disalbe Right click

Friday, January 22, 2016

ஸ்ட்ரோக் (பக்கவாதம்)

ஸ்ட்ரோக்! வேகம் முக்கியம்
என்னாச்சுன்னு தெரியலைங்க. திடீர்னு இரண்டு நாளுக்கு முன் கை, கால் ஒருபக்கமா இழுத்துக்கிடுச்சுஇப்போ பேச வேற முடியல. ஞாபகம் மங்கிட்டே வருதுன்னு சொல்றாங்க. பிழைக்கிறதே கஷ்டமாம்” – இது போன்ற உரையாடல்கள் தற்போது சர்வசாதாரணமாக, கிராமம், நகரம் என எங்கெங்கும் கேட்கிறது. பக்கவாதம் எனப்படும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பு அதிகரித்துவருகிறது. ஆனால், ஸ்ட்ரோக் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புஉணர்வு மட்டும் மக்கள் மத்தியில் மிகமிகக் குறைவாக உள்ளது. இதனால், பலர் சரியான சிகிச்சை இன்றியே உயிரிழக்க நேரிடுகிறது.
பக்கவாதம் (ஸ்ட்ரோக்)
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, அல்லது ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைக்கு ஆக்சிஜன் செல்லாதபோது, மூளை செயலிழப்பதுதான்பிரெய்ன் அட்டாக்எனப்படும் ஸ்ட்ரோக். தமிழில், `பக்கவாதம்’. மூளைக்கு ரத்தம் செல்வது தடைப்பட்டால், மூளை செயல் இழந்து, மரணம் ஏற்படலாம்.
இளம் வயதில் ஸ்ட்ரோக்
ஸ்ட்ரோக் பொதுவாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வரும். இவர்கள் புகைபிடிப்பவராகவோ, மது அருந்துபவராகவோ, சர்க்கரை நோயாளியாகவோ, கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவராகவோ இருந்தால் ரிஸ்க் அதிகம். தவிர, 40 வயதுக்குள் ஸ்ட்ரோக் வருவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. உடலில், புரோட்டின் சி, புரோட்டின் எஸ் குறைதல், `ஹோமோசிஸ்டீன்என்னும் அமினோஅமிலம் அதிகரித்தல், ஆன்டித்ரோம்பின் – 3 குறைதல், கார்டியோலிபின் உடலில் தங்குதல் போன்றவற்றால் இளம் வயதில் ஸ்ட்ரோக் ஏற்படலாம்.
குழந்தைகளுக்கு ஸ்ட்ரோக்
ஒருசில குழந்தைகள் வளரும்போது, அவ்வப்போது திடீர், திடீரெனக் கீழே விழுந்துவிடுவார்கள். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், அடிக்கடி ஸ்ட்ரோக்குக்கான அறிகுறி தெரியும். சில குழந்தைகளுக்கு மூளைக்குச் செல்லும் அனைத்து ரத்தக் குழாய்களும் அவ்வப்போது சுருங்குவதால், இந்தப் பிரச்னை ஏற்படும். இந்தப் பிரச்னைக்குமொயா-மொயாநோய் என்று ஒரு பெயர் உண்டு.
பரிசோதனை
உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, கிரியாட்டினின், கொலஸ்ட்ரால், தைராய்டு அளவைப் பரிசோதிப்பதன் மூலம் ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறியலாம்.
சிகிச்சை என்ன?
ஸ்ட்ரோக் வந்தவுடன் உடனடியாக ஸ்ட்ரோக் யூனிட், அவசரசிகிச்சைப் பிரிவு வசதி உள்ள மருத்துவமனைக்குச் செல்வதுதான் சிறந்தது. மூன்றரை மணி நேரத்துக்குள் சென்றுவிட்டால், அவருக்கு `இன்ட்ராவீனஸ் த்ரொம்போலைசிஸ்எனும் சிகிச்சை அளிக்கப்படும். இதை அளித்துவிட்டால், ஸ்ட்ரோக் வந்தவர் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட முடியும். நேரம் கடந்துவிட்டால், இந்த தெரப்பி பயன் அளிக்காது.
மூன்றரை மணி நேரத்தில் வர முடியாதவர்கள், ஸ்ட்ரோக் வந்த எட்டு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வந்துவிட்டால், அவர்களுக்கு `இன்ட்ரா ஆர்டிரியல் த்ரோம்போலைசிஸ்அல்லது `மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமிசிகிச்சை அளித்து, உயிரைக் காப்பாற்றலாம். சில சமயங்களில் பின்மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு, 12 மணி நேரத்துக்குள் இந்த தெரப்பி கொடுப்பதன் மூலம் உயிரைக் காப்பாற்ற முடியும்.
மருத்துவமனைக்கு 12 மணி நேரம் கழித்துச் சென்றால், பரிசோதனைக்குப் பிறகு மூளையின் வீக்கம் அளவிடப்படும். மூளையின் வீக்கம் அதிகமாக இருந்தால், `டீகம்ப்ரஸிவ் கிரேனியேக்டமி எனும் அறுவைசிகிச்சை செய்யப்படும். இதில், வீக்கம் உள்ள பகுதியில் மண்டைஓடு திறக்கப்பட்டு, வீக்கம் குறைந்த பின்னர், சில நாட்களில் அறுவைசிகிச்சை செய்தபின் மண்டைஓட்டை மூடிவிடுவார்கள். இவர்களுக்கு, கை, கால்கள், வாய் பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்பு குறைவு. எனினும், உயிரைக் காப்பாற்ற முடியும்.
தடுப்புமுறைகள்
மினி ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு, அவரவர் உடல்நிலையைப் பொருத்து, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். சிலருக்கு, ஆஸ்ப்ரின் போன்ற ரத்தம் உறைவதைத் தடுக்கும் மாத்திரை அளிக்கப்படும். உடலில் ஹோமோசிஸ்டீன் அதிகமாக இருந்தால், ஃபோலிக்அமிலம் மற்றும் மெத்தில் கோபாலமைன் மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சாப்பிட்டுவந்தால், ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியும்.
நவீன சிகிச்சைமுறைகள்
ஸ்ட்ரோக், மினிஸ்ட்ரோக் வந்தால் தற்போது உள்ள சில நவீன சிகிச்சைமுறைகள் மூலம் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. மினி ஸ்ட்ரோக் அல்லது ஸ்ட்ரோக் வந்தால், இதயச் செயல்பாட்டை ஆய்வுசெய்ய வேண்டும். பின்னர், கழுத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்பதை அறிய, டாப்ளர் பரிசோதனையும், சி.டி ஆஞ்ஜியோகிராபி பரிசோதனையும் செய்யப்படும். பரிசோதனையில், ரத்தக் குழாய்களில் 50 சதவிகிதத்துக்கு மேல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டால், கரோட்டிட் என்டார்டெரக்டமி (Carotid endarterectomy) என்ற அறுவைசிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்படும். ஒருவேளை, கழுத்தில் இருக்கும் ஏதாவது ஒரு ரத்தக் குழாய் முழுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களுக்கு மூளைக்கு வெளியே இருக்கும் ரத்தக் குழாயை எடுத்து, மூளைக்கு உள்ளே வைத்து பைபாஸ் அறுவைசிகிச்சை (Cerebaral bypass) செய்து, ஸ்ட்ரோக் வருவதைத் தடுக்க முடியும்.
மறுவாழ்வு சிகிச்சைகள்
ஸ்ட்ரோக் வந்த குறிப்பிட்ட நேரம் கடந்த பின்னர், சிகிச்சை மூலம் உயிர் காப்பாற்றப்பட்டாலும், சிலரால் படுத்த படுக்கையாக மட்டுமே இருக்க முடியும். அவர்களுக்கான வரம்தான் மறுவாழ்வு சிகிச்சைகள். பிசியோதெரப்பி மூலம் அவர்களை சக்கர நாற்காலியில் உட்காரும் அளவுக்கோ, தனியாக நடக்கும் அளவுக்கோ தொடர்ந்து பயிற்சி கொடுக்கப்படும். 60 சதவிகிதம் வரை மறுவாழ்வு சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு. மறுவாழ்வு சிகிச்சைகள் மூலம் தற்போது பலர் மீண்டுவருகிறார்கள். எனவே, நம்பிக்கை இழக்க வேண்டாம்.
– -------------------------------------------------------------------------------பு.விவேக் ஆனந்த்
ஸ்ட்ரோக் யாருக்கு வரும்?
யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். எனினும், ஸ்ட்ரோக் ஏற்பட ஆறு முக்கியமான காரணிகளைச் சொல்ல முடியும்.
உயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அழுத்தம் அதிகரிக்கும்போது, அவை சுருங்கும். ரத்தக் குழாய் சுருங்கும்போது, மூளைக்கு ரத்தம் செல்வது, படிப்படியாகத் தடைப்பட்டு ஸ்ட்ரோக் ஏற்படலாம்.
டயாபடீஸ்: ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, ரத்தக் குழாய்களில் இருக்கும் புரதங்களால் ஆன அடுக்கு பாதிப்படையும். இதனால், குளுக்கோஸ், சிறுசிறு கொழுப்புக்கட்டிகள்போல, ரத்தக் குழாய்களில் படியும். இந்தக் கொழுப்புக்கட்டிகள் காரணமாக, கழுத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வரலாம்.
கொலஸ்ட்ரால்: ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களிலும் படிந்து, அடைப்பை ஏற்படுத்தலாம்.
புகைபிடிப்பவர்கள்: நிக்கோட்டின் ரத்தக் குழாயில் படியும்போது, அவை, ரத்தக் குழாய்களில் விரிசலை ஏற்படுத்தும். விரிசலில், ரத்தத் தட்டணுக்கள் ஆங்காங்கே ஒட்டிக்கொள்ளும். இதனாலும் அடைப்பு ஏற்படலாம்.
ஆல்கஹால்: மது அருந்துபவர்களுக்கு, மேற்சொன்ன நான்கு வகையிலும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
மரபியல் காரணி: பரம்பரையில் யாருக்காவது ஸ்ட்ரோக் வந்தால், கவனமாக இருக்க வேண்டும். ஸ்ட்ரோக் ஏற்பட, மரபியல்ரீதியான வாய்ப்புகளும் அதிகம்.
ரத்தக் குழாய் அடைப்பு (Ischemic stroke)
கழுத்தில் இருந்து முன்பக்கமாக இரண்டு ரத்தக் குழாய்களும், பின்பக்கமாக இரண்டு ரத்தக் குழாய்களும் மூளைக்குச் செல்கின்றன. இந்த நான்கு ரத்தக் குழாய்களும் மூளைப்பகுதியில் சந்தித்துப் பிரியும்.
இதயம் ஒழுங்கின்றி திடீரென வேகமாகத் துடிக்கும் பிரச்னையான ரூமாட்டிக் இதய நோய் உள்ளவர்களுக்கு, இதயத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் திடீரென அடைப்பு ஏற்படுவதால் ஸ்ட்ரோக் ஏற்படலாம். கழுத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் முன்பக்க ரத்தக் குழாய்களிலும், மூளைக்கு உட்புறமாகச் செல்லும் நுண்ணிய ரத்தக் குழாய்களிலும் கொழுப்புகள் படிந்து, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால், மூளைக்கு ஆக்சிஜன் செல்வதில் சிரமம் ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வரலாம்.
ரத்தக்கசிவு ஸ்ட்ரோக் (Hemorrhagic Stroke)
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ரத்தம் கசிவதாலும் ஸ்ட்ரோக் ஏற்படலாம். இதில் இரண்டு வகை உள்ளன.
வயதானவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் மூளைக்கு உள்ளே செல்லும் ரத்தக் குழாய்களில் கீறல் விழுந்து, ரத்தக் குழாய் வெடித்து, ரத்தம் கசியும். பெரும்பாலும், மூளையில் உள்ள பேசல் காங்கிலியா (Basal ganglia) செரபெல்லம், பான்ஸ் பகுதிகளில் இருக்கும் ரத்தக் குழாய்களில் இத்தகையக் கசிவு ஏற்படலாம்.
மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் பலூன் போல வீக்கம் ஏற்பட்டு, பின்னர் ரத்தக் குழாய்கள் வெடிப்பதாலும், ரத்தம் கசிந்து, மூளைக்கு ரத்தம் செல்லாமல் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கு, .எஸ்.ஹெச் (Aneurysm sub arachnoid hemorrhage) என்று பெயர்.
மினி ஸ்ட்ரோக்
`டி..எனச் சொல்லப்படும் டிரான்சியன்ட் இஸ்கீமிக் அட்டாக்கை `மினி ஸ்ட்ரோக்என்கின்றனர். ஸ்ட்ரோக் வரப்போகிறது என்பதை, முன்கூட்டியே நமக்குத் தெரிவிப்பதுதான் மினி ஸ்ட்ரோக். மினி ஸ்ட்ரோக் ஏற்பட்டால், திடீரென வாய் கோணி, பேச்சுக் குழறும்; கண் ஒரு பக்கமாக மங்கலாகத் தெரியும்; சில சமயம் பார்வை பறிபோனதுபோல இருட்டாகத் தெரியும். இந்தப் பிரச்னை சில நொடிகளில், நிமிடங்களில் தானாகவே சரியாகிவிடும். இவர்களுக்கு, மறுநாளோ, அடுத்த வாரமோகூட ஸ்ட்ரோக் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, ஆரம்ப நிலையிலேயே மருத்துவர்களை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம். அதைப் புறக்கணித்தோம் என்றால், ரிண்ட் (RIND) எனப்படும் அடுத்த நிலை ஸ்ட்ரோக் வரலாம். இந்த நிலைவந்தால், ஒரு வாரம், 10 நாட்கள் கழித்து, வாய்க் குழறல், கை, கால்கள் சரியாகிவிடும். கை, முகம், பேச்சு மூன்றும் ஒரு சேர இழுத்து கொள்ளும்போதுதான் ஸ்ட்ரோக் என்கிறோம்.
ஸ்ட்ரோக் ஏற்படும் சமயங்களில் மருத்துவர்கள் FAST என்பதை நினைவில்வைத்துக்கொள்ள வேண்டும் எனகிறார்கள்.
F – Face Drooping: (முகம் ஒரு பக்கமாகக் கோணுதல்) குறிப்பாக, வாய் நன்றாகக் கோணி உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
A – Arm Weakness: கை ஒரு பக்கமாக வளைந்துவிடும். கையை உயர்த்தக்கூட முடியாது.
S – Speech Difficulty: வாய் குழறும், சிலசமயம் பேசவே முடியாது.
T – Time: இந்த மூன்று பிரச்னைகளும் இருப்பின் நேரம் மிகவும் முக்கியம். தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
ஸ்ட்ரோக் வருவதைத் தடுக்க எட்டு டிப்ஸ்
ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றம் அவசியம்.
சர்க்கரை நோயாளிகள், சர்க்கரையைக் கட்டுக்குள்வைக்க வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்க வேண்டும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த வேண்டும்.
மது அருந்துவதை அறவே நிறுத்தவும்.
புகைபிடிப்பதை உடனே விட்டுவிடுங்கள்.
எப்போதும் நீர்ச்சத்து தேவை, தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள்.
உடற்பயிற்சி, சமச்சீர் உணவின் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள்வைப்பது அவசியம்.
ஸ்ட்ரோக் ஏற்படும் சமயங்களில் வலது மூளை பாதிக்கப்பட்டால், உடலின் இடது பக்கம் பாதிக்கப்படும், கை,கால்கள் செயல் இழக்கும். இடது மூளை பாதித்தால், உடலின் வலது பக்கம் செயல் இழந்துபோவதுடன், பேச்சுத்திறனும், பேசுவதைப் புரிந்துகொள்ளும் திறனும் பாதிக்கப்படும். வலது பக்க மூளையைவிட இடது பக்க மூளை பாதித்தால், பாதிப்பு அதிகமாக இருக்கும்.
நன்றி : டாக்டர் விகடன் - 16.01.201

No comments:

Post a Comment