disalbe Right click

Monday, August 6, 2018

காவல்துறையினருக்கு வார விடுமுறை

காவல்துறை நமது நண்பன்
காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்க வேண்டுமா? என்ற கருத்தை முன்வைத்து சமீபத்தில் ஒரு நாளிதளில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதனை நான் படிக்க நேர்ந்ததால் இந்த கட்டுரையை எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது.
அவர்களும் மனிதர்கள்தான்!
காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்க வேண்டுமா? என்ற கேள்வியையே நான் வெறுக்கிறேன். அவர்கள் என்ன மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கும் குடும்பம், மனைவி, குழந்தைகள் என்று நமக்கு உள்ளதுபோல் அனைத்தும் இருக்கிறது. மற்ற துறையினரைவிட காவல்துறையினர் எல்லா நாட்களிலும் பணிபுரிவதால் பண்டிகை நாட்களில் கூட தங்கள் குடும்பத்தாருடன் இருக்க முடிவதில்லை.
உள்நாட்டில் பாதுகாப்பு அளிப்பவர்கள்
எல்லையில் நமது இராணுவத்தினர் நாட்டுக்கு வெளியில் இருந்து நமக்கு வருகின்ற ஆபத்துகளை தடுக்க இரவென்றும், பகலென்றும் பார்க்காமல் பணிபுரிகிறார்கள். அதேபோல் உள்நாட்டில் உள்ள சமூக விரோதிகளிடம் இருந்து நம்மைக் காக்க உழைப்பவர்கள் காவல்துறையினர். அரசு நிர்வாக அதிகாரிகளும், காவல்துறை மேலதிகாரிகளும் கலந்து பேசி காவலர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுமுறை விடலாம். ஒரு வேளை அவர்களது விடுமுறை நாளில் எதிர்பாராவிதமாக வேலை எதுவும் பார்க்க நேர்ந்தால், அந்த நாளுக்கு பதிலாக வேறு ஒரு நாளை ஏற்பாடு செய்து அவர்களுக்கு அந்த விடுமுறையை அளிக்கலாம்.
குறைவான எண்ணிக்கை
காவலர்களின் எண்ணிக்கையை காவல்துறையில் அதிகப்படுத்த வேண்டும். தற்போது உள்ள காவலர்களின் எண்ணிக்கையை வைத்து அதன் மேலதிகாரிகள் நிர்வாகம் செய்யமுடியவில்லை. ஒரு முனையில் கலவரம் நடைபெறுகிறது என்றால், பல முனைகளில் இருந்து காவலர்கள் அங்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கு சென்று இறங்கிய நிமிடத்தில் இருந்து பணி புரிய வேண்டும். இது அவர்களுக்கு பணிச்சுமையையும், உடல்சோர்வையும் கொடுக்கிறது. அரசியல் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நியமிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
காவல்துறை நமது நண்பன்
காவல்துறை பணி என்பது மக்களிடம் நெருங்கிப் பழகும் பொறுப்பான பணி ஆகும். அரசுப் பணியாளர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் வழங்க வேண்டும். வெயிலானாலும், மழையானாலும் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை அவர்கள் செய்ய வேண்டியதுள்ளது. வாரம் முழுவதும் பணிபுரிவதால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. குடும்பத்தை கவனிக்க நேரமில்லை.
குறைகள் கண்டிப்பாக மறையும்!
காவலர்களின் பணியில் பல குறைகள் இப்போது தெரிகிறது. அதனால் அவர்கள் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளாகின்றனர். ஆளுங்கட்சியினரின் தலையீட்டாலும், சில தவறான மேலதிகாரிகளின் வழிகாட்டுதல்களினாலும் அவர்கள் சரியான பதில் கூட அளிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டும். சுயமாக சிந்தித்து முடிவெடுக்க அவர்களால் முடியாததற்கு பணிச்சுமை முக்கிய காரணம்.
இவர்களுக்கு வாரவிடுமுறை அளித்தால், இந்தத்துறையில் இப்போது உள்ள குறைகள் கண்டிப்பாக மறையும் என்பது எனது கருத்து.
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 06.08.2018

No comments:

Post a Comment