disalbe Right click

Showing posts with label வீடு. Show all posts
Showing posts with label வீடு. Show all posts

Monday, July 25, 2016

வீடுகட்டும்போது வருவாய்த்துறையில் என்.ஓ.சி.


வீடுகட்டும்போது வருவாய்த்துறையில் என்.ஓ.சி. இனி வாங்க வேண்டாம்
என்ன செய்ய வேண்டும்?

வீடுகட்டுவோருக்கு வசதி

கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போது, சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான கிராம வரைபடங்களை ஆய்வு செய்ய, நகரமைப்பு துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

இதனால், வீடு கட்டுவோர், என்.ஓ.சி., எனப்படும், தடையின்மை சான்றுக்காக, வருவாய் துறையினரிடம் நிற்பதில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது.

தமிழகத்தில், சென்னை பெருநகருக்கு வெளியே உள்ள பகுதிகளில் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம், நகர் மற்றும் ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,க்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, திட்ட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, அவர்கள் முடிவு எடுக்க வேண்டும். ஆனால், இதில் திட்ட அனுமதி கோரப்படும் நிலம் தொடர்பான உண்மை நிலவரத்தை சரி பார்க்க வேண்டும்.

சிக்கல்

இதற்கான வசதி நகரமைப்பு துறை அதிகாரிகளுக்கு இல்லாததால், சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் இருந்து தடையின்மை சான்று பெற்று வர, அவர்கள் விண்ணப்பதாரரை அறிவுறுத்துவர். 

இதன்படி, ஒவ்வொரு விண்ணப்பதாரரும், தடையின்மை சான்று கேட்டு வருவாய் துறை அலுவலகங்களை அணுகுவதால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன.

குறிப்பாக, ஏற்கனவே பணி சுமையில் இருக்கும் வருவாய்துறை அதிகாரிகள், தடையின்மை சான்று வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படியே ஆர்வம் காட்ட முன்வந்தாலும், உரிய முறையில், 'கவனிக்கும்' விண்ணப்பதாரருக்கு மட்டுமே சான்று கிடைக்கும். 

இதனால், வீடு கட்ட அனுமதி பெறுவோர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
'இத்தகைய சான்று பெறும் நடைமுறையில் உரிய மாற்றங்கள் செய்ய வேண்டும்' என, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பான, 'கிரெடாய்' உட்பட, சில அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

சுற்றறிக்கை

இது தொடர்பாக, நகர் மற்றும் ஊரமைப்பு துறை ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் தர்மேந்திர பிரதாப் யாதவ், நகரமைப்பு துறையில் அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:திட்ட அனுமதி கோரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் போது, சம்பந்தப்பட்ட நில விவரங்களை வருவாய் துறையில் நில நிர்வாக பிரிவின் இணையதளத்துக்கு சென்று நகரமைப்பு துறை அதிகாரிகளே ஆய்வு செய்யலாம்.

இதற்காக, நில நிர்வாகத்துறை ஒப்புதலுடன் நகரமைப்பு துறையின் அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கு தனித்தனியாக, 'யூசர் ஐடி' எனப்படும்பயனாளர் பெயர்; 'பாஸ்வேர்டு' எனப்படும் ரகசியகுறியீடு ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.

பயன்பாடு

இதை பயன்படுத்தி கிராம அளவில் நிலங்களின் தன்மை, உரிமை நிலை, பயன்பாடு, வகைபாடு, அரசுக்காக கையகப்படுத்துவதா, உச்சவரம்பு சிக்கல் உள்ளதா என்பது போன்ற விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரரிடம் தனியாக வருவாய் துறை தடையின்மை சான்று கேட்காமல், அனைத்து விவரங்களையும் இணையதளம் வாயிலாகவே சரிபார்த்து கொள்ளலாம். இந்த வசதியை அனைத்து பிரிவு அதிகாரிகளும் முறையாக பயன்படுத்தும்படி அறுவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 26.07.2016

Friday, July 8, 2016

வாடகை வீடு நல்லதா? சொந்த வீடு நல்லதா?


வாடகை வீடு நல்லதா? சொந்த வீடு நல்லதா? 
என்ன செய்ய வேண்டும்?

புதிதாக சொந்த வீடு கட்டியிருக்கும் ஒருவரிடம் போய் எதற்காக வீடு கட்டியிருக் கிறீர்கள் என்று கேளுங்கள்... சிலர், ''வசதி வந்துவிட்டது; கட்டிவிட்டேன்'' என்பார்கள். வேறு சிலர், ''சொந்தக்காரர்கள் எல்லாம் வீடு கட்டிவிட்டார்கள்; நாம் மட்டும் கட்டாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? அதனால்தான் கட்டிவிட்டேன்'' என்பார்கள். ஆனால், பெரும் பாலானோர் கடனோ உடனோ வாங்கி கஷ்டப்பட்டு சொந்தவீடு கட்டக் காரணம், முன்பு வாடகைக்கு இருந்த போது பழைய ஹவுஸ் ஓனர்கள் படுத்தியபாடுதான்! 

ஹவுஸ் ஓனர்களின் நச்சரிப்பு தாங்காமல் சொந்த வீடு கட்டிக் கொண்டு தப்பிப் போனவர்கள் தான் ஏராளம்!

ஹவுஸ் ஓனர்கள் கதை இப்படி என்றால், இன்னொரு பக்கம் வாடகைக்கு என உள்ளே புகுந்து, பிற்பாடு வீட்டுக் காரரையே துரத்திவிட்டு ஆட்டையை போட்டுவிடும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை! இப்படி இரண்டு தரப்பும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட அவசியமில்லாமல், உறவு நீடித்து நிலைத்து நிற்க சில அடிப்படையான சட்ட விஷயங்களை அறிந்துவைத்துக் கொள்வது நல்லது!

இதுகுறித்து சென்னையின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான பி.பி. சுரேஷ்பாபுவை சந்தித்துப் பேசினோம்... கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என முக்கியமான வற்றை பட்டியல்போட்டுச் சொன்னார் அவர்.

அக்ரிமென்ட் அவசியம்..!

''வீட்டு உரிமையாளர், வாடகைக்கு வருபவர் இருவரும் முதலில் ஒப்பந்தம் (அக்ரிமென்ட்) போட்டுக் கொள்வது மிக அவசியம். பிற் காலத்தில் ஏதாவது பிரச்னை வரும்போது வாடகைக்கு இருப்பவர் என்னிடம் இவ்வளவு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிவிட்டார் என்பார்.

வீட்டு உரிமையாளர் அட்வான்ஸே கொடுக்கவில்லை என்பார். யார் சொல்வது உண்மை என்பதில் குழப்பம் வந்துவிடும். அதனால், 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு என்பதை எல்லாம் அக்ரிமென்ட் ஆக எழுதிக் கொள்வது அவசியம்.

பொதுவாக, வீட்டு உரிமை யாளர்கள் 11 மாதத்திற்குதான் அக்ரிமென்ட் போடுவார்கள். அதென்ன 11 மாத கணக்கு என்கிறீர்களா? ஓராண்டுக்கு மேற்பட்ட ஒப்பந்தம் என்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு பணம் மற்றும் நேரம் செலவாகும் என்பதால்தான் 11 மாதத்துக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. மற்றபடி சிலர் நினைப்பதுபோல ஒரு வருடத் துக்கு மேலாக ஒருவர் தொடர்ந்து வாடகைக்கு இருந்துவிட்டால், அது அவர் அந்த வீட்டை உரிமை கொண்டாட உதவு வதாக அமைந்துவிடும் என்பதால் அல்ல! அப்படி எல்லாம் ஒன்றும் உரிமை கொண்டாடிவிட முடியாது.

ஒருவர் எத்தனை ஆண்டுகள் ஒரு வீட்டில் குடியிருந்தாலும், அவருக்கு அந்த வீடு சொந்தமாக சட்டத்தில் வழியே இல்லை!

பதிவுக் கட்டணம் எவ்வளவு?

அக்ரிமென்டில் அட்வான்ஸ், வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால் அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். உதாரணத்துக்கு, மூன்றாண்டுக்கான ஒப்பந்தம் என்றால் மூன்றாண்டுகளுக்கான மொத்த வாடகை, அட்வான்ஸ், இதர கட்டணங்கள் எல்லாம் சேர்த்து மொத்த தொகையைக் கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு சுமாராக ஒரு சதவிகிதம் கட்டணம் செலுத்த வேண்டி வரும். இந்த ஒப்பந்தத்தைப் பொதுவாக மூன்றாண்டுகள் முதல் பத்து, பதினைந்து ஆண்டுகள் வரை போட்டுக் கொள்ளலாம்.

அக்ரிமென்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும். அதனால், கூடுமான வரை ஆரம்பத்திலேயே தேவையான அனைத்து விஷயங்களையும் அதில் சேர்த்துவிடுவது நல்லது.

அட்வான்ஸ்

''வீட்டுக்கான அட்வான்ஸ் பெற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே இது இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப் போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் அட்வான்ஸ் வாங்குகிறார்கள். பேரம் பேசி குறைக்க முடிந்தால் அது அவரவர்கள் சாமர்த்தியம்!''

வாடகை!

''வீட்டு வாடகையை பொதுவாக இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் வீட்டை புதுப்பித்தாலோ, கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தாலோ வாடகையை அதிகரிக்க எந்தத் தடையும் இல்லை. புதிதாக கட்டிய வீட்டுக்கு ஐந்து ஆண்டுகள் வரை வாடகை நிர்ணயிப்பதில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. வீட்டின் உரிமையாளர் விரும்பும் தொகையை வாடகையாக வைத்துக் கொள்ளலாம்.

அதேசமயம், ஏற்கெனவே உள்ள வசதிகள் குறையும்போது வாடகையைக் குறைக்கச் சொல்லி வீட்டு உரிமையாளரை குடித்தனக்காரர் கேட்கலாம். அதாவது தினசரி தண்ணீர் வந்த நிலையில் தந்த வாடகையை ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வரும்போது குறைக்கச் சொல்லலாம்; கவர்ட் கார் பார்க்கிங், திறந்த வெளி கார் பார்க்கிங் ஆக மாறினால் வாடகையை குறைக்கச் சொல்லி கேட்கலாம். அதற்குக் குடித்தனக்காரருக்கு உரிமை உண்டு.  

ரசீது அவசியம்!

வாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதிவாங்கிக்கொண்டாலே போதுமானது. தேவைப் பட்டால் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.

வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிறபோது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப் நீதிமன்றங்களை அணுகலாம்.    

வாடகை தர மறுத்தால்..?

'வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏதாவது பிரச்னை வந்து பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விடுவதும் உண்டு. அது போன்ற நேரங்களில் வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம்.

வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில் மணியார்டர் செய்யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால் சிறு வழக்கு நீதி மன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால் குடித்தனக்காரர் மீது வீட்டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது.

இதேபோல், வாடகைக்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரலாம். வாடகை சரியாக தரவில்லை என்ப தற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்துவது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும்.  

காலி செய்ய வைக்க..!

குடியிருப்பவர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால், குறைந்தது ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்கு முன்னால் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில் எழுதிக் கொள்வது நல்லது. சொந்தக் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்ற வற்றுக்காக வீட்டை காலி செய்யச் சொல்லலாம்.

அதே நேரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய உரிமை இல்லை. வீட்டை இடித்துக் கட்டுவது என்றால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி வாங்கிய தற்கான ஆதாரத்துடன் தான் வீட்டை காலி செய்யச் சொல்ல முடியும். வீட்டைக் காலி செய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடி அமர்த்த வேண்டும்.

வீட்டை இடித்துக் கட்டியபிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டை  கேட்டால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர வாய்ப்பிருக்கிறது.

வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பவர் குறைந்தது நான்கு மாதங்கள் வீட்டைப் பயன்படுத்தாமல் பூட்டு போட்டு வைத்திருந்தாலும் வீட்டை காலி செய்யச் சொல்லலாம். வீட்டை உள்வாடகைக்கு விடுவது பல நேரங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இது குறித்தும் ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில் தெளிவுப் படுத்திக் கொள்வது நல்லது.

வாடகைக்கு இருப்பவர் வீட்டை சரியாக பராமரிக்காமல் கண்டபடி அழுக்காக்கினால் அல்லது சேதம் ஏற்படுத்தினால் வீட்டின் உரிமையாளர் இழப்பீடு பெற்றுக் கொள்ள வழி இருக்கிறது.

இப்படி வீட்டை வாடகைக்கு விடுகிறவருக்கும் குடித்தனக்காரருக்கும் சட்டப்படி பல உரிமைகள் இருக்கிறது. அவை என்னென்ன என்பது தெரியாததால்தான் பல சமயங்களில் மோதல் வந்துவிடுகிறது. இப்போது தெரிந்து விட்டது அல்லவா? இனி சுமூகம்தான்!

நன்றி : நாணயம் விகடன் - 16.10.2011

Friday, June 24, 2016

ஏலத்தில் வரும் வீடு


ஏலத்தில் வரும் வீடு - என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் வீட்டுக் கடனை வாங்குபவர்கள் பெரும்பாலும் 7 முதல் 10 ஆண்டுகளில் கடனை அடைத்துவிடுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதேசமயம் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி அதைத் திருப்பச் செலுத்த முடியாதவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதாகக் கூறுகின்றன புள்ளிவிவரங்கள்.
வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் என்னவாகும்? 
திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் வீடுகளை வங்கிகள் திருப்பி எடுத்துக்கொள்ளும். அந்த வீட்டை ஏலம் விடும். இப்படி வங்கி விடும் ஏல வீட்டை வாங்குவது லாபமா, நஷ்டமா?
பெருந்தொகையைத் திரட்டி வீடு வாங்குவது எல்லோருக்கும் இயலாத காரியம். இன்று வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்கள் மூலமே பலருக்குச் சொந்த வீடு என்ற கனவு நனவாகிறது. பழைய வீடு, புதிய வீடு என்று பார்க்காமல் வீடு வாங்குபவர்கள் இருப்பதுபோல ஏல வீட்டை வாங்கவும் பலர் இருக்கிறார்கள். ஏல வீட்டை வாங்கப் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
பொதுவாக வீடு வாங்கும்போது பல விஷயங்களை ஆராய்ந்துதான் வாங்குவோம். ஏல வீடு என்றால், வங்கிகளே வீட்டை விற்பதால் பலரும் அதை சவுகரியமாக உணருகிறார்கள். எந்த விஷயத்திலும் நன்மைகள் இருப்பது போல தீமைகளும் இருக்கவே செய்யும். ஏல வீட்டை வாங்குவதிலும் அப்படித்தான்.
நன்மைகள் என்ன?
# வீடு ஏலத்துக்கு வரும்போது வங்கியில் உள்ள சட்ட வல்லுநர்கள் வீட்டைப் பற்றி துருவித் துருவி விசாரிப்பார்கள். பத்திரங்களை முழுமையாக ஆய்வு செய்வார்கள்.
# பத்திரங்களில் எந்த விதக் குறைபாடோ, வில்லங்கமோ இல்லை என்பது தெரியவந்த பிறகே வீடு ஏலத்துக்குக் கொண்டுவரப்படும்.
# வங்கி விடும் ஏலம் மூலம் வீட்டை வாங்கினால் சட்ட ரீதியாக எந்தப் பிரச்சினையும் எழ வாய்ப்பு கிடையாது.
# வீட்டின் பழைய சொந்தக்காரரால் எந்தப் பிரச்சினையும் வராது.
# வீட்டைப் பொது ஏலத்துக்கு வங்கியிடமிருந்து எடுப்பதால் விலை நியாயமாக இருக்கும். பில்டர்களிடமிருந்தோ அல்லது பிறரிடமிருந்தோ வாங்கும்போது விற்கப்படும் அளவுக்கு இருக்காது. ஏல வீட்டை விற்பதில் பெரும்பாலும் வங்கிகள் வியாபார நோக்கம் மற்றும் லாப நோக்கத்தைப் பார்ப்பதில்லை. அவர்களுடைய பணம் கிடைத்தால் போதும் என்றே நினைப்பார்கள்.
# வீட்டை ஏலத்துக்கு விடுவது ஏல விற்பனை விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும். இதேபோல ஏல விற்பனைக்கான ‘சர்ஃபாசி’ சட்டத்துக்கு உட்பட்டதாகவும் இருக்கும்.
தீமைகள் என்ன?
# ஏலத்தில் வாங்கிய வீட்டில் அதன் உரிமையாளர் குடியிருந்தால், ஏலத்துக்குப் பிறகு அவர் உடனே வீட்டைக் காலி செய்துகொடுத்துவிடுவார். ஒரு சிலர் சொந்த வீட்டை மாத வாடகைக்கோ, லீசுக்கோ விட்டிருப்பார்கள். அதில் குடியிருப்பவர்கள் அந்த ஒப்பந்தத்தைக் காட்டி வீட்டை உடனே காலி செய்ய மறுக்கவும் செய்யலாம்.
ஒருவேளை தீர்க்கமாக மறுத்துவிட்டால், ஒப்பந்தம் காலாவதி ஆகும் வரை அவர்கள் குடியிருக்க முடியும். வீட்டை ஏலம் எடுத்தவர் அதுவரை காத்திருக்கும் நிலை ஏற்படலாம். ஏல வீட்டை வாங்குவதில் உள்ள ஒரே எதிர்மறையான விஷயம் இதுதான்.
ஏல நடைமுறை என்ன?
# வங்கிகள் விடும் ஏல வீட்டை வாங்க யார் வேண்டுமானால் கலந்துகொள்ளலாம். குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்தான் கலந்துகொள்ள வேண்டும் என்றில்லை.
# ஏலம் விடப்பட்டு வீட்டை ஒருவர் ஏலம் எடுத்தவுடன் உடனே முன் பணத்தைக் கட்டச் சொல்வார்கள். எனவே ஏலத்துக்குப் போகும்போது முன் பணத்தைத் தயார் செய்துகொள்வதும் முக்கியம்.
# முன் பணம் கட்டிய பிறகு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் எஞ்சிய பணத்தைக் கட்டிவிட வேண்டும். அதற்கு வங்கிகள் கால அவகாசம் கொடுக்கும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் கட்டாமல் போனாலோ, பணம் இல்லை என்று கைவிரித்துவிட்டாலோ தானாகவே ஏலத்தில் எடுத்த வீடு ரத்தாகிவிடும். பிறகு மீண்டும் வங்கிகள் வீட்டை ஏலத்துக்கு விடும்.
# ஏலத்தில் வீட்டுத் தரகர்களும் பங்கேற்கவே செய்வார்கள். நிறைய தரகர்கள் பங்கேற்கும்போது அவர்கள் ஒன்றுகூடி ஏற்கனவே பேசி வைத்து ஏலத் தொகையைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து விடுவார்கள்.
# தரகர்கள் ஏலத்தைத் தாறுமாறாக ஏற்றிவிட்டுக் கடைசியில் யார் தலையிலாவது கட்டிவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஏலத்தின் போது அப்படியான நிலை தென்பட்டால் ஏலத்தில் வீடு வாங்க வந்தவர்கள் கொஞ்சம் உஷாரக இருக்க வேண்டும்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 11.06.2016

Friday, May 6, 2016

காசு இல்ல, காலிமனை இருக்கு வீடு கட்டணும்!


காசு இல்ல, காலிமனை இருக்கு வீடு கட்டணும்! என்ன செய்ய வேண்டும்?

எனது அந்தஸ்து உயர காரணமே பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கி போட்டிருந்த சொத்துக்களின் விலையேற்றம்தான். அதனை இப்போது விற்றால் பின்பு இந்த சமூகம், என்னை தூக்கி வைத்திருந்த அதே உயரத்தில் வைத்துப் பார்க்குமா?
அதனால் அந்த சொத்தை நான் விற்க மாட்டேன், கட்டப்போகிறேன். ஆனால் கையில் கட்டுவதற்கான பணம் இல்லை. என்ன செய்யலாம்? சேமிப்பை காலி மனையாக (Vacant Land) வாங்கி போட்டிருந்த பலரின் மனக்கேள்வியும் இதுதான்.
சொத்தில் நான் இருக்க வேண்டும். ஆனால் கையில் பணம் புரள வேண்டும். அப்போது நம் முன்னே தெரிவது கூட்டு கட்டுமானப்பணி எனப்படும் “Joint Venture” புராஜெக்ட்.
நகரங்களில் இடப்பற்றாக்குறை, மக்களின் தேவைகள், அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சி, இதனை கவனத்தில் கொண்டு, தற்போது கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியார் கட்டுமான தொழில் புரிவோர் என பலரின் பார்வையும் இந்த JV எனப்படும் கூட்டு கட்டுமான முறை மீது தான்.
சொத்து உங்கள் சொத்து. கட்டுமானம் அவர்களது. கட்டிய பின்பு உங்களுக்கு வசிக்க ஒரு வீட்டினை கொடுத்து, இதர வீடுகளை விற்று அதில் வரும் பணத்தில் கட்டுமானச் செலவுகள் போக உள்ள லாபத்தில் உங்களுக்கும் பில்டருக்கும் 50-50. இது தான் அடிப்படை.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
முதலில் உங்கள் சொத்தினை தகுந்த முறையில் அபிவிருத்தி செய்ய தகுந்த பில்டரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு, அந்த பில்டர் தகுதியான நபர்தானா? பில்டிங் கட்டுவதற்கு ஏற்ற கட்டமைப்பு (infrastructure) கொண்ட நிறுவனமா? அவர்களின் முந்தைய புராஜெக்ட் எப்படி முடிக்கப்பட்டது?
அந்த இடத்தின் உரிமையாளருக்கு அந்த JV புராஜெக்ட் லாபகரமாக இருந்ததா? கட்டப்பட்ட கட்டடத்தின் ஸ்திரத்தன்மை எப்படி இருந்தது? பில்டரின் பேப்பர் ஒர்க்ஸ், அரசு வழி ஆவணங்களான பிளான், அப்ரூவல் போன்றவை அவரால் முறைப்படி பெறப்பட்டு சொத்தின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டுவிட்டதா போன்ற எல்லா விஷயங்களையும் நுணுக்கமாகக் கேட்டு அறிந்த பின்னர் அந்த பில்டருடன் தக்க ஆவணங்கள் மூலமாக உடன்படிக்கை (Agreement for Joint Venture) எற்படுத்துவது முதல்படி.
நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கையானது, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி உங்களையும், உங்கள் சொத்தினையும் முழுமையாகப் பாதுகாப்பதாக இருத்தல் முக்கியம். சொத்தினை முதலீடு செய்யும் நீங்கள் தான் முழு கவனத்துடன் இருத்தல் வேண்டும்.
எக்காரணம் கொண்டும் உங்கள் சொத்தின் மூல ஆவணங்களை பில்டர் வசம் சமர்ப்பித்தல் கூடாது. அது போல பில்டருக்கு நீங்கள் கொடுக்கும் பவர் ஆப் அட்டார்னியும் மிக கவனமாக கொடுத்தல் வேண்டும். அந்த பவர் அதிகாரத்தின் மூலம், பில்டர், புராஜெக்ட் லோன் எதுவும் வாங்கிவிடாதவாறு கவனமாக இருத்தல் மிக மிக அவசியம்.
என்னென்ன விஷயங்களுக்கு பவர் கொடுக்கலாம் என்பதை தெளிவாக பேசி, அக்ரிமென்ட்டில் குறிப்பிட்டுக்கொள்ளுதல் நல்லது. பிளான், அதன் அப்ரூவல், கார்ப்பரேசன் மற்றும் பெரு நகர வளர்ச்சி குழுமம் போன்ற அரசு அலுவலகங்களில் உங்களுக்காக ஆஜராகி அனுமதி பெறவும், கட்டுமானம் கட்ட, மின் இணைப்பு பெற, மற்றும் கட்டி முடித்தவுடன் அவர் பகுதியை மட்டும் விற்க என மிக தெளிவாக அதில் குறிப்பிட்டுக் கொண்டால் பிற்கால பிரச்னைகளை தவிர்க்கலாம்.
அது போல, கட்டடம் கட்டும்போது, என்னென்ன கட்டுமானப் பொருட்கள் உபயோகித்தல் வேண்டும்? செங்கல், மணல், மரம், இரும்பு போன்றவை எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதையும் குறிப்பிடலாம். இதர மின் ஒயர்கள், மின் சாதனங்கள், குளியலறை தேவைகள் என அனைத்தையும் தெளிவு படுத்துவதில் தவறு எதுவும் இல்லை. தேவைப்படும் பெயின்ட் கலர் முதற்கொண்டு குறிப்பிடலாம் .

கட்டுமானத்திற்கான கால அவகாசம் மிகவும் முக்கியம்.
தவிர்க்க முடியாத தாமதம் தவிர, இதர தாமதங்களுக்கு, பில்டர் பொறுப்பேற்று உங்களுக்கு தர ஒப்புக்கொண்டுள்ள மொத்த பரப்பளவுக்கு, சதுரடிக்கு, மாதம் ஒன்றுக்கு இவ்வளவு என, கால தாமத அபராத தொகையும் குறிப்பிட்டு, கட்டுமானத்தை, விரைந்து முடிக்க வழிவகை செய்யலாம் .
பில்டர் கட்டிக் கொடுத்துள்ள பகுதிக்கு ஈடாக நீங்கள் அவருக்கு வழங்கும் பிரிபடாத பாக நிலத்திற்கான தகுந்த ஆவணங்கள் என்ன தரப்போகிறீர்கள்? எப்பொழுது? எனவும் அதில் குறிப்பிட்டுக் கொள்ளலாம்.
கட்டுமானம் முடித்து, கம்ப்லீசன் சர்டிபிகேட்டுடன், உங்களுக்கென ஒதுக்கப்படும் வீட்டின் சுவாதீனத்தை பில்டரிடம் இருந்து சுவாதீன ஒப்படைப்பு கடிதத்துடன் பெறுவது அவசியம். இப்போது உங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதி, உங்கள் வசம்.
இப்போது பணமும் உங்கள் கைவசமாகும். வசிக்க ஒரு வீடும் புதிதாக உங்கள் வசம் வந்திருக்கும் .
கே. அழகு ராமன், வழக்கறிஞர், சென்னை உயர் நீதி மன்றம்.
நன்றி : விகடன் பைனான்ஸ் - 06.05.2016

Saturday, April 30, 2016

பஞ்சாயத்துக்குட்பட்ட மனையில் வீடு கட்ட


பஞ்சாயத்துக்குட்பட்ட மனையில் வீடு கட்ட என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் நகரத்தையொட்டிய புறநகர்ப் பகுதியிலோ அல்லது கிராமத்தையொட்டிய பகுதியிலோ மனை வாங்க உத்தேசித்துள்ளீர்களா? ஆம் என்றால், குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக மனைக்கான அங்கீகாரத்தில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்துகொள்ளாதீர்கள். அங்கீகாரம் இல்லாத மனையை வாங்கினால் பின்னர் அஞ்சும் நிலை ஏற்படலாம்.

நகரங்களில் இன்று காலி மனைகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. வீட்டுத் தேவை அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் நகரங்களுக்குள் வீட்டு மனை கிடைப்பதும் குதிரைக் கொம்பாகிவிட்டது. எனவே நகரத்தையொட்டிய புறநகர்ப் பகுதிகள் அல்லது கிராமங்களில்தான் மனைகளைத் தேடி மக்கள் செல்கிறார்கள். 

ஆனால், பல மனைகளை முறையாக அரசின் அனுமதி பெறாமல் விற்கப்பட்டுவிடுவதால், மனை வாங்கியவர்கள் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

அனுமதி வழங்கும் அதிகாரம்
தமிழகத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), நகர ஊரமைப்பு இயக்ககம் (டிடீசிபி) ஆகிய இரண்டு அமைப்புகள் மட்டுமே வீட்டு மனை லே-அவுட்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு எந்த லே-அவுட்டுக்கும் நேரடியாக அனுமதி வழங்க அதிகாரம் இல்லை. இந்த விவரம் பலருக்கும் இன்னும் சரியாகத் தெரிவதில்லை. குறைந்த விலையில் கிடைக்கிறது என்று நினைத்துக்கொண்டு பஞ்சாயத்து அங்கீகார மனையை வாங்கிவிடுகிறார்கள்.

சிக்கல்கள்
இப்படி வாங்கிய மனையில் வீடு கட்ட அனுமதிக்கும்போதுதான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சி.எம்.டி.ஏ., டி.டீ.சி.பி. அங்கீகாரம் இல்லாமல் எந்தக் கட்டிட அனுமதியும் வழங்குவதில்லை. வங்கிகளும் வீட்டுக் கடன் கொடுப்பதில்லை. எனவே மனையை வாங்கி வைத்துவிட்டு பலரும் அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளும் உள்ளன. இதுபற்றி அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால் சிக்கல் இல்லாத மனைகளை வாங்கிவிடலாம். 

அரசு சொல்லும் வழிமுறைகள் என்ன?
  • மனைகளைப் பிரித்து லே-அவுட் போட்டு விற்பனை செய்யும் புரோமோட்டர்கள், பிரதான சாலைக்குக் குறைந்தபட்சம் 30 அடி அகலம், குறுக்குச் சாலை என்றால் குறைந்தபட்சம் 21 அடி அகலத்தில் அமைக்க வேண்டும்.
  • வீட்டு மனைகளில் தெருக்களின் சாலை வசதி, வடிகால் வசதி, தெரு விளக்குகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும். புரோமோட்டர்கள் இதை அமைக்காமல் இருந்தால், இவற்றை அமைக்கச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இதற்கான அபிவிருத்திக் கட்டணத்தை மனை விற்பனை செய்பவர்களைச் செலுத்த சொல்வது வழக்கம்.
  • மொத்த மனைப் பிரிவில் 10 சதவீத நிலத்தை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிக்கு புரோமோட்டர் தான பத்திரம் எழுதி பதிவு செய்து கொடுக்க வேண்டும். இதன் பிறகு இந்த 10 சதவீத பகுதிக்கும் புரோமோட்டருக்கும் தொடர்பு இல்லை என்றாகிவிடும்.
  • சம்பந்தப்பட்ட வீட்டு மனை பிரிவு எதிர்காலத்தில் வளர்ச்சி அடைலாம் அல்லவா? அப்போது அந்தப் பகுதியில் அரசின் சார்பில் அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம், நியாய விலை கடை மற்றும் அரசு துறையின் கீழ் வரும் இதர கட்டிடங்கள் கட்ட இந்த 10 சதவீத இடத்தை ஊராட்சி நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ளும்.

பஞ்சாயத்துக்குட்பட்ட மனையில் வீடு கட்ட என்னென்ன வழிமுறைகள் உள்ளன?
வழக்கமாக பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதியில் 4,000 சதுர அடிக்கு மேல் உள்ள மனையில் வீடு கட்ட வேண்டும் என்றால் சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபி-க்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அவர்களின் அனுமதி கிடைத்த பிறகு அதை ஊராட்சியில் விண்ணப்பித்து இன்னொரு அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியைப் பெற்றுவிட்டால் வீடு கட்டத் தொடங்கலாம். 

ஒரு வேளை சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபி அனுமதி பெற்று, அதன்பிறகு சம்பந்தப்பட்ட ஊராட்சியில் அனுமதி பெறாமல் இருந்தாலோ, ஏற்கெனவே சொன்னது போல லே-அவுட்டில் 10 சதவீத இடத்தை ஊராட்சிக்கு அமைப்புக்குத் தானமாக எழுதித் தரவில்லை என்றாலோ, அந்தக் குறிப்பிட்ட பகுதி புஞ்சை நிலம் என்றே வகைப்படுத்தப்பட்டிருக்கும். பின்னர் அந்த இடத்துக்கு பட்டா வாங்குவது, வீடு கட்ட அனுமதி வாங்குவது, வீட்டுக் கடன் வாங்குவதும் கடினமாகிவிடும்.

புறநகர்ப் பகுதிகளிலோ அல்லது கிராமப் புறங்களிலோ புதிதாக வீட்டுமனை வாங்க உத்தேசித் துள்ளவர்கள் இவற்றையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும்.


நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 30.04.2016

Wednesday, April 13, 2016

ஒத்தி வீடு நல்லதா? வாடகை வீடு நல்லதா?


ஒத்தி வீடு நல்லதா? வாடகை வீடு நல்லதா? என்ன செய்ய வேண்டும்?

ன்றைய தேதிக்கு வேலை காரணமாக சொந்த ஊரை விட்டு பெரிய ஊர்களுக்கு இடம்பெயர்வது சகஜமாகி விட்டது. இப்படி மாறும்போது பலரும் வாடகை வீட்டிலேயே தஞ்சமடை கிறார்கள்.  ஒவ்வொரு மாதமும் வாடகை  தர விருப்பம் இல்லாதவர்கள் லீஸ் எனப்படும் குத்தகைக்கு வீட்டை எடுக்கின்றனர். ஆனால், வாடகை வீடு, குத்தகை வீடு – இந்த இரண்டில் எது பெஸ்ட் என்கிற கேள்வி இன்றைக்கும் பலருக்கு இருக்கிறது.  முதலில் வாடகை வீட்டில் உள்ள சாதகமான அம்சங்களைப் பார்ப்போம்.
வாடகை வீடு – சாதகம்!
1. ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் ஒரு மாத வாடகையை மட்டும் அட்வான்ஸ் தொகையாக கொடுத்துவிட்டு குடியேறி விடலாம். அதோடு வாடகைக்கு வீடு பிடிப்பது எளிமையான விஷயமும்கூட. ஆனால், ஒரு மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸாக வாங்கும் வீட்டுக்காரர் தமிழகம் முழுக்க தேடினாலும் கிடைக்க மாட்டார். சென்னையில் பத்து மாதம், திருநெல்வேலி மற்றும் கும்பகோணத்தில் ஐந்து மாதம், திருப்பூரில் ஆறு மாதம் என ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதமாக அட்வான்ஸ் வாங்கப்படுகிறது.

2. மாதாமாதம் வாடகை கொடுக்க வேண்டும் என்பதால் பெரிய தொகை கையில் இருக்க வேண்டும் என்பதில்லை.

3. வீடு பிடிக்கவில்லை எனில், ஒன்றிரண்டு மாதங்களில் அட்வான்ஸை திரும்பப் பெற்று வீட்டை காலி செய்துவிடலாம்.
வாடகை வீடு – பாதகம்!
1. வீட்டு ஓனர் எப்போது வேண்டுமானாலும் காலி செய்யச் சொல்லலாம்.

2. சட்டப்படி ஒரு மாத வாடகையை அட்வான்ஸ் தொகையாக யாரும் வாங்குவதில்லை.

3. மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம் என வாடகை தவிர பெரிய தொகையையும் ஒவ்வொரு மாதமும் கட்ட வேண்டியிருக்கும்.
லீஸ் (ஒத்தி) வீடு – சாதகம் !
1. மாதா மாதம் வாடகை தர வேண்டும் என்கிற பிரச்னை இல்லை. லீஸ் தொகையை ஒப்பந்தம் முடிந்ததும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

2. லீஸுக்கு வீடு தருகிறவர்கள் அதன் மூலம் கிடைக்கும் பெரிய தொகையை அவசரத் தேவைக்கோ அல்லது பிசினஸுக்கோ பயன்படுத்து பவர்களாகவே இருப்பார்கள். இந்த அவசரத்தைப் பயன்படுத்தி கொஞ்சம் குறைவான தொகைக்கு லீஸில் வீடு எடுக்க முடியும்.
லீஸ் (ஒத்தி) வீடு –  பாதகம் !
1. வாடகை வீட்டுக்கு வாரக் கணக்கில் தேட வேண்டும் என்றால், லீஸ் வீட்டுக்கு மாதக் கணக்கில் தேட வேண்டி இருக்கும். ஏதோ ஒரு அவசரத் தேவை, வெளிநாட்டில் செட்டிலாக நினைப்பவர்கள் தான் இப்படி வீட்டை லீஸுக்கு விடுகிறார்கள். 

2. லீஸ் தொகை கொடுத்த அளவுக்கே திரும்பக் கிடைக்குமா என்பது சந்தேகமே. வீட்டில் ஆணி அடித்திருக்கிறீர்கள், மீண்டும் பெயின்ட் அடிக்க வேண்டும் என்று சொல்லி பாதிப் பணத்தை திரும்ப எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள்.
3. லீஸ் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்று கணக் கிட்டுதான் லீஸ் தொகையை நிர்ணயிக்கிறார்கள் வீட்டின் ஓனர்கள். எனவே, லீஸ் தொகை ஒரு சிறிய வீட்டை விலைக்கு வாங்கும் தொகையாக இருக்கிறது.
உதாரணமாக, இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டின் வாடகை மாதம் ரூ.10,000 என்றால் வீட்டுக்கு லீஸ் தொகையாக ரூ.15 லட்சம் வரை கேட்கிறார்கள். இந்த 15 லட்சம் ரூபாயை வங்கியில் 8% வட்டி கிடைக்கும் விதத்தில் டெபாசிட் செய்தால், ஆண்டுக்கு 1,20,000 ரூபாய் கிடைக்கும். (வங்கி வட்டிக்கு லீஸ் தொகை கணக்கீடு அட்டவணை 1-ல்) 
இதுவரை வாடகை வீடு, லீஸ் வீடு சாதக, பாதகங்களை பார்த்துவிட்டோம். இனி யாருக்கு எது பொருந்தும் என்பதைப் பார்ப்போம்.
வாடகைக்கு வீடு விடுகிற பலரும் இப்போது சட்டப்படி நடந்துகொள்வதில்லை. 11 மாதங்களுக்கு மட்டுமே வாடகை ஒப்பந்தம் போடுகிறார்கள். 12 மாதம் வாடகைக்கு விட்டால், அதை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதை தவிர்க்கவே, இந்த 11 மாதம் ஒப்பந்தம். குறுகிய காலத்தில் வீட்டை வாடகைக்கு விடுவதால், வாடகை வீட்டுக்காரர்கள் எப்போது வீட்டை காலி செய்யச் சொல்வார்களோ என்கிற பதைபதைப்பில் இருப்பார்கள். லீஸுக்கு வீடு எடுத்துவிட்டால், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு வீடு மாறவேண்டிய அவசியம் இருக்காது.

ஆனால், லீஸுக்கு வீடு எடுக்க வேண்டுமெனில் பெரிய தொகை வேண்டும். மாதச் சம்பளம் வாங்குகிற பலரால் இந்த பெரிய தொகையை ஏற்பாடு செய்து தரமுடியாது. ஆனால், ஓரளவுக்கு பணத்தை சேர்த்து வைத்திருந்தால் அல்லது பெரிய தொகை ஒன்று எதிர்பாராத விதமாக கிடைக்கும்பட்சத்தில் அதை லீஸுக்கு தந்து வீடு எடுக்கலாம்.
அதேபோல, லீஸுக்கு விடுகிறவர்கள், கிடைக்கும் தொகையை எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்தே அது லாபகரமாக இருக்குமா, இல்லையா என்பது தெரியும். உதாரணமாக, 800 சதுர அடி இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு ஃப்ளாட்டுக்கு மாதம் ரூ10,000 வாடகை என்றால் ஆண்டுக்கு 1,20,000 ரூபாய்  கிடைக்கும். இந்த ஃப்ளாட்டுக்கு ரூ.15 லட்சம் லீஸ் தொகை கொடுத்து, அதை அப்படியே வங்கி டெபாசிட்டில் தொடர்ந்து 5 வருடத்துக்கு (கிடைக்கும் வட்டியைகூட அதிலேயே மறுமுதலீடு செய்ய வேண்டும்) 8 சதவிகித வட்டிக்கு முதலீடு செய்தால், ரூ.22,04,000 கிடைக்கும். ஆக வருடத்துக்கு ரூ.1,20,000-க்கு பதில் இரண்டாவது ஆண்டிலிருந்தே கூடுதலான தொகை கிடைக்கத் தொடங்கிவிடும்.
மேற்கூறியபடி லீஸ் தொகையை வங்கி டெபாசிட்டில் 9 ஆண்டுகள் முதலீடு செய்திருந்தால் 9-வது ஆண்டின் இறுதியில் முதலீடு செய்யப்பட்ட தொகை இரட்டிப்பாகும். (பார்க்க  அட்டவணை 2)
வீட்டை லீஸுக்கு வாங்கும் நமக்கும் மேற்கூறிய உதாரணம் பொருந்தும். மொத்தமாக, 15 லட்சம் ரூபாயை வீட்டு ஓனருக்கு கொடுத்துவிட்டு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு வீட்டு வாடகை உயர்வு பிரச்னையிலிருந்து தப்பித்து விடலாம். உதாரணமாக, 10,000 ரூபாய் வாடகை வசூலிக்கும் வீட்டில் ஆண்டுக்கு 6% வாடகை உயர்த்துகிறார்கள் என்றால் 10 ஆண்டு முடிவில் 17,908 ரூபாயாக இருக்கும்.
எப்படி பார்த்தாலும் நீண்ட காலத்துக்கு (9 – 10  வருடத்திற்கு) லீஸுக்கு வீடு எடுத்து, அந்த தொகையை வீட்டு ஓனர் வங்கியில் கூட்டு வட்டி முறையில் டெபாசிட் செய்தால் நிச்சயம் 9 – 10 ஆண்டு முடிவில் இரண்டு மடங்காகிவிடும். எனவே, வங்கியிலோ அல்லது உறவினர்களிடமோ வட்டிக்கு கடன் வாங்காமல் பெரிய தொகையை திரட்ட முடியும் என்பவர்கள் லீஸுக்கு வீடு எடுப்பது நல்லது.
ஒருவேளை வட்டிக்கு கடன் வாங்கித்தான் லீஸ் தொகை கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் லீஸுக்கு எடுக்கும் வீட்டின் மாத வாடகையைவிட 20%  குறைவாக வட்டித் தொகை இருப்பது போல் பார்த்துக் கொள்ளவும். அப்படி வட்டிக்கு பணம் கிடைக்கிறது என்றால் தாராளமாக வட்டிக்கு கடன் வாங்கி லீஸுக்கு வீடு எடுக்கலாம்.
ஆனால் எந்த வங்கியிலும் தனிநபர் கடன் 14 சதவிகிதத்துக்குக் கீழே குறைந்து கிடைப்பதில்லை. இந்த லீஸ் தொகையை திரட்ட  முடியாதவர்கள் வாடகை வீட்டை தேர்வு செய்வதே நல்லது.
அடுத்து நீங்கள் தேடப் போவது வாடகை வீடா அல்லது லீஸ் வீடா என்பதை முடிவு செய்துவிட்டீர்களா?
மு.சா.கௌதமன்
நன்றி :நாணயம் விகடன் - 10.04.2016

Saturday, February 20, 2016

அடுக்கு மாடி குடியிருப்பில் வீட்டின் பரப்பளவை தெரிந்துகொள்ள


அடுக்கு மாடி குடியிருப்பில் வீட்டின் பரப்பளவை தெரிந்துகொள்ள 
என்ன செய்ய வேண்டும்?


வீட்டுமனை வாங்கும்போது அதன் பரப்பளவு நமக்குத் தெளிவாகத் தெரியும். பத்திரப் பதிவுக்குப் பிறகு பட்டா பெறும்போது பரப்பளவு உறுதியாகவும் தெரியும். கட்டி முடிக்கப்பட்ட தனி வீடுகளை வாங்கினாலும் அப்படித்தான். ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்கும்போது வீட்டின் பரப்பளவை எப்படித் தெரிந்துகொள்வது?

அடுக்குமாடிக் குடியிருப்பு களுக்கான விளம்பரங்களில் தவறாமல் சதுர அடி கணக்கு இடம்பெற்றிருக்கும். அந்தச் சதுர அடி கணக்கு, சுவர்களுக்கு இடையே உள்ள பரப்பளவைக் குறிக்கிறதா? இல்லை சுவர்கள் அமைந்திருக்கும் இடத்தையும் சேர்த்துக் குறிக்கிறதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளலாம்.

கார்பெட் ஏரியா
நான்கு சுவர்களுக்கு இடையில் அமைந்திருக்கும் பரப்பளவுக்கு கார்பெட் ஏரியா என்று பெயர். 



நம் நாட்டில் எல்லா வீடுகளிலும் கார்பெட் பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் எல்லா அறைகளிலும் பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் சுவர்களைத் தவிர்த்து பரப்பளவைக் கணக்கிடுவதால் கார்பெட் ஏரியா என்றே அழைக்கிறோம்.

பிளின்த் ஏரியா
வீட்டின் பரப்பளவைக் கணக்கிடும்போது சுவர்கள் இருக்கும் இடத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால் அது பிளின்த் ஏரியா ஆகும். 



பிளின்த் ஏரியாவைக் காட்டிலும் கார்பெட் ஏரியாவின் அளவு கொஞ்சம் குறைவாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் கார்பெட் ஏரியாவைக் காட்டிலும் அதிகமாக வித்தியாசப்படும் இன்னொரு ஏரியாவும் இருக்கிறது. அதற்கு சூப்பர் பில்டப் ஏரியா என்று பெயர்.

சூப்பர் பில்டப் ஏரியா
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் மட்டுமா இருக்கின்றன? விளையாட்டுத் திடல், பூங்கா, நீச்சல் குளம், நடைபாதை, வாகனங்கள் நிறுத்துமிடம் என்று ஏகப்பட்ட இணைப்புகளையும் சேர்த்துப் பெறுகிறோம் இல்லையா? அவை இலவச இணைப்புகள் அல்ல. இவற்றுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களின் அளவையெல்லாம் கூட்டி அங்கு இருக்கும் மொத்த வீடுகளின் எண்ணிக்கையால் வகுத்து அதை ஒவ்வொரு வீட்டின் அளவோடும் சேர்த்துக் கணக்கிடுவார்கள்.


இந்த சூப்பர் பில்டப் ஏரியாவானது, கார்பெட் ஏரியாவைக் காட்டிலும் அதிகமாகவே வித்தியாசப்படும். ஆனால் இந்தப் பரப்பு அவ்வாறு குறிப்பிட்ட காரணங்களுக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். நடைபாதைக்கான இடம் என்று சொல்லிவிட்டு அங்குக் கடைகளைக் கட்டுகிறார்கள் என்றால் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.

வீட்டை வாங்கும்போது கூடுதல் பரப்பளவு சொன்னார்கள், ஆனால் கொடுத்தபோது மிகவும் குறைவாக இருக்கிறது என்று பின்னால் வருத்தப்படக் கூடாது. வீட்டின் பரப்பளவு பற்றிய விவரத்தை முதலில் கேட்கும்போதே கார்பெட் ஏரியா, பிளின்த் ஏரியா, சூப்பர் பில்டப் ஏரியா என்று ஒவ்வொன்றின் அளவையும் தனித்தனியாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதே மிகச் சிறந்தது.

நன்றிஇளவேனில்
தி இந்து தமிழ் நாளிதழ் - 20.02.2016

Saturday, September 19, 2015

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது


அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது என்ன செய்ய வேண்டும்?

சென்னை போன்ற பெருநகரங்களில் தனியாக மனை வாங்கி, வீடு கட்டுவது என்பதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான். இவர்களின் விருப்பத் தேர்வு, அடுக்குமாடி வீடுகள் எனப்படும் ஃப்ளாட்தான். அடுக்குமாடி வீடுதான் என முடிவுசெய்துவிட்டால், பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பல ஆவணங்களை ஆராய வேண்டும். அடுக்குமாடி வீடு வாங்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?
l மனை மூலப் பத்திரத்தின் ஒரிஜினல் யார் பெயரில் இருந்தது, ஒரிஜினல் பெயரிலிருந்து யார் பெயருக்குச் சொத்து மாறியது, கட்டிடம் யார் கட்டிக் கொடுத்தது, லே-அவுட் மற்றும் பிளான் அப்ரூவல் வாங்கியிருக்கிறார்களா, ஆகிய கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளைத் தேடி அடைய வேண்டும்.
l மின் கட்டண இணைப்பு, குடிநீர் இணைப்பு யார் பெயரில் இருக்கிறது, நீங்கள் வீடு வாங்கும்போது கட்டணங்கள் எதுவும் நிலுவையில் உள்ளனவா என்பதைக் கவனியுங்கள். அதை உங்கள் பெயரில் மாற்றிக்கொள்ளவும் வீடு வாங்கும்போதே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டால் பிறகு பில்டர் அவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார். பின்னர் அலைச்சல்தான் மிச்சமாகும்.
அடுக்கு மாடி கட்டிடத்தில் UDS என்பது பிரிக்கப்படாத மனை என்பதைக் குறிக்கும்.
2,400சதுர அடி மனை பரப்பில் 500 சதுர அடியில் 2 வீடுகள் (500*2=1000), 750 சதுர அடியில் 4 (750*4=3000) வீடுகள் என மொத்தம் 4,000 சதுர அடியில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது, , 2,400 சதுர அடி பரப்பில் உள்ள மனையில், 4,000 சதுர அடியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதன் விகிதம் என்ன தெரியுமா? 2400/ 4000 = 0.6. இதனைக் கொண்டு நீங்கள் வாங்கும் வீட்டின் சதுர அடியால் பெருக்கினால் அதற்கான பிரிக்கப்படாத மனை.

அதாவது 500 சதுர அடி வீட்டுக்குப் பிரிக்கப்படாத மனையின் அளவு (யூ.டி.எஸ்.) 300 சதுர அடி. 750 சதுர அடி வீட்டுக்குப் பிரிக்கப்படாத மனையின் அளவு 450 சதுர அடி.

பிரிக்கப்படாத மனையின் அளவு சரியா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? மொத்தம் உள்ள ஃபிளாட்டுகளுக்கான பிரிக்கப்படாத மனையின் அளவைக் கூட்டினால் மொத்த மனையின் பரப்பு வர வேண்டும்.

இப்போது நாம் பார்த்த கணக்குப்படி 500 சதுர அடி உள்ள 2 வீடுகளின் பிரிக்கப்படாத மனையின் பரப்பு 600 (300*2) சதுர அடி. 750 சதுர அடி உள்ள 4 வீடுகளின் மொத்த பிரிக்கப்படாத மனையின் பரப்பு 1,800 (450*4) சதுர அடி. இரண்டையும் கூட்டினால் மொத்தம் பிரிக்கப்படாத மனையின் பரப்பு 2,400 சதுர அடி வந்துவிட்டதா? ஒரு வேளை கணக்குச் சரியாக வராவிட்டால், குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
l அடுக்குமாடி வீட்டில் பிரிக்கப்படாத மனை என்றழைக்கப்படும் யு.டி.எஸ். மனை சரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதா, என்பதைப் பொறியாளர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வதே நல்லது. பில்டர் சொல்வதைக் கேட்டு அப்படியே விட்டுவிட்டால், 20, 25 ஆண்டுகள் கழித்து அடுக்குமாடியை வேறொருவரிடம் விற்க எல்லா ப்ளாட் உரிமையாளர்கள் முடிவு செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது உங்கள் யு.டி.எஸ். வித்தியாசம் இருந்தால் அது உங்களுக்குத்தான் இழப்பை ஏற்படுத்திவிடும். பில்டர் சொல்வதை அப்படியே கேட்காமல் அதை அளந்து பார்ப்பதையும் மனதில் போட்டுக்கொள்வது நல்லது.
l அடுக்குமாடி வீட்டில் அனைத்துத் தளங்களுக்கும் கட்டிட அனுமதி பெறப்பட்டி ருக்கிறதா என்று ஆவணங்களைச் சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சில சமயங்கள் 2 அல்லது 3 மாடி வீடு கட்ட அனுமதி வாங்கியிருப்பார்கள். ஆனால், கூடுதலாக ஒரு மாடியைக் கட்டிவிடுவார்கள். வரைபடங்களில் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். எத்தனை வீடுகள் ஃப்ளாட்டில் உள்ளன என்று பாருங்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் நிச்சயம் ஒரு சமையலறைதான் இருக்கும். அதை எண்ணிப் பார்ப்பது போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
l மனை அல்லது அடுக்கு மாடிக் குடியிருப்பு எதுவாக இருந்தாலும் அந்தச் சொத்தை வாங்குவதற்கு முன்பாக அந்தச் சொத்து சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களின் அசல் பத்திரங்கள், விற்பவரிடம் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும். சிலர் அசல் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்துக் கடன் வாங்கி இருப்பார்கள். ஆனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் டூப்ளிகேட் பத்திரம் வாங்கி விற்பனை செய்வார்கள். எனவே அசல் பத்திரத்தைக் கண்ணால் பார்த்த பிறகு முடிவு எடுங்கள். அசல் பத்திரம் தொலைந்துவிட்டது என்று கூறினால் அதுதொடர்பாக போலீசில் கொடுத்த புகார், அந்தப் புகார் எண் ஆகியவற்றைக் கேட்டு பாருங்கள். பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்ன காரணம் சொல்லி டூப்ளிகேட் பத்திரம் வாங்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராயுங்கள்.
l ஒருவர் தனது பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்ய இன்னொருவருக்கு அதிகாரம் கொடுப்பதே ‘பவர் ஆஃப் அட்டர்னி’. அதிகாரம் வைத்திருக்கும் நபரிடமிருந்து ஒரு சொத்தை வாங்கும்போது, அந்த அதிகாரம் இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதா? அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறரா? இல்லையா என்பதைக் கவனிக்கத் தவறாதீர்கள். சில நேரங்களில் அதிகாரம் கொடுத்தவர் அதை ரத்து செய்திருக்கலாம். அதை மறைத்து சொத்தை விற்க முயல்வார்கள். அந்தச் சொத்தில் கட்டப்பட்டு வாங்கப்படும் அடுக்குமாடி வீடுகளுக்கு பின்னர் சிக்கல்கள் வர வாய்ப்பு உண்டு. இதுபோன்ற பித்தலாட்டத்தைத் தவிர்க்க, தற்போது அதிகாரம் ரத்தானால் அந்த விவரம் அசல் அதிகாரப் பத்திரத்தின் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை ஆராய்வது அவசியம்.
l அடுக்குமாடி கட்டி முடிக்கப்பட்டதற்குக் கட்டுமான நிறைவுச் சான்றிதழை பில்டர் வாங்கி வைத்திருக்கிறாரா என்பதையும் கேட்டு வாங்க வேண்டும். சில இடங்களில் பில்டர்கள் கட்டுமானச் சான்றிதழ் வாங்கித்தராமல் விட்டுவிடுவார்கள். வீடு வாங்குபவர்களும் கேட்காமல் விட்டுவிடுவார்கள். ஒரு பில்டர் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் வாங்கித் தரவில்லை என்றால், கட்டிய வீட்டில் விதிமுறை மீறல் இருக்கலாம் என்று அர்த்தம் கொள்வது கட்டுமானத் துறையில் வழக்கம். எனவே கட்டுமான நிறைவுச் சான்றிதழ் மட்டுமல்ல, ஒவ்வொரு நிலையில் கட்டிடம் கட்டி முடித்ததற்கும் நிறைவுச் சான்றிதழ் வாங்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்கத் தவற வேண்டாம்.
நன்றி : தி இந்து நாளிதழ் - 05.09.2015 & 19.09.2015


Monday, April 6, 2015

கடனில் உள்ள வீட்டை விற்கமுடியுமா?


கடனில் உள்ள வீட்டை விற்கமுடியுமா?
****************************************************************
ஆசை ஆசையாக வங்கியில் கடன் வாங்கி ஒரு வீட்டை வாங்குகிறோம். வாங்கிய கடனுக்கு முறையாக இ.எம்.ஐ.யும் கட்டி வருகிறோம். திடீரென வேலை நிமித்தமாக வேறு ஊருக்கு நிரந்தரமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோமே.

அந்த வீட்டை விற்று விடலாம் என்று நினைக்கிறோம். 20 ஆண்டுகளுக்கான இ.எம்.ஐ.யில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இ.எம்.ஐ. கட்டியுள்ள நிலையில், வீட்டை விற்க முடியுமா?

வீட்டுக் கடன் என்பதே, வாங்கிய வீட்டை வங்கியில் அடமானம் வைத்து வாங்குவதுதான் இல்லையா? வீட்டை அடமானமாக வைத்துக் கொண்டுதான் வங்கிகள் கடனை அளிக்கின்றன. ஆனாலும் வங்கியில் அடமானம் வைத்துள்ள வீட்டையோ அல்லது ஃபிளாட்டையோ விற்க முடியும். அதை வாங்குபவருக்கும் எந்த வித சட்டப் பிரச்சினையும் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். இதற்காகச் சில வழிமுறைகள் உள்ளன. அதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள வீட்டை வேறு ஒருவர் வாங்கத் தயார் என்றால், சொந்தமாகக் கைவசம் வைத்துள்ள பணத்தில் அந்த வீட்டை வாங்குகிறாரா? அல்லது அவரும் வங்கிக் கடன் மூலமாகவே வாங்குகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும். 


மொத்தமாகப் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு வாங்குவதாக வைத்துக் கொண்டால் என்னென்ன செய்ய வேண்டும்?

1. வீட்டை விற்பவர் அடமானம் வைத்துள்ள வங்கியை அணுகி முதலில் விஷயத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். கடன் பாக்கி, அசல் தொகை மற்றும் வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கு ஒரு கடிதத்தை வங்கியிடமிருந்து கேட்டுப் பெற வேண்டும்.

2. வங்கிக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் பட்டியலையும் எழுத்துப்பூர்வமாக வங்கியில் வாங்கிக்கொள்ள வேண்டும்.

3. சம்பந்தப்பட்ட வங்கிக்கு, கடன் பாக்கியைச் செலுத்திவிட்டால், அடமானம் வீட்டுத் தொடர்பான அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவருக்குக் கொடுப்பதற்கு வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்று சம்பந்தப்பட்ட வங்கி எழுதிக் கொடுக்க வேண்டும்.

4. வீட்டின் உரிமையாளர் வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்களையும் தன் வசமுள்ள விற்பனைப் பத்திரத்தின் நகலையும், அந்த வீடு தொடர்புடைய அனைத்துப் பத்திரங்களின் நகல்களையும் வீடு வாங்கப் போகும் நபரிடம் வழங்க வேண்டும்.

6. வீட்டை வாங்குபவர் ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் தனது வழக்கறிஞரிடம் காட்டிய பிறகு சட்ட ரீதியான கருத்தைப் பெறலாம். திருப்தி ஏற்படும்பட்சத்தில் வீட்டின் சொந்தக்காரருக்கு முன்பணம் கொடுக்கலாம். பிறகு வீட்டை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான ஒப்பந்தத்தை எழுதி இரு தரப்பினரும் கையெழுத்திட்ட பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யலாம்.

7. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் முழுத் தொகையையும் பெற்றுக் கொண்டு, வங்கிக்குச் சேர வேண்டிய தொகையைக் கொடுத்துவிட வேண்டும். கணக்கு முடிந்ததற்கு அடையாளமாக, வங்கியிடம் இருந்து ஒரு சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

8. வங்கியிடம் இருந்து வீட்டுக்குத் தொடர்புடைய ஆவணங்களைப் பெற்று அவற்றை வீட்டை வாங்குபவருக்குக் கொடுத்து, அவரிடம் இருந்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம், வீட்டை விற்பவர் அதை வாங்குபவருக்குக் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்துச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

அடமான வீட்டுக்கடன்

ஒருவேளை கையில் சொந்தமாகப் பணம் இல்லை. வங்கியில் கடன் பெற்றுத்தான் அந்த அடமான வீட்டை வாங்க வேண்டும். அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்? ஏற்கெனவே சொன்ன நடைமுறைகளில் முதல் நான்கு நடைமுறைகளை வீட்டை விற்பவர் செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டை வாங்குபவர் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

1. தன்னிடம் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் வீட்டை வாங்குபவர் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழ், சம்பளம் அல்லது வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கியின் பரிசீலனைக் கட்டணம் ஆகியவற்றையும் வங்கியிடம் வழங்க வேண்டும். கடன் விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

2. வங்கி உரிய பரிசீலனைக்குப் பிறகு கடன் வழங்கக் கொள்கை அடிப்படையிலான ஒப்புதல் வழங்கும். ஏற்ககெனவே ஒரு வங்கி தேவையான அனைத்துப் பரிசீலனைகளையும் செய்த பிறகுதான் கடன் வழங்கி உள்ளது என்பதால், தேவையற்ற தாமதம் இதில் இருக்காது.

3. வீட்டுக் கடன் தொகையைச் சம்பந்தப்பட்ட வங்கி, வீடு அடமானம் வைக்கப்படுள்ள வங்கிக்கு நேரிடையாகக் கொடுக்கும்.

4. கடனுக்கான முழுத் தொகையையும் பெற்றுக்கொண்டதால் அடமானம் வைத்திருந்த வங்கி, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வீடு வாங்குவதற்குக் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுத்துவிடும்.

5. அதன் பிறகு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி அசல், வட்டித் தொகை போக மீதத் தொகையை வீட்டை விற்பவருக்குக் கொடுத்துவிடும். இறுதியாக வீட்டை வாங்குபவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விற்பனைப் பத்திரத்தை வழக்கம்போல் பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த இடத்தில் ஒன்றைக் கவனிப்பது மிகவும் நல்லது. அடமான வீட்டை வாங்குபவர் அதே வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுக்கொள்வது நல்லது. இதனால் இரு தரப்புக்கும் நேரமும் சிரமமும் நிச்சயம் குறையும்.