disalbe Right click

Sunday, December 3, 2017

தமிழகத்திற்கு மத்திய அரசு நெருக்கடி

வீட்டு வசதி திட்டங்களை கிடப்பில் போட முடியாது 
ஏழை மக்களுக்காக மேற்கொள்ளப்படும் வீட்டு வசதி திட்டங்களை, மத்திய அரசு நேரடியாக கண்காணிக்க துவங்கி உள்ளதால், தமிழக அரசின் வீட்டுவசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய திட்டங்களை தாமதப்படுத்தும் அதிகாரிகளுக்கு, நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஏழை மக்களுக்கான வீட்டுவசதி திட்டங்கள், குடிசை மாற்று வாரியம் வாயிலாகவும், குறைந்த வருவாய் பிரிவினருக்கான திட்டங்கள், வீட்டுவசதி வாரியங்கள் வாயிலாகவும் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், 2015ல், மத்திய அரசு, 'அனைவருக்கும் வீடு' திட்டத்தை அறிவித்தது. இதில், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு இலவச வீடு; நிலம் வைத்துள்ளோருக்கு வீடு கட்ட மானிய கடன்; குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு வீட்டுக்கடனில் வட்டி மானியம் ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் குடிசை மாற்று வாரியம் வாயிலாக, மொத்தம் 8.29 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு, விண்ணப்பங்கள் பெறுவது, பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட பணிகளை, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் உயர் அதிகார குழு, நேரடியாக கண்காணித்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, திட்டப்பணிகளையும் நேரடியாக கண்காணிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், 2017 -- 18ல், 7,000 கோடி ரூபாயில், இரண்டு லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கான பயனாளிகள் விபரங்களை, மத்திய அரசுக்கு அளிக்க உள்ளோம். இதன் அடுத்தகட்டமாக, வீடுகள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், தொழில்நுட்பம் போன்ற விபரங்களையும், முன்கூட்டியே, மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என, உத்தரவு வந்துள்ளது.
திட்டத்தில் கட்டப்படும் வீடு எண்ணிக்கை, அவற்றின் பரப்பளவு, கட்டுமான தொழில்நுட்பம், கட்டுமான பணிகள் துவங்கிய நாள், முடிக்கப்படும் நாள், தேர்வு செய்யப்பட்ட நிலம் மற்றும் திட்டப்பணிகளின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்களுன் கூடிய விபரங்களை, மத்திய அரசுக்கு பட்டியலாக அனுப்ப வேண்டும். இந்த விபரங்களை, மாநில அரசின் இணையதளத்தில் வெளியிட்டு, அதன் இணைப்பு முகவரியையும் அனுப்ப வேண்டும்.
மத்திய அரசின் இந்த உத்தரவால், திட்டப்பணிகளில் எவ்வித மாற்றத்தையும் அதிகாரிகளால் செய்ய முடியாது. மேலும், திட்டங்களின் உண்மை நிலவரம் வெளிப்படையாக மக்களுக்கு தெரியவரும். திட்ட பொறுப்பு அதிகாரிகள், ஒப்பந்ததாரருடன் சேர்ந்து, மோசடி செய்ய முடியாது. இத்தகைய கண்காணிப்பு திட்டப்பணிகளை விரைவுபடுத்துவதுடன், மோசடி அதிகாரிகளுக்கு கடிவாளம் போடுவதாக உள்ளது. இவ்வாறு கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 04.12.201

No comments:

Post a Comment