disalbe Right click

Saturday, November 18, 2017

பஞ்சமி நிலத்தை வாங்கலாமா?

பஞ்சமி நிலம் என்றால் என்ன?
ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக் காலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராக இருந்த திரு ஜேம்ஸ் ட்ரெமென்கீர் என்பவர் தாழ்த்தப்பட்ட மக்களான பறையர்களைப் பற்றிய அறிக்கை ஒன்றை தயாரித்து, 1891ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசிடம் தாக்கல் செய்தார்
அந்த அறிக்கையில் பறையர்களுக்கு இலவசமாக நிலம் வழங்குவதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையை அரசாங்கம் மேம்படுத்த முடியும் என்ற கருத்தை அதில் வலியுறுத்தி இருந்தார். இந்த அறிக்கையானது ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் 1892ம் ஆண்டு, மே மாதம் 16ஆம் தேதி விவாதத்துக்கு வந்தது
பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம்
இதனால், பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம் ஒன்று, 1892ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி இந்தியா முழுவதும் 12.5 இலட்சம் ஏக்கர் விளைநிலங்களை தலித் மக்களுக்கு இலவசமாக அன்றைய ஆங்கிலேய அரசு வழங்கியது. அப்போதைய சென்னை மாகாணத்தில் மட்டும் தலித் மக்களுக்கு, இலவசமாக  2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள்  ஆங்கிலேய அரசால் வழங்கப்பட்டது.  இந்த நிலத்தை சுருக்கமாக D.C.Land (Depressed Class Land) என்றும் சொல்கிறார்கள்.
சட்டத்திலுள்ள முக்கிய நிபந்தனைகள்
இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களில், ஷை தாழ்த்தப்பட்ட மக்கள் விவசாயம் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அதனை அனுபவிக்கலாம். குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு பிறகு தான், அவர்கள் இந்த நிலங்களை பிறருக்கு விற்க முடியும். அதுவும், அவர்கள் வகுப்பைச் (Depressed Class) சார்ந்தவர்களிடம் தான் விற்க முடியும். வேறு எந்த வகுப்பினரிடம் விறறாலும் அந்த விற்பனை செல்லாது.
தெரிந்தோ அல்லது தெரியாமலோ யாராவது, இந்த பஞ்சமி நிலங்களை வேறு வகுப்பினரிடம் விற்க முயன்றால், பத்திரத்தை பதிவு அதிகாரி, அதனை பதிவு செய்யக்கூடாது. மீறி இந்த பஞ்சமி நிலங்களை வேறு ஒருவர் வாங்கினால், எந்த நேரத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசாங்கம் பறிமுதல் செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு வழங்கப்பட மாட்டாது.
தாழ்த்தப்பட்ட மக்களை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்கிற எண்ணத்திலேயே இந்த சட்டத்தை, ஆங்கிலேய அரசு உருவாக்கியது.
பூமி தான இயக்கம்
1950ம் ஆண்டுக்குப் பிறகு, ஆசார்ய வினோபா அவர்கள் பூமி தான இயக்கத்தின் வழியாக பொதுமக்களிடம் இருந்து பெற்று, பல நிலங்களை இதே சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வழங்கினார். 1960ம் ஆண்டிலும் இந்த முறையில் நிலங்கள் தலித் மக்களுக்கு வழங்கப்பட்டன. ஆங்கில அரசாங்கத்தால் Depressed Class என்று குறிப்பிடப்பட்ட பெயர் இந்திய அரசியல் சட்டத்தில், Scheduled caste - பட்டியல் வகுப்பினர் (அட்டவணை வகுப்பினர்) என்று பிற்பாடு மாற்றம் செய்யப்பட்டது. D.C.Lan (Depressed Class Land)
எச்சரிக்கை
நிலம் வாங்குகின்ற வேறு வகுப்பினர், பஞ்சமி நிலமாக இருந்தால் அதனை எக்காரணத்தை முன்னிட்டும் வாங்கக்கூடாது. நிலத்தை விற்பனை செய்பவர் வேறு வகுப்பினராகக்கூட இருக்கலாம். அவர் அந்த நிலத்தை ஒரு தலித்திடம் இருந்து அவர் பெற்று அதனை உங்களிடம் விற்றாலும் நீங்கள்தான் நஷ்டப்பட வேண்டியதிருக்கும். ஆகையால், ஒரு நிலம் வாங்கும் போது அந்த நிலத்தை விற்பவர் யாரிடமிருந்து வாங்கியுள்ளார் என்பதை பார்ப்பது அவசியம் ஆகின்றது.
***************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

காவல்துறை - பொது நாட்குறிப்பு

காவல்துறை - பொது நாட்குறிப்பு
இது காவல் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் நடைமுறைகள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் பதிவேடு ஆகும். இதனை காவல் உதவி ஆய்வாளர் முதலில் எழுதி ஆரம்பித்து வைக்க வேண்டும்.
⧭ தினமும் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு  மறுநாள் காலை 7 மணிக்கு முடிக்கப்பட வேண்டும்.
 மலைப்பகுதி காவல் நிலையங்களில் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு முடிக்கப்பட வேண்டும்.
⧭ ஒவ்வொரு நாளும் காலை பொது நாட்குறிப்பை ஆரம்பிக்கும்போது கையிருப்பு ஆயுதங்கள் மற்றும்  தோட்டாக்கள், புகைவண்டி மற்றும் பேருந்து பயணச்சீட்டுகள் மற்றும் கையிருப்பு பணம் பற்றிய விவரங்களை தணிக்கை செய்து குறிப்பிடப்பட வேண்டும்
⧭ அன்று வரிசை அழைப்பில் எடுக்கப்பட்ட வகுப்பு மற்றும் முக்கிய அறிவுரைகள் குறித்து குறிப்பெழுத வேண்டும்.
⧭ வரிசை அழைப்பு நடத்தப்பட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்.
⧭ காலை 8 மணிக்கு காவலர்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல் விவரங்களை குறிப்பிட வேண்டும்.
⧭ மனுக்கள் பெறப்பட்ட விவரங்களை பெற்ற நேரம் மற்றும் தேதியுடன் பதிவு செய்ய வேண்டும்.
⧭ வழக்கு பதிவு செய்த விவரங்களை தேதி, நேரம், எதிரிகள் கைது, பிணை மற்றும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
⧭ பதிவு ஏதும் இல்லாவிட்டால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை விசேஷம் ஏதும் இல்லை என குறிப்பு எழுத வேண்டும்.
⧭ ஒவ்வொரு பதிவின் முடிவிலும் பதிவு செய்தவர் முழு கையொப்பம் செய்து தனது பதவி நிலையை குறிப்பிட வேண்டும்.
⧭ பொது நாட்குறிப்பை துவக்கி விவரங்கள் எழுதி பொறுப்பில் வைத்துள்ளவர், காவல் நிலையத்தை விட்டு வெளி அலுவல்களுக்கு செல்லும் போது அந்த விவரத்தை எழுதி பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்படுகிறதோ அவரிடம் கையெழுத்து பெற வேண்டும்.
⧭ வெளி அலுவல் முடிந்து காவல் நிலையம் திரும்புகையில், காவல் நிலையத்தில் இடைப்பட்ட நேரத்தில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளை படித்து பார்த்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
⧭ காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டது முதல் காவல் நிலையம் திரும்பும் வரை செய்த அலுவல் விவரங்களை முழுமையாக பதிவு செய்ய வேண்டும்.
⧭ இரவு மற்றும் பகல் ரோந்து அனுப்புகையில் அலுவல் செய்ய வேண்டிய விவரம், தணிக்கை செய்யப்பட வேண்டிய நபர்கள் பற்றிய விவரங்களை ஆகியவை குறித்து குறிப்பெழுத வேண்டும்.
⧭ வழக்கு விசாரணை அல்லது மனு அளிக்க யாரேனும் காவல் நிலையம் வந்தால்,  அவர்களை விசாரணை செய்த விபரம் / திருப்பி அனுப்பிய விவரம் போன்றவற்றை இதில் பதிவு செய்ய வேண்டும்
⧭ வழிக்காவலில் கைதி உணவிற்கோ அல்லது கழிப்பிட வசதிக்காகவோ காவல் நிலையம் அழைத்து வரப்பட்டது மற்றும் திரும்ப சென்ற விவரம் குறித்து பதிவு செய்ய வேண்டும்.
⧭ அதேபோல் ரோந்துப்பணி முடித்து வருகையில் அலுவல் புரிந்த விவரங்களை தெளிவாக எழுத வேண்டும்.
⧭ பொது நாட்குறிப்பு முடிக்கப்பட்டவுடன் நிலைய அறிக்கையுடன் (SHR) இணைத்து வட்ட ஆய்வாளர் / துணை காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
⧭ பொது நிறுவனங்கள் புத்தகம் முடிந்ததும் தொகுதி (Volume) எண் மற்றும் எந்த தேதி முதல் எந்த தேதி வரை என்று குறிப்பிட்டு நிலைய ஆவண பதிவேட்டு அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
⧭ பொது நாட்குறிப்பை அடித்தல் மற்றும் திருத்தலுடன் எழுதக்கூடாது
⧭ புரியாத வண்ணமும் எழுதக்கூடாது
⧭ பக்க எண்கள் குறிப்பிடாமல் எழுதக்கூடாது
⧭ உடனுக்குடன் எழுதாமலும் இருக்கக்கூடாது.
(தமிழ்நாடு காவல்துறை, காவல் உதவி ஆய்வாளர் கையேடு என்ற புத்தகத்திலிருந்து)
நன்றி : முகநூல் நண்பர் திரு  Dhanesh Balamurugan அவர்கள் (வழக்குரைஞர்)