disalbe Right click

Tuesday, January 2, 2018

குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல்

தமிழகத்தில் குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல் துவங்குவதற்கான புதிய விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை சென்ற ஆண்டின் துவக்கத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில், "இளம் மழலையர் பள்ளிகள் எனப்படும் பிளேஸ்கூல் விதி தொகுப்பு-2015 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து 6 மாத காலத்துக்குள் இந்த பள்ளிகளுக்கான அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். விதிகளில் கூறப்பட்டுள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால், அந்த பள்ளிகளை மூட உத்தரவிடப்படும் என்பது முக்கிய விதிகளாகும்..
3 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கீகாரம்
அங்கீகாரம் அளிப்பது மற்றும் புதுப்பித்தலுக்கு அந்தந்த மாவட்டத்திலுள்ள தொடக்கக்கல்வி அதிகாரி தான் பொறுப்பு அதிகாரி ஆவார். இந்த அங்கீகாரம் பெற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்னர் மீண்டும் பள்ளி நிவாகத்தினர் புதுப்பிக்க வேண்டும். விதிகளுக்கு முரணாக நடந்து கொள்ளும் பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்பப்பெற அதிகாரிக்கு அதிகாரம் இந்த விதிகளின் மூலம் அளிக்கப்பட்டு உள்ளது.
தரைத்தளத்தில்தான் வகுப்புகள் இருக்க வேண்டும்
இந்த பள்ளி கட்டிடங்கள் சொந்த கட்டிடமாகவோ அல்லது 5 ஆண்டுகளுக்கு குறையாமல் குத்தகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமாகவோ இருக்க வேண்டும்அவை கான்கிரீட் கட்டிடங்களாகவும், சுற்றுச்சுவருடன் கூடியதாகவும் இருக்க வேண்டும். வகுப்பறை குழந்தைகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு, கண்டிப்பாக தரைதளத்தில் மட்டும் இருக்க வேண்டும்.
2 நுழைவுவாயில்கள் இருக்க வேண்டும்
வகுப்பறைகளின் கதவுகள், ஜன்னல்கள் எளிதில் தீப்பிடிக்காத பொருட்களாலும், வெளிப்பக்கம் திறப்பதாகவும் இருக்க வேண்டும். வகுப்பறைகளுக்கு 2 நுழைவுவாயில்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
கண்காணிப்பு கேமரா அவசியம் இருக்க வேண்டும்
கழிவறை, குடிநீர் வசதி மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவை சரியான முறையில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். குப்பைத்தொட்டி, அதிக ஒலி எழுப்பும் போக்குவரத்து சாலைகள், தொழிற்சாலைகள் மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவற்றின் அருகே பள்ளிகள் இருக்கக்கூடாது. பள்ளிப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி என்ன?
ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்றும், அவர்களும் பெண் ஆசிரியர்களாக மட்டுமே நியமனம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆசிரியை பிளஸ் 2 படித்து, அதன் பின்னர் டி.டி.எட், டி.எட், ஹோம் சயின்ஸ் ஆகியவற்றுக்கான பட்டயப்படிப்பு படித்து இருக்க வேண்டும் அல்லது ஹோம் சயின்சில் பட்டம், பி.எட், குழந்தைகள் படிப்புக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
ஒரு வகுப்புக்கு 15 குழந்தைகள் மட்டுமே:
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ஆம் தேதியுடன் 1 வயது 6 மாதத்தினை பூர்த்தி செய்த குழந்தைகளை மட்டுமே பள்ளியில் சேர்க்க வேண்டும்பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் வயது 1 வயது 6 மாதம் முதல் 5 வயது 6 மாதம் வரை இருக்கலாம்ஒரு வகுப்புக்கு 15 குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்குழந்தைகள் அனுமதிக்கான நுழைவுத்தேர்வு எழுத்து வடிவிலோ, வாய்வழியாகவோ இருக்கக்கூடாது.
சரியான நேரம் பராமரிக்க வேண்டும்
பள்ளி நடக்கின்ற ஒவ்வொரு பகுதி நேரமும் 3 மணி நேரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு பகுதி நேரத்தில் படிக்கும் குழந்தைகளை அடுத்த பகுதி நேரத்தில் சேர்க்கக்கூடாது. காலை 9.30 மணிக்கு முன்பாக பள்ளிகளை கண்டிப்பாக திறக்கக்கூடாது. மாலை 4.30 மணியுடன் நிறைவு செய்துவிட வேண்டும்.
பாதுகாப்பு கருவிகள் மிக அவசியம்
பெற்றோரின் ஒப்புதலின்படி, பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட வேண்டும். முதலுதவி பெட்டி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகள் யாராவது தண்டிக்கப்பட்டால், அந்த பள்ளி மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி பஸ், வேன் மற்றும் ஆட்டோக்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக  செய்யப்பட்டு இருக்க வேண்டும். வாகனங்களின் பராமரிப்புகளை அடிக்கடி பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். டிரைவருடன் ஒரு உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும்!
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 02.01.2018

No comments:

Post a Comment