disalbe Right click

Showing posts with label சான்றிதழ்கள். Show all posts
Showing posts with label சான்றிதழ்கள். Show all posts

Wednesday, March 15, 2017

சான்றிதழ்களில் திருத்தம் செய்ய முடியாது!


சான்றிதழ்களில் திருத்தம் செய்ய முடியாது!

10-ம் வகுப்பு தேர்வுக்குப் பின் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய முடியாது: சென்னை ஹைகோர்ட்

சென்னை: 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய பின், மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதி, பெயர் ஆகியவற்றில் திருத்தம் செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், செங்கமேடு கிராமத்தை சேர்ந்த பி.கருணாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 அந்த மனுவில், நான் 1992-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி பிறந்தேன்.ஆனால், சட்டவிவரங்கள் தெரியாத என் பெற்றோர், 1989-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி பிறந்ததாக பள்ளியில் சேர்க்கும்போது குறிப்பிட்டுவிட்டனர். 

நான் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்போது, எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால், பள்ளி மாற்றுச்சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே குறிப்பிட்டுவிட்டேன். 

அதன்பின்னர் பிளஸ்-2 தேர்விலும் அதேபோல குறிப்பிட்டிருந்தேன். இதன்பின்னர் கடந்த 2010-ம் ஆண்டு வானூர் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். 

10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றில் 1992-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி நான் பிறந்ததாக பதிவு செய்யவேண்டும் என்ற உத்தரவை பெற்றேன். 

குற்றவியல் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வருவாய் துறை அதிகாரியிடம், பிறப்பு சான்றிதழ் பெற்றேன். அதன்பின்னர், நான் படித்த பள்ளி நிர்வாகத்திடம் இருந்து, 1992-ம் ஆண்டு பிறந்தேன் என்று புதிய மாற்றுச்சான்றிதழை பெற்றேன். 

இந்த ஆவணங்களை எல்லாம் வைத்து, என்னுடைய 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை மாற்றித்தரும்படி தமிழக தேர்வுத்துறை செயலாளரிடம் கடந்த 2014-ம் ஆண்டு மனு செய்தேன். 

பலமுறை நேரில் சென்று முறையிட்டும், பிறந்த தேதியை திருத்தம் செய்து தராமல் உள்ளார். எனவே, என்னுடைய உண்மையான பிறந்த தேதியை குறிப்பிட்டு புதிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கும்படி தேர்வுத்துறை செயலாளருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், எஸ்.எஸ்.எல்.சி. விதிகளின் படி, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பின், வயது மற்றும் பெயர்களில் திருத்தங்கள் செய்ய முடியாது. எனவே, மனுதாரரின் 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, தேர்வுத்துறை செயலாளருக்கு அதிகாரமே கிடையாது. 

மேலும், பிறந்த தேதியை மாற்றவேண்டும் என்று தேர்வுத் துறை செயலாளருக்கு உத்தரவிட குற்றவியல் கோர்ட்டுக்கு அதிகாரமே கிடையாது. 

மேலும், எஸ்.எஸ்.எல்.சி. விதிகளின்படி, 10-ம் வகுப்பு தேர்வுக்கு பின்னர் பிறந்த தேதியை மாற்ற முடியாது. 

எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி :  ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள் - 16.03.2017

Friday, January 20, 2017

போலி மதிப்பெண் சான்றிதழ் - TNPSC நடவடிக்கை


போலி மதிப்பெண் சான்றிதழ் - TNPSC நடவடிக்கை

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தவருக்கு தேர்வு எழுத 7 ஆண்டுகள் தடை : டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை

சென்னை: போலி மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பித்தவருக்கு 7 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதித்து டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை:

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2ஏ(நேர்முக தேர்வு அல்லாத பணிகள்) பதவிக்கான (2014-2015) நேரடி நியமனம் தேர்வுக்கு, விண்ணப்பத்தாரர் என்.பிரேம் என்பவர் எழுத்து தேர்வு முடிவுகள் குறித்த பதிவுகளை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை திருத்தி போலி மதிப்பெண் சான்றிதழை தயாரித்துள்ளார். 

அதனை தேர்வாணையத்திற்கு சமர்ப்பித்த காரணத்தால் அவர் 7 ஆண்டுக்கு தேர்வாணையம் நடத்த போகும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளில்  கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது குறித்து அவர் மேல் குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தி்னகரன் நாளிதழ் - 21.01.2017

Thursday, May 19, 2016

பிறப்புச் சான்றிதழ் பெற 12 யோசனைகள்


பிறப்புச் சான்றிதழ் பெற 12 யோசனைகள் என்ன செய்ய வேண்டும்?

பிறப்புச் சான்றிதழ் பெறும் வழிகள்!
வாழ்க்கையில் நாம் செய்தாக வேண்டிய பல்வேறு விஷயங்களை அதிக சிரமமின்றி செய்து முடிக்க உதவும் ‘ஒரு டஜன் யோசனைகள்’ பகுதியில், இந்த இதழில் இடம்பெறுவது... உங்கள் வீட்டுக்குப் புதுவரவாக வரும் சின்னஞ்சிறு மனிதர்களுக்குப் பெறவேண்டிய முக்கிய மற்றும் முதல் அரசு ஆவணமான பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள்!
குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் குழந்தையின் பிறப்பை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதற்குக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. கிராமத்தில் வசிப்பவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடமும்... பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் வசிப்பவர்கள் சுகாதார ஆய்வாளரிடமும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த உடனே சம்பந்தப்பட்ட அதிகாரி, குழந்தையின் பிறப்பை உறுதி செய்து ஆவணத்தை வழங்குவார். 15 நாட்களுக்குள் குழந்தையின் பிறப்பு இணையதளத்திலும் பதிவு செய்யப்படும்.
குழந்தை பிறந்த மருத்துவமனை யிலேயே கூட பதிவு செய்ய முடியும். குடும்ப அட்டையின் நகல், குழந்தைக்குப் பெயர் வைத்திருந்தால், அதையும் சேர்த்துப் பிறப்பை பதிவு செய்துகொள்ளலாம். சம்பந்தப்பட்ட மருத்துவமனை, உங்கள் குழந்தையின் பிறப்பை, பிறப்பு - இறப்புப் பதிவு அலுவலரிடம் பதிவு செய்து, அதற்கான அத்தாட்சி ரசீதை உங்களுக்கு தரும். அதை, பிறப்பு - இறப்புப் பதிவு அலுவலரிடம் கொடுத்து சான்றிதழைப் பெற்றுகொள்ளலாம்.
குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்யவில்லை எனில், காலதாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். 30 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்யும்போது கட்டணமாக 2 ரூபாய் செலுத்த வேண்டும். 30 நாட்களுக்குப் பிறகு, ஒரு வருடத்துக்குள் எப்போது பதிவு செய்தாலும் தாமதக் கட்டணம் ரூபாய் 5.
குழந்தை பிறந்து ஒரு வருடத்துக்குள் பதிவு செய்யாவிட்டால், பிறகு நீதிமன்றத்தில் முறையிட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் பதிவு செய்ய முடியும். பல வருடங்களாகியும் நீங்கள் பிறப்புச் சான்றிதழ் வாங்காமல் இருந்தாலும் நீதிமன்றத்தில் முறையிட்டு, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிந்துதான் நீங்கள் பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ் பெறும்போது குழந்தைக்குப் பெயர் வைக்கப்படாமல் இருந் தால், பின்னர் குழந்தையின் ஒரு வயதுக்குள் மீண்டும் சம்பந்தப்பட்ட அலுவலகம் சென்று, சான்றிதழில் குழந்தை யின் பெயரைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம்.
சான்றிதழில் குழந்தையின் பெயரில் ஏதேனும் எழுத்துப்பிழை அல்லது தவறு இருந்தால் பிறப்பு /இறப்பு பதிவாளரிடம் மனு செய்து திருத்திக்கொள்ளலாம். பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், செய்தித்தாள்களில் அறிவிப்பாக வெளியிட்டு, பின்னர் முறையாக விண்ணப்பித்து, அரசு கெஜெட் மூலமாக மட்டுமே மாற்றமுடியும்.
பிறப்புச் சான்றித ழில் பெற்றோரின் பெயர் அல்லது முகவரியில் பிழை இருந்தால், பெயர் பதிவு செய்த அலு வலகத்தில் பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டையைக் கொடுத்து திருத்தத்துக்கு விண்ணப் பிக்கலாம்.
பிறப்புச் சான்று எங்கெல்லாம் கட்டாயம்?
பள்ளிச் சேர்க்கை, பாஸ்போர்ட், சட்டபூர்வ ஆவணங்கள் பெற, இன்ஷூரன்ஸ் க்ளெய்ம், சொத்துப் பிரிவினைகள், புதிய வாக்காளர் அட்டை பெற.
பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் பெயர்கள் போன்றவற்றுக்கு பிறப்புச் சான்றிதழ் மட்டுமே முதன்மை சட்டபூர்வ ஆவணம் என்பதை நினைவில் கொள்க.
தாய், பிரசவத்துக்கு பிறந்த வீட்டுக்கு வந்து, அந்த ஊர் மருத்துவமனையில் குழந்தை பெற்றிருக்கலாம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், குழந்தை எந்த ஊரில் பிறந்ததோ அந்த ஊரில்தான் பிறப்பை பதிவு செய்ய முடியும். குழந்தையின் பெற்றோ ருடைய வசிப்பிடத்தில் பதிவு செய்ய முடியாது.
பிறப்புப் சான்றிதழுக்கு உரிய அனைத்து விதிகளும் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கும் பொருந்தும். ஒருவரின் வசிப்பிடம் எதுவாக இருந்தாலும், எந்த ஊரில் இறக்கிறாரோ அங்குதான் இறப்பினைப் பதிவு செய்து சான்றிதழ் பெற முடியும். ஒருவர் இறந்து ஒரு வாரத்துக்குள் அவரது இறப்பினை பதிவு செய்ய வேண்டும். 21 நாட்களுக்குப் பிறகு என்றால், சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் இறப்புச் சான்றிதழைப் பெற இயலும்.
சில இடங்களில் அலுவல் தேவைக்கு குழந்தையின் அசல் பிறப்புச் சான்றிதழ் கேட்பார்கள். இதனால் எத்தனை எண்ணிக்கை யில் நகல்கள் வேண்டுமோ அதைக் குறிப்பிட்டு, உரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
பிறப்புச் சான்றிதழ் தொலைந்து விட்டால். சான்றிதழின் நகலுடன் குடும்ப அட்டையை இணைத்து... நீங்கள் இதற்கு முன் எங்கு பதிவு செய்தீர் களோ, அதே அலுவலகத்தில் மீண்டும் விண்ணபிக்கலாம். உங்களிடம் நகலும் இல்லையென்றால்... குடும்ப அட்டையின் நகல், நீங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றை கூறினால் போதும். இதற்கான கட்டணம் 20 ரூபாய்.
பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் தொடர்பான மேலதிக விவரங்களுக்கு:
http://www.tn.gov.in/dtp/birthdeath.htm
சு.சூர்யா கோமதி
நன்றி : அவள் விகடன் - 12.01.2016

Tuesday, May 17, 2016

வாரிசு சான்றிதழ் - கேள்விகள்-பதில்கள்


வாரிசு சான்றிதழ் - கேள்விகள்-பதில்கள் - என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்
வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?
ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இந்தச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.
வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?
நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத்தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசுப் பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன்கள் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.
எங்கே விண்ணப்பிப்பது?
வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் மற்றும் ஜெராக்ஸ் கடைகளில்  கிடைக்கிறது.
வாரிசுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் இருப்பிடச் சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் நகல்
வாரிசுகளின் இருப்பிடச் சான்றிதழ் நகல்
எவ்வளவு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்?
ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் இறப்பைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை உடனடியாக இறப்பைப் பதிவு செய்ய முடியாத நிலையில் அதற்கான காரணத்தைத் தெரிவித்து ஒருவருடத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும். 
ஒருவர் இறந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
ஆனால், அதற்கு அருகிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சென்று விண்ணப்பித்து, வழக்கறிஞர் மூலமாக பிரபல தமிழ் நாளிதழில் வாரிசு சான்றிதழ் கோரியுள்ள விளம்பரத்தை வெளியிட்டு, 15 நாட்களுக்குள் ஆட்சேபணை யாரும் தெரிவிக்காத பட்சத்தில் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் அதனை வட்டாட்சியர் அவர்களிடம் சமர்ப்பித்து சான்றிதழ் பெறமுடியும்.
சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால்?
ஒருவேளை பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால் அவரின் இறப்புப் பதிவு செய்யப்பட்டிருக்காது. அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் இறப்புப் பதிவு செய்யப்படவில்லை என்ற சான்றிதழைப் பதிவுத்துறையில் பெற்று நீதிமன்றத்தில் கொடுத்தால் நீதிமன்றம் இறப்புச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிடும்.
விண்ணப்பித்து எத்தனை நாட்களில் கொடுக்கப்படும்?
விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் தாமதமாவதற்கான அல்லது மறுப்பதற்கான காரணத்தை வட்டாட்சியர் அவர்கள் கூற வேண்டும்.
எப்போது மறுக்கப்படும்?
இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடையே பிரச்சினைகள் இருப்பது, தத்து எடுக்கப்பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவது, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம். நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம்.
இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate)
இறந்த நபரின் பெயரிலுள்ள முதலீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வமான உரிமை இருக்கிறது என்பதைக் காண்பிக்க ஒருவர் நீதிமன்றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.
எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம். ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந்த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குகள்/முதலீடுகள் முதலியவற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்களா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம். இதற்காக இந்த ஐந்து பேரும் நீதி மன்றத்தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்களில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தினால் நீதிமன்றம் அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழ் வழங்கும்.
மாற்று வழி
இறங்குரிமை சான்றிதழ் பெறுவதற்கு 20 ரூபாய் பத்திரத்தாளில் ஒன்றில் இறந்தவருடைய வாரிசுகள் அனைவரும் தங்களுக்குள் ஒருவரை ஒரு மனதாக தேர்ந்தெடுத்து, அவரிடம் பண பலன்களை அல்லது வாரிசுக்கான வேலையை கொடுப்பதற்கு தங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று உறுதி செய்து கையொப்பம் இட்டு சம்பந்தப்பட்ட வட்டாட்சி அலுவலர் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பரிசீலணை செய்து அவர் சான்றிதழ் வழங்குவார்.
ஒருவர் காணாமல் போயிருந்தால்..?
வாரிசுதாரர்களில் ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர, அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து புகார் அளித்து, காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக, ‘அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்’ என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் பெற முடியும்.

எப்போதெல்லாம் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்?
குறிப்பிட்ட நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்து அவர்களுக்குள் வாரிசு குழப்பங்கள் ஏற்பட்டால் வட்டாட்சியர் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
அதுபோல காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்கிறபோதும், சொத்துக்கான உரிமையாளர் இறந்த தேதி தெரியாமல் இருந்தாலும் வட்டாட்சியர் வாரிசு சான்று விண்ணப்பித்தை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 
இதுபோன்ற நிலைமைகளில் நீதிமன்ற உத்தரவு பெற்று வருபவருக்கு வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் வழங்குவார்.
குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளருக்கு பல வாரிசுகள் இருந்து அவர்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் போது ஒரே உத்தரவின் மூலமும் நீதிமன்றம் வாரிசுகளை அறிவிக்கச் செய்யும்.
குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில் குடும்பத்தின் மூத்த நபர் வாரிசாக அறிவிக்கப்படுவார்.
போலியான ஆவணங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டிருப்பின் அந்த சொத்துக்களின் உண்மையான வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றதை அணுகி அந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யவும் முடியும்.
நன்றி : புதிய தலைமுறை - 19.10.2013

Sunday, December 6, 2015

வெள்ளத்தில் தொலைந்துபோன ஆவணங்களை மீண்டும் பெற


வெள்ளத்தில் தொலைந்துபோன ஆவணங்களை மீண்டும் பெற என்ன செய்ய வேண்டும்?

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பள்ளி சான்றிதழ்கள் பெறும் முறை:
பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்களைப் பெற காவல் துறையினரிடம் புகார் அளித்து கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழை பெற வேண்டும். அதன்பிறகு முன்பு படித்த பள்ளி, கல்லூரி மூலம் விண்ணப்பம் பெற்று அதை பூர்த்தி செய்து, வட்டாட்சியரிடம் அளித்து, அசல் சான்றிதழ் மீண்டும் திருப்பப் பெற வாய்ப்பின்றி இழக்கப்பட்டது என்ற சான்றிதழை வாங்க வேண்டும்.
அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம், இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.
தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். பட்டப்படிப்பு, அதற்கு மேற்பட்ட உயர் கல்விச் சான்றிதழ்களுக்கு தொடர்புடைய பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
*பதிவு எண் கட்டாயம்:
சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பிக்கும்போது, தேர்வு எழுதிய பதிவு எண், ஆண்டு, மாதம் ஆகிய விவரங்களைக் கட்டாயம் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட வேண்டும். மாற்றுச் சான்றிதழ்களை புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்களை அணுகி கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
ஓட்டுநர் உரிமத்தை பெறும் முறை:
காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்ட போக்குவரத்து அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், பழைய ஓட்டுநர் உரிமத்தின் நகல் அல்லது எண்ணை அளிக்க வேண்டும்.
குடும்ப அட்டை பெறும் முறை:
குடும்ப அட்டை தொலைந்துபோனால், கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கல் அலுவலர், நகரப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கல் துறை மண்டல உதவி ஆணையர் ஆகியோரை அணுக வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் குடும்ப அட்டை காணாமல்போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் அளித்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அத்துடன், காணாமல்போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகலை இணைத்து அளிக்க வேண்டும்.
டெபிட் கார்டு பெறும் முறை:
பற்று அட்டை (டெபிட் கார்டு) தொலைந்துபோனால், உடனே தொடர்புடைய வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் தெரிவித்து, பணப்பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்.
பின்னர், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரை அணுகி, கடிதம் மூலம் பற்று அட்டை தொலைந்ததை தெரியப்படுத்தி புதிய அட்டை வழங்குமாறு கோர வேண்டும். அப்போது, தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும்.
பட்டா பெறும் முறை:
வீட்டுமனைப் பட்டா தொலைந்துபோனால், முதலில் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அவரது பரிந்துரையின்பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா அளிக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
நன்றி : திரு தமிழ் நேசன் December 6, 2015, .todayindia.info

Monday, November 30, 2015

ஓ.பி.சி. சான்றிதழ் பெற


ஓ.பி.சி. சான்றிதழ் பெற என்ன செய்ய வேண்டும்?

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு,
சமூக நீதிக் காவலர், நமது முன்னாள் பாரதப்பி்ரதமர் காலஞ்சென்ற வி.பி. சிங் அவர்களின் முயற்சியால், 1993 முதல் மத்திய அரசு வேலை வாய்ப்பிலும், 2007 முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான IIT, IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் அனுப்பவேண்டும்.
அதற்குப் பெயர் தான் ஓபிசி சான்றிதழ்.
தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என ஜாதி சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களுக்கு, மத்திய அரசில் பணியில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, ஓபிசி சான்றிதழ் அதாவது இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் என கூறப்படுகிறது.
இந்த ஓபிசி சான்றிதழ், பி.சி., எம்.பி.சி. சான்றிதழ் வழங்கும், அதே வட்டாட்சியரால் தான் (தாசில்தார்) தரப்படுகிறது.
ஓபிசி, சான்றிதழ் பெறுவதற்கு பெற்றோர் ஆண்டு வருமானம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த ஓபிசி சான்றிதழ் யாருக்குக் கிடையாது?
1) தமிழ் நாட்டில், பி.சி., எம்.பி.சி. பட்டியலில் உள்ள ஜாதிகளில், சில ஜாதிகள், மத்திய அரசின் ஓ.பி.சி. பட்டியலில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கின்றன. அந்த ஜாதிகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது.
இந்த ஜாதிப்பிரிவைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் வேலை வாய்ப்பில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, பொதுப்பிரிவில்தான் அதாவது திறந்த போட்டியில்தான் விண்ணப்பிக்க முடியும். இதனை, www.ncbc.nic.in என்ற இணைய தளத்தில் பார்த்து விபரம் அறிந்துகொள்ளலாம்.
2) IAS, IPS போன்ற குரூப் ஏ பதவியில் பெற்றோர்கள் இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, இந்த ஓபிசி சான்றிதழ் கிடையாது.
3) GROUP - C அல்லது GROUP - B யில் பணியில் சேர்ந்து, 40 வயதுக்குள், GROUP - A பதவிக்குச் சென்றாலும், அந்த தகப்பனாரின் குழந்தைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடையாது. அதே நேரத்தில்  அந்தக் குழந்தையின் தாய் , GROUP – A பணியில் 40 வயதுக்குள் பதவி உயர்வு பெற்றால், சான்றிதழ் பெற தடையில்லை
4) பெற்றோர்களது வருமானம் மூன்று ஆண்டுகளுக்கும் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ரூபாய் ஆறு லட்சத்தைத் தாண்டி இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, ஒபிசி சான்றிதழ் பெற முடியாது.
இதில், வியாபாரிகள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், பொறி யாளர்கள் என தனியே நிறுவனம் அமைத்து, வருமானம் இருந்தால், அந்த வருமானம், ஆண்டுக்கு, ரூபாய் ஆறு லட் சத்தைத் தாண்டினால், அவர்களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது.
அப்படி என்றால், யாருக்குத்தான் ஓபிசி சான்றிதழ் கிடைக்கும்?
a). GROUP - A GROUP - B போன்ற பதவி தவிர்த்து, , GROUP - C, GROUP - D போன்ற பதவிகளில் பணிபுரிந்தால், அப்போது, அவர்களது சம்பளம், ஆண்டுக்கு, ரூபாய் ஆறு லட்சத்தைத் தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும்.
b) மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்ற வற்றில் பணிபுரியும், பிற்படுத்தப்பட் டோர், அவர்களது ஆண்டு வருமானம், ரூபாய் ஆறு லட்சத்தைத் தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும்.
c) விவசாய வருமானம் ரூபாய்  ஆறு லட்சத்தைத் தாண்டினாலும், அந்த பிற்படுத்தப்பட்டோரின் பிள்ளைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் பெறலாம்.

கிரிமி லேயர் (Creamy Layer-கிலே) முறை:
ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, கிரிமிலேயர் (Creamy Layer-கிலே) முறை முக்கிய பங்கு வகிக்கிறது. கிரிமி லேயர் என்றால் பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் - பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள் என்று அர்த்தம்.  இதன்படி பார்த்தால் ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, பெறுபவருடைய பெற்றோரின் வருமானம் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும். சான்றிதழ் பெறுபவரின் வருமானம் கணக்கில் வராது.
சான்றிதழை பெறும் நபரின் ஆண்டு வருமானம் ரூபாய் 6 இலட்சத்திற்கு மேல் இருந்து அவரின் பெற்றோரின் வருமானம் ரூபாய் 6 இலட்சத்திற்கு குறைவாக இருந்தாலும், அவர் அந்த சான்றிதழை பெற தகுதியானவர்தான்.

தமிழக அரசின் ஆணை:
ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்டோரின் ஆண்டு வருமானத்தைக் கணக்கிடும்போது, மாதச் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது;
அதே போன்று, விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. இதனை, மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த ஆணையின்படி, பிற்படுத்தப் பட்டோரின் பெற்றோர், அரசின் பதவிகளில் இருந்தாலும், வங்கி உள்ளிட்ட எந்த பொதுத்துறை நிறுவனங் களில் பணிபுரிந்தாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், அவர்களது, மாதச் சம்பள வருமானத்தை, கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை, ஜாதி சான்றிதழ் வழங்கும் வட்டார அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது?
இதனைப் பெறுவதற்கு முதலில் தமிழக அரசு வழங்குகின்ற ஜாதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
ஜாதி சான்றிதழ் வழங்கும், வட்டார ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது ஜெராக்ஸ் கடைகளில் ஓபிசி சான்றிதழ் பெறுவதற்குரிய விண்ணப்பம் கிடைக்கும். அதனை பூர்த்தி (டைப்பிங்) செய்து, ஏற்கனவே தமிழக அரசு வழங்கியுள்ள ஜாதி சான்றிதழ் நகலையும், குடும்ப அட்டை நகலையும், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகலையும், வருமானச் சான்றிதழ் நகலையும் இணைத்திட வேண்டும்.
யாருடைய பெயருக்கு சான்றிதழ் பெற வேண்டுமோ, அவரது பெயருக்கு 20 ரூபாய்க்கான பத்திரம் வாங்கி, நோட்டரி பப்ளிக் வக்கீலிடம் அபிடவிட் பெற்று அதனையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பமிட்டு முதலில் கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
சாதாரணமாக நாம் ஜாதிச் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பி்ப்பது போலவே, இதற்கும் வி.ஏ.ஓ, ஆர்.ஐ. மற்றும் தாசில்தாரிடம் கையொப்பம் பெறவேண்டும்.
அந்த விண்ணப்பப் படிவத்தில், பாரா 12-ல் வருமானம்/சொத்து பற்றிய விவரம் கேட்கப்படுகிறது. அதில் ஆண்டு வருமானம் என்பதில், மாதச்சம்பளம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த படிவம், www.persmin.gov.in என்ற இணைய தளத்தில்,OM and Orders என்கிற பகுதி யில், O.M. No.36012/22/93-Estt.(SCT),Date: 15.11.1993 என்கிற அரசு ஆணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆகவே, மாதச் சம்பளம் பெறுவோர், விவசாயி போன்றோர், இந்த விண்ணப்ப படிவத்தில், வருமானம் என்ற இடத்தில், மாதச்சம்பளம், அல்லது விவசாய வருமானம் என்பதை மட்டும் குறிப்பிட்டு, தமிழக அரசின் ஆணையின் நகலையும் இணைத்து, விண்ணப்பித்தால், ஓபிசி சான்றிதழ் நிச்சயம் கிடைக்கும்.

செல்லுபடியாகும் காலம்
இந்த ஓபிசி சான்றிதழ், வருமானமும் சம்பந்தப்பட்ட சான்றிதழ் என்பதாலும், கிரிமிலேயர் என்கிற முறை இருப்பதாலும், இந்த ஓபிசி சான்றிதழை ஒரு ஆண்டுக்குத்தான் பயன்படுத்தமுடியும்.
அதாவது, ஒரு ஆண்டின், ஏப்ரல் மாதத்திலிருந்து, அடுத்த மார்ச் மாதம் வரை, இந்த ஓபிசி சான்றிதழ் பயன்படும். மேலும், தேவைப்பட்டால், மீண்டும் அதே வட்டார அலுவலகத்தில், புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
தற்போது, வங்கி உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில், வேலை வாய்ப்பு மிக அதிகமாக உள்ள நிலையில், வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு பயன் தங்களது பிள்ளைகளுக்கு கிடைத்திட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விவசாய மக்களும் மாதச்சம்பளம் பெறுவோரும், இந்த விவரங்களைப் பயன்படுத்தி, ஓபிசி சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வீடியோ எனது நண்பரும், வழக்கறிஞருமான திண்டுக்கல்லைச் சேர்ந்த திரு Leenus Leo Edwards  அவர்களின்  உன்னத படைப்பாகும். அவர் இந்த விடியோவில் ஓ.பி.சி. சர்டிபிகேட் பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதனையும் பார்த்து பயனடைய தங்களை வேண்டுகிறேன். 


Monday, April 6, 2015

பிறப்புச்சான்றிதழ் பற்றிய தகவல்கள்


பிறப்புச்சான்றிதழ் பற்றிய தகவல்கள்
********************************************


குழந்தை பிறக்கும்போது ஏதேனும் காரணங்களால், பிறப்பை பதிவு செய்யாமல் இருந்திருக்கலாம். குறிப்பாக, முதியவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கலாம். ஏனென்றால், அவர்கள் பிறந்தபோது பிறப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை. எனவே, குழந்தை பிறந்து ஓர் ஆண்டுக்குப் பிறகு பிறப்பை பதிவு செய்ய வேண்டுமானால், குற்றவியல் நீதிபதியின் ஆணையைப் பெற்றுதான் பதிவு செய்ய முடியும்.

அதற்கான நடைமுறைகள் என்ன?

அதற்கு non-availability சான்றிதழ் பெற வேண்டும்.

non-availability சான்றிதழ் என்றால் என்ன?

புதிதாக பதிவு செய்யப்படும் உங்கள் பிறப்பு மற்றும் பெயர் ஏற்கெனவே வேறு எங்குமே (எந்த உள்ளாட்சி அமைப்பிலும்) பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணமே non-availability சான்றிதழ்.

அந்த சான்றிதழை எப்படி பெறுவது?

தொடர்புடைய உள்ளாட்சி அலுவலகத்தில் இதற்கான படிவம் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து கொடுத்தால் அதிகாரிகள் அதை சரிபார்த்து, வேறு எங்கும் பதிவுகள் இல்லை எனில் அதன் பிறகு சான்றிதழ் தருவார்கள்.

அதன் பின்பு என்ன செய்ய வேண்டும்?

Non-availability சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றத்தில் குழந்தை பிறந்த இடம் மற்றும் தேதிக்கான ஏதேனும் ஓர் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். பிரசவச் சீட்டு, குடும்ப அட்டை அல்லது வேறு ஏதேனும் மாற்று ஆவணத்தை இதற்காக சமர்ப்பிக்கலாம். அவை உண்மையானதா என்று அதிகாரிகள் விசாரித்து, சரி பார்ப்பார்கள். பின்பு குழந்தையைவிட பத்து வயது மூத்தவர் வந்து, அவருக்கு நீதிமன்றத்தில் சாட்சி கூற வேண்டும். நீதிபதிக்கு சந்தேகம் எதுவும் இல்லை என்றால் பிறப்புச் சான்றிதழ் தரலாம் என்று ஆணை பிறப்பிப்பார். அதன் பிறகு, உள்ளாட்சி அதிகாரிகள் பிறப்புச் சான்றிதழை கொடுப்பார்கள்.

இறப்புச் சான்றிதழின் அவசியம்


இறப்புச் சான்றிதழ்

இறப்புச் சான்றிதழின் அவசியம் என்ன?

ஒருவரின் உயிர் இயக்கத்துக்கான அறிகுறிகள் அனைத்தும் நின்றுவிட்டதை உறுதிப்படுத்த இறப்புச் சான்றிதழ் அவசியம்.

எந்த சூழ்நிலையில் இறப்புச் சான்றிதழ் தேவைப்படும்?

சொத்து, நிலம், காவல் விசாரணை உள்ளிட்ட விவகாரங்களுக்கு இறப்புச் சான்றிதழ் தேவை.

இறப்புச் சான்றிதழை எங்கு, யாரிடம் பெறுவது?

இறப்புச் சான்றிதழை இறப்பு நிகழும் இடத்துக்கு உட்பட்ட பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் பெற வேண்டும். மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடமும், ஊராட்சிகளில் நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர் என அதற்கு பொறுப்பான அதிகாரியிடமும் பெற வேண்டும்.

இறப்பு நிகழ்ந்தவுடன் செய்யவேண்டியது என்ன?

மருத்துவமனையில் இறப்பு நிகழ்ந்தால், இறந்தவரின் பெயர், வயது உள்ளிட்ட தகவல்களை மருத்துவமனையில் தெரிவித்து, இறப்பு நிகழ்ந்ததற்கான காரணத்தை குறிப்பிடும் படிவம் IV-ஐ பெற்றுக்கொள்ள வேண்டும்.

வீட்டில் இறப்பு நிகழ்ந்தால் என்ன செய்ய வேண்டும்?

வீட்டில் இறப்பு நிகழ்ந்தால், அதை அருகில் உள்ள பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் தெரிவித்து படிவம் IV-ஏ-வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதுவே இறப்பை உறுதிப்படுத்தக்கூடிய சான்றிதழ்.

எத்தனை நாட்களுக்குள் இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும்?

ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் பெற வேண்டுமானால், மருத்துவமனையிலேயே பெற்றுக்கொள்ளலாம். 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் என்றால், மாநகராட்சி ஆணையர் அல்லது அதற்கு பொறுப்பான அலுவலரிடம் இருந்து எழுத்து மூலமாக அனுமதி பெற வேண்டும். ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டால், குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற வேண்டும்.

ஒருவர் வசிக்கும் ஊரிலிருந்து வேறு இடத்தில் இறப்பு நிகழ்ந்தால் செய்ய வேண்டியது என்ன?
இறப்பு எங்கு நிகழ்ந்தாலும், அந்த இடத்தில் உள்ள பிறப்பு - இறப்பு பதிவாளரிடம் இருந்துதான் சான்றிதழைப் பெற வேண்டும்.

குழந்தை இறந்தே பிறந்தால், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன?

இறந்தே பிறக்கும் குழந்தைக்கு, பிறப்புச் சான்றிதழ் கொடுக்கப்பட மாட்டாது. இறப்புச் சான்றிதழ் மட்டுமே கொடுக்கப்படும். அதற்கும், மற்றவர்கள் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான அதே நடைமுறைகள்தான் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

இறந்து பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆன ஒருவருக்கு, அவரது இறப்பை பதிவு செய்யாத நிலையில், அவரது “இறப்புச்சான்றிதழ்” பெற என்ன செய்ய வேண்டும்?

முதலில் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகம் சென்று, அவரது இறப்புச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும். அங்குள்ள பதிவு அதிகாரி, அந்த இறப்பு பதிவு செய்யப்படவில்லை என ஒரு அறிக்கை தங்களுக்கு வழங்குவார்.

அதன்பிறகு ஒரு வழக்கறிஞர் மூலமாக, முண்ணனி தமிழ் நாளிதழ் ஒன்றில் இறந்துபோன தங்களது உறவினர் பற்றிய
விபரங்களை முழுமையாக குறிப்பிட்டு விளம்பரமாக வெளியிடவேண்டும். அதற்கு 15 நாட்களுக்குள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில், அதனையும், நகராட்சி அலுவலர் கொடுத்த அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீதிபதி சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலருக்கு, தங்கள் உறவினரின் இறப்புச்சான்றிதழ் வழங்குமாறு உத்தரவு பிறப்பிப்பார்.

ஆன்லைனில் வில்லங்கச்சான்று


ஆன்லைனில் வில்லங்கச்சான்று பெறுவது எப்படி?
*******************************************************************************

EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்?

இணையத் தளத்தில் வில்லங்க சான்று..!

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, சொத்து விபரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவை அனைத்தும்,1987 ஜன. 1க்கு பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு இன்னும் பதிவு செய்யவில்லை.

சொத்துகள் வாங்கும் போதும், விற்கும் போதும், சம்பந்தப்பட்ட சொத்தில் ஏதும் பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிய, பத்திரப்பதிவு அலுவலகத்தில், குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும். 

பொதுவாக பலரும், 30ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் தான் வில்லங்க சான்றிதழ் கேட்கின்றனர். 

பத்திரப்பதிவு அலுவலகங்களில் கம்ப்யூட்டர் பதிவு 26 ஆண்டுகளுக்கு மட்டுமே உள்ளது. 

அதற்கு மேல் வேண்டும் என்றால், தேடி கைப்பட எழுதித் தான் சான்றிதழ் தர வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவைப்படும். 

இதனால், வில்லங்க சான்றிதழ் பெறுவதில், பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை என்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே என்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. சில சமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.

Encumbrance Certificate
********************************

நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப் பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

EC (Encumbrance Certificate) வில்லங்கச்சான்றிதழ்:
**********************************************************************

ஒரு குறிப்பிட்ட சொத்தின் பதிவு விவரங்கள் அனைத்தும் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதில் கீழ் கண்ட விவரங்கள் இருக்கும்.
1. சர்வே எண்
2. விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்து கொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி
3. பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம்
4. சொத்தின் மதிப்பு
5. சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர்
6. தொகுதி மற்றும் பக்க எண்
7. பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண் 

மேற்கண்ட விவரங்களின் மூலம் ஒரு சொத்து எந்தெந்த வருடம் யாரால் வாங்கப்பட்டிருக்கிறது என்ற முழு விவரங்களும் தெரியும். 

EC-யை வைத்தே தாய்பத்திரத்தில் இருந்து நாம் யாரிடம் நிலம் வாங்குகிறோமோ அது வரை உள்ள எல்லா பத்திரங்களையும் நாம் சரி பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் நாம் வாங்க இருக்கும் சொத்து ஏதேனும் ஒரு வங்கியில் Registered Mortgage(பதிவுசெய்யப்பட்ட அடமானம்) செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரமும் இதில் தெரிந்துவிடும். 

சொத்து சம்பந்தமாக EC-ல் சில தகவல்கள் வர வாய்ப்பில்லை.
******************************************************************************************

1. 01.11.2009-க்கு முன்பு சொத்தின் உரிமையாளர் அந்த சொத்தை விற்பதற்குயாரையாவது Power of attorney-யாக நியமித்து இருந்தால் அது EC-ல் வராது.

Power of attorney-ஐ பதிவு செய்ய புதிய முறையை அரசாங்கம் 01.11.2009-ல் இருந்து அமல்படுத்தியது. அதன்படி Power of attorney பதிவு விவரம் EC-ல்வரும்.

2. சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்காக யாரிடமாவது பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் (Unregistered Agreement) போட்டு இருந்தால் அதுவும் EC-ல்வராது.

3. சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்காக யாரிடமாவது பதிவுசெய்யப்படாத அடமானம் (unregistered mortgage) வைத்திருந்தால் அதுவும் EC-ல் வராது.

மேற்கண்ட மூன்று விஷயங்களிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். பல மோசடிகள் நடப்பதற்கு இவை மூன்றும் காரணமாகி விடுகின்றது.

கைப்பட எழுதித்தரப்படும் சான்றிதழ் EC பெறுவது எப்படி? 
**************************************************************
சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து பெறலாம். 

01.01.1987-ல் இருந்து தான் Computer மூலம் EC பெற முடியும்.
***********************************************************************************

அதற்கு முன்பு Manual ECதான்.01.01.1987-ல் இருந்து EC தேவைப்படும் பட்சத்தில் இணைய தளத்தின் மூலமும் விண்ணப்பம் செய்து பெறலாம் 

இணைய தளத்தின் முகவரி www.tnreginet.net
*****************************************************************

இந்த வசதி தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. எந்தெந்த இடங்களில் இந்த சேவை இருக்கிறது என்ற விவரம் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது சென்னை இராஜாஜி சாலையில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து தமிழ்நாட்டில் உள்ள எந்த சொத்திற்கும் EC பெறலாம்.

விண்ணப்பத்தில் 

1.விண்ணப்பம் செய்பவரின் பெயர், 
2.முகவரி, 
3.சொத்து விவரம்
4.மற்றும் கிரையப்பத்திர விவரம்

முதலியவைகள் கேட்கப்பட்டிருக்கும்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம்செய்ய வேண்டும். 

இணைய தளத்தின் மூலம் விண்ணப்பம் செய்பவருக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ EC கொடுக்கப்படும்.
அவ்வாறு கொடுக்கப்படும் போது அதற்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படும்
.
அதற்கு என்ன செலவாகும்?
*******************************************

பத்து ஆண்டுகளுக்கு என்றால் முதல் ஆண்டிற்கு ரூ.15 ம், பிறகு ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.5 ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அத்துடன் விண்ணப்ப கட்டணமாக ரூ.11 வசூலிக்கப்படும்.

கம்ப்யூட்டர் முறையில் எடுத்துதரப்படும் நகல் பதிவு செய்யப்படாத அதாவது EC-ல் entry வராத, சொத்து சம்பந்தமான நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகள் என்ன?

ஒருவர் தன்னுடைய நிலத்தை விற்பதற்கு மற்றொருவரை Power of Attorney-ஆக 2005-ல் நியமனம் செய்திருந்தார். Power of Attorney-ஆக நியமிக்கப்பட்டவர் சொத்தை விற்பதற்கு காலம் தாழ்த்தவே சொத்தின் உரிமையாளர் அவருக்கு தெரியாமல் Power of Attorney-யை ரத்து செய்துவிட்டார். 

இதை மறைத்தோ அல்லது தெரியாமலோ Power of Attorney-ஆக நியமிக்கப்பட்டவர் சொத்தை விற்பனை செய்வதற்காக மற்றொருவரிடம் முன் பணம் வாங்கி கிரைய ஒப்பந்தம் (Sale Agreement)செய்து விட்டார். 
சட்ட ரீதியாக இது செல்லுபடியாகாது. 


சொத்தின் உரிமையாளர் வேறு ஒருவருக்கு சொத்தை விற்றுவிட்டார். இது செல்லுபடியாகும்.

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி ?
***************************************************************************

ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. 

பொதுவாகவே ஈ சி (EC – Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி.

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு.

இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். 

அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் 

அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். 

இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற –

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற –

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன் –

திருமணத்தை பதிவு செய்ய –

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர் –

சொசைட்டி ரிஜிஸ்டர் – 

லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற –http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp