disalbe Right click

Friday, April 10, 2015

வாக்காளர் அடையாள அட்டை பெற


வாக்காளர் அடையாள அட்டை பெற....

**************************************************************

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம் - படிவம் எண்:6
****************************************************
*******

ஜனவரி 01, 2015 அன்று ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடைந்திருந்தால், தன்னுடைய பெயரை சேர்ப்பதற்கு ஒருவர் விண்ணப்பிக்க முடியும்.
ஒருவர் வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச்  சேர்ப்பதற்கு படிவம் - 6 ஐ பயன்படுத்தவேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை பெற தேவையான ஆவணங்கள்:
வாக்காளர் அடையாள அட்டை பெற அடையாளச் சான்று, பிறப்புச் சான்று 
மற்றும் முகவரிச் சான்று ஆகியவை அவசியம். 

1.முகவரி அடையாளச் சான்றாக விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது
 பெற்றோரின் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்க வேண்டும். 
வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குப் புத்தகம், 
குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமான வரி மதிப்பீட்டின்
 ஆணை அல்லது சமீபத்திய குடிநீர்,தொலைபேசி, மின்சாரம், எரிவாயு 
இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் 
விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற அல்லது  பட்டுவாடா 
செய்யப்பட்ட அஞ்சல் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக 
இணைக்க வேண்டும்.

2.பிறப்புச் சான்றாக மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் 
அல்லது பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் சான்றிதழ் ஆகியன
ஏற்றுக் கொள்ளப்படும்.

3.அடையாளச் சான்றாக புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, 
அரசு ஐ.டி. கார்டு ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும்.

4.ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால்,
 எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் 
தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய 
இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

படிவம்- 6 உடன், 2 வண்ணப் புகைப்படம் இணைக்கவேண்டும்.

பிறப்பு சான்றிதழின் நகல் இணைக்க வேண்டும்.

 (அதாவது மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ் அல்லது மெட்ரிகுலேஷன் சான்றிதழ் அல்லது பள்ளி அல்லது  கல்லூரியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ்)

விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி அல்லது  அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் அல்லது  உரிமம் / வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் அல்லது  தொலைபேசி அல்லது  மின்சாரம் அல்லது எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற அல்லது  பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.

பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம் - படிவம் எண்:7
****************************************************
*********

வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல், மரணம், அல்லது தவறுதலான பதிவு செய்யப்பட்டிருந்தால், ஒருவர் பெயர் நீக்கத்திற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கமுடியும்.
.
பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம் - படிவம் எண்:8
************************************************************

உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில்  அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது (எடுத்துக்காட்டாக  பெயரில், வயதில் அல்லது தகப்பனார் பெயரில் தவறு ஏற்படுதல்) தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
அதற்கு நீங்கள் அடையாளச் சான்றாக, பிறப்பு சான்றிதழின் நகலை சமர்பிக்க வேண்டும்.

இடமாற்றத்திற்கான விண்ணப்பம் - படிவம் எண்:8A
************************************************************

வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும்.
இதற்காக படிவம்-8A வை பயன்படுத்தவேண்டும்.
விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி அல்லது/ அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் அல்லது வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் அல்லது/ தொலைபேசி அல்லது மின்சாரம் அல்லது/ எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற அல்லது பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்
***************************************************

நகராட்சி பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், உங்களுடைய விண்ணப்பத்தை கீழ்கண்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
துணை ஆணையர் அலுவலகம் ( நகராட்சி அலுவலகம் )

நகராட்சி எல்லைக்குள் நீங்கள் வசிப்பவராக இருந்தால், உங்களுடைய மாவட்டங்களில்  கீழ்கண்ட அலுவலரிடம் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
துணை ஆட்சியரின் அலுவலகம்
வருவாய் டிவிசன் அலுவலரின் அலுவலகம் (வாக்காளர் பதிவு அலுவலர்)
வட்டாட்சியர் அலுவலகம்(துணை வாக்காளர் பதிவு அலுவலர் )

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
என்ற இந்த இணையதள முகவரிக்குச் சென்று உங்களுடைய கைபேசி எண் 
மற்றும் உங்களது மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கவும்.
 உங்களுடைய கைபேசிக்கு, 'verification code' என்ற குறுஞ்செய்தி வரும். 
அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கைப் படிவம் 
வரும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைக் கொடுத்த பின்னர் save 
என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய செல்பேசிக்கு confirmation செய்தி
வரும். பின்னர், 'online application' என்பதை கிளிக் செய்து விவரங்களைக் 
கொடுக்க வேண்டும்.

இத்தளத்திலும் வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம். 
 உங்களுக்குத் தேவையான விண்ணப்பத்தைத் தேர்வு செய்து விவரங்களைக்
 கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ததும் உங்களுக்கு பத்து 
இலக்க எண் தரப்படும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 
தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து 
அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் 
அங்கீகரிக்கப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
உங்கள் விண்ணப்பத்தின் நிலை என்னவென்று நீங்கள்
 http://elections.tn.gov.in/apptrack/  என்ற இத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இத்தளத்திற்குச் சென்று உங்கள் பகுதி அதிகாரியின் தொடர்பு 
எண்ணைத் தெரிந்துகொள்ளலாம்.
ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டை  வைத்திருப்பவர்கள்     
இத்தளத்திற்குச் சென்று தமது விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.


மேலும் விவரங்களுக்கு www.elections.tn.gov.in/ இத்தளத்திற்குச் செல்லவும்.


உச்சநீதிமன்றம் - வழக்குகளின் நிலை அறிய


உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட 
வழக்குகளின் நிலையை அறிவது எப்படி?
இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் மற்றும் தீர்க்கப்பட்ட வழக்குகள் குறித்த தகவல்களை, வழக்கறிஞர்கள், வழக்கு தொடுத்தவர்கள் மற்றும் கீழ் நீதிமன்ற (Lower court) நீதிபதிகள் ஆகியோர் தெரிந்து கொள்ளும் வகையில் இத்தகவல் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றின் மூலம், வழக்குகள் குறித்த செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.

• வழக்கு எண் வாரியாக (Case Number wise)
• தலைப்பு வாரியாக (வாதி/பிரதி
வாதியின் பெயர்) (Title wise (Petitioner or Respondent’s Name))
• வழக்கறிஞரின் பெயர் வாரியாக (Advocate’s Name wise)
• உயர்நீதிமன்ற வழக்கு எண் வாரியாக (High Court Number wise)
• நாட்குறிப்பு எண் வாரியாக (Diary Number wise etc.)


1. வழக்கின் நிலையை CASE STATUS PORTAL OF SUPREME COURT OF INDIA (http://www.courtnic.nic.in/courtnicsc.asp)) என்ற இணைய முகவரியில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்
2. வழக்கின் நிலையை பின்வரும் வழியின் மூலம் நீங்கள் அறியலாம்.
• மேலே கூறப்பட்டுள்ள அனைத்து செய்திகளும் இடது பக்கத்தில் இருக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுத்து வழக்கின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கு எண் வாரியாக (Case Number wise)

• கீழிறங்குப் பெட்டியில் இருந்து (drop down box) வழக்கின் வகையைத் தேர்வு செய்ய 
வேண்டும்..
• வழக்கின் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்..
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்..

தலைப்பு (வாதி/பிரதிவாதியின் பெயர்) வாரியாக. 
(Title (Petitioner or Respondent’s Name) wise)

• வாதி அல்லது பிரதிவாதியின் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.
• கீழிறங்குப் பெட்டியில் இருந்து (drop down box) ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும்
• தெரியாது (Don’t Know) 
• மனுதாரர் (Petitioner) அல்லது 
• பிரதிவாதி (Respondent)
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்க 
வேண்டும்..

வழக்கறிஞர் பெயர் வாரியாக (Advocate’s Name wise) 

• வழக்கறிஞரின் பெயரைப்பதிவு செய்யவேண்டும்.
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்க
வேண்டும்..

உயர்நீதிமன்ற எண் வாரியாக (High Court Number wise)

• உங்கள் மாநிலத்தை கீழிறங்குப்பெட்டியில் இருந்து 
 (drop down box) தேர்ந்தெடுக்க வேண்டும்..
• கீழ் நீதிமன்ற எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்..
• தீர்ப்பு தேதியைக் கீழிறங்குப் பெட்டியிலிருந்து தேர்ந்தெடுத்துச் சமர்ப்பிக்க வேண்டும்..

நாட்குறிப்பு வாரியாக (Diary Number wise)

• நாள் குறிப்பு எண்ணைப் பதிவு செய்ய 
வேண்டும்..
• கீழிறங்கு பெட்டியிலிருந்து (drop down box) வருடத்தைத் தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு - நகல்கள் பெற


உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்  நகல்கள் பெற என்ன செய்ய வேண்டும்?


இணையத்தில் தீர்ப்புத்தகவல் அமைப்பு, (JUDIS) என்பது  பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும் தன்னகத்தே அடக்கியுள்ளது. இந்த தீர்ப்புகளை (Judgment Information System (JUDIS)) ( http://judis.nic.in/supremecourt/chejudis.asp) என்ற இணையதள முகவரியில் நாம் காணலாம். உச்சநீதிமன்றத்தீர்ப்புகளை பின்வரும் முறையில் நாம் விண்ணப்பித்துக்  காணலாம்.

• வாதி/பிரதிவாதி வாரியாக

• நீதிபதி பெயர் வாரியாக

• வழக்கு எண் வாரியாக


• தீர்ப்புத் தேதி வாரியாக.

• அரசியலமைப்புக் குழு வாரியாக


• அகரவரிசைப்படுத்தப்பட்ட வழக்குப்பட்டியல் வாரியாக


• தீர்ப்பு வாரியாக (Held wise)

• பொருள்/சொற்றொடர் வாரியாக (Text/phrase wise)

• சட்ட வாரியாக (Act wise) 


 போன்றன.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துப்பட்டியல்களும் இணையதளத்தின் இடது பக்கவாட்டில் இருக்கும். நமக்கு தேவைப்படும் தீர்ப்பினைக் குறித்து அறிய உரிய பட்டியலை கீழ்க்காணும் முறையில் கிளிக் செய்து கொள்ள  வேண்டும்.

வாதி/பிரதிவாதி வாரியாக (Petitioner/Respondent wise)

• வாதி அல்லது பிரதிவாதி பெயரைப்பதிவு செய்யவும்
• கீழிறங்குப் பெட்டி (drop drown box) யில் இருந்து ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்யவும். அதாவது, 'தெரியாது' அல்லது வாதி அல்லது பிரதிவாதி.
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து (எந்த நாளில் இருந்து, எந்த நாள் வரை) இரண்டு தேதிகளையும் (From – To) குறிக்க வேண்டும்.
• கடைசியாக அறிக்கையின் நிலையை அறிய Reportable status ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.

நீதிபதி வாரியாக (Judge name wise)

• நீதிபதியின்  பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.
• கீழிறங்குப் பெட்டியிலிருந்து 
 (எந்த நாளில் இருந்து, எந்த நாள் வரை) இரண்டு தேதிகளையும் (From – To) குறிக்க வேண்டும்
• இறுதியாக அறிக்கையின் நிலையை அறிய status ஐ தேர்ந்தெடுக்கவும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்

வழக்கு எண் வாரியாக (Case number wise) 

• கீழிறங்குப்பெட்டி (drop drown box) யிலிருந்து வழக்கின் வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
• வழக்கின் எண்ணை பதிவு செய்ய 
வேண்டும்.
• கீழிறங்குப்பெட்டியிலிருந்தது வருடத்தைத் தெரிவு செய்ய வேண்டும்.
• இறுதியாக, (drop drown box) ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்

தீர்ப்பு வழங்கிய நாள் வாரியாக (Date of judgment wise)

• கீழிறங்குப் பெட்டியிலிருந்து 
 (எந்த நாளில் இருந்து, எந்த நாள் வரை) இரண்டு தேதிகளையும் (From – To) குறிக்க வேண்டும்
• இறுதியாக அறிக்கையின் நிலையை அறிய Reportable status ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். 
அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்

அரசியலமைப்புக் குழு வாரியாக (Constitutional bench wise)

• கீழிறங்குப்பெட்டியில் (drop drown box) இருந்து 
 (எந்த நாளில் இருந்து, எந்த நாள் வரை)  இரண்டு தேதிகளையும் From – To) தேர்ந்தெடுக்க வேண்டும்
• இறுதியாக, Reportable status ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவேண்டும்.

அகர வரிசைப்படுத்தப்பட்ட வழக்குப்பட்டியல் வாரியாக 
(Alphabetical case indexing wise)

• வாதி அல்லது பிரதி வாதியின் பெயரைப் பதிவு செய்ய 
வேண்டும். உதாரணமாக (Amar)
• கீழிறங்குப் பெட்டியில் (drop drown box) இருந்து  (எந்த நாளில் இருந்து, எந்த நாள் வரை) இரண்டு தேதிகளையும் தேர்வு செய்யவேண்டும். 
• இறுதியாக, Reportable status ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். அதாவது Reportable அல்லது Non reportable அல்லது All ஐ தேர்ந்தெடுத்து அதனைச் சமர்ப்பிக்கவேண்டும்.

தீர்ப்பு வாரியாகவும். பொருள்/சொற்றொடர் வாரியாகவும் சட்டம் வாரியாகவும், தற்குறிப்பு வாரியாகவும் தீர்ப்பு நகல்களை இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா?


குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா?
*************************************************************

தகவல் அறியும் உரிமைச்சட்டம் மாதிரி கடிதம்
*******************************************************************

உங்களுக்கு குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா? 
குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் வழிமுறை தெரியவில்லையா? 
தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் உங்கள் அனைத்து சிக்கலும் தீர்வு காண முடியும். பின்வரும் மாதிரி விண்ணப்பத்தில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து பயன்படுத்துங்கள். உங்களுக்குள்ள சந்தேகங்களை அவர்களிடம் இந்தச் சட்டத்தின் மூலம் கேட்டறியுங்கள்.


தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பம் - 2005, பிரிவு 6(1)ன் கீழ்

(ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்)
அனுப்புநர்:
                    .................................

                    ................................
                    ....................................
                     ................................  
பெறுநர்:
                     பொது தகவல் அலுவலர் அவர்கள் ,
                     மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகம்,
                     ................................மாவட்டம்.

ஐயா, வணக்கம்,
                  பொருள்: தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் கீழ் தகவல் பெறுவது சம்பந்தமாக

1) புதிய குடும்ப அட்டை வாங்க ஒருவர் எந்த அலுவலகத்தில், யாரை அணுக வேண்டும்? என்ற தகவல் தரவும்.
2) குடும்ப அட்டைக்கு விண்ணபிப்பதற்கான விண்ணப்பத்தை எந்த அலுவலகத்தில், எந்த அலுவலரிடம் பெற வேண்டும்? அதற்க்கு கட்டணம் ஏதேனும் உள்ளதா? இருந்தால் அது எவ்வளவு? என்ற தகவல் தரவும்.
3) குடும்ப அட்டை பெற விண்ணபிக்கும்போது என்னென்ன ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்? என்ற விவரம் தெரிவிக்கவும்.
4) குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தால் எத்தனை நாட்களுக்குள் குடும்பத்தை வழங்கப்படும்? அரசு நிர்ணயித்துள்ள நாட்களுக்குள் வழங்கபடவில்லை  என்றால் அதற்கு முழுப் பொறுப்பு யார் ? என்ற விவரத்தை தெரிவிக்கவும்.
5) குடும்ப அட்டை அச்சிடப்பட்ட அலுவலகத்திற்கு வந்திருப்பதை விண்ணப்பதாரருக்கு எவ்வாறு தெரிவிக்கப்படும்? எழுத்து மூலமாகவா அல்லது வாய்மொழி மூலமாகவா என்ற விவரம் தெரிவிக்கவும்.
6) குடும்ப அட்டை வழங்க தாமதமாக்கும் அரசு அலுவலர்கள் மீது அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்கும்? என்ற விவரம் தெரிவிக்கவும். இது அரசின் எந்த சட்டத்தின் கீழ் வரும் என்ற விவரமும் தெரிவிக்கவும்.
7) ஒருவர் தனது குடும்ப அட்டையை தொலைத்துவிட்டால் அவரிடம் அதன் நகல் ஏதும் இல்லை என்றால்  புதிய குடும்ப அட்டை பெற எந்த அலுவலகத்தில் யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்? அப்படி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை கிடைக்கும்?. அது பற்றி தகவல் தரவும்.
8) ஒரு குடும்ப அட்டைதாரர் தன்னுடைய பெயரையோ அல்லது தன்னுடைய குடும்ப உறுப்பினர் பெயரையோ குடும்ப அட்டையிலிருந்து நீக்கம் செய்து, பெயர் நீக்க சான்று பெற எந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்? அதனோடு என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்?
9) ஒருவருக்கு நியாய விலை கடையில் பொருள்கள் கிடைக்கவில்லை என்றால் எந்த அலுவலரிடம் புகார் கொடுக்க வேண்டும்? அப்புகார் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டிய அலுவலரின் முகவரி தெரிவிக்கவும்.
10) எடையில் குறைபாடு, தேவையற்ற பொருள்களை திணித்தல் ஆகிய புகார்களுக்கு யாரை அணுக வேண்டும்? என்ற விவரம் தெரிவிக்கவும்.
11) நுகர்வோர் புகார் கூறியும், எந்த அலுவலரும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த குறிப்பிட்ட அலுவலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா? என்ற விவரம் தெரிவிக்கவும். முடியும் என்றால் எந்த பிரிவின்கீழ் வழக்கு தொடர முடியும்? என்றும் தெரிவிக்கவும்.
12) எத்தனை விதமான குடும்ப அட்டைகள் தற்போது தமிழ்நாட்டில் உள்ளன. அவை வருமானத்தின் அடிப்படையில் உள்ளதா? அல்லது மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளனவா? என்ற விவரம் தெரிவிக்கவும்.
                    
                       நான் மேலே கூறிய தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் இல்லை எனில், தகவல் தொடர்புடைய அலுவலகத்திற்கு இதனை அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்கின்றேன். இந்த விண்ணப்பத்திற்கான கட்டணமாக 10 ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற கட்டண வில்லையை ஒட்டியுள்ளேன். மேலும் தகவலுக்கு பணம் செலுத்த வேண்டியுதிருப்பின், எத்தனை பக்கங்கள், அதற்கு பணம், எந்த தலைப்பில், எங்கு  செலுத்த வேண்டும்? என்று தெரிவித்ததால், அதை நான் செலுத்தவும் தயாராக உள்ளேன்.
இடம் :                                                                                                                  தங்கள் உண்மையுள்ள
நாள்  :

                                                                                                                                     (கையொப்பம்)               
இவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விண்ணப்பித்து குடும்ப அட்டை பெறுவதற்கான தகவலை அறிந்து கொள்ளலாம்...

முதல் தகவல் அறிக்கை


முதல் தகவல் அறிக்கை
*********************************
ஒரு காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரை படித்துப் பார்க்கும் காவல்நிலைய அதிகாரி, அந்தப் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் இந்திய சட்டங்கள் வரையறை செய்துள்ள குற்றங்கள் ஏதும் நடந்துள்ளதா? என்று முதலில் பார்ப்பார்.

அவ்வாறான குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்தால், அந்த குற்றத்தின் தன்மை குறித்து அவர் ஆராய்வார்.

ஏனெனில் அனைத்து வகை குற்றங்களிலும் ஒரு காவல்துறை அதிகாரி உடனடியாகவும், நேரடியாகவும் தலையிட முடியாது. எனவே காவல்துறை அதிகாரி, அந்த புகாரில் உள்ள குற்றங்கள் குறித்து முதலில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பிணையில் விடத்தகுந்த குற்றம் , பிணையில் விடத்தகாத குற்றம்
**************************************************************************


இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்றங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை  (1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் (2) பிணையில் விடமுடியாத குற்றங்கள் ஆகும்.

பிணை என்பது கைது செய்யப்பட்ட ஒரு நபரை வெளியில் விடுவதற்கான பெறப்படும் உத்தரவாதம் அல்லது உறுதியை குறிக்கும் சொல்லாகும். ஒரு குற்ற நிகழ்வு நடந்தால் அதில் பங்கேற்று, அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பையும் வலியையும் ஏற்படுத்திய நபரை – நபர்களை கைது செய்வது வழக்கம். அந்த நபர் மேலும் குற்றம் செய்யாமல் தடுக்கவும், குற்றம் தொடர்பான சாட்சிகளையும், சான்றுகளையும் கலைத்துவிடாமல் இருப்பதற்காகவும், குற்றவிசாரணையை குலைத்து விடாமல் இருப்பதற்காகவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்படும் நபரை தற்காலிகமாக தடுத்து வைப்பதே சட்டத்தின் குறிக்கோள். எனவே விசாரணைக் கைதியாக இருப்பவருக்கு பிணையில் விடுவிப்பது வழக்கமான நடைமுறையே. இவ்வாறு பிணையில் விடுவிக்கும் செயலை செய்வதில் சில நடைமுறைகள் உள்ளன.

மிகச்சிறிய குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரியே பிணையில் விடுவிக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறான குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய அதிகாரம் கொண்ட குற்றவியல் நீதிபதி மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.

காவல்துறை அதிகாரியே பிணையில் விடக்கூடிய குற்றங்களை (உடனே) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் என்றும், மற்ற குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் பிணையில் விட முடியாத குற்றங்களின் பட்டியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பின் இணைப்பாக வழங்கப் பட்டுள்ளது.

சுமார் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க்க்கூடிய குற்றங்கள் அனைத்தும் பிணையில் விடும் குற்றங்களாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்களாகவும் நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படுவது உண்டு. 

இது ஏறக்குறைய சரியாக இருந்தாலும், சட்டரீதியாக இதை அங்கீகரிக்க முடியாது. எனவே பிணையில் விடும் குற்றங்களையும், பிணையில் விடமுடியாத குற்றங்களையும் அடையாளம் காண குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை நாடுவதே நல்லது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி பிணையில் விடமுடியாத குற்றங்களை செய்வோரை காவல்துறை அதிகாரியே நேரடியாக கைது செய்ய முடியும். இவ்வாறு கைது செய்வதற்கு குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் கைது ஆணை (வாரண்ட்) தேவையில்லை.
எளிய குற்றங்களை செய்தவர்களை, அதாவது காவல்துறை அதிகாரியே பிணையில் விடத்தகுந்த குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரி நேரடியாக கைது செய்ய முடியாது. அத்தகையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உரிய குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை பெற்றே கைது செய்ய வேண்டும்.

இந்த அம்சங்களை பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வருவது, காவல்துறை அதிகாரியின் முக்கியமான கடமையாகும்.

ஏனெனில், ஒரு குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பெறும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது.
அந்த நடவடிக்கை எம்மாதிரியானதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதில் காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவு முக்கிய இடம் வகிக்கிறது.

புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பிணையில் விடமுடியாத குற்றமாக இருந்தால் மட்டுமே, அந்த காவல்துறை அதிகாரி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கையை சட்டரீதியாக விசாரணை, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மிக எளிய தன்மை வாய்ந்ததாக இருந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. அந்தப் புகாரை காவல் நிலையத்தில் இருக்கும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, அப்பகுதிக்கான குற்றவியல் நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பின்னர், குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டால் மட்டுமே, அப்புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய முடியும்.

எனவே, புகாரை பெற்றுக்கொண்ட ஒரு காவல்துறை அதிகாரி, அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் எத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். இதற்கு உதவி செய்யும் விதத்தில் புகார் எழுதப்பட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கை
****************************


இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154, முதல் தகவல் அறிக்கை என்பதை நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டப்பிரிவின் படி, “பிணையில் விடமுடியாத குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலை பதிவு செய்வதே, முதல் தகவல் அறிக்கை” ஆகும். இந்த தகவல் எழுத்தாகவோ, வாய்மொழியாகவோ இருக்கலாம். வாய்மொழித் தகவலாக இருந்தால் அதை எழுத்தில் வடித்து, தகவல் தருபவருக்கு அதைப் படித்துக் காண்பித்து அதில் தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.

குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்தான் இந்த தகவலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. குற்ற நிகழ்வு குறித்த செய்தியை அறிந்த யாரும் இந்த தகவலை காவல்துறைக்கு அளிக்கலாம்.

ஒரு குற்ற வழக்கின் அடிப்படையே இந்த முதல் தகவல் அறிக்கை என்பதால், இதற்கான தகவலை தருவதில் புகார்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புகாரில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னரே பார்த்தோம்.

ஒரு முதல் தகவல் அறிக்கை படிவத்தில், மாவட்டம், காவல் நிலையம், ஆண்டு, முதல் தகவல் அறிக்கையின் எண், நாள், குற்றவியல் சட்டப்பிரிவுகள், குற்றம் நடந்த நாள் மற்றும் நேரம், குற்றம் குறித்து தகவல் கிடைத்த நாள் மற்றும் நேரம், தகவல் எவ்வாறு கிடைத்தது, குற்றம் நடந்த இடம் மற்றும் முகவரி, தகவல் தருபவரின் பெயர் மற்றும் முகவரி, குற்றத்தில் தொடர்புடையவர்களின் விவரம், குற்றச் செயலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் காவல் நிலைய எழுத்தரால் பதிவு செய்யப்படும்.

பின்னர் குறிப்பிட்ட புகாரின் உள்ளடக்கத்தை அப்படியே பதிவு செய்து, குறிப்பிட்ட குற்றத்திற்கான குற்ற எண் குறிக்கப்பட்டு, அதன் நகல் தொடர்புடைய குற்றவியல் நடுவருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் பதிவு செய்து விசாரணை அதிகாரி அந்த படிவத்தில் கையொப்பம் இடுவார்.

குற்றச்செயல் குறித்த தகவல் அளிப்பவருக்கு, முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்கப்படவேண்டும்.

அனைத்து மத விவாகரத்து சம்பந்தமாக ......


அனைத்து மத விவாகரத்து சம்பந்தமாக ......
******************************************************
இரு மனங்கள் ஒத்து உடன் வாழ்வதே திருமணம். திருமணம் என்ற சடங்கு ஒன்று நடந்து விட்ட காரணத்தாலேயே இரு முரண்பட்ட மனங்கள் ஒன்றாக வாழ்வது தேவையில்லாதது.
‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமே’ என்பதை புரிந்து கொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத்தன்மையோ, புனிதத்தன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண்டால் ‘மணவிலக்கு’ (DIVORCE) என்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது. இரு மனங்கள் இணையும் திருமணத்தில், ஏதோ ஒரு மனம் உடன்பட முடியாவிட்டால் திருமணத்திற்கு முன்னரே பிரிவது அனைவருக்கும் நலம் விளைவிக்கும்.

ஆனால் இந்திய திருமணச் சூழலில் திருமணத்திற்கு முன் மணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. உரிய காரணம் இன்றி பிரியும் துணையை மீண்டும் அழைக்க ‘மணவாழ்வுரிமை மீட்பு சட்டம்’ பயன்படுகிறது.

பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுப்பவர்களுக்கும் கீழ்காணும் சட்டம் வழிகாட்டுகிறது.

சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, (கிறிஸ்தவர்களுக்கான) இந்திய திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மத சடங்குகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் (Agnostics), நாத்திகர்கள் (Atheists), இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கான மணமுறிவு உரிமைகளை விளக்குகின்றன.


சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி

1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறொருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல்,
2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்,
3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு கைவிட்டுச் செல்லுதல்,
4. தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்,
5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்படுதல்,
6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதை தெரியாதிருத்தல்,
7. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி(Sodomy), விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) கொண்ட குற்றம் செய்தல்,
8. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றிற்காக ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை பெறுதல்

ஆகிய சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டவர் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு கேட்டு மனுச் செய்யலாம்.
இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்தவர்கள், காரணம் 8 தவிர மேற்கண்ட காரணங்களுக்காகவோ, கணவரோ அல்லது மனைவியோ இல்லறத்திலிருந்து விலகி துறவறம் மேற்கொண்டாலோ, இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினாலோ அதைக்காரணமாக கூறியும் மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஒரு ஆண், மனைவியை மணவிலக்கு செய்ய வேண்டுமெனில், 

திருமணத்திற்கு பின்னர் மனைவி மாற்றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டப்படி திருமணம் செய்த கணவன்,

1. திருமணத்திற்கு பின் கிறிஸ்தவ மதத்தொழிலை விட்டு விலகி வேறு மதம் சார்ந்த தொழிலை மேற்கொண்டாலோ,
2. உடலுறவு கொள்ளத் தடை செய்யப்பட்ட உறவு முறையில் உள்ள வேறு ஒரு பெண்ணோடு உடலுறவுக் குற்றம் (incestuous adultery) புரிந்தாலோ,
3. மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டு அவளுடன் பிறன்மனைப் புணர்ந்தாலோ (bigamy with adultery),
4. வன்முறைப்புணர்ச்சி, இயற்கைக்கு மாறான புணர்வு, விலங்குகளுடன் புணர்தல்,
5. நெறிகெட்ட வாழ்க்கை காரணமாக பெண்ணை கொடுமை செய்தாலோ,
6. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மனைவியை துறந்து சென்று விட்டாலோ,
7. ஆண்மையற்று இருந்தாலோ
... மனைவியானவர்  மணவிலக்கு கோரி உரிய நீதிமன்றத்தில் மணவிலக்கு கோரலாம்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கான சட்டமும் 
மணவிலக்கு குறித்த அம்சங்களை விவரிக்கிறது.

இஸ்லாமிய ஆண்களுக்கு மணமுறிவு குறித்து அளிக்கப்படும் உரிமைகள் எல்லை அற்றதாக உள்ளது.
மனைவிக்கு காரணத்தை தெரிவிக்காமலே “தலாக்” எனப்படும் மணமுறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆண் உரிமை படைத்தவனாகிறான். மேலும் மனைவிக்கு தெரிவிக்காமலே கூட தலாக்கை செயல்படுத்தும் திறன் இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கிறது. இதில் நீதிமன்றம் தலையிடுவதில்லை.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர்கள் திருமண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி
நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய்விட்டால்,
மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை கணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத்தவறினால்,
கணவனுக்கு ஏழு ஆண்டுகளோ, அதற்கு அதிகமாகவோ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால்,
கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக்கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளுக்கு புறக்கணித்தால்,
கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்திற்கு தேவையான மனவளர்ச்சி இல்லாமலிருந்தால் ...

...பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு பெறலாம்.

இத்தகைய வழக்கு விசாரணைகளை பொதுவில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்தவும் (In Camera Proceedings), வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் வெளியிடாமல் தடுக்கவும் முடியும். வழக்கு தரப்பினர்கள் உடன்படும் நிலையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இசைவின் பேரில் மணமுறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.

இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.
எனவே, பொருந்தா மண உறவில் யாரும் விருப்பமின்றி நீடிக்கவேண்டிய தேவையில்லை. எனவே துணிந்து முடிவெடுங்கள். 

அதற்கு முன் உங்கள் எதிர்காலம் குறித்தும், குழந்தைகள் (இருந்தால்) எதிர்காலம் குறித்தும் ஆழமாகச் சிந்தித்துவிட்டு முடிவெடுங்கள்!

பொதுச்சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்

பொதுச்சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்
*****************************************************
 மேல் முறையீட்டு அதிகாரியிடம்  சிவில் நீதிமன்றத்தில் உள்ளது போல அலுவலர்களை அழைப்பது, கோப்புகளை கேட்பது போன்ற உரிமைகள் இச்சட்டத்தில் உண்டு. இந்த RPSA சட்டத்தை செயல்படுத்த ஒரு குறிப்பட்ட அரசுத் துறை நியமிக்கப்படும். அதேபோல் விண்ணப்பதாரர் கேட்ட பொது சேவை கொடுக்கப்படாதபோது, அதற்கான நஷ்டஈடும் சட்டத்தில் குறிப்பிடப்படும்.
RPSA சட்டத்தில் சாதி சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், தேர்தல் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, நிலம் தொடர்பான சான்றிதழ்கள் என்ற பல பொது சேவைகளை பெறுவது இந்த RPSA கீழ் வருகிறது.

RPSA அவசியம்
***********************
பொதுவாக அரசு அலுவலகங்களில் ஒரு குறிப்பிட்ட சான்றிதழைப் பெறு வதில் பொதுமக்களுக்கு  பல சிக்கல்கள் உள்ளன. யாரிடம் முறையிடுவது என்பதில் தொடங்கி, என்னென்ன சான்றிதழ்களை வழங்கவேண்டும், எவ்வளவு காலம் ஆகும், என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். அரசு செயல்பாடுகளில் எந்த ஒரு வெளிப்படைத் தன்மையும்  இல்லாமல் இருப்பதும் மற்றுமொரு சிக்கல்.
இவை யெல்லாம் ஊழல் விளைவுக்கும், சேவையை உரியகாலத்தில் பெறமுடியாமல் தவிப்பதற்கும் இருக்கும் காரணங்கள். இவற்றை களைவதே RPSAவின் நோக்கமாகும். ஒருவர் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றதாலேயே அவருக்கு அரசு செய்யவேண்டிய சேவைகள் பல உண்டு.
 எவ்வித செலவும் இல்லாமல் குடிமக்களுக்கு, குறித்த நேரத்தில் அச்சேவைகளை கொடுப்பது அரசின் கடமை, அச்சேவைகளை பெறுவது குடிமகனின் உரிமை. நமது தேர்தலில் வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் உரிமை, இந்த உரிமை நம் எல்ேலாருக்கும் சமமாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பொது சேவையை பெறுவதும் நமது உரிமை அதனை RPSA நிறைவேற்றுகிறது.
RPSA மேலும் செய்யவேண்டியது என்ன?
**********************************************************
இதுவரை RPSA அமலில் உள்ள மாநிலங் களில் எல்லாம் எல்லா அடிப்படை சேவைகளும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட வில்லை. இங்குள்ள அட்டவணையில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் RPSAயின் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏழைகள் அதிக சிரமப்பட்டு பெற வேண்டிய நிலம் தொடர்பான சான்றிதழ்கள் இந்த சட்டத்தில் சேர்க்கப்படுவதில்லை.
அப்படி சேர்த்தால் நிலம் தொடர்பான எல்லா அரசு ஆவணங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டு பல சிக்கல்கள் தீர்க்கப்படும். மேல்முறையீட்டு அதிகாரிகள் மாவட்ட தலைமை அலுவலகத்திலோ அல்லது மாநில தலைமை அலுவலகத்திலோ இருப்பதால் ஏழைகள் தங்கள் குறைகளைத் தீர்க்க சிரமப்படவேண்டியுள்ளது.
இதற்கு கம்ப்யூட்டர்-இணையம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேல்முறையீட்டை எளிமைப்படுத்தவேண்டும். RPSA வந்த பிறகு பல அரசு அலுவலகங்கள் சீராக செயல்படத் துவங்கியுள்ளன. ஆனாலும் இவை மேலும் வளர வேண்டும். தமிழக அரசு இதுபோன்ற சட்டத்தை எப்போது கொண்டுவரும்?
ஒரு குறிப்பிட்ட சான்றிதழைப் பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளன. யாரிடம் முறையிடுவது? என்பதில் தொடங்கி, என்னென்ன சான்றிதழ்களை வழங்கவேண்டும், எவ்வளவு காலம் ஆகும், என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம்.
அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பதும் மற்றுமொரு சிக்கல். இவையெல்லாம் ஊழலுக்கும், சேவையை உரியகாலத்தில் பெறமுடியாமல் இருப்பதற்கு காரணங்கள்.
(நன்றி திரு இராம. சீனுவாசன் அவர்களுக்கு)
தி இந்து நாளிதழ் செய்திகள், 09.02.2015