disalbe Right click

Tuesday, January 2, 2018

CAG எனப்படுகின்ற இந்திய, தலைமை கணக்கு தணிக்கை வாரியம் 
நமது நாடு சுதந்திரமடைந்ததற்குப் பிறகு அரசின் செலவினங்களைக் கண்காணிக்கவும், அதை தணிக்கை செய்யவும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு தேவை என உணரப்பட்டது. அதன் காரணமாக உருவாக்கப்பட்டதுதான் தலைமை கணக்கு தணிக்கை வாரியம் ஆகும். இது. மத்திய அரசின் வரவு, செலவு, தவிர்க்கப்பட வேண்டிய செலவுகள், டெண்டர் விட்டதில் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தணிக்கை செய்து குடியரசுத் தலைவரிடம் அறிக்கையாக அளிக்கும்.
இதன் முதலாவது தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக திரு வி. நரஹரி ராவ் அவர்கள் 1948ல் பதவியேற்று 1954 வரை பதவி வகித்தார்.
நமது நாட்டின் 13வது தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக திரு அந்தோணி லியான்ஸீ யாலா அவர்கள் கடந்த 2017ம் ஆண்டு  மே மாதத்தில் பதவியேற்றார்.
வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்
அரசாங்கத்துடன் தங்களுடைய வருமானத்தைப் பகிர்ந்து கொள்ளும் திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார்-பொது பங்களிப்புத் திட்டத்தை (PPP) ஆய்வு செய்யும் அதிகாரமும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நமது நாட்டிலுள்ள மாநில அரசுகளின் வரவு செலவுகளை தணிக்கை செய்து அந்தந்த மாநில ஆளுநரிடம் சிஏஜி அளிக்கும். மாநில அளவில் பஞ்சாயத்துகள் வரை சிஏஜி தணிக்கைப்பணி செய்கிறது. நமது நாடு முழுவதும் இந்தத்துறையில் 58 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் போலவே அரசியல் சாசன விதிப்படி உருவாக்கப்பட்ட பதவி தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (Comptroller Auditor General) பதவி  ஆகும். பிரதமரின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் CAG-யின் ஊதியமும் தலைமை நீதிபதிக்கு இணையானது ஆகும். இவரது பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். அல்லது தன்னுடைய 65 வயது வரை இந்தப்பதவி வகிக்கலாம். இவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அதன் பிறகே குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.
திரு டி.என்சேஷன் என்று ஒருவர் தலைமை தேர்தல் அதிகாரியாக  பதவி ஏற்ற பிறகுதான், தலைமை தேர்தல் ஆணையருக்கு இவ்வளவு அதிகாரங்கள் இருக்கின்றன என்பது  நமக்குத்  தெரியவந்தது.
இது போலத்தான் நாட்டை உலுக்கிய 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடு, கால்நடைத் தீவன ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு உள்ளிட்ட விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்ததே CAG துறையின் அறிக்கைகள் வெளியான பிறகுதான்.
சர்வதேச அரங்கில் நமது CAG மீது தனி மரியாதை மற்றும் அபிப்பிராயம் உள்ளது. யுனெஸ்கோ, சர்வதேச அறிவுசார் சொத்துரிமை நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபை, யுனிசெஃப், .நா (இராக்) கணக்கு, .நா. இணை பணியாளர் ஓய்வூதிய நிதியம், உத்திசார் பாரம்பரிய திட்டம், .நா. இழப்பீட்டு ஆணையம், சர்வதேச வர்த்தக மையம், .நா. அலுவலக திட்டச் சேவை, தகவல் தொழில்நுட்பம் (ஓஐசிடி), உமோஜா உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் 11 அமைப்புகள் CAG  அங்கீகரித்துள்ளன.
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்
முதலில் வருவோருக்கு முன்னுரிமை! என்ற கொள்கை அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு ரூ. 1,651 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. மேலும் தகுதியற்ற நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கியிருப்பதாகவும்  CAG குற்றம் சாட்டியது. இதனால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தது.  அறிக்கை அடிப்படையில் சிபிஐ தாக்கல் செய்த 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அறிக்கையை படித்துப்பார்த்து, 150 சாட்சிகளை விசாரித்து, 7 ஆண்டுகளாக நீடித்த வழக்கில், அனுமானத்தின் அடிப்படையில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக  CAG குறிப்பிட்டுள்ளார் என்றும், இதை ஏற்க முடியாததால் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி ஷைனி அவர்கள் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் நம்பகத் தன்மையும், அங்கீகாரமும் கொண்ட  CAG மீதான நம்பகத் தன்மை இதனால் கேள்விக் குறியாகிவிட்டது.
அடுத்ததாக  CAG அறிக்கையின்  அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த 2008-ம் ஆண்டில் வழங்கப்பட்ட 122 லைசென்ஸ்களை ரத்து செய்துவிட்டது. இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவும், அதனால் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளும் அர்த்தமற்றவையாகிவிட்டன. இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை,  சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு அதிர வைத்துவிட்டது.
இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தகவல்கள் போதுமானவை அல்ல என்பதிலிருந்து சிபிஐ-யின் விசாரணையும் கேள்விக்குறியாகிவிட்டது.
அரசின் நடவடிக்கைகளை கொள்கைகளாக உருவாக்கும் அதிகார வர்க்க (ஐஏஎஸ்) செயல்பாடுகளையும் கேள்வி கேட்டுள்ளதோடு, வரைவு கொள்கையில் உள்ளவற்றை ஐஏஎஸ் அதிகாரிகள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்று நீதிபதி .பி. சைனி கூறியுள்ளார். அமைச்சர்களுக்கு தவறான வழிகாட்டுதலை ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பரிந்துரையில் அனுப்பியுள்ளதாகவும் நீதிபதி .பிசைனி அவர்கள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 
ஊழல் கண்காணிப்பு ஆணையர் (Corruption Monitoring Commissioner), கூட்டு நாடாளுமன்ற குழு (Joint Parliamentary Committee) ஆகியனவும் நீதிபதி .பிசைனி அவர்களின் விமர்சனத்திலிருந்து தப்பவில்லை
அனைத்து அமைப்புகளுமே சரிவர செயல்படவில்லை என்பது இதில் நிரூபணமாகியுள்ளது.
நமது நாட்டில் ஊழலுக்கு எதிராக செயல்படும் அனைத்து சுதந்திரமான அமைப்புகளின் செயல்பாடுகளும் இதன் மூலம் கேள்விக்குறியாகியுள்ளன.
நமது நாட்டு சிஏஜி அளித்த அறிக்கைகளை சமீபத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தணிக்கை நிறுவனங்கள் தணிக்கை செய்தன. இதுபோல ஒரு சிஏஜி அறிக்கையை சர்வதேச நிறுவனங்களின் தணிக்கைக்கு உள்ளாக்குவது இதுவே முதல் முறையாகும். இந்நிறுவனங்கள் அளித்த அறிக்கையில் 35 தணிக்கை அறிக்கைகள் போதுமான ஆதாரமில்லாமல் தயாரிக்கப்பட்டதாக சுட்டிக் காட்டியிருந்தன. 2-ஜி குறித்த தனது அறிக்கையில் ஒரு இடத்தில் ரூ. 67,364 கோடி இழப்பு என்றும், மற்றொரு இடத்தில் ரூ. 69,626 கோடி இழப்பு என்றும், இரு வேறு சந்தர்ப்பங்களில் ரூ. 57,666 கோடி இழப்பு  மற்றும் ரூ.1,76,645 லட்சம் கோடி இழப்பு என்றும் சிஏஜி  குறிப்பிட்டுள்ளது.
முதலில் எஸ்-டெல் நிறுவனத்துக்கு அளித்த லைசென்ஸ் அடிப்படையில் ரூ. 67,364 கோடி என்றும், யுனிடெக் நிறுவனம் தனது பங்குகளை டெலிநாருக்கு அளித்ததால் ரூ. 69,626 கோடி இழப்பு என்றும் குறிப்பிட்டிருந்தது. ஸ்வான் டெலிகாம் அளித்த டெண்டர் கேட்பு விவர அடிப்படையில் ரூ.57,666 கோடி என்றும் இறுதியாக 3-ஜி அலைக்கற்றை அடிப்படையில் ரூ. 1,76,645 கோடி என்றும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் ஒரு இடத்தில்கூட சிஏஜி ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கவேயில்லை.
2-ஜி குறித்து சிஏஜி அளித்த அறிக்கையும் இவ்விதம்தான் என்பது நீதிமன்ற தீர்ப்பில் புலனாகியுள்ளது.
இழப்பீடு கோரும் நிறுவனங்கள்
சிஏஜி அறிக்கை அடிப்படையில் 122 லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. சிபிஐ நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் அனைத்துமே இழப்பீடு கோரி முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளன. வீடியோகான் நிறுவனம் ரூ. 10 ஆயிரம் கோடி இழப்பீடு கோரி மனு செய்துள்ளது. லூப் டெலிகாம் மற்றும் எஸ்-டெல் நிறுவனங்களும் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளன.
இதேபோல சிபிஐ-யால் குற்றம் சாட்டப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்ட டெலிநார், சிஸ்டெமா, எடில்சாட் உள்ளிட்ட நிறுவனங்களும் இழப்பீடு கோர முடிவு செய்துள்ளன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர் காம்), எஸ்ஸார் நிறுவனங்களும் வழக்கறிஞர்களுடன் இழப்பீடு தொடர்பாக ஆலோசித்து வருகின்றன.
வங்கிகளின் வாராக்கடனில் மிக முக்கிய பங்கு வகிக்கும் துறைகளில் டெலிகாம் துறை முக்கிய இடம் வகிக்கிறது. லாபமீட்டும் துறை என கருதப்பட்டு பெரும் நஷ்டத்தை இத்துறை நிறுவனங்கள் சந்தித்து வருவதை ரிசர்வ் வங்கியே எச்சரித்துள்ளது.
சிஏஜி பதவி வகிப்போர் இப்பதவிக்குப் பிறகு வேறெந்த அரசு பதவிகளையும் வகிக்க முடியாது. ஆனால் ராய், .நா வெளியுறவு தணிக்கை குழுவின் தலைவர், இந்திய ரயில்வேயின் கவுரவ ஆலோசகர், பிசிசிஐ அமைப்பின் செயல்பாட்டுக் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர். அனைத்துக்கும் மேலாக வங்கி வாரிய குழு (பிபிபி) தலைவராக 2016-ம் ஆண்டில் வினோத் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வரவே ஏறக்குறைய 7 ஆண்டுகளாகிவிட்டது. மேல் முறையீட்டு வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பு  சிஏஜி உள்ளிட்ட அமைப்புகளுக்கு சாதகமாக வந்தால் மட்டுமே இந்த அமைப்புகள் மீதான நம்பகத் தன்மை மக்களுக்கு உருவாகும்.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 02.01.2017

பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே.......... :

பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவு
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த அனுமதியளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு செயலர் அவர்கள் இதுகுறித்து பிறப்பித்த உத்தரவில், 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்கள் மட்டுமே நடத்த அனுமதிக்க, பள்ளி நிர்வாகத்தினர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். மற்ற பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியளிக்க கூடாது என, பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட  கல்வித்துறை  அறிவுறுத்த வேண்டும். நடைபெற இருக்கின்ற கல்வி நிகழ்ச்சிகள் குறித்து, முன்கூட்டியே மாவட்ட கல்வித்துறை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி கல்வி நிறுவனங்கள் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை  கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி சுற்றுலா 
அனுமதியின்றி மாணவர்களை, சுற்றுலா அழைத்து செல்லக் கூடாது' என, பள்ளிகளுக்குகல்வித் துறை  எச்சரிக்கை 
இதுசம்பந்தமாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள் அனுப்பியுள்ள கடிதத்தில் மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து, முன்அனுமதி பெற வேண்டும் என்றும் மேலும், கல்வித்துறை வகுத்துள்ள விதிகளை பின்பற்றி, மாணவர்களின் பாதுகாப்பில் முழு கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும், ஆபத்தான இடங்களுக்கு, சுற்றுலா அழைத்து செல்லக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 02.01.2018 

குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல்

தமிழகத்தில் குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல் துவங்குவதற்கான புதிய விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை சென்ற ஆண்டின் துவக்கத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில், "இளம் மழலையர் பள்ளிகள் எனப்படும் பிளேஸ்கூல் விதி தொகுப்பு-2015 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து 6 மாத காலத்துக்குள் இந்த பள்ளிகளுக்கான அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். விதிகளில் கூறப்பட்டுள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால், அந்த பள்ளிகளை மூட உத்தரவிடப்படும் என்பது முக்கிய விதிகளாகும்..
3 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கீகாரம்
அங்கீகாரம் அளிப்பது மற்றும் புதுப்பித்தலுக்கு அந்தந்த மாவட்டத்திலுள்ள தொடக்கக்கல்வி அதிகாரி தான் பொறுப்பு அதிகாரி ஆவார். இந்த அங்கீகாரம் பெற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்னர் மீண்டும் பள்ளி நிவாகத்தினர் புதுப்பிக்க வேண்டும். விதிகளுக்கு முரணாக நடந்து கொள்ளும் பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்பப்பெற அதிகாரிக்கு அதிகாரம் இந்த விதிகளின் மூலம் அளிக்கப்பட்டு உள்ளது.
தரைத்தளத்தில்தான் வகுப்புகள் இருக்க வேண்டும்
இந்த பள்ளி கட்டிடங்கள் சொந்த கட்டிடமாகவோ அல்லது 5 ஆண்டுகளுக்கு குறையாமல் குத்தகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமாகவோ இருக்க வேண்டும்அவை கான்கிரீட் கட்டிடங்களாகவும், சுற்றுச்சுவருடன் கூடியதாகவும் இருக்க வேண்டும். வகுப்பறை குழந்தைகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு, கண்டிப்பாக தரைதளத்தில் மட்டும் இருக்க வேண்டும்.
2 நுழைவுவாயில்கள் இருக்க வேண்டும்
வகுப்பறைகளின் கதவுகள், ஜன்னல்கள் எளிதில் தீப்பிடிக்காத பொருட்களாலும், வெளிப்பக்கம் திறப்பதாகவும் இருக்க வேண்டும். வகுப்பறைகளுக்கு 2 நுழைவுவாயில்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
கண்காணிப்பு கேமரா அவசியம் இருக்க வேண்டும்
கழிவறை, குடிநீர் வசதி மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவை சரியான முறையில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். குப்பைத்தொட்டி, அதிக ஒலி எழுப்பும் போக்குவரத்து சாலைகள், தொழிற்சாலைகள் மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவற்றின் அருகே பள்ளிகள் இருக்கக்கூடாது. பள்ளிப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி என்ன?
ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்றும், அவர்களும் பெண் ஆசிரியர்களாக மட்டுமே நியமனம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆசிரியை பிளஸ் 2 படித்து, அதன் பின்னர் டி.டி.எட், டி.எட், ஹோம் சயின்ஸ் ஆகியவற்றுக்கான பட்டயப்படிப்பு படித்து இருக்க வேண்டும் அல்லது ஹோம் சயின்சில் பட்டம், பி.எட், குழந்தைகள் படிப்புக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
ஒரு வகுப்புக்கு 15 குழந்தைகள் மட்டுமே:
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ஆம் தேதியுடன் 1 வயது 6 மாதத்தினை பூர்த்தி செய்த குழந்தைகளை மட்டுமே பள்ளியில் சேர்க்க வேண்டும்பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் வயது 1 வயது 6 மாதம் முதல் 5 வயது 6 மாதம் வரை இருக்கலாம்ஒரு வகுப்புக்கு 15 குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்குழந்தைகள் அனுமதிக்கான நுழைவுத்தேர்வு எழுத்து வடிவிலோ, வாய்வழியாகவோ இருக்கக்கூடாது.
சரியான நேரம் பராமரிக்க வேண்டும்
பள்ளி நடக்கின்ற ஒவ்வொரு பகுதி நேரமும் 3 மணி நேரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு பகுதி நேரத்தில் படிக்கும் குழந்தைகளை அடுத்த பகுதி நேரத்தில் சேர்க்கக்கூடாது. காலை 9.30 மணிக்கு முன்பாக பள்ளிகளை கண்டிப்பாக திறக்கக்கூடாது. மாலை 4.30 மணியுடன் நிறைவு செய்துவிட வேண்டும்.
பாதுகாப்பு கருவிகள் மிக அவசியம்
பெற்றோரின் ஒப்புதலின்படி, பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட வேண்டும். முதலுதவி பெட்டி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகள் யாராவது தண்டிக்கப்பட்டால், அந்த பள்ளி மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி பஸ், வேன் மற்றும் ஆட்டோக்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக  செய்யப்பட்டு இருக்க வேண்டும். வாகனங்களின் பராமரிப்புகளை அடிக்கடி பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். டிரைவருடன் ஒரு உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும்!
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 02.01.2018