disalbe Right click

Wednesday, September 27, 2017

மத்திய அரசின் “தேசிய தொழில் பழகுநர் பயிற்சி”

மத்திய அரசின்   “தேசிய தொழில் பழகுநர் பயிற்சி”
சிறந்த வேலைவாய்ப்பை பெற, வெறும் பொறியியல் அல்லது தொழில்நுட்பப் பட்டம் மட்டும் போதாது, என்பது சமீப காலமாக நன்கு உணரப்பட்டுள்ளது!
இன்றைய இளைஞர்கள், செயல்முறை பயிற்சியின் மூலம் தேவையான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியம், என்பதை அறிந்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், நேஷனல் அப்ரன்டிஸ் டிரைனிங் ஸ்கீம் (தேசிய தொழில் பழகுநர் பயிற்சி) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது!
திட்டத்தின் நோக்கம்
திறன்மிக்க நாடாக இந்தியாவை மாற்றுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என்று, மத்திய அமைச்சகம் தெரிவிக்கிறது. குறிப்பிட்ட வேலைக்கு தகுதிப்படுத்தி கொள்ளும் வகையில், இளைஞர்களுக்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, தொழில்நுட்ப திறன்களை கற்க விரும்புபவர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையில் பாலமாக, இத்திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
தொழில் துறைகளில் உள்ள வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் பற்றிய விரிவான விளக்கங்களை, நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களே கற்பிக்கின்றனர். இத்திட்டத்தில் பங்குபெறும் மாணவர்கள், வகுப்பறை கல்வியோடு நின்றுவிடாமல், தொழில் நிறுவனங்களுக்கு சென்று நேரடி பயிற்சி பெறுகின்றனர்.
மென்திறன்கள், பணிப் பண்பாடு, தொழில் அறங்கள், தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை பயிற்சிக் காலத்தின்போதே மாணவர்கள் கற்றுக் கொள்வதால், சிறப்பாக பணிபுரிய அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது!
உதவித்தொகை
இந்த திட்டத்தின் கீழ், பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. உதவித்தொகையில் 50 விழுக்காட்டினை பணியமர்த்தும் நிறுவனத்திற்கு மத்திய அரசு செலுத்தும். பயிற்சி கால முடிவில் பயிற்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசால் தேர்ச்சி திறன் சான்றிதழ் வழங்கப்படும். அதனை, பணி அனுபவ சான்றிதழாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பித்தல் மற்றும் பயிற்சி
பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதிகள்: பொறியியல் பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பில் தேர்ச்சி. இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், அவ்வப்போது இத்திட்டத்தின் சார்பில் நடத்தப்படும் தொழில் பழகுநர் கண்காட்சியில் பங்கெடுக்க வேண்டியதும் அவசியம்.
பாடப்பிரிவுகள்: மொத்தம் 126 பாடப்பிரிவுகள்.
பயிற்சி காலம்: ஓர் ஆண்டு.
விபரங்களுக்குhttp://mhrdnats.gov.in  
நன்றி : தினமலர் நாளிதழ் (கல்விமலர்) - 28.09.2017 

Tuesday, September 26, 2017

ரத்தத்தை உறிஞ்சும் அட்டை

ரத்தத்தை உறிஞ்சும் அட்டை
கிரெடிட் கார்டு
உங்களுக்கு இமெயில் ஐடி இருக்கின்றதா? அப்படியென்றால், அந்த இமெயில் ஐடிக்கு  நீங்கள் விண்னப்பிக்காமலேயே, ”உங்களது கிரடிட் கார்டு ரெடியா இருக்கு, உடனே வந்து வாங்கிக் கொள்ளுங்கள்!” என்ற அர்த்தம் கொண்ட பல மெசேஜ்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உங்களுக்கு யாராலேயோ அனுப்பப்பட்டு இருக்கும். அட நம்மளயும் மதிச்சி பேங்கில இருந்து கூப்புடுறாங்களேன்னு நெனைக்காம, நாமதான் அப்ளையே பண்ணலியே, பிறகு எதுக்கு நம்மள கூப்புடுறாங்க?ன்னு  நீங்கள் அதனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் தப்பித்தீர்கள். இல்லையென்றால், புதைகுழிக்குள் இறங்கப் போகிறீர்கள்! என்று அர்த்தம். 
சாதாரண வங்கி என்று இல்லை. மிகப்பெரிய வங்கிகளும் இந்த வலையை நமக்கு விரித்து நம்மை வளைக்கிறார்கள்.
இவுங்க ஏன் இப்படி நமக்கு தேடி வந்து இலவசமா கிரடிட் கார்டு தர்ராங்கன்னு கொஞ்சமாவது நாம யோசிக்கணும்.
ஆனா, ரொம்ப பேரு எதையும் யோசிக்கிரதே இல்ல. எப்படி அத யூஸ் பண்ணணும்னு கூட தெரியாமலேயே வாங்கிடுறாங்க. இன்னும் சில பேரு நாலஞ்சி அட்டய வாங்கி வச்சிக்கிடுவாங்க. அத ஒரு கவுரவமா நெனக்கிறாங்க.
கட்டணம்
நம்ம நாட்டுல, “ஆதாயம் இல்லாம செட்டி ஆத்தோட போவானா?”ன்னு ஒரு பழமொழி கேள்விப்பட்டு இருப்பீங்க. அது கிரடிட் கார்டு கொடுக்குற வங்கிகளுக்கு ரொம்ப பொருந்தும். உங்களப் பொருத்த அளவில, அவுங்களுக்கு நீங்க “பொன்முட்டை இடுர வாத்து!” இதுக்கு வருஷத்துக்கு இவ்வளவுன்னு கட்டணம் இருக்கு! 200 ரூபாயில இருந்து 2000 ரூபாய்க்கு மேல கட்டவேண்டியது வரும். அத நீங்க கட்டியே ஆகணும். உங்கள குழிக்குள்ள தள்ள சில தள்ளுபடிகளை வங்கிகள் அறிவிக்கும். அதாவது, நீங்க வருஷத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செஞ்சீங்கன்னா நீங்க வருடாந்திர கட்டணம் கட்ட வேண்டியதில்லன்னு சொல்லுவாங்க. ஆனா, உங்க கிரடிட் அட்டையோட லிமிட்டே வருஷத்துக்கு 30,000 ரூபாய்க்குள்ளதான் இருக்கும். நம்மளும் வருடாந்திர கட்டணம் ரத்தாகுதேன்னு நெனச்சி,  தேவையே இல்லாம கிரடிட் கார்ட தேச்சி  அதுக்கு வட்டி கட்ட முடியாம முழிப்போம்.
நீங்க அத பயன்படுத்தாம கட்டுப்பாடோட இருந்தாலும், உங்க நண்பருக்குன்னோ அல்லது உங்க உறவினருக்குன்னோ  ஒரு அவசரத் தேவைன்னு பணம் எடுத்து கொடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகும். வேறு வழியில்லாம கொடுத்திருக்கிற லிமிட்டுக்கு மீறி செலவழிப்போம்.
செய்யும் பிஸ்னஸில், இன்னும் பத்தே நாளில் பணம்தான் வந்திரும்ன்னு அதிகமாக முதல் போட்டு அகலக் கால் வைப்பீங்க. எதிர்பார்த்தபடி பணம் வராது. என்ன செய்வது என்றே தெரியாது.
சுயரூபம்
அப்பதான் வங்கி தன்னோட சுயரூபத்த நமக்கு காமிக்கும். வட்டி, வட்டிக்கு வட்டி, தாமதக் கட்டணம், சேவை வரி, அது இதுன்னு போட்டு நம்மள தாக்கும். அதக்கட்ட முடியாம திண்டாடுவோம்.  நாம வாங்கின பணம், கட்டின வட்டி, அபராதம் எல்லாமே இம்மிகூட பிசகாம சிபில்ல ரெக்காடாயிரும். இதனால நம்மோட சிபில் ஸ்கோர் ரொம்ப பாதிக்கும். அதுக்கப்புறம் நாம எங்கயுமே கடன் வாங்க முடியாது.   
என்ன செய்ய வேண்டும்?
உங்களோட கிரடிட் கார்டின் லிமிட் 30,000 ரூபாயின்னா, 10,000 ரூபாய மட்டும் பயன்படுத்துனீங்கன்னா உங்க சிபில் ஸ்கோர் உங்கள பாதிக்காது. சில நேரங்களில் 15,000 ரூபாய் வரைக்கும் போகலாம். அதுக்கு மேல போனா, நீங்க அதுக்கு அடிமையாயிட்டீஙகன்னு அர்த்தம். இந்த சாதாரண அட்டைய ரத்தத்தை உறிஞ்சும் “அட்டையாக” மாற்றுவது நம்ம கையிலதான் இருக்கு.
******************************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

ஏழை மக்கள் பயன்பெறுவதற்காக புதிய மின் திட்டம்...

ஏழை மக்கள் பயன்பெறுவதற்காக புதிய மின் திட்டம்...
பிரதமர் மோடி அவர்கள் அறிவிப்பு
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் வகையில் மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை அடங்கிய சௌபாக்யா யோஜனா திட்டத்தை தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழாவையொட்டி 25.09.2017 அன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?
மின் விநியோகம் தொடர்புள்ள இந்த திட்டத்தின் மூலம் வரும் 2018-ஆம் வருடத்திற்குள் நமது நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கிடைக்கச் செய்வதுதான் இந்த திட்டத்தின் இலக்காகும். ரூ.500/- மட்டும் செலுத்தி, இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் மின் இணைப்பை பெற்று கொள்ளலாம். அந்த ரூ.500-ஐ மொத்தமாக செலுத்த முடியாதவர்கள் 10 மாத தவணையில் செலுத்தும் வசதியும் இந்த திட்டத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.16,320 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த திட்டங்களுக்கான செலவுகளுக்கு மத்திய அரசு சார்பாக 60 சதவீதமும், அந்தந்த மாநில அரசு சார்பாக 10 சதவீதமும், மீதம் உள்ள 30 சதவீதம் கடனாகவும் வழங்கப்படும்.
அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்,  மண்ணெண்ணெய்க்கு மாற்றாக சமையல் எரிவாயு, கல்வி மற்றும் மருத்துவ சேவைகள், தொலைத்தொடர்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கியுள்ளது.
நாட்டின் முன்னேற்றம்
எரிவாயு, மின்சார வசதி, மருத்துவ வசதிகள் ஆகியவை தனித்தனி திட்டமாக செயல்பட்டு வந்த நிலையில் அவற்றை சௌபாக்யா திட்டம் மூலம் ஒரே திட்டமாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால், நம் நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், வாழ்க்கைத் தரம் மேம்படும் என்று எதிர்பார்க்கலாம்.
********************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி