disalbe Right click

Monday, August 21, 2017

இந்திய தண்டணைச் சட்டத்தின் கீழ் குற்றம்!

இந்திய தண்டணைச் சட்டத்தின் கீழ் குற்றம்!
குற்றம் குற்றமே!
  • நினைப்பது எல்லாம் நடப்பதில்லை.
  • செய்வது எல்லாம் ஜெயிப்பதில்லை.
  • இது குற்றம் புரிபவர்களுக்கும் பொருந்தும்.
  • அதனால், அவர் குற்றம் செய்யவில்லை, குற்றம் செய்வதற்கு முயற்சிதான் செய்தார்! இதனால், யாருக்கும் எந்தவித இழப்பும் இல்லை!, எந்தவித நஷ்டமும் இல்லை! என்று யாரையும் சட்டம் தண்டிக்காமல் விடாது.
  • அப்படிச் செய்தால் அவர்கள் கண்டிப்பாக மீண்டும் அந்தக் குற்றத்தைச் செய்ய முயற்சி செய்வார்கள்.
  • ஆகையால், குற்றம் செய்வதற்கு முயல்வதையும் ஒரு தனிக்குற்றமாக இந்திய தண்டணைச் சட்டம் எடுத்துக் கொள்கிறது.
”சரி, சரி விடுப்பா. ஏதோ தெரிஞ்சோ, தெரியாமயோ நடந்திருச்சி, ஒனக்கு ஒண்ணும் ஆகலல்ல! அவன் இனிமே அப்படிச் செய்யமாட்டான்!”ன்னு கிராம பஞ்சாயத்துகளில் நாட்டாண்மை என்பவர் பேசுவதை நீங்கள் திரைப் படங்களில் பார்த்திருக்கலாம்.
  • இந்திய தண்டணைச் சட்டமானது ஒரு குற்றச் செயலுக்கான முயற்சியைக்கூட சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. அதற்கும் தண்டணை உண்டு.
  • திருடுவது குற்றம் என்றால், கொலை செய்வது குற்றம் என்றால், திருடுவதற்கு, கொலை செய்வதற்கு முயற்சி செய்வதும் குற்றம்தான்.
  • பொதுவாக ஒரு குற்றச் செயலை அரங்கேற்ற வேண்டுமென்றால், நான்கு விதமான நிலைகளை குற்றம் செய்பவர் கடக்க வேண்டியதிருக்கும்.
1.கருத்து:
  • ஒருவரின் எந்த ஒரு செயலுக்கும் முதல் காரணமாக இருப்பது அவரது எண்ணங்களே ஆகும்.
  • ஆனால், செயல் எதுவுமே நடைபெறாமல், ஒருவர் குற்றம் செய்ய நினைத்தார்! என்பதை மட்டும் வைத்து அவரை சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது.
2.முன்னேற்பாடு:
  • ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்வதற்கு திட்டமிடுவதோ, நடவடிக்கை எதனையும் மேற்கொள்வதோ முன்னேற்பாடு என்கிறோம்.
  • இந்த முன்னேற்பாடுகளால் பொது மக்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாத காரணத்தால், சட்டத்தின் கீழ் இதனை தண்டிக்க முடியாது.
3.முயற்சி:
  • ஒருவர் ஒரு குற்றச்செயலை செய்வதற்கு இது மிகவும் அவசியம்.
  • தனது எண்ணத்தின்படி திட்டமிட்டு, ஒரு குற்றச் செயலை ஒருவர் செய்வதற்கு முயற்சி செய்கிறார்.
  • அது வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை. தோற்றாலும் கூட அது சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும்.
  • இந்த முயற்சியின் காரணமாக தனிப்பட்ட ஒருவருக்கோ அல்லது பலருக்கோ அல்லது பொது மக்களின் உடலுக்கும், உடைமைக்கும் ஏதோ ஒரு வகையில் தீங்கு, அழிவு ஏற்படுகிறது.
  • எனவே இந்திய தண்டணைச் சட்டமானது பல்வேறு பிரிவுகளின் கீழ், இதனை தண்டிக்கிறது.
4.செயல்:
  • முதலில் மனதில் நினைக்கப்பட்டு, அதற்காக சில முன்னேற்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, அதனை முடிப்பதற்கு முயற்சி செய்யப்பட்டு, இறுதியில் ஒரு குற்றச் செயலானது ஒருவரால் அல்லது பலரால் முடிக்கப்பட்டுகிறது.
  • குற்ற முயற்சியையே தண்டிக்கும் சட்டமானது குற்றச் செயலை தண்டிக்காமல் எப்படி விட முடியும்?
  • இந்திய தண்டணைச் சட்டமானது பல்வேறு பிரிவுகளின் மூலமாக அந்தக் குற்றங்களுக்கு ஏற்றாற்போல கடுமையான தண்டணைகளை வழங்குகிறது.
*******************************அன்புடன் செவம் பழனிச்சாமி

Sunday, August 20, 2017

காவல்துறை அலுவலர் புலனாய்வு செய்வதற்கான நடைமுறை

காவல்துறை அலுவலர் புலனாய்வு செய்வதற்கான நடைமுறை

ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது என்று உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தால், அந்தப் புகாரினை ஏற்றுக்கொண்டு முதலில் அவருக்கு காவல்துறை அலுவலர் CSR (Community Service Register) எனப்ப்டுகின்ற “மனு ஏற்புச் சான்றிதழ்” அளிக்க வேண்டும்.  

கைது செய்யப்படக் கூடிய குற்றமாக இருந்தால்...

அந்தப் புகாரின்படி கைது செய்யப்படக்கூடிய குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிய வந்தாலோ அல்லது ஒரு காவல் அலுவலர்க்கு தானாகவே தெரிய வந்தாலோ குற்ற விசாரணை முறைச் சட்டம்,  (Cr.P.C) 1973 - பிரிவு 154ன்படி, அவர் முதலில்  முதல் தகவல் அறிக்கை தயார் செய்ய வேண்டும். 

அந்தப் புகாரின்படி ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்கள் நடந்திருப்பது தெரிய வந்து, அவற்றுள் ஏதேனும் ஒன்று கைது செய்யப்படக்கூடிய குற்றம் என்றால், அந்த வழக்கை கைது செய்யப்படக்கூடிய குற்ற வழக்காக குற்ற விசாரணை முறைச் சட்டம்,  (Cr.P.C) 1973 - பிரிவு 155(4)ன்படி,   காவல்துறை அலுவலர்  எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீதிமன்ற  உத்தரவு தேவையில்லை

கைது செய்யப்படக்கூடிய குற்றம் என்றால், நீதிமன்ற நடுவரின் உத்தரவு இல்லாமலேயே, குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 156(1)ன்படி, காவல்துறை அலுவலர், அந்த வழக்கை புலனாய்வு செய்யலாம். 

அவசியம் ஏற்பட்டால், நடுவரின் அனுமதியின்றி குற்றவாளிகளை கைது செய்யவும் விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. 

புலனாய்வு  செய்வதற்கு  அதிகாரம்  அளிக்கப்படாத  ஒரு  காவல் அலுவலர் இந்த வழக்கை புலனாய்வு செய்துள்ளார். எனவே அதனை ஏற்கக்கூடாது!  என்று அந்தக் காவலர் எடுத்த எந்த ஒரு நடவடிக்கையையும் குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 156(2)ன்படி  யாரும் ஆட்சேபிக்க முடியாது.

நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்

கொடுக்கப்பட்ட புகாரின் மூலமாகவோ அல்லது விசாரணையில் கிடைத்த தகவல் மூலமாகவோ கைது செய்யப்பட வேண்டிய குற்றம் ஒன்று நடைபெற்று உள்ளது என்று அந்த வழக்கை புலனாய்வு செய்கின்ற அலுவலருக்கு சந்தேகிக்க காரணம் இருந்தால், குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 157(1)ன்படி அதற்குரிய நீதிமன்ற நடுவருக்கு உடனடியாக அவர் அது பற்றிய அறிக்கையினை அனுப்ப வேண்டும்.

அந்த அறிக்கையினை அவர்  தனக்கு மேலுள்ள அதிகாரியின் மூலம்  குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 158(1)ன்படி நடுவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலதிகாரி அந்த வழக்கு சம்பந்தமாக சில அறிவுரைகளை விசாரணை அதிகாரிக்கு வழங்கலாம். அந்த அறிவுறுத்தல்களை குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 158(2)  அறிக்கையில் குறிப்பிட வேண்டும். 

சாட்சிகளை விசாரிக்க....

அந்த வழக்கு சம்பந்தமாக யாரையேனும் விசாரிக்க வேண்டியது இருந்தால், அந்த விசாரணை அலுவலர் குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 160ன்படி சம்மன் அனுப்பி காவல்நிலையத்தில் ஆஜராக உத்தரவிடலாம். சம்மன் பெற்றவர் அந்த உத்தரவுக்கு கட்டுப்பட்டு காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும்.

சாட்சிகளில் பெண்கள் இருந்தாலோ அல்லது 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களாக இருந்தாலோ அவர்களை காவல்நிலையத்திற்கு அழைக்காமல், அவர்கள் குடி இருக்கும் இடத்திற்கே சென்று விசாரிக்க வேண்டும்.

கையெழுத்து போட தேவையில்லை

சாட்சிகளை விசாரிக்கும் அலுவலர் வழக்கு சம்பந்தமான விசாரணையில் சாட்சிகள் ஒவ்வொருவரும் கூறிக்கொள்வதை குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 161ன்படி  எழுதிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு எழுதிக் கொள்ளும் அறிக்கையில் குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 162ன்படி சாட்சிகள் கையெழுத்து  போடக்கூடாது.

புலனாய்வு செய்யத் தேவையில்லை என்றால்...

வழக்கு சம்பந்தமாக காவல் அலுவலர் ஒருவர் புலன் விசாரணை செய்ததில், குற்றம் நடைபெற்றதற்கான போதுமான காரணங்கள் இல்லையென்பது தெரிய வந்தால், குற்ற விசாரணை முறைச் சட்டம், (Cr.P.C) 1973 - பிரிவு 157(2)ன்படி, புகார் அளித்தவருக்கு அதனை எழுத்து மூலமாக அவர் தெரிவிக்க வேண்டும்.

காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்...

மேற்கண்டவாறு காவல்துறையினர் கைது செய்யப்படக்கூடிய புகார் ஒன்றில் நடவடிக்கை எதுவும் எடுக்காத பட்சத்தில், மனுதாரர் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ், நீதிமன்றத்தில் புகார் அளிக்கலாம்.

கோர்ட் டைரக்‌ஷன்

அந்த குற்ற வழக்கினைப் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றமானது குற்ற விசாரணை முறைச் சட்டம்,  (Cr.P.C) 1973 - பிரிவு 190-ன்படி, உத்தரவிட முடியும். 

புலன் விசாரணையை முடித்த பிறகு 

புலனாய்வை முடித்த பிறகு நீதிமன்ற நடுவருக்கு விசாரணை அதிகாரி குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173(2)ன் கீழ், விரிவான அறிக்கை அனுப்ப வேண்டும்.

************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Saturday, August 19, 2017

மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள்!

மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள்!
நிதியாண்டு 2017-18-ல் வருமான வரி விதிமுறைகள் மற்றும் முதலீடு குறித்த சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை அறிந்துகொள்வதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் தங்களுக்கான வருமான வரியை இன்னும் துல்லிய மாகத் திட்டமிட்டுக்கொள்ள முடியும். இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள முக்கியமான வருமான வரி மாற்றங்கள் சிலவற்றைக் கீழே பட்டியலிட்டுள்ளோம்.
1. வருமான வரி வரம்பு குறைப்பு
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்களுக்கு 2016-17-ம் ஆண்டில் 10% வருமான வரி விதிக்கப்பட்டது. இது நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வரம்புக்குள் வருமானம் கொண்ட 80 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரியில் ரூ.12,500 மிச்சமாகும்.
2. வரிக்கழிவு குறைப்பு
பிரிவு 87A-ன் கீழ் வழங்கப்பட்ட வரிக்கழிவு (Rebate) ரூ.5,000-லிருந்து ரூ.2,500-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வரி கட்டுபவர்களுக்கு ரூ.2,500 இழப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. மேலும், இந்த வரிக்கழிவு சலுகையைப் பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தச் சலுகையைப் பெறுபவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு கணிசமாகக் குறைத்திருக்கிறது. இந்த வரிக்கழிவானது, இந்து கூட்டுக் குடும்பத்தினர் (ஹெச்.யூ.எஃப்), வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குக் (என்.ஆர்.ஐ) கிடையாது.
3. ராஜீவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டம் வரிச் சலுகை ரத்து

கடந்த 2012-13-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ராஜீவ் காந்தி பங்கு சேமிப்புத் திட்டம் (Rajiv Gandhi Equity Savings Scheme – RGESS) அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அதற்கு வரிச் சலுகையும் அளிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 80சி-க்கு வெளியே வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சிசிஜி பிரிவின் கீழ் வரிச் சலுகை அளிக்கப்பட்டது. வரிச் சலுகை பெற பல குழப்பமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன (விளக்கமாகப் படிக்க: http://bit.ly/2uuqRfG). இதன் காரணமாக இதில் அதிகமான வர்கள் முதலீடு செய்ய முடியவில்லை.
இந்த நிலையில், 2017-18-ம் நிதியாண்டு முதல் இந்த வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வரிச் சலுகையின் மூலம் குறிப்பிட்ட சில தனிநபர்களே பயன்பெற்று வருவதால், அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. வீட்டுக் கடன் வட்டிச் சலுகை குறைப்பு
நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் வீட்டுக் கடனில் திரும்பக் கட்டும் வட்டிக்கான வரிச் சலுகை குறைக்கப் பட்டுள்ளது. இது பற்றி முன்னணி ஆடிட்டரான எஸ்.சதீஷ்குமார் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, அதில் குடியிருந்தால் திரும்பக் கட்டும் வட்டியில் ரூ.2 லட்சம் வரைக்கும் நிதியாண்டில் வரிச் சலுகை அளிக்கப்பட்டது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் வரம்பு இல்லாமல் முழு வட்டிக்கும் வரிச் சலுகை தரப்பட்டது. அதே நேரத்தில், வீட்டு வாடகையை வருமானமாகக் காட்டுவது அவசியம். ஒருவர் இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகளை வீட்டுக் கடன் மூலம் வாங்கி, ஒரு வீட்டில் குடியிருந்து, மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தால், அனைத்துக் கடன்களையும் திரும்பக் கட்டும் வட்டியில், மேலே கூறப்பட்டது போல் வரிச் சலுகை அளிக்கப்பட்டது.
நடப்பு 2017-18 ம் நிதியாண்டில், ஒருவர் வீட்டுக் கடனுக்கான வட்டியில் வரிச் சலுகையாக அதிகபட்சம் ரூ.2 லட்சம் மட்டுமே பெற முடியும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு வீட்டில் இருந்துகொண்டு, மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தவர்கள் அதிகமாக வரி கட்டும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, வரிச் சலுகைக்காக வீடு வாங்குவது குறைந்து ரியல் எஸ்டேட் துறை மந்த நிலைக்குத் தள்ளப்படும் சூழ்நிலை உருவாகும்.
எனினும், வீட்டுக் கடன் வட்டி மூலமான இழப்பை எட்டு ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லும் முந்தைய சலுகை இப்போதும் தொடர்கிறதுஎன்ற சதீஷ்குமார், இழப்பை எட்டு ஆண்டுகளுக்கு எப்படி எடுத்துச் செல்வது என்பது பற்றியும் சொன்னார்.
வீட்டுக் கடன் மூலம் வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டதன் மூலம் நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் ரூ.1,20,000 கிடைத்திருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த வாடகைத் தொகையில் நகராட்சிக்குக் கட்ட வேண்டிய வரி மற்றும் பராமரிப்புச் செலவைக் கழித்துக்கொண்டு, மீதியை வாடகை வரவாக எடுத்துக்கொள்ள வேண்டும். நகராட்சிக்கு கட்டிய சொத்து வரி ரூ.15 ஆயிரம் என வைத்துக் கொண்டு, அதைக் கழித்துக் கொள்வோம். மீதமுள்ள 1.05 லட்சத்தில் 33 சதவிகிதத்தைப் பராமரிப்புச் செலவான ரூ.34,650-யைக் கழித்தால் ரூ70,350-ஆகக் கிடைக்கும். இதனை வாடகையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த நிதியாண்டில் வீட்டுக் கடன் திரும்பக் கட்டும் வட்டி ரூ.2.25 லட்சம் என வைத்துக் கொள்வோம். இதிலிருந்து வீட்டு வாடகை ரூ.70,305-யைக் கழித்தால், அவருக்கு வட்டி மூலமான இழப்பு ரூ.1,54,650 ஆகும். இந்தத் தொகையை அடுத்த எட்டு ஆண்டுகளில் கிடைக்கும் வாடகை வருமானத்தில் ஈடுசெய்துகொள்ளலாம். இதேபோல், அடுத்து வரும் வருடங்களுக்கும் வீட்டு வாடகையையும், திரும்பக் கட்டும் வட்டியையும் கணக்கிட வேண்டும். வட்டிக் குறைந்தால் அல்லது வாடகை தொகை அதிகரித்தால் மட்டுமே இப்படி ஈடு கட்டுவது லாபகரமாக இருக்கும்என்றார்.

5. என்.பி.எஸ் கூடுதல் வரிச் சலுகை தொடர்கிறது
நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்.பி.எஸ்) மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு 80CCD (1B) -ன் கீழ் வழங்கப்பட்ட ரூ.50,000-க்கான வருமான வரிச் சலுகை இந்த ஆண்டும் தொடர்கிறது. இது 80சி பிரிவுக்கு வெளியே தரப்படும் சலுகை என்பதால், மாத சம்பளக்காரர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்கள் கூடுதல் வரியை மிச்சப்படுத்த முடியும். இதற்குமுன்பு, என்.பி.எஸ் திட்டத்தில் 60 வயதுக்குப் பிறகுதான் பணத்தை எடுக்க முடியும் என்கிற நிலை இருந்தது. இப்போது மருத்துவம் போன்ற அவசரத் தேவைக்கு நாம் ஏற்கெனவே செய்த பங்களிப்பிலிருந்து 25 சதவிகித தொகையைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். இந்தத் தொகைக்கு வரிப் பிடித்தம் இல்லை என்பது கூடுதல் சலுகையாகும்.
7. பணவீக்க விகித சரிகட்டல் அடிப்படை ஆண்டு மாற்றம்
நீண்ட கால மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவதற்கான பணவீக்க விகித சரிக்கட்டல் அடிப்படை ஆண்டு 1981 என்பது 2001-ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான வரிதாரர்கள் பயன் அடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
8. சொத்துகளுக்கான நீண்ட கால ஆதாயம்
சொத்துகளுக்கான (மனை மற்றும் வீடு) நீண்ட கால ஆதாயம் கணக்கிடுவதற்கான கால வரம்பு மூன்று ஆண்டுகளாக இருந்தது. அது 2017-18 நிதியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் சொத்துப் பரிமாற்றம் நடப்பதோடு, சொத்து விற்பவர்கள் கட்டும் வரியும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
9. பங்குகளுக்கான நீண்ட கால மூலதன ஆதாய வரி
பங்குகளை வாங்கும்போது பங்குப் பரிவர்த்தனை வரி (Securities Transaction Tax – STT) கட்டியிருந்தால் மட்டுமே நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகையைப் பெற முடியும். 2014, அக்டோபர் 1-ம் தேதிக்குப்பிறகு வாங்கப்பட்ட அனைத்து பங்குகளுக்கும் இது பொருந்தும்.
10. ஆதார் கார்டு, பான் எண் இணைப்பு
2017 ஜூலை 1 முதல், புதிய பான் கார்டு பெற ஆதார் எண் அவசியமாகும். மேலும், பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11. வரிக் கணக்கு தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம்
2017-18-ம் நிதியாண்டுக்கான, வருமான வரிக் கணக்கை 2018 ஜூலை 31-ம் தேதிக்குள் மாத சம்பளக்காரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் கெடு தேதி தாண்டினால், வரிக் கணக்கு தாக்கலில் திருத்தம் ஏதும் செய்ய முடியாது. அதே நேரத்தில், கெடு தேதி தாண்டி, 2018 டிசம்பர் 31-க்குள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால், ரூ.5,000 அபராதம் கட்ட வேண்டும். இது தாமதக் கட்டணம் என்கிற பெயரில் வசூலிக்கப்படும். வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால், இந்த தாமதக் கட்டணம் ரூ.1,000 கட்ட வேண்டும்.
சுயதொழில் செய்பவர்களுக்கும் நிறுவனங் களுக்கும் தாமதக் கட்டணம் ரூ.10,000 என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் தாமதக் கட்டணம், வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது, கம்ப்யூட்டர் திரையிலேயே தாமதக் கட்டணம் காட்டப்படும் எனச் சொல்லப்படுகிறது.
12. ஒரு பக்க எளிய வருமான வரிப் படிவம்
2017-18-ம் நிதியாண்டில், ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைவான சம்பளம் உள்ளவர்கள் (வணிக வருமானம் இருக்கக் கூடாது), வருமான வரிக் கணக்கை எளிமை யாகத் தாக்கல் செய்ய வசதியாக ஒரே ஒரு பக்கம் கொண்ட வருமான வரிப் படிவம் (Income Tax Return – ITR) அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
13. முதல் முறை வரிக்கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மீளாய்வு இல்லை
முதன்முதலாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களின் வருமான விவரங்கள் மீளாய்வு (Scrutiny) செய்யப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், மிக அதிக தொகையைப் பரிவர்த்தனை செய்து, அது குறித்த தகவல் வருமான வரித் துறைக்கு கிடைத்திருக்கும்பட்சத்தில் இது பொருந்தாது.
14. பத்து ஆண்டுகள் வரை வருமான வரிக் கணக்குகள் ஆய்வு
தற்போது, கடைசி ஆறு ஆண்டுகளுக்கு வருமான வரி விவரங்கள், குறிப்பாக அறிவிக்கப்படாத வருமானம் அல்லது சொத்து குறித்து வருமான வரித் துறையால் மீளாய்வு செய்யப்படுகிறது. இனி பத்து ஆண்டுகளுக்கான விவரங்கள் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என வருமான வரித் துறை அறிவித்துள்ளது. இதனால் வரிதாரர்கள், குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கான ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பழைய ஆவணங்களைப் பலரும் ஒழித்துக் கட்டியிருப்பர்கள். அவர்களிடம் இப்போது அந்த ஆவணங்களையும், ஆதாரங்களையும் கேட்டால், அவர்கள் எங்கே போவார்கள்?
வருமான வரி தொடர்பாக வந்துள்ள இந்த மாற்றங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, நன்மை பெறுங்கள்!
நன்றி : நாணயம் விகடன் - 20.08.2017

Friday, August 18, 2017

போலிப் பத்திரத்தை காட்டி ரூ.1.20 கோடி மோசடி தாத்தா, பாட்டி கைது

போலிப் பத்திரத்தை காட்டி ரூ.1.20 கோடி மோசடி  தாத்தாபாட்டி கைது
சேலத்தில், போலிப் பத்திரத்தை காட்டி ரூ.1.20 கோடி மோசடி செய்த கில்லாடி தாத்தா, பாட்டி!
சேலம் : போலி ஆவணத்தை காட்டி வங்கியில் அடமானமாக வைத்து ஒரு கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த வயது மூத்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். 
சேலம் மாவட்டம், அம்மாபேட்டையிலுள்ள கந்தசாமி வீதியை சேர்ந்தவர்கள் 67 வயது இராஜமாணிக்கம் மற்றும் 57 வயது சவிதா தம்பதி. இவர்களுக்கு கோவை மாநகர பகுதியிலுள்ள பூமார்க்கெட் பகுதியில், 4 ஆயிரத்து 840 சதுரஅடி பரப்பளவில் சொந்தமான இடம் ஒன்று இருந்துள்ளது. இந்த இடத்தை சேலத்தை சேர்ந்த அருண் என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே விற்பனை செய்து விட்டனர். 
அருணுக்கு விற்பனை செய்த இடத்துக்கு போலி ஆவணம் தயாரித்துள்ளார்கள் இராஜமாணிக்கமும், சவிதாவும். ஏற்கனவே விற்கப்பட்ட நிலம் தங்களுடையது தான் என்று கூறி, அதனை, திருப்பூர், கரூர் வைஸ்யா வங்கியில் அடமானம் வைத்து, ரூ.1.20 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். 
வங்கி ஆண்டு இறுதி தணிக்கையின் போது அடமான ஆவணங்களை சரிபார்த்த வங்கி அதிகாரிகள் நிலத்திற்கான ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டு பிடித்தனர். 
இதையடுத்து, இதுகுறித்து அந்த வங்கியின் மேலாளர் முத்துக்குமார், கோவை மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் ஆசைதம்பியிடம் புகார் அளித்தார். மேலாளர் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், போலி ஆவணம் தயாரித்தல், மோசடி, கூட்டு சதி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து இராஜமாணிக்கம் மற்றும் சவிதாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
நன்றி : ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » 10.07.2017

கீழ்கோர்ட் அளித்த தீர்ப்பையும்

கீழ்கோர்ட் அளித்த  தீர்ப்பையும் 
உயர்நீதிமன்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும்!
கீழ் கோர்ட் தீர்ப்பை இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட்டுக்கு உத்தரவு
புதுடில்லி: 'கீழ் கோர்ட் அளித்த தீர்ப்பையும் உயர்நீதிமன்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என, சென்னை உயர்நீதி மன்றத்துக்கு, சி.ஐ.சி., எனப்படும், தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
'சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கும் வழக்குகளில், கீழ் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியிட்டால்தான், அதை இரண்டு தீர்ப்புகளுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும். 
கீழ்கோர்ட் தீர்ப்புகளை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும்' என, ஆர்.கே. ஜெயின் என்பவர், தலைமை தகவல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். 
'கடந்த, 2014 ஜூன் முதல், உயர்நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. அதற்கு முன், நீதிபதிகள் உத்தரவிட்டால் மட்டுமே, அந்த தீர்ப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 'முந்தைய தீர்ப்புகள் தேவைப்பட்டால், அதற்காக விண்ணப்பித்து, நகலை பெறலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த, தலைமை தகவல் ஆணையர், ஆர்.கே. மாத்தூர், தன் தீர்ப்பில் கூறியதாவது:
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், கீழ் கோர்ட்டின் தகவல்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட வழக்கில், உயர் நீதிமன்ற தீர்ப்புடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காக வசதியாக, அந்த வழக்கில் கீழ் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 நன்றி : தினமலர் நாளிதழ் - 17.08.2017

Wednesday, August 16, 2017

தொலை தூரக் கல்வியில் முறைகேடு - தூங்கும் தமிழக அரசு

தொலை தூரக் கல்வியில் முறைகேடு - தூங்கும் தமிழக அரசு!
       பல்கலை மானியக்குழு தடை, ஐகோர்ட் உத்தரவு என எதையுமே மதிக்காமல்,  பாரதியார் பல்கலை சார்பில், தொலைதுாரக் கல்வி மையங்கள் நடத்தப்பட்டு, விதவிதமான பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடந்து வருகிறது; ஆனால், எந்த நடவடிக்கையுமே எடுக்காமல், தமிழக உயர் கல்வித்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
நம் நாட்டில், நான்கு விதமான கல்வி நிறுவனங்கள் நடத்துவதற்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, அரசு சார்பிலும், அரசின் நிதியுதவியுடனும், முழுக்க முழுக்க சுயநிதியில் தனியாராலும் கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து, அரசியலமைப்பு உரிமைகளின் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் சார்பில், பல்கலைகள் நடத்தவும் அனுமதிக்கப் படுகிறது.
விதிமுறைகளுக்கு பஞ்சமில்லை!
அரசால் நடத்தப்படும் பல்கலைகளுக்கு,மத்திய அரசின் பல்கலை மானியக்குழு (U.G.C.,)சார்பில், நிதி வழங்கப்படுகிறது. இந்த பல்கலை நிர்வாகங்களின் கீழ், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள் இணைக்கப்படுகின்றன. பல்கலை மானியக்குழு வகுத்துள்ள விதி முறைகளின்படி மட்டுமே, இந்த கல்லுாரிகளில் பாடத்திட்டங்கள், பட்டப்படிப்புகள் நடத்தப்பட வேண்டும்; கல்லுாரிகளின் கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம் போன்றவற்றுக்கும் ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன.
பல்கலையுடன் இணைக்கப்பட்ட கல்லுாரிகளில், தேர்வு நடத்துவது, விடைத்தாள் திருத்துவது போன்றவையும் பல்கலை மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படியே நடத்தப்படுவது அவசியம். இக்கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கு, அவரவர் பெற்றுள்ள பிளஸ் 2 மதிப்பெண் அல்லது இளங்கலை பட்டத்தில் பெற்ற மதிப்பெண் சதவீதம் அடிபடையிலேயே, முறையே இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
மாணவர்களின் செமஸ்டர் வருகைப்பதிவு, படித்து தேர்வை எதிர்கொள்ளும் விதம் ஆகியவற்றை மதிப்பிட்டே, ஒரு மாணவர் பட்டம் பெற முடியும். ஆனால், சமீபகாலமாக, தமிழகத்தில் பெட்டிக்கடை போன்ற கட்டிடங்களில், தொலைதுாரக் கல்வி மையம் என்ற பெயரில், பட்டப்படிப்புகள், தெருவோரக்கடையில் விற்கப்படும் காய்கறிக் கூறு போல கூவிக்கூவி விற்கும் அவலம் உருவாகியுள்ளது.
இந்த முறைகேட்டில், முதலிடம் பிடித்துள்ளது, கோவை பாரதியார் பல்கலைக்கழகம். ஏழை, எளிய மாணவர்கள், பணிக்குச் செல்வோர் ஆகியோர், மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்பதற்காகவே, தொலை துார கல்வி மையங்களை நடத்திக்கொள்ளலாம் என்று பல்கலை மானியக்குழு அனுமதி அளிக்கிறது. இவற்றை கண்காணிக்க, தொலைதுாரக் கல்வி அமைப்பு (Distance Education Bereau) என்ற அமைப்பும், யு.ஜி.சி.,யின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பு, தொலைதுாரக் கல்வி மையங்களுக்கு, பல்வேறு வரன்முறைகளையும் உருவாக்கியுள்ளது.
எல்லை தாண்டிய 'சேவை'
இந்த விதிகளின்படி, ஒவ்வொரு பல்கலையும் அதனதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே, இந்த மையங்களை நடத்திக் கொள்ள வேண்டும்; அவற்றையும் பல்கலை நிர்வாகமே நடத்த வேண்டும். பல்கலை அனுமதித்துள்ள பட்டப்படிப்புகளுக்கு மட்டுமே, இந்த மையங்களில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு விதிமுறைகளும் உள்ளன. ஆனால், இவை எதையுமே பாரதியார் பல்கலை நிர்வாகம் மதிப்பதே இல்லை.
சி.பி.ஓ.பி., (Centre for Participatory and Online Programme), 
சி.சி.ஐ.ஐ., (Centre for Colabration of Industries and Institutions), 
சி.பி.பி., (Centre for Participatory Programme) 
என பல்வேறு பெயர்களில், தொலைதுார கல்வி மையங்களை உருவாக்க அனுமதியை   வாரி   வழங்கியுள்ளது.   கடந்த 2007 ம் ஆண்டில்,     ஒன்றிரண்டாக துவங்கிய இந்த மையங்கள், இப்போது வெளிநாடுகள்,வெளி மாநிலங்கள் என உலகம் முழுவதும் 360க்கும் அதிகமாகவுள்ளன.
வெறும் பத்துக்குப் பத்து சதுரடி பரப்பிலான கட்டிடங்களில், ஏதாவது ஒரு பெயரில் இந்த மையத்தைத் துவக்கி, பாரதியார் பல்கலை சான்று தருவதாகக் கூறி, மாணவர்கள் சேர்க்கப் படுகின்றனர்
பல்கலை எல்லையைத் தாண்டி நடத்தப்படும் இந்த மையங்களில், எந்த கலை, அறிவியல் கல்லுாரியிலும் நடத்தப்படாத புதுப்புது பட்டப்படிப்புகள் படிக்கலாம் என்று விளம்பரம் தரப்படுகிறது.
               பாரதியார் பல்கலையே அனுமதி தர முடியாத மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு படிக்கலாம் என்றும் துணிச்சலோடு இந்த மையங்கள் விளம்பரங்கள் செய்கின்றன. அதற்கான தேர்வையும் நடத்தி, பல்கலை சான்றையும் தருகின்றன. இதுபோன்ற எந்த பட்டப்படிப்புக்கான சான்றும் செல்லாது என்று, பல்கலை மானியக்குழு பகிரங்கமாகவே அறிவித்து விட்டது. ஆனால், இன்று வரையிலும் இந்த மையங்களில் சேரும் மாணவர்களுக்கு, பாரதியார் பல்கலை சான்று, தாராளமயமாக வழங்கப்படுகிறது.
இந்த மாணவர்களுக்கான தேர்வு நடத்துவது, விடை தாள் திருத்துவது எல்லாமே, சட்ட விரோதமாக நடத்தப்படுகிறது என்று கல்வியாளர்கள் பகிரங்க குற்றம்சாட்டி வருகின்றனர். எதைப்பற்றியும், பல்கலை நிர்வாகம் கவலைப்படுவதே இல்லை. நான்கு ஆண்டுகளில், இந்த மையங்களின் விதி மீறல், உச்சத்துக்குச் சென்று விட்டது. இதனால், கல்லுாரிக்குச் சென்று, கஷ்டப்பட்டு படித்து பட்டம் வாங்கும் மாணவர்கள், கடும் விரக்திக்கு உள்ளாகியுள்ளனர்.
தரமான மாணவர்களை உருவாக்க அரும்பாடுபட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகள், பல கோடி ரூபாய் முதலீடு செய்து கல்லுாரிகளை நடத்தும் சுயநிதிக் கல்லுாரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எல்லோரும் பெரும் கொதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பாரதியார் பல்கலையின் இந்த அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சிண்டிகேட், செனட் உறுப்பினர்களாலும் முடியவில்லை; மாறாக, பெரும்பாலானோர், இதற்கு துணை போவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதில் பெரிய அளவில் காசு வருவது தெரிந்து, மதுரை காமராஜர், அழகப்பா பல்கலைகளும் இதே பாணியில் செல்வதை அறிந்த பின்பே நிலைமை மோசமாவதை உணர்ந்து, தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம், இப்பிரச்னையைக் கையில் எடுத்தது. இந்த சங்கம்,  தாக்கல் செய்துள்ள வழக்கின் அடிப்படையில், இந்த மையங்களை மூடவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சங்கத்தின் புகாரை ஏற்று, தொலைதுார கல்வி மையம் நடத்தும் அனுமதியும் யு.ஜி.சி.,யால் மறுக்கப்பட்டுள்ளது.
               இவ்வழக்கு தொடர்பாக, பல்கலை நிர்வாகம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், 'நடப்பு கல்வியாண்டில், இந்த மையங்களுக்கான அனுமதியை விலக்கிக் கொள்வதாக' உறுதி தந்தது. ஆனால், இப்போது வரை எந்த மையமும் மூடப்படவில்லை; மாணவர் சேர்க்கையும் நிற்கவில்லை. இதனால், கொதித்துப்போன சுயநிதி கல்லுாரிகள் சங்கத்தினர், கடந்த ஜூலை 19 அன்று, பல்கலை துணைவேந்தர் கணபதியை அவரது அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
சொன்னது என்னாச்சு?
அவர்களுக்கு பதிலளித்த துணைவேந்தர் கணபதி, 'இந்த மையங்களை மூடுவது தொடர்பாக, விரைவில் சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டி, முடிவு எடுக்கப்படும்; அதற்கு 15 நாட்கள் அவகாசம் வேண்டும்' என்றார். அந்த அவகாசமும் முடிந்து விட்டது; சிண்டிகேட் கூட்டப்படவில்லை; எந்த மையத்தை மூடவும், பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் இல்லை. இதற்காக, உயர் கல்வித்துறையும் சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், இந்த சங்கத்தின் புகார்குறித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலருக்கும் பல்கலை மானியக்குழு, கடந்த ஆக.,4ல் கடிதம் அனுப்பியுள்ளது.
ஆனால், பாரதியார் பல்கலை மீது, உயர் கல்வித் துறையோ, தமிழக கவர்னரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில், தமிழகத்தில் பெறப்படும் பட்டங்களுக்கு, எந்த ஊரிலும் மதிப்பே இல்லாமல் போய் விடும் என்பது நிச்சயம்.
பல கோடி ரூபாய் முதலீடு செய்து கல்லுாரிகள் நடத்துவதும், மூன்று ஆண்டுகள் கல்லுாரிக்குச் சென்று படித்து பட்டம் வாங்குவதும் அர்த்தமற்றதாகி விடும். ஐகோர்ட் உத்தரவு, பல்கலை மானியக்குழு தடை அனைத்தையும் மீறி, இந்த மையங்களை நடத்த பல்கலை ஆதரிக்கிறது என்றால், அதில் பணம் விளையாடுகிறது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை; இருந்தும், இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பி லுள்ள உயர் கல்வித் துறை, எப்போது உறக்கம் கலைக்குமோ தெரியவில்லை.
எழுதினாலே 'பாஸ்' தான்!
பல்கலையுடன் இணைக்கப்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர் களின் விடைத்தாள்கள், ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் (சென்ட்ரல் வேல்யேஷன்) திருத்தப்படுகின்றன. ஒரு நாளில், அதிகபட்சம் 40 விடைத்தாள்கள் மட்டுமே, ஒருவர் திருத்துவதற்குத் தரப்படுகிறது. ஆனால், சி.பி.ஓ.பி., உள்ளிட்ட தொலைதுாரக்கல்வி மையங்களில் தேர்வு எழுதுவோரின் விடைதாள்கள், மாலை 5:00 மணிக்கு மேல், திருத்தப்படுகின்றன.
அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள், நுாற்றுக்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் திருத்தப்படுவதாகவும், அதற்கு ஆயிரம் ரூபாய் வீதம், ஆசிரியர்களுக்குக் கட்டணம் தரப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. எதையும் பார்க்காமல், 'பாஸ் மார்க்' போட வேண்டும் என்பதே, இவர்களுக்குத் தரப்படும் ஒற்றைக் கட்டளை. இது பற்றி துணைவேந்தர் கணபதியிடம் கேட்டதற்கு, ''நேரம் இல்லாததால், மாலைக்கு மேல் அந்த விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன,'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
5 பல்கலைகளுக்கே அனுமதி!
நடப்பு கல்வியாண்டில், தொலைதுாரக் கல்வி மையங்கள் நடத்துவதற்கு, அனுமதிக்கபட்டு உள்ள பல்கலைகளின் பட்டியலை, பல்கலை மானியக்குழு, கடந்த மே 2 அன்று வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலை கழகம், தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார சபா, அன்னை தெரசா மகளிர் பல்கலை மற்றும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அது போன மாசம்...இது இந்த மாசம்!
தொலைதுாரக் கல்வி மையங்களின் அத்து மீறலைக் கண்டித்து, முற்றுகையிட்ட சுயநிதி கல்லுாரிகள் சங்க நிர்வாகிகளிடம், 'இன்னும் 15 நாட்களில் தீர்வு காண்பதாக' கூறியது பற்றியும், ஐகோர்ட்டில் 'இந்த மையங்களின் அனுமதியை இந்த கல்வியாண்டிலேயே திருப்பிக் கொள்வதாக' பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது குறித்தும் துணைவேந்தர் கணபதியிடம் கேட்டதற்கு, ''சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டுவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் கூட்டப்பட்டு, இந்த மையங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும். அடுத்த ஆண்டிலிருந்து மையங்களுக்கான அனுமதியை விலக்கிக் கொள்வதாகவே, ஐகோர்ட்டில் 'அபிடவிட்' தாக்கல் செய்துள்ளோம்,'' என்றார்.
எங்களிடம் சொன்ன கால அவகாசத்துக்குள், பாரதியார் பல்கலை துணைவேந்தர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. உயர் கல்வித்துறை செயலரிடம் இதுபற்றி முறையிட்டுள்ளோம்; அடுத்த கட்டமாக, கவர்னரைச் சந்தித்து மனு கொடுத்து, நேரில் விளக்குவதற்கு முயற்சி செய்து வருகிறோம். அது கை கூடினால், நல்ல தீர்வு வருமென்று நம்புகிறோம்.
ஏ.எம்.எம்.கலீல்தலைவர், தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 15.08.2017