disalbe Right click

Saturday, February 10, 2018

நான் தீர்த்து வைத்த வழக்கு

கடந்த சில வருடங்களுக்கு முன்னால், ஒரு நாள்!
உள்ளூர் நண்பர் ஒருவரிடமிருந்து செல்போன் மூலமாக அழைப்பு வந்தது. அவசரமாக வரச் சொன்னதால் உடனே கிளம்பி அவரது மளிகைக் கடைக்குச் சென்றேன். எனது நண்பர் அங்கிருந்த இன்னொருவரை அறிமுகம் செய்து வைத்தார். அவருடைய பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார். நானும் சரி என்றேன். நண்பரின் நண்பர் என்னிடம் தனது பிரச்சனையைக் கூறினார். 
இவரது பிரச்சனை என்ன?
இவர் ஒரு அரிசி மொத்த வியாபாரி. ஒரு மளிகைக் கடைக்காரருக்கு கடனுக்கு அரிசி விற்பனை செய்து வந்துள்ளார். நாளடைவில் அந்தக் கடன் ரூ.இரண்டு லட்சத்தை தாண்டிவிட்டது. கடனை நெருக்கி கேட்டபோது, கடன் வாங்கியவர் வேறு வழியின்றி, தன்னுடைய குடும்பச் சொத்து ஒன்று உள்ளதாகவும், அதில் தனது பங்கை, தரவேண்டிய கடனுக்காக இவருக்கு தருவதாகவும் இவரிடம்  கூறியுள்ளார். இவரும் அந்தச் சொத்தை நேரில் சென்று பார்த்துள்ளார். எட்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு அது. நான்கு சகோதரர்களுக்குப் பாத்தியப்பட்டது. மீதியுள்ள மூன்று பங்குதாரர்களையும் சந்தித்து அவர்களுக்கும் பணம் கொடுத்து அந்த வீட்டை முழுதாக எழுதிக் கொள்ளலாம் என்று வேறு வழியின்றி இவர் முடிவு செய்துள்ளார்.
பத்திரம் பதிவு
மீதியுள்ள மூன்று பங்குதாரர்களில் ஒருவர் இறந்துவிட்டார். உயிரோடு இருந்த அவர்களில் இருவர் தங்களுக்கு இருந்த கஷ்டம் காரணமாக, இவருக்கு எப்படியாவது சொத்தை விற்றுவிடுவோம் என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர். அதனால் இறந்து போன பங்குதாரரின் குடும்பத்தை அணுகியுள்ளனர். அந்தக் குடும்பத்தில் இறந்தவருடைய மனைவி, ஒரு மகன், இரண்டு மகள்கள் என்று நான்கு  வாரிசுதாரர்கள்.   இவர்களில் மகள்கள் இரண்டு பேரும் திருமணம் ஆனவர்கள். உள்ளூரில் வசிப்பவர்கள். திருமணமாகாத மகனுடன் அவரது தாய்  வெளிநாட்டில் இருந்துள்ளார். தாயை தொடர்பு கொண்ட போது அவரும் விற்பனைக்கு சம்மதித்துள்ளார். ஆனால், பத்திரத்தில் கையெழுத்துப் போட வரமுடியாத சூழ்நிலை. ஆகையால் இங்கிருந்த மகள்கள் மட்டும் கையெழுத்து போட்டு அவர்களின் தந்தைக்குரிய பங்கை பெற்றுக் கொண்டனர். 
அம்மாவுக்கு வந்த ஆசை
ஒரு வருடம் கழித்து வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த அம்மாவிடம் மகள்கள் பணத்தைக் கொடுத்தனர். நால்வரும் பணத்தை பங்கு போட்டு பிரித்துக் கொண்டுள்ளனர். இன்னும் பணம்  வேண்டும் என்ற ஆசை அம்மாவுக்கு வந்துள்ளது. தன்னுடைய கையெழுத்தும், தன்னுடைய மகன் கையெழுத்தும் இல்லாத காரணத்தால், அந்த பத்திரம் செல்லாது! என்று வழக்கறிஞர் அறிவிப்பை அரிசி வியாபாரிக்கு அனுப்பியுள்ளார் அந்த அம்மா.
அதிர்ச்சியடைந்த அரிசி வியாபாரி
இதைக் கண்டவுடன் அந்த அரிசி வியாபாரிக்கு அட்டாக்கே வந்துவிட்டது. எட்டு லட்சம் போச்சா? என்று எனது நண்பரிடம் கூறி அவர் மிகவும் வருத்தமடைந்துள்ளார். இதனைக் கேள்விப்பட்ட மீதமுள்ள மூன்று பங்குதாரர்களுக்கும் ஒரே சந்தோஷம். ஆஹா, இன்னும் நமக்கு பணம் தருவார்கள்! அல்லது இன்னொருவருக்கும் இந்த வீட்டை விற்கலாம்! என்ற எண்னத்தில் பேசாமல் இருந்தார்கள். 
இந்த நேரத்தில்தான் எனது ஞாபகம் வந்து என்னை அழைத்து ஆலோசனை கேட்டனர். என்ன முடிவில் நீங்கள் இருக்கிறீர்கள்? என்று அவர்களிடம் முதலில் கேட்டு அறிந்து கொண்டேன். அவர்களிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு இன்னும் ரூ.50 ஆயிரம் அவர்களுக்கு கொடுத்துவிடலாம் என்ற முடிவில் இருப்பதாக  அந்த அரிசி வியாபாரி கூறினார். சரி, நான் பேசிப் பார்க்கிறேன் என்று கூறி அவரை ஆறுதல் படுத்தினேன்.
சமாதானப் பேச்சு
அந்த அம்மாவின் முகவரி பெற்று வீட்டிற்குச் சென்றேன். அவரது மகன் வீட்டில் இல்லை. அந்த அம்மா  இரண்டு லட்சம் வாங்கிக் கொடுங்கள்; கையெழுத்து போட்டு விடுகிறோம் என்று கூறினார். முப்பதாயிரம் வாங்கித் தருவதாக கூறினேன். பேச்சுவார்த்தை பல நாட்கள் நடந்தது. பயன் ஒன்றும் இல்லை. வேறு வழியைத்தான் நாட வேண்டும் என்று அரிசி வியாபாரியிடம் கூறினேன். அதனை என்னவென்று அறிந்து கொண்டு அவரும் சம்மதித்தார்.
நாங்கள் அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பு
அரிசி வியாபாரியின் பேரில், விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்ட அனைவருக்கும் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பப்பட்டது. அதில் மோசடியாக சொத்தை விற்பனை செய்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கிரையப் பத்திரத்தில், “இதில் எந்தவிதமான வில்லங்கமும் இல்லை. அவ்வாறு இருந்தால் அதனை எங்களது சொந்தச் செலவில் தங்களுக்கு தீர்த்து வைப்போம்!” என்று எழுதி அவர்கள் அனைவரும் கையொப்பம் இட்டிருந்ததை மேற்கோள் காட்டி இந்த வழக்கறிஞர் அறிவிப்பு அவர்களுக்கு அனுப்பப்பட்டது.
வழிக்கு வந்த அம்மா, கையெழுத்துப் போட்டார் சும்மா!
கையெழுத்துப் போட்ட அனைவருக்கும் வழக்கறிஞர் அறிவிப்பு  பயத்தை உண்டாக்கியது. அவர்கள் அனைவரும் அந்த அம்மாவிடம் சண்டைக்குச் சென்றனர். சமாதானம் பிறந்தது. அதன்பிறகு அவரை அழைத்துச் சென்று வேறோரு பத்திரத்தில், இந்த சொத்துக்குண்டான பணத்தை பெற்றுக் கொண்டதாக அவரிடமும், அவரது மகனிடமும் கையெழுத்துக்களைப் பெற்று, அதனை முறைப்படி பத்திர அலுவலகத்தில் பதிவு செய்தோம். பிரச்சனை முடிந்தது.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.02.2018 

1 comment:

  1. அருமையான தீர்ப்பு

    ReplyDelete