளவுகடந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு, நீதிமன்றம் வருத்தம் தெரிவிக்கிறது. அந்த பெண்ணின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது. வாடகை ரசீதில் உள்ள கையெழுத்துகளை, கையெழுத்து நிபுணர் ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 04.12.2017 

No comments:

Post a Comment