disalbe Right click

Monday, July 24, 2017

வருமான வரியின் வரலாறு என்ன?

வருமான வரியின் வரலாறு என்ன
இன்கம் டேக்ஸ் பற்றி A - Z தகவல்...
வருமானம் வரும் ஒவ்வொரு நாளும் சிறப்பான நாள்தான். ஆனால், வருமான வரித் தாக்கல் செய்யும் நாளில் எதற்கு வரி செலுத்த வேண்டும் என்று நிறையவே யோசிப்போம். அரசர்கள் காலத்தில் இருந்து நில வரி போன்று பல‌ வரிகள் இருந்தாலும் வருமான வரி என்பது ஆங்கிலேயர் காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, கடந்த 150 வருடங்களாகத்தான் வருமான வரி (Income tax) வழக்கத்தில் இருந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 24-ம் தேதி வருமான வரி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது, இதன் வரலாறு என்ன என்பதை அறிந்துகொள்ள வருமான வரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.

"1860-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி வருமானத்துக்கு வரி வசூலிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தியவர் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்த சர் ஜோம்ஸ் வில்சன். ஆரம்பத்தில் பிரிட்டிஷ்காரர்களிடம் மட்டுமே இன்காம் டேக்ஸ் வசூலிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் பணியாற்றிய பிரிட்டிஷ்காரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இன்காம் டேக்ஸ் வசூலிக்கக்கூடாது எனப் போராடி இருக்கிறார்கள். ஆனால், வரி செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே வருமானவரியாக 30 லட்ச ரூபாய் வசூலாகி இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெறும்போது 1945-46-ம் ஆண்டுக்கான வருமான வரியாக 57 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்தது. 1970-ம் ஆண்டின் தொடக்கத்தில் 1,000 கோடி ரூபாயும், 2000-ம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயும் Income tax வசூலிக்கப்பட்டிருக்கிறது.
நடப்பு ஆண்டில் (2017-2018) ஒன்பது லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக‌ வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொர் ஆண்டும் வருமானவரி இலக்கு அதிகமாகிக்கொண்டே வருகிறது. அடுத்த நிதி ஆண்டில் பத்து லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இலக்கு நிர்ணயிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்திய அரசுக்கு மிகப்பெரிய வருமானம் வருமானவரிதான். இந்த வரியை மிகப்பெரிய நிலையான திட்டங்கள் நிறைவேற்றப்பயன்படுத்துகிறது அரசு. குறிப்பாக, ஆற்றுப்பாலங்கள், சாலைகள் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்படப் பல நாடுகளில் வருமானவரி அதிகமாகவே உள்ளது. பல நாடுகளில் 30 சதவிகிதம் என்ற அளவில் இருப்பதைக் கணக்கில்கொண்டு, நம் நாட்டில் ஐந்து முதல் 30 சதவிகிதம் வரை வருமானவரி வசூலிக்கப்படுகிறது. அதாவது, வருமானத்துக்கு அதிகபட்சமாக 30% மட்டுமே வரி. சீனாவில் 45 சதவிகிதம், அமெரிக்காவில் 39.6 சதவிகிதம் என வசூலிக்கப்படுகிறது. 1970-ம் ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் பணக்காரர்களிடம் வருமான வரியாக 90 சதவீதத்துக்கு அதிகமாக வசூலிக்கவும் செய்திருக்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும்.
தற்போது இரண்டரை லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு Income tax செலுத்த தேவையில்லை. 80 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஐந்து லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி செலுத்த தேவையில்லை. அரசு திட்டங்களிலும், அரசு நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்பட்டால் அதற்கு குறிப்பிட்ட தொகைக்கு வரியில் இருந்து விலக்கு வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே விவசாயத்திற்கும், அறக்கட்டளை போன்றவற்றுக்கும் வரி செலுத்தத் தேவையில்லை என்பது நடைமுறையில் இருக்கிறது.
தனி நபருக்குத்தான் வருமானவரி. குடும்பத்தில் ஒவ்வொருவரின் வருமானமும் இரண்டரை லட்சம் ரூபாய்க்குள்தான் இருக்கிறது என்றால் வருமான வரி செலுத்துவதில்லை. அதாவது, குடும்பத்தில் உள்ள நான்கு பேரின் வருமானம் பத்து லட்ச ரூபாய் என்றால் குடும்ப வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. அதிக வருமானவரி வசூலிப்பதில் மகாராஷ்ட்ரா மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது. ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப் மாநிலங்கள் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Income tax செலுத்த உதவியாக பான் கார்டு வழங்கும் முறை 1994-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 20 வருடங்களில் சுமார் 30 கோடி பேர் பான் கார்டு வாங்கி இருக்கிறார்கள். பான் இல்லாமல் எந்த விதமான பணப்பரிமாற்றமும் செய்ய முடியாது என மாறி இருக்கிறது வருமானவரித் துறை. இனி வரும் காலங்களில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை உயரும். இதன்மூலம் நாடும் வளம் பெறும்" என்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
நன்றி : விகடன் செய்திகள் -24.07.2017

No comments:

Post a Comment