disalbe Right click

Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Sunday, September 11, 2016

வேட்பாளரின் தகுதி


வேட்பாளரின் தகுதி - என்ன செய்ய வேண்டும்?

ஓட்டளித்து வேட்பாளரைத் தேர்வு செய்யும் வாக்காளராகிய நமக்கு என சில தகுதிகளும், தகுதிக்கேடுகளும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போலவே, வேட்பாளருக்கு என சில தகுதிகளும், தகுதிக்கேடுகள் பற்றியும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ( Representation of the People Act 1951) -ல் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் வரையறை செய்யப்பட்டிருக்கின்றது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பாகம் II ல் தகுதிகள் மற்றும் தகுதிக் கேடுகள் எனும் தலைப்பில் அத்தியாயம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் குறிப்பிடப் பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினருக்கான தகுதியாக, இந்தியாவில் பாரளுமன்றத் தொகுதி ஒன்றில் அவர் வாக்காளராக இருந்தால் மட்டுமே ஏதேனும் மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசத்தின் பிரதிநிதியாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படத் தகுதியுடையவர் ஆவார். இதில் உட்பொருளாக மற்றொன்றும் குறிப்பாகிறது.

வாக்காளர் தகுதி:
வாக்காளராக அவர் இருக்க வேண்டும் எனும் வாசகத்தின்படி, அவர் வாக்காளராக இருக்க வேண்டும் எனில் சென்ற கட்டுரையில் நாம் பார்த்தபடி வாக்காளருக்கான தகுதிகளோடும், தகுதிக் கேடுகள் ஏதும் இல்லாமலும் இருக்க வேண்டும். வேட்பாளராக இருப்பவர், வாக்காளராக இருக்க வேண்டும். 

வாக்காளராக இருப்பவர், இந்திய பீனல் கோடு படி 171 E (Punishment for Bribery) 171F-ன் கீழ் (Punishment for undue influence or persination at an election) ஆகிய குற்றங்களின் படி தண்டனை பெற்றவராக இருக்ககூடாது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி  
பிரிவு 8A (1) ன் கீழ் குடியரசுத் தலைவரின் முடிவினால் ஏதேனும் காலத்திற்கு தகுதியின்மை செய்யப்பட்டிருந்தால் அதே காலத்துக்கு வாக்களுக்கும் உரிமை கிடையாது.

பிரிவு 125 (தேர்தல் தொடர்பான குற்றச் செயல்கள்)
பிரிவு 135 (ஓட்டுச் சாவடியில் இருந்து ஓட்டுச் சீட்டுகளை அப்புறப்படுத்துவது ஒரு குற்றச் செயலாக இருத்தல்)
பிரிவு 136 (பிற குற்றச் செயல்களும் அதற்கான தண்டனைகளும்) ஆகிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருக்கக்கூடாது.

மேற்சொன்ன பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படத்தக்க ஒர் குற்றத்திற்காக குற்றத் தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பின் அவர் குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் ஓட்டளிக்கத் தகுதியற்றவர் ஆகிறார். 

ஆக, வாக்காளராக இருக்க மேற்சொன்ன சூழலில் இல்லாதவராகவும், மேலும் வாக்காளருக்கான தகுதிகளான வயது வரம்பு, வாக்காளர் பட்டியலில் பெயர் இருத்தல் ஆகியவையும் கொண்ட நபர் ஒருவர் வாக்காளர் ஆக ஆன பின்பு, வேட்பாளராகலாம் என்றே இந்தச் சட்டம் சொல்கிறது. 

அதாவது மேற்சொன்ன சூழலில் ஒருவர் தண்டிக்கப்பட்டிருந்தால் அவருக்கு வாக்காளராகும் தகுதி இல்லை. 

 வாக்காளர் ஆகாதவர் வேட்பாளராக இயலாது.

வேட்பாளராக தகுதி
மக்களவை உறுப்பினருக்கான தகுதிகளாக பிரிவு 4 சொல்வதாவது,

ஏதேனும் மாநிலத்தில் அட்டவணை சாதியினருக்கு இடம் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அவர் அந்த மாநிலத்தின் அல்லது வேரு ஏதேனும் மாநிலத்தின் அட்டவணை சாதியினைச் சார்ந்தவராகவும் மற்றும் ஏதேனும் மக்களவைத் தொகுதியில் வாக்களராகவும் இருக்க வேண்டும்.

பிரிவு 5 மாநில சட்டமன்றங்களின் உறுப்பினருக்கான தகுதிகள் என இவற்றையே சொல்கிறது.

சட்டமன்ற மேலவை உறுப்பினருக்கான தகுதிகள் என்பது, மேற்சொன்னபடியே, ஒருவர் ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவை இடத்தை தேர்தல் மூலம் நிரப்பபட் அதேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் அந்த மாநிலத்தின் வேறு ஏதேனும் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளராக இருக்கவேண்டும், 

மற்றும் மாநில சட்டமன்ற மேலவையில் ஒர்ர் இடத்தை நிரப்ப ஆளூனர் மூலம் நியமனம் செய்யப்பட தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் அந்த மாநிலத்தில் சாதாரணமாக வசிப்பிடம் கொண்டிருத்தல் வேண்டும் என சட்டமன்ற மேலவை உறுப்பினருக்கான தகுதிகள் பற்றி இதே சட்டத்தின் பிரிவு 6 கூறுகிறது.

தகுதியின்மைகள்
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு உறுப்பினராக தகுதிகளைப் பார்த்தோம். தகுதியின்மைகள் பற்றி இதே சட்டத்தின் அத்தியாயம் III விளக்குகிறது. இதில் பிரிவு 8-ல் ஒருவர் தண்டனைக் கைதியாக விதிக்கப்பட்டிருந்தால் கீழ்கண்ட தண்டனைக்குரியவராவார்.

இந்திய குற்றவியல் விதித்தொகுப்பு (மத்திய சட்டம் XLV-1860ல்)-ன் படி…

மதச் சார்பாக, இனம், பிறந்த இடம் குடியிருப்பு, மொழி, மற்ற பிற வகையில் பகைமை வளர்ப்பவராக, 
அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவராக (பிரிவு 152 A)
இந்தியன் பீனல் கோடு -படி…

லஞ்ச குற்றம் (பிரிவு171 E),
தகாத செல்வாக்கு செய்பவராக அல்லது தேர்தலில் ஆள் மாறாட்டம் செய்தவராக(171F),படி தண்டனை பெற்றவராக இருக்கக்கூடாது.

பலாத்கார குற்றங்கள் (பிரிவு 376 - (1)), 376 - (2),
பலாத்காரம் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் சாவுக்கு காரணமாக இருத்தல்/வெஜிடேடிவ் நிலைக்கு ஆளாக்குதல்(பிரிவு376 A)

விவாகரத்து வழக்கு நிலுவையில் பிரிந்திருக்கும் மனைவியுடன் இணைதல் (பிரிவு376 B,)

Sexual intercourse by person in authority (பிரிவு376 C),
கூட்டுக் கற்பழிப்பு (பிரிவு376 D),

அல்லது

பெண்ணுக்கு கணவனால் அல்லது கணவனின் உறவினரால் கொடுமை செய்த குற்றத்திற்காக (பிரிவு 498-A),

Protection of civil rights 1955 -ன் கீழான தீண்டாமை போதித்தல், நடைமுறைப்படுத்துதல் போன்ற குற்றங்கள்,

சுங்க வரிச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்தல்,

Unlawful Activities (prevention) Act 1967 -இன் கீழ் சட்டத்திற்கு புறம்பான சங்கத்தில் உறுப்பினராக இருத்தல்

Foreign Exchange Act 1973, போதை மருந்து மற்றும் மயக்கம் தரும் பொருட்கள் சட்டம், Terrorist and Disruptives Activities (Prevention) Act-ன் பிரிவுகள் 3, 4 ந் கீழான குற்றங்கள்,

எனப் பலவேறு குற்றங்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8ல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 

அவற்றின் கீழான குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர் எவரும் பாராளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு உறுப்பினராக தகுதியாக முடியாது.

மேலும், தேர்தலின் போது ஊழல் புரிந்ததாகக் குற்றச் சாட்டு ஏதேனும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து, மேலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 99ல் குறிப்பிடப்பட்டவை காரணமாக நீதி மன்றத்தால் ஆணை வெளியிடப்பட்டிருந்து, அத்தகைய உத்தரவு/ஆணை அமலுக்கு வரும் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் தகுந்த அதிகாரியினால், அந்த நபர் தகுதியின்மையாக்கப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா? 

வேண்டும் எனில் அத்தனை காலத்திற்கு அது தகுதியின்மையாகக் கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கும் பொருட்டு குடியரசுத் தலைவரிடம் கருத்து சமர்ப்பித்தல் வேண்டும். அப்படியான தகுதியின்மை அந்த உத்தரவு அமலுக்கு வரும் தேதியில் இருந்து 6 வருடங்களுக்கு மேற்படக் கூடாது.

ஊழல் அல்லது தேசப்பற்றுறுதியின்மைக்காகப் பணி நீக்கத்தின் பேரில் தகுதியின்மையும் நேரலாம். 

அதாவது இந்திய / மாநில அரசின் கீழ் அரசுப் பதவி வகித்து, ஊழல் அல்லது தேசப்பற்றுறுதி காரணமாக வேலை இழந்திருந்தால், அதிலிருந்து 5 ஆண்டுகள் வரை தகுதியின்மை செய்யப்படுதல் வேண்டும்.

அரசுடன் வியாபார ஒப்பந்தம் இருந்தால்...
மேலும், அரசுடன், வியாபார ஒப்பந்தம் ஒன்று நிலுவையில் இருக்கையில், அவ்வாறு இருக்கின்ற வரையில் தகுதியின்மை ஆகும். அதாவது, அரசுடன் நேரடி காண்ட்ராக்டில் இருக்கும் ஒருவர், அப்படி இருக்கின்ற சமயத்தில், தகுதியின்மை ஆனவர் ஆகிறார்.

அதே சமயத்தில் அவர் அந்த ஒப்பந்தத்தின் கீழான தன் பகுதியை முடித்திருந்து, ஆனால் ஒப்பந்தத்தின் தன் பகுதியை அரசு நிறைவேற்றவில்லை என்பதால் மட்டுமே ஒப்பந்தம் நிகழ் நிலையில் இருப்பதாகக் கருதப்படக்கூடாது.

அரசு நிறுவனத்தின்கீழான பதவி வகித்தல் காரணமாகவும் தகுதியின்மை ஏற்படலாம்.

 மத்திய / மாநில அரசின் மூலதனப் பங்கு 25%க்கு குறையாமல் உள்ள ஏதேனும் நிறுவனத்தில் / கழகத்தில் மேலாண்மை முகவராகவோ, அல்லது மேலாளர், செயலாளராக இருப்பின் அவ்வாறு இருக்கும் வரை தகுதியின்மையாகும்.

தேர்தல் செலவு கணக்கு
தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்வதற்குத் தவறியுள்ளார் என்றாலோ, அவ்வாறு செய்வதற்கான உரிய சரியான காரணம் ஏதும் இல்லாதிருந்தாலோ, தேர்தல் ஆணையம் அரசிதழின் வாயிலாக அவர் தகுதியின்மை அறிவிக்கலாம்.

ஆனால், தேர்தல் ஆணையமானது காரணங்களைப் பதிவதன் பேரில், விதியின் ஏதேனும் தகுதியின்மையை நீக்கலாம், ஆல்லது தகுதியின்மைக் காலத்தைக் குறைக்கலாம். ஆனால் பிரிவு 8A - ல் குறிப்பிட்ட தகுதியின்மைகள் தவிர…

பொதுவாகச் சொன்னால்..

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் தகுதி இழந்திருந்தல்,
தீர்க்கப்படாத கடனாளி, 
இந்தியக் குடிமகனாக இல்லாதிருத்தல், 
வெளீநாட்டின் குடியுரிமையை விரும்பிப் பெற்றிருத்தல், அல்லது ஒரு வெளி நாட்டின் மீது பற்றுக் கொண்டிருப்பதாக ஒப்புக் கொண்டிருத்தல்,
நீதி மன்றத்தால், மனநிலை சரியில்லாதவர் என அறிவிக்கப்பட்டிருத்தல்,
அரசின் கீழ் ஆதாயம் ஈட்டக்கூடிய பதவியில் இருத்தல் ஆகியவை உறுப்பினராகும் தகுதியின்மைகள் ஆகும்.

உறுப்பினர் தகுதி இழப்பு 
ஒரு சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரே நபர் உறுப்பினராக இருத்தல் இயலாது.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் சட்ட மன்ற உறுப்பினராக ஒரே நபர் ஒரே நேரத்தில் இருத்தல் இயலாது.

ஒரு் சட்டப்பேரவை உறுப்பினர் தமது கையெழுத்தில் பேரவைத் தலைவருக்கு விலகல் கடிதத்தை அனுப்பி பேரவைத் தலைவரால் அது ஏற்றுக் கொள்ளப்படுமே ஆனால், அவர் அப்பதவியை இழப்பார். 

ஆனால் அப்பதவி விலகல் தன்னிச்சையானதல்ல என்ற முடிவுக்கு பேரவைத் தலைவர் வருவாரேயானால் அப்பதவி விலகல் ஏற்கப்பட மாட்டாது.

ஒரு பேரவை உறுப்பினர் அவையின் அனுமதியின்றி தொடர்ந்து 60நாட்களுக்கு வாரமல் இருப்பின் அவ்வுறுப்பினரை பதவி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.

பதவி ஏற்புப் பிரமாணம் மேற்கொள்ளும் முன்பாகவோ,
உறுப்பினர் தகுதியை இழந்துள்ளதை அறிந்த பின்னரோ,
சட்டப் பேரவை விதிகளின்படி தடுக்கப்பட்ட பின்னரோ, ஒரு சட்டப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதும், வாக்களிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு ஒரு நபர் பங்கேற்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்படும்.

இது வரை, வேட்பாளராக, உறுப்பினராக இருக்க வேண்டிய தகுதிகள், தகுதியின்மைகள், தகுதி இழப்புகள் பற்றி அறிந்தோம்.

அடுத்தடுத்த வாரங்களில், வாக்காளர்களாகிய நம் ஒவ்வொருவரும் தெரிந்திக்க வேண்டிய, தேர்தல் நடமுறை, தேர்தல் ஆணையம், போன்றவை பற்றி அலசுவோம்.

தொடருவோம் நம் பயணத்தை..நம் உரிமைகளை அறிந்தபடி…
- ஹன்ஸா

நன்றி : தினமலர் நாளிதழ் - 11.02.2016

வாக்காளர் தகுதி


வாக்காளர் தகுதி - என்ன செய்ய வேண்டும்?
தேர்தல் வருகிறது.

தேர்தலில் நிற்கும் வாக்காளருக்கான தகுதி பற்றி கொஞ்சமேனும் நாம் அறிவோம். 

ஆனால், வாக்களிக்கும் நமக்கும் சில தகுதிகளை தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது. சட்டமும் அதையே வலியுறுத்துகிறது.

ஆம். வாக்காளப் பெருமக்களாகிய நமக்கும் வாக்களிக்க என சில தகுதிகளை சட்டம் வலியுறுத்துகிறது.

இனி இந்தக் கட்டுரைத் தொடரில், தேர்தல் சட்டங்கள் பற்றியும், கொஞ்சம் தேர்தல் வம்பும் பார்க்க்விருக்கிறோம்.

முதலில் நம்மைப் பற்றி அறிந்து கொள்வோம். 
அதாவது வாக்காளர் என்றால் யார் என சட்டம் ஏதும் சொல்லி இருக்கிறதா?

 சொல்லி இருக்கிறது என்றால் என்ன சொல்லி இருக்கிறது?

வாக்காளராக இருப்பதற்கு வயது தவிர வேறென்ன காரணிகள் என்பனவற்றை முதலில் தெரிந்து கொள்வோம்.

கள்ள ஓட்டு போடுதல், பொய்யான வாக்குச் சீட்டு வைத்திருத்தல், வாக்குப் பெட்டியைக் கைப்பற்றுதல், ஊழல், கையூட்டுக் குற்றம், தேர்தல் தொடர்பாக பகைமையை வளர்த்து விடுதல், போன்ற குற்றங்களுக்கு அதற்கு அந்தந்த பிரிவுகளில் குறிப்பிடப்ப்ட்ட தண்டனைகளோடு வாக்களிக்கும் உரிமையும் (சில கட்டளைகளுக்குட்பட்டு) பறி போகும் என்பது நாம் அனைவரும் அறிந்திந்திருக்குக்றோமா?

வாக்குப் பெட்டிக்குள் வாக்குச் சீட்டு தவிர வேறேதேனும் பொருட்களைப் போடுதல், வாக்குச் சீட்டில் பெயரை அல்லது குறிப்பிட்ட தகவல்களை அழித்தல், மாற்றுதல், உருக்குலைத்தல் என எதனைச் செய்தாலும், அல்லது அதிகாரம் இன்றி வாக்குப் பெட்டியை எடுத்துச் செல்லுதல், வாக்குச் சீட்டைப் பிரித்தல், படித்தல் என எதைச் செய்தாலும், இந்த சட்டத்தில் குறிப்பிட்ட தண்டனை தவிர, குற்றம் செய்தவருக்கு வாக்களிக்கும் உரிமையும் 6வருடங்கள் வரை கூட இல்லாமல் தகுதியின்மை ஆக்கப்படலாம்.

இனி வாக்காளர் தகுதியின்மை பற்றி சற்று விரிவாகக் காண்போம்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ”வாக்காளர்” என்றால் என்னவென்று பகுதி 1, பிரிவு 2-ல், உட்பிரிவு (e) -ல் வரையறுத்திருக்கிறது.

பிரிவு 2(e)வாக்காளர் எனில் தொகுதி ஒன்றின் தொடர்பில் நபரொருவரின் பெயர் அப்போதைக்கு செயல்லாற்றலிலுள்ள வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, பிரிவு 11ல் குறிப்பிடப்பெற்ற ஏதேனும் தகுதிக் கேடுகளுக்கு உட்படாத நபர் எனப் பொருள்படும்.

அதாவது வாக்காளர் என்றால், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும்.(அதில் பெயர் இடம் பெற வேறு தகுதிகள்) மற்றும் இதே சட்டத்தின் பிரிவு 11ல் வாக்காளராக இருப்பவருக்கு சில தகுதிக் குறைபாடுகள் இருக்ககூடாது எனச் சொல்கிறது. அந்தக் குறைப்பாடுகளுக்கு உட்படாத நபர் வாக்காளர் என்கிறது.

வாக்காளர் என்பதற்கான விளக்கத்தில் இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் இடம் பெறுதல்.

இதே சட்டத்தின் பிரிவு 11ல் குறிப்பிடப்பெற்ற ஏதேனும் தகுதிக் கேடுகளுக்கு உட்படாத நபர்.

பிரிவு 11, மற்றும் 11A கூறுவதாவது..

பிரிவு 11 தகுதி இன்மைக் காலத்தை நீக்குதல் அல்லது குறைத்தல் பற்றிச் சொல்கிறது. தேர்தல் ஆணையமானது, ஏதாவது காரணங்களின் அடிப்படையில், பதிவின் பேரில் இவ்விதியின் (பிரிவு 8A வின் கீழ் தவிர)(பிரிவு 8 வேட்பாளர்களின் தகுதியின்மை பற்றிச் சொல்கிறது.) கீழான ஏதேனும் தகுதியின்மையினை நீக்கலாம் அல்லது அத்தகைய தகுதியின்மைக் காலத்தைக் குறைக்கலாம்.

பிரிவு 11A சொல்லுவது: குற்றத் தீர்ப்பு மற்றும் ஊழல் செய் நடவடிக்கைகளினால் எழும் தகுதியின்மை பற்றிச் சொல்கிறது.

அதாவது வாக்களிக்கததகுதியாக குற்றத் தீர்ப்பு மற்றும் ஊழல் செய் நடவைக்கைகளினால் எழும் தகுதியின்மை பற்றித்தான் அப்படிச் சொல்கிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 171 E (Punishment for Bribery) அல்லது 171F-ன் கீழ் (Punishment for undue influence or persination at an election)அல்லது இந்தச் சட்டத்தின் பிரிவு 125 / பிரிவு 136 -ன் உட்பிரிவு (2) கூறு (அ) வின் கீழ் தண்டிக்கப்படத்தக்க ஒர் குற்றத்திற்காக குற்றத் தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பின் அவர் குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.

 அப்படியாயின் அந்த சட்டப்ப்பிரிவுகள் என்ன சொல்கின்றன?

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 125 சொல்வதாவது: 

தேர்தல் தொடர்பாக வகுப்புகளுக்கிடையே பகைமையை வளர்த்தல் பற்றி அதை வாக்காளருக்கான தகுதிக் குறைவாகச் சொல்கிறது.

மேற்கண்ட குற்றத்தைச் செய்து, மூன்றாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்கு சிறைத் தண்டனையோ அல்லது பணத் தண்டனையோ அல்லது இரண்டும் பெற்று பிரிவு 125ன் கீழ் தண்டனை பெற்றிருந்தால் அவர் அந்த குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.

அதே போல, பிரிவு 136ல் 'பிற குற்றச் செயல்களுக்கான தண்டனைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்ட குற்றங்களில் ஏதேனும் செய்து, தண்டனைத் தீர்ப்பு பெற்றவரும் அவர் குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.

வேட்புமனு எதனையேனும் மோசடியாக உருக்குலைத்தல், அழித்தல் அல்லது தேர்தல் அதிகாரியால் அல்லது அவரது ஆணையின் கீழ் ஒட்டப்பட்டுள்ள பெயர்ப்பட்டியல், அறிவிப்பு பிற ஆவணங்கள், வாக்குச் சீட்டு, அதில் உள்ள அதிகாரக் குறியீடு எதையேனும், உருக்குலைத்தல், அழித்தல் என ஏதும் செய்தாலோ,

உரிய அதிகாரம் இன்றி, எவருக்கும் வாக்குச்சீட்டு வழங்குதல், பெறுதல், கைவசம் வைத்திருத்தல் இவற்றைச் செய்தாலோ,

வாக்குப் பெட்டிக்குள் போடுவதற்கு அதிகாரம் இல்லாத எதையேனும் மோசடியாகப் போட்டாலோ,

வாக்குப் பெட்டி, சீட்டு எதையும் அழித்தல், எடுத்துச் செல்லுதல், பிரித்துப் பார்த்தல் அல்லது அதற்கு இடையூறு விளைவித்தல் என எதுவும் செய்தாலோ,
மேற்குறியவற்றைச் செய்ய உதவி செய்தலோ,

அப்படிச் செய்தவர், தேர்தல் அலுவலராகவோ, உதவித் தேர்தல் அலுவலராகவோ, வாக்குச் சாவடி தலைமை அலுவலராகவோ அல்லது தேர்தல் தொடர்பான பணி அமர்த்தப்பட்டவராகவோ இருப்பின் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கத்தக்க சிறைத் தண்டனையோ, பணத்தண்டனையோ அல்லது இரண்டுமோ,
விதிக்கப்படும்.

இந்த குற்றங்களைச் செய்தவர், பிற நபராக இருக்கும்பட்சத்தில், 6 மாதம் வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனையோ, பணத் தண்டமோ, அல்லது இரண்டுமோ தண்டனையாக அளிக்கப்படும். 

இந்த தண்டனையைப் பெற்றவர்கள்… அந்த குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.

மேலும் ஒரு நபர் பிரிவு 8A (1) -ன் கீழ் குடியரசுத் தலைவரின் முடிவினால் ஏதேனும் காலத்திற்கு தகுதியின்மை செய்யப்பட்டால் அதே காலத்திற்கு தேர்தலில் தகுதியின்மை செய்யப்படும். 

அதாவது இதே சட்டத்தின் பிரிவு 99ன் கீழ் ஓர் உத்தரவு மூலம் ஊழல் நடவடிக்கை செய்ததாகக் கண்டறியப்படும் நபர் தகுதியின்மையாக்கப்பட வேண்டுமா?

 வேண்டும் எனில் எவ்வளவு காலத்திற்கு எனும் வினாவை தீர்மானிக்கும் பொருட்டு குடியரசுத் தலைவரிடம் சமர்பிக்கப்பட்டு எடுக்கப்படும் முடிவின்படி தகுதியின்மை செய்யப்படலாம். 

அந்தத் தகுதியின்மைக் காலமானது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து என்னேர்விலும் 6 வருடங்களுக்கு மேற்படலாகது. 

இந்த முடிவு எடுக்க 90நாட்களே அதிகபட்சம் என இந்த சட்டப்பிரிவு குறிப்பிடுகிறது.

பிரிவு 11A(3) -ன் படி மக்களவையின் ஈரவைகளில் ஒன்றிற்கு உறுப்பினராக அல்லது மாநிலம் ஒன்றின் சட்டமன்றம் அல்லது சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது இருப்பதற்கு தகுதியிழப்பு பொறுத்து ஏதேனும் நபரால் சமர்ப்பிக்கப்பட்ட மனு மீது குடியரசுத் தலைவரின் முடிவானது, அதே அளவிற்கு, தேர்தல் சட்டங்கள் (திருத்தச்)சட்டம் 1975 தொடங்குவதற்கு உடன், முன்னர் இருந்தது போன்று, இந்தச் சட்டத்தின் பிரிவு 11-A (1)(b) -ன் கீழ் வாக்களிப்பதற்கு ஏற்பட்ட தகுதியிழப்பு பொறுத்து, அத்தகைய முடிவு சொல்லப்பட்ட வாக்களிப்பு தகுதி இழப்புக்கும் கூட அந்த முடிவு பொருந்துவனவாகும்.'”

மேற்சொன்ன பிரிவு 11 A முழுவதும் வாக்களிக்கத் தகுதி இன்மை பற்றிச் சொல்கிறது.

ஆனால், தேர்தல் ஆணையமானது, சரியான காரணத்தைப் பதிவதன் மூலம், மேற்சொன்ன 11A(3) தகுதி இழப்பை நீக்கலாம்.

மேற்சொன்னவை எல்லாம் எவை எல்லாம் 'வாக்காளருக்கான” தகுதி இன்மைகள்.

அப்படியாயின் வாக்காளர் என்றால் யாரெல்லாம்?
பொதுவாக வசிக்கும் இடத்தில், அந்தத் தொகுதியில், வாக்காளராகப் பதிவு செய்யப்பட்ட, 18 வயதுக்கு மேல் வயதான, ஆனால், மனநிலைப் பிறழ்வு, மேற்குறிப்பிட்ட வாக்காளர் தகுதியின்மைக்குள் வராத, எவரும் வாக்காளரே.

இவற்றைக் குறிப்பிட்டு வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. ஆனால் வாக்காளர் அட்டை பெற்றுவிட்டதாலேயே நாம் வாக்களித்துவிட முடியாது.

 EPIC எனப்படும் Election Photo Idendy Card தேர்தல் வாக்களிக்க கட்டாயம் என்றே தேர்தல் கமிஷன் கூறுகிறது. 

அதே சமயம் இந்த அடையாள அட்டையுடன், கூட நம்முடைய பெயர் Electoral Roll -ல் இருந்தாக வேண்டும். இல்லை எனில் வாக்களிக்க இயலாது.

எனவே நமது பெயர், இருக்கிறதா, இல்லையா என்பதை நிச்சயித்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகிறது. ஏனெனில், ஓட்டளிப்பது நம் உரிமை.
வரும் வாரங்களில், ஓட்டளிப்பவர் செய்யக்கூடிய, செய்யக்கூடாதவை பற்றியும், அதற்கான பலன்கள் பற்றியும், சில வழக்குகளோடும், தொடர்ந்து எலக்ஷன் கமிஷன் பற்றிய முக்கிய வழக்குகளோடு ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டிய தகவல் பலவோடும் சந்திக்கவிருக்கிறோம்.
தொடர்வோம் நம் பயணத்தை.
- ஹன்ஸா

நன்றி : தினமலர் நாளிதழ் - 02.02.2016

Thursday, June 18, 2015

தேர்தல் விதிமீறலை தடுக்க'இ-நேத்ரா' திட்டம்


தேர்தல் விதிமீறலை தடுக்க'இ-நேத்ரா' திட்டம் அறிமுகம்
தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்கவும் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் 'இ - நேத்ரா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து (18.06.2015) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:
இந்தியாவில் முதன்முறையாக ஆர்.கே.நகர் தொகுதியின் முக்கிய இடங்களில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.மேலும் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் புகார் அளிப்பதற்கு வசதியாகவும், அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும் 'இ - நேத்ரா' திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
புகார் தெரிவிக்க ஆறு வழிகளை பின்பற்றலாம்.

* 'பிளே ஸ்டோரில்' இருந்து பதிவிறக்கம் செய்யப்படக் கூடிய ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனை https:/play.google.com/store/apps/details?id=com.uniphore.ecpublic&hl=enல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* enetra@chennaicorporation.gov.in என்ற முகவரிக்கு இ - மெயில் அனுப்பலாம்.
* 94441 23456 என்ற மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம்.
* '1950' என்ற டெலிபோன் எண்ணை அழைக்கலாம்.
* மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு எழுத்து மூலம் புகார் அனுப்பலாம்.
* தேர்தல் உதவி மையங்களில் நேரடியாக சென்று புகார் அளிக்கலாம்; இம்மையம் 24 மணி நேரமும் செயல்படும்.

புகார் விவரம், பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவிற்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் 45 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுப்பர்.புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் 2 முதல் 24 மணி நேரத்திற்குள், புகார்தாரருக்கு தெரிவிக்கப் படும்.

'இ - நேத்ரா' திட்டம் முதன்முறையாக ஆர்.கே.நகர் தொகுதி யில் அறிமுகப்படுத்தப்படுகிறது, என்றார்.