disalbe Right click

Saturday, March 7, 2020

விபத்து வழக்குகளில் மேல்முறையீடு - நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?

விபத்து வழக்குகளில் மேல்முறையீடு - நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?
இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யவில்லை என்றால் மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது
ஆணையங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: விபத்து இழப்பீடு வழக்குகளில் அறிவிக்கப்படும் இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவரின் கணக்கில் டெபாசிட் செய்யவில்லை என்றால் நிறுவனங்களின் மேல்முறையீடு வழக்குகளை பட்டியலிடக்கூடாது என்று உயர் நீதிமன்ற பதிவகம் மற்றும் மேல்முறையீடு ஆணையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது
  • கடந்த 2007ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் 22 வயது இளைஞர் பலியானார்
  • இதையடுத்து, அவரது பெற்றோர் தங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தொழிலாளர் துணை ஆணையரிடம் முறையிட்டனர்
  • அவர்களின் மனுவை விசாரித்த துணை ஆணையர் இளைஞர் பணியாற்றிய நிறுவனம் ₹2 லட்சத்து 93 ஆயிரத்து 502 இழப்பீடு தருமாறு உத்தரவிட்டார்
  • இந்த உத்தரவை எதிர்த்து அந்த நிறுவனத்தை சேர்ந்த நஸர் அக்தர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
  • இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது
மனுவை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு
  • இந்த வழக்கில் விபத்தில் பலியான இளைஞரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குமாறு தொழிலாளர் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
  • ஆனால், அந்த இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் டெபாசிட் செய்யவில்லை
  • இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யாமல் நிறுவனங்களோ, இன்சூரன்ஸ் நிறுவனங்களோ மேல்முறையீடு செய்யக்கூடாது
  • இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யாமல் நிறுவனங்களின் பின்னால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒழிந்துகொள்ளக்கூடாது.
  • எனவே, இந்த வழக்கில் தொழிலாளர் துணை ஆணையரின் உத்தரவின்படி இழப்பீடு தொகையை 3 மாதத்திற்குள் விபத்து நடந்த நாளிலிருந்து ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் மேல் முறையீடு செய்பவர் டெபாசிட் செய்ய வேண்டும்.
  • மேல்முறையீடு மனு தாக்கல் செய்யும்போது இழப்பீடு தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதை உயர் நீதிமன்ற பதிவகம் உறுதி செய்ய வேண்டும்
  • அதன் பிறகே மேல்முறையீடு வழக்கை பட்டியலிட வேண்டும்
  • இழப்பீடு தொகையை டெபாசிட் செய்யவில்லை என்றால் மேல்முறையீடு வழக்குகளை நீதிமன்றங்கள் மற்றும் மேல் முறையீடு ஆணையங்கள் விசாரிக்க கூடாது
இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினகரன் நாளிதழ் - 08.03.2020

Wednesday, March 4, 2020

பவர் பத்திரம் மூலம் சொத்து வாங்குபவர்கள் கவனத்திற்கு.....

பவர் பத்திரம் மூலம் சொத்து வாங்குபவர்கள் கவனத்திற்கு.....
முதலில் என்ன செய்ய வேண்டும்?
  1. பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் அந்த பத்திரத்தை ரத்து செய்துள்ளாரா? என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
  2. அந்த பவர் பத்திரத்தை எழுதுவதற்கு அவர் தகுதியானவர்தானா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
  3. அதற்கு அந்த சொத்தின் தாய்பத்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
  4. அந்த சொத்து பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் பெயரில் மட்டும் இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும்.
  5. வேறு யாருக்காவது அந்த சொத்து விற்கப்பட்டுள்ளதா? என்பதை வில்லங்கம் போட்டு பார்க்க வேண்டும்.
  6. பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறாரா? என்று பார்க்க வேண்டும்.
  7. பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர்  இறந்து எத்தனை நாளாயிற்று? என்பதையும் பார்க்க வேண்டும்.
மேலும், இது சம்பந்தமாக கடந்த 09.10.2018 அன்று பதிவுத்துறைத்தலைவர் அவர்கள் பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளையும் சொத்து வாங்குபவர்கள் பின்பற்ற வேண்டும்.
பதிவுத்தலைவர் அவர்களின் சுற்றறிக்கை என்ன சொல்கிறது?
பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தவர்கள் சம்பந்தமாக பதிவுத்துறைத் தலைவர் அவர்கள் சில அறிவுரைகளை பதிவாளர்களுக்கு வழங்கியுள்ளார். அவற்றை கீழே காணலாம்.
  1. பவர் பத்திரம் எழுதிக் கொடுத்ததன்படி ஒரு ஆவணம் பதிவு செய்யப்பட பதிவாளர் அவர்களிடம் தாக்கல் செய்யப்படுகின்றபோது அதை எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றிதழும் இணைத்து தாக்கல் செய்யப்பட வேண்டும். 
  2. அந்த பத்திரம் பதிவு செய்யப்படுவதற்கு முன் உள்ள முப்பது நாட்களுக்குள் அந்த சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும்.
  3. அதற்கு முன்பாக அந்த சான்றிதழ் பெறப்பட்டு இருந்தால் கண்டிப்பாக செல்லாது. அதனால் அந்த பத்திரத்தை பதிவு செய்யக்கூடாது.
  4. அதே நேரத்தில் பவர் பத்திரம் எழுதப்பட்டு முப்பது நாட்களுக்குள் அந்த சொத்தை வேறு ஒருவருக்கு முகவர் விற்பதாக இருந்தால் மேற்கண்ட சான்றை இணைக்க வேண்டியது இல்லை.
  5. பவர் பத்திரங்கள் மூலம் விற்கப்படுகின்ற சொத்துக்களுக்குத்தான் மேற்கண்ட நிபந்தனைகள் பொருந்தும். 
  6. பவர் பத்திரங்கள் மூலம் வாங்கப்படுகின்ற சொத்துக்களுக்கு மேற்கண்ட நிபந்தனைகள் பொருந்தாது. 
பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கையின் நகலை கீழே காணலாம்.



*********************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 04.03.2020 

Tuesday, March 3, 2020

தகவல் ஆணையத்தின் ஆணைக்கு மதிப்பு இருக்கிறதா?

தகவல் ஆணையத்தின் ஆணைக்கு மதிப்பு இருக்கிறதா?
பொது தகவல் அலுவலர்களின் நம்பிக்கை
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படுகின்ற தகவல்களை எந்த ஒரு பொது தகவல் அலுவலர்களும் தற்போது வழங்குவதே இல்லை. அதற்கு முழு முதல் காரணம் தமிழ்நாடு தகவல் ஆணையம்தான். காரணம் அந்த சட்டத்தின் ஷரத்துகளை தகவல் ஆணையர்கள் எவருமே பின்பற்றுவது இல்லை. 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 7(1)
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1) ன் கீழ் அனுப்பப்படுகின்ற விண்ணப்பத்தில் மனுதாரரால் கேட்கப்படுகின்ற தகவல்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் அல்லது பிரிவு 8 அல்லது பிரிவு 9ல் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 7(2)
மேற்கண்டவாறு மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை என்றால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்ததாக கருதப்படும் என்று இந்த பிரிவில்  குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பல மனுக்களுக்கு  எந்தவித தகவலையும் பொது தகவல் அலுவலர்கள் வழங்குவதே இல்லை. 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 20(1)
மனுதாரரின் கோரிய தகவலை பொது தகவல் அலுவலர் அளிக்க  மறுத்திருந்தால், தகவல் அளிக்கின்ற நாள்வரை நாள் ஒன்றுக்கு ரூ. 250/- தண்டமாக  விதித்தல் வேண்டும் என்று இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இதன்படி எத்தனை பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது? 
இந்த பிரிவின்படி தண்டம் விதிப்பதென்றால், தமிழ்நாடு தகவல் ஆணையத்திலுள்ள பொது தகவல் அலுவலர் கூட தப்ப முடியாது. 
தகவல் ஆணையர்களது ஆணைக்கு மதிப்பிருக்கிறதா?
தகவல் ஆணையர்கள் தகவலை வழங்க வேண்டும் என்று கூறி ஆணை பிறப்பித்தாலும் அந்த ஆணைக்குப் பிறகும்கூட பொது தகவல் அலுவலர்கள் தகவல்களை தருவதில்லை.  
ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதா?
  1. நாங்கள் தகவல்களை வழங்கச் சொல்லி ஆணை இடுவோம்; ஆனால், நீங்கள் வழங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. 
  2. நீங்கள் வழங்காவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லுவோம்; ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்க மாட்டோம் 
என்று தகவல் ஆணையர்களுக்கும், பொது தகவல் அலுவலர்களுக்கும் வாய்மொழியாக ஏதேனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதோ  என்று அனைவரும் நம்புகின்ற  அளவிற்கு, இந்த சட்டம் ஒரு கேலிப் பொருளாகிவிட்டது. ஏனென்றால், தகவல் ஆணையர்கள் மேற்கண்ட சட்டப்பிரிவுகளை  பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதே இல்லை. அதனால், ஆணையர்களின் ஆணையை பொது தகவல் அலுவலர்கள் மதிப்பதே இல்லை.
ஆனையரின் ஆணையை மதிக்காத பொது தகவல் அலுவலருக்கு ஆணையர் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தை கீழே பதிவிட்டுள்ளேன். அதனை படித்துப் பாருங்கள். நான் சொன்னது எவ்வளவு தூரம் உண்மை என்பது உங்களுக்கு விளங்கும்.




*********************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 03.03.2020 

தலைமை தகவல் ஆணையர் அவர்களின் எச்சரிக்கை கடிதம்

தலைமை தகவல் ஆணையர் அவர்களின் எச்சரிக்கை கடிதம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 2(ஜே) -ன்படி விண்ணப்பம்
கடந்த 31.08.2019 அன்று விருதுநகர் மாவட்ட பதிவாளர் அவர்களது அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 2(ஜே) -ன்படி எங்களது சங்க நிர்வாகிகள் தாக்கல் செய்த ஆவணங்களை நேரில் ஆய்வு செய்ய அனுமதி கேட்டிருந்தேன்.
சம்பந்தமே இல்லாத தகவல்கள்
அதற்கு பொது தகவல் அலுவலரான மாவட்டப் பதிவாளர் அவர்கள், தகவல் ஆணையம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு ஒன்றை மேற்கோள் காட்டி, சம்பந்தமே இல்லாத தகவல்களை எனக்கு வழங்கி இருந்தார்.
இணையத்தில் கிடைத்த தீர்ப்பு
அவர் குறிப்பிட்டு இருந்த தீர்ப்பை தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து தேடி எடுத்து பார்த்தேன். நான் கோரி இருந்த அனுமதிக்கும், அந்த தீர்ப்பிற்கும் சம்பந்தமே இல்லை.  
பதிவுத்துறை துணைத்தலைவர் அவர்களுக்கு முதல் மேல்முறையீடு
மதுரை ஒத்தக்கடை பகுதியிலுள்ள, பதிவுத்துறை துணைத்தலைவர் அவர்களுக்கு எனது முதல் மேல்முறையீட்டை சமர்ப்பித்தேன். அவர் மிகவும் உத்தமர். எந்த பதிலும் வழங்கவில்லை. 
இரண்டாம் மேல்முறையீடு
முதல் மேல்முறையீட்டை 03.10.2019 அன்று அனுப்பி எந்த பதிலும் கிடைக்காத காரணத்தினால், எனது இரண்டாம் மேல்முறையீட்டை 21.11.2019 அன்று தகவல் ஆணையத்திற்கு அனுப்பினேன். 
ஆணையத்திடம் இருந்து வந்த ஆணை 
தகவல் ஆணையத்திடம் இருந்து 28.02.2020 அன்று அனுப்பிய ஆணை எனக்கு 02.03.2020 அன்று கிடைத்தது. அதனை கீழே தங்களது பார்வைக்காக பதிவிட்டுள்ளேன். 





இதற்கு பொது தகவல் அலுவலர் பதில் அளித்தவுடன் அதனையும் பதிவேற்றுகிறேன்.

***************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 03.03.2020 

Monday, March 2, 2020

பள்ளிகளில் இருக்க வேண்டிய இட வசதி

பள்ளிகளில் இருக்க வேண்டிய இட வசதி 
தமிழகத்தில் தனியார் பள்ளிகளை தொடங்குவதற்கும், அதற்கு அரசு (கல்வித்துறை) அங்கீகாரம் வழங்குவதற்கும் குறைந்தபட்சமாக இடவசதி (பரப்பளவு) இவ்வளவு இருக்க வேண்டும் என்று அங்கீகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளின் தன்மைக்கேற்ப இதனை அரசு வரையறுத்துள்ளது. 
ஏற்கனவே இருந்த அரசாணைகள்
இதற்கான அரசாணை கடந்த 2004ம் ஆண்டில் கல்வித்துறையால் வெளியிடப்பட்டிருந்தது. அந்த அரசாணை எண்: பள்ளி கல்வித்துறை அரசாணை நிலை (2டி) எண்: 48, நாள்:21.07.2004 ஆகும்.
ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த தனியார் பள்ளிகளால் மேற்கண்ட அரசாணையில் குறிப்பிட்டபடி தங்களது இடவசதியை அதிகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆகையால், அந்த பள்ளிகளில் பயில்கின்ற மாணவ, மாணவியர்களின் நலன் கருதி மேலும் மூன்றாண்டுகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு, ஒரு அரசாணை வெளியிடப்பட்டது.  அந்த அரசாணை எண்: பள்ளி கல்வித்துறை அரசாணை நிலை எண்: 238, நாள்:26.11.2008 ஆகும்.
திருத்தப்பட்ட அரசாணை
பள்ளி கல்வித்துறை அரசாணை நிலை (2டி) எண்: 48, நாள்:21.07.2004 ல் உள்ளபடி.தனியார் பள்ளிகளால் இடவசதியை மேம்படுத்த முடியாத காரணத்தால் அந்த பள்ளிகளில் பயில்கின்ற மாணவ, மாணவியர்களின் நலன் கருதி அந்த அரசானையில் இடவசதி பற்றி குறிப்பிட்டிருந்த நிபந்தனைகளை தளர்த்தி 23.04.2010 அன்று அரசாணை நிலை எண்: 24 வெளியிடப்பட்டது.
வல்லுநர் குழு அமைத்தல் பற்றிய அரசாணை
ஆனால், அதன் பிறகும் இந்த அரசாணையில் குறிப்பிட்டபடி தனியார் பள்ளிகளில் இடவசதியை ஏற்படுத்த பள்ளி நிர்வாகத்தால் முடியவில்லை. ஆகவே வல்லுநர் குழு அமைப்பது குறித்து பள்ளி கல்வித்துறை, அரசாணை நிலை (1டி) எண்: 54, நாள்:05.03.2013 ஐ வெளியிட்டது அதன் நகல் கீழே உள்ளது.



மேற்கண்ட அரசானையில் குறிப்பிட்டுள்ள வல்லுநர் குழு அமைக்கப்பட்டதா, அதன்பிறகு ஏதேனும் அரசானை வெளியிடப்பட்டதா? என்ற விபரம் எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி தகவல்களை திரட்டிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் அவற்றினை பதிவிடுகிறேன்.
**************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 03.03.2020 

சொத்து வாங்குபவர்கள் கவனத்திற்கு…..

சொத்து வாங்குபவர்கள் கவனத்திற்கு…..
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
கோவிந்தசாமி என்பவரிடமிருந்து ஒருவர், கட்டிடம் அல்லது காலி மனை வாங்க விரும்புகிறார். அதனுடைய மதிப்பு ரூ. 60 லட்சம். இந்திய வருமான வரிச்சட்டப்படி, அசையா சொத்து விற்பவர்கள் மூலதன லாப வரி செலுத்த வேண்டும். இதனால் சொத்தை வாங்குபவர் கிரைய பணத்தை கொடுக்கும் போது அதற்குரிய வரி பிடித்தம் செய்து கொடுக்க வேண்டும். அதன்பிறகு அந்த தொகையை கோவிந்தசாமி பெயரில் வருமான வரியாக செலுத்தவும் வேண்டும்.  அந்த ஆண்டில் கோவிந்தசாமி தனது ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது அந்த தொகையை கழித்துக்கொள்ளலாம். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நமது நாட்டில் அசையா சொத்துக்கள் வாங்கும்போது பின்பற்றவேண்டிய வரி நடைமுறைகள் இவ்வளவுதான்.
'கருப்பு' பணப்புழக்கத்தை தடுக்க வரிப்பிடித்தம்
இந்தியாவில் நடக்கும் கருப்பு பணப்புழக்கத்தில் கணிசமான தொகை அசையாச் சொத்து பரிவர்த்தனைகளில் நடைபெறுகிறது. அதனால், வருமான வரித்துறை கருப்பு பணத்தின் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில், அதன் ஒரு பகுதியாக அசையாச் சொத்துக்களை வாங்குபவர்கள் வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்ற விதியை சமீபகாலத்தில் ஏற்படுத்தி, அதனை நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கிறது.
இந்திய வருமானவரி சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய வருமானவரி சட்டம் பிரிவு 194-IAன் படி, அசையா சொத்தின் மதிப்பு 50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால், அந்த சொத்தை வாங்குபவர், அந்த சொத்தை விற்பவருக்கு பணத்தை செலுத்தும்போது, வாங்கும் விலை மதிப்பில் ஒரு சதவீதம் வரி பிடித்தம் செய்து, அந்த தொகையை அரசிடம் செலுத்த வேண்டும்.
விதிவிலக்கு இருக்கிறதா?
மேற்கண்ட வரியானது, குடியிருப்பு சொத்து, வணிக சொத்து மற்றும் காலிமனை நிலங்களுக்கும் பொருந்தும். ஆனால், இந்த வரியில் இருந்து விவசாய நிலம் வாங்குவதற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த வகை சொத்தாக இருந்தாலும், 50 லட்சம் மதிப்பிற்கும் குறைவாக அசையா சொத்து வாங்கினால் வரிப் பிடித்தம் (TDS) தேவையில்லை.
இந்த தொகையை எப்படி செலுத்த வேண்டும்?
ஆவண மாற்றத்துக்கு முன்பணம் (அட்வான்ஸ்) வழங்கும்போதோ அல்லது ஆவணத்தை பதிந்து பெயர் மாற்றம் செய்யும் போதோ, அந்த சொத்தை வாங்குபவர், அந்த சொத்துக்கான விற்பனையாளருக்கு பணம் செலுத்தும்போது, மொத்த விற்பனை மதிப்பில் ஒரு சதவீதம் வரிப்பிடித்தம் கழித்துக்கொண்டு மீத தொகையை மட்டும் கண்டிப்பாக செலுத்த வேண்டும்.  எந்த தேதியில் வரிக்கான தொகை பிடிக்கப்பட்டுள்ளதோ அந்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் இந்த வரிப்பணத்தை, அந்த சொத்தை வாங்குபவர், மத்திய அரசின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இதற்கான டிடிஎஸ் செலுத்த மற்றும் பிற விவரங்களை அளிக்க சலான் உள்ளடக்கிய 26-QB படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த சொத்தை வாங்குபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் அதற்கு ஏற்றவாறு தனித்தனியாக, 26-QB படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
TAN எனப்படும் வரிவிலக்கு கணக்கு எண்
பொதுவாக, டிடிஎஸ் தொகையினை கழிக்க பொறுப்புள்ள ஒவ்வொருவரும் ஒரு வரி விலக்கு கணக்கு எண் பெற்றிருக்க வேண்டும். இருந்த போதிலும், அசையாச் சொத்தை பொறுத்தவரை, வாங்குபவர் TAN வாங்க வேண்டியதில்லை. விண்ணப்பப் படிவம் 26-QB இல் விற்பனையாளர் மற்றும் வாங்குபவரின் பெயர், ஆதார் எண், முகவரி, பான் (PAN), மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் விவரம் போன்றவற்றை வழங்க வேண்டும்.  அதுமட்டுமல்லாது ஒப்பந்தம் செய்த தேதி, வாங்குகின்ற சொத்தின் முழு மதிப்பு, பணம் செலுத்த போகின்ற தேதி, ஆகியவற்றை இணைத்து, வாங்குகின்ற சொத்தின் முழுமையான முகவரியை குறிப்பிட வேண்டும்.
மேற்கண்ட வரிவிலக்கு கணக்கு எண் வழங்கப்படவில்லை என்றால்…..?
சொத்தை விற்பவரால் நிரந்தர வங்கி கணக்கு எண் வழங்கப்படவில்லை என்றால் ஆதாரப் பணத்திலிருந்து வரி பிடித்தம் 20 சதவீதம் கழிக்கப்படும். எனவே, அசையா சொத்துகளை வாங்குபவர்கள், வரி பிடித்தம் செய்து, விவரங்களை தாக்கல் செய்யும்போது சொத்து விற்பவரின் விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை நன்றாக பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விற்பனையாளருக்கு கிடைக்கக்கூடிய வரி வரவு தொகை கிடைக்காமல் போய்விடும்.
வரி பிடித்தம் இல்லாமல் சொத்தை விற்க முடியுமா?
தனது சொத்தை விற்பவர், 'தனது வருமானமும், மூலதன லாபமும் சேர்ந்து வருமானவரி வரம்புக்கு உட்பட்டதாக இருக்கிறது' என்று வருமானவரி அதிகாரியிடம் பிரிவு 197 படி விண்ணப்பிக்க வேண்டும். வரி பிடித்தம் செய்யாமலோ அல்லது குறைந்த விகிதத்தில் வரி பிடித்தம் செய்யும்படியோ வருமான அதிகாரியிடம் சான்றிதழ் பெறும் பட்சத்தில் சொத்தை வாங்குபவர் எந்தவித வரிகளும் பிடித்தம் இல்லாமல் பரிவர்த்தனை செய்ய முடியும்.
வரியை எப்படி செலுத்த வேண்டும்?
ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ பிடித்தம் செய்த வரியை செலுத்தலாம். நீங்கள் வங்கி மூலம் செலுத்தினால், வருமான வரித்துறை இணையதளத்தில்,  அதனை வங்கிகள் தானாகவே பதிவு செய்யும். டிடிஎஸ் செலுத்த பட்டதும், சொத்து வாங்குபவர், இந்தவரியை செலுத்தியதற்கான அத்தாட்சியை படிவம் 16பி-யை வருமான வரித்துறை இணையதளத்தில் இருந்து எடுத்து சொத்து விற்றவருக்கு கண்டிப்பாக 15 நாட்களுக்குள்  அளிக்க வேண்டும்..
அதே நேரத்தில், சொத்து வாங்குபவர்கள் மற்றும் சொத்தை விற்பனை செய்பவர்கள் விற்பனையின் மீது ஏற்கனவே வரிப் பிடித்தம் செய்யப்பட்டதால் தனக்குக் கூடுதலாக வரிக் கட்டும் பொறுப்பு இல்லை என்றோ அல்லது வருமானவரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றோ கருத கூடாது. ஒவ்வொரு மூல தனத்துக்கும் ஏற்றவாறு சரியான வரியைக் கணக்கிட்டு வருமானவரி கணக்குத் தாக்கல் செய்யவேண்டிய கடமை சொத்தை வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் நிச்சயம் உண்டு.
விவசாய நிலங்களை வாங்குபவர்கள்…..
பொதுவாக ரூ. 50 லட்சத்திற்கு மேலுள்ள அசையாச் சொத்துக்களை வாங்குவோருக்கு வருமான வரி பிடித்தம் உண்டு. ஆனால் விவசாய பூமி வாங்குபவர்களுக்கு, அந்த நிலத்தின் மதிப்பு எவ்வளவாக வரி பிடித்தம் செய்ய தேவையில்லை.
***********************அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 03.03.2020