disalbe Right click

Showing posts with label உத்தரவு. Show all posts
Showing posts with label உத்தரவு. Show all posts

Sunday, November 26, 2017

நில சீர்திருத்த துறையின் உத்தரவு, ரத்து

நிலத்தை கையகப்படுத்திய, நில சீர்திருத்த துறையின் உத்தரவு, ரத்து
நில ஆவணங்கள் தகவல்: பதிவுத்துறைக்கு உத்தரவு
சென்னை, ஆவணங்களை பதிவு செய்த உடன், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தெரிவிக்கும்படி, பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர், சரோஜினி என்பவரிடம், 1982ல், சொத்து ஒன்றை வாங்கினார்.
ஆனால், அந்த நிலத்தை, வகை மாற்றம் செய்யவில்லை. இதையடுத்து, அந்த நிலத்தை, நில சீர்திருத்த துறை, தன் கட்டுப்பாட்டிற்குள் எடுத்தது.
இதை எதிர்த்து, நிலத்தின் உரிமையாளர் ஜெயலட்சுமி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு, நீதிபதி, எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, 'நிலத்தின் சொந்தக் காரருக்கு தெரியப்படுத்தாமல், முன்னாள் உரிமையாளருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, இடத்தை கையகப்படுத்தி உள்ளனர். இது, விதிமுறைகளுக்கு முரணானது' என்றார்.
அப்போது, நில சீர்திருத்த துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, 'தமிழக நகர்ப்புற நில ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், உரிய நடைமுறைகளை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட, நீதிபதி அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
எப்போது நிலம் மற்றொருவருக்கு விற்பனை செய்யப்பட்டதோ, அப்போதே, அந்த நிலத்தின் சொந்தக்காரராக, வாங்கியவர் மாறி விடுகிறார். எனவே, அவருக்கு தான், நில சீர்திருத்த துறை, இடத்தை வகை மாற்றம் செய்வது தொடர்பான, நோட்டீசை அனுப்ப வேண்டும்.
ஆனால், அப்படி எதுவும் செய்யாமல், சம்பந்தப்பட்ட இடத்தில், நோட்டீசை ஒட்டியுள்ளனர்.
உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், அதற்கான கட்டணத்தை செலுத்தி, அவர், அந்த நிலத்திற்கான ஆவணங்களை, வகை மாற்றம் செய்து விடுவார்.
ஆனால், இந்த நடைமுறை, இந்த வழக்கில் கடைப்பிடிக்கவில்லை. எனவே, மனுதாரரின் நிலத்தை கையகப்படுத்திய, நில சீர்திருத்த துறையின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.
ஒரு நிலத்தை பதிவு செய்த பின், அந்த பதிவு தொடர்பான விபரங்களை, சம்பந்தப்பட்ட துறைக்கு தெரியப்படுத்தாததால் வந்த பிரச்னை இது.
எனவே, நிலம் வகை மாற்றம் செய்வதற்கு ஏதுவாக, நிலம் பதிவு செய்யப்பட்ட உடன், அதுகுறித்து, நில சீர்திருத்த துறைக்கு தெரிவிக்கும்படி, பதிவு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அதற்கான சுற்றறிக்கை அனுப்புமாறு, பதிவு துறை, .ஜி.,க்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர் நாளிதழ் - 26.11.201

Wednesday, October 25, 2017

கட் - அவுட்: ஐகோர்ட் அதிரடி

கட் - அவுட்: ஐகோர்ட் அதிரடி
சென்னை:'பேனர்கள் மற்றும், 'பிளக்ஸ்' போர்டுகளில், உயிரோடு இருப்பவர்களின் படங்கள் இடம்பெறக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்த சுற்றறிக்கையை, மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகளுக்கு, தலைமை செயலர் அனுப்ப வேண்டும் என்றும், தெரிவித்துள்ளது.
சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, திருலோச்சனா குமாரி தாக்கல் செய்த மனு:
அரும்பாக்கம், ராணி அண்ணா நகர், நாவலர் தெருவில் வசித்து வருகிறேன். என் வீட்டின் முன், ஓர் அரசியல் கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது; மதி என்பவர், அதை நிறுவினார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்தபோது, என்னை மிரட்டினார். இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் எட்டாவது மண்டல உதவி ஆணையருக்கு, மனு அனுப்பினேன். 'வீட்டின் உள்ளே நுழைய முடியாமல், ஆக்கிரமிக்கும் வகையில் தடுத்துள்ளனர்' என, அதில் கூறியிருந்தேன்.
வழக்கு பதிவு
அரும்பாக்கம், போலீஸ் இன்ஸ்பெக்டரிடமும் புகார் கொடுத்தேன்; எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பின், கொடி, போர்டை அகற்றிவிட்டு, மீண்டும் அதே இடத்தில்மற்றொரு போர்டை வைத்தனர். மதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டும், புகாரை பெற,இன்ஸ்பெக்டர் மறுத்துவிட்டார். 'எனக்கு எதிராக, வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்படும்' எனக்கூறி, அசிங்கமாக திட்டினார்.
வீட்டின் முன் கட்டப்பட்ட கட்சி கொடியை அகற்றவும்,கட்சியின் பேனர், போர்டை அகற்றவும், மாநகராட்சிக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில், சிறப்பு பிளீடர் திவாகர் ஆஜரானார்.
மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், ''மனுதாரரின் வீட்டின் முன் வைக்கப்பட்ட பேனர் மற்றும் கொடிகள் அகற்றப் பட்டு விட்டன; நகரில், உரிமையாளர்களின் ஒப்புதல் இன்றி, சுவர்களில் வரைவது மற்றும் பேனர்கள், கொடிகள் வைக்கும் சம்பவங்கள் நடக்காது,'' என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரின்ஸ் பிரேம்குமார், ''முதலில், பேனர் மற்றும் கொடிகளை அகற்றினர். பின், மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டன,'' என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
தனிப்பட்ட முறையில், மதி என்பவருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியும், 'அப்படி ஒரு நபர் இல்லை' என, திரும்பி வந்தது.பேனர்கள் மற்றும் கொடிகள் அகற்றப்படவில்லை என்றால், அவற்றை உடனடியாக அகற்றி விடுவதாகவும், எதிர்காலத்தில், இப்படி நடக்காது எனவும், மாநகராட்சி மற்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது; இதை, நான் பதிவு செய்கிறேன்.
பேனர் மற்றும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பம் நிறுவப்பட்டால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். அப்படி அகற்றும்போது, யாராவது ஆட்சேபித்தால், அவர்களின் பெயர் மற்றும் முகவரியை, போலீசுக்கு வழங்க வேண்டும். அப்போது தான், அவர்களுக்கு எதிராக, போலீசார் வழக்கு பதிவு செய்ய முடியும்தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சுத்தமான சூழ்நிலையை பேணவும், குடியிருப்புகள், கட்டடங்களின் சுவர்களில் தேவையின்றி ஓவியங்கள்வாசகங்கள் எழுதுவதை தவிர்க்கவும், தமிழக அரசுக்கு, இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. சுத்தமான சூழ்நிலை நிலவு வதை, தலைமை செயலர் உறுதி செய்ய வேண்டும்.
சுற்றறிக்கை
எனவே, திறந்தவெளிகள் அசுத்தப்படுத்துவது தடுக்கும் சட்டம் அமல்படுத்துவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், விளம்பர போர்டுகள் வைப்பதற்கு, அதிகாரிகள் அனுமதி அளித்தாலும், அவற்றில், உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் இடம் பெறாமல் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும். 'ஸ்பான்சர்' செய்பவர்களின் புகைப்படமும், இடம் பெறாமல் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும்.
இதுகுறித்து, பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி வார்டுகளில் உள்ள, அனைத்து நிர்வாகிகளுக் கும், தலைமை செயலர், சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 24.10.2017