disalbe Right click

Showing posts with label RTI. Show all posts
Showing posts with label RTI. Show all posts

Sunday, August 12, 2018

நடந்து முடிந்த விசாரணை குறித்த தகவல்களைப் பெற முடியுமா?

நடந்து முடிந்த விசாரணை குறித்த தகவல்களைப் பெற முடியுமா?  
நான் சார்ந்த சங்க நிர்வாகிகள் போலி ஆவணம் தயாரித்து பதிவுத்துறையை மற்றும் கல்வித்துறையை ஏமாற்றிக் கொண்டிருப்பது குறித்து, பார்ட்டி இன் பெர்சன் ஆக  நீதிமன்றத்தில் Cr.P.C:156(3) ன் கீழ் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தேன். வழக்கு பற்றி இருதரப்பினர்களிடமும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நடுவர் அவர்கள் காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்தி காவல் ஆய்வாளர் அவர்கள் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
காவல்துறை ஆய்வாளரின் மோசடி அறிக்கை
காவல் ஆய்வாளர் அவர்கள் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சில மாதங்கள் கழித்தே அதன் நகலை நீதிமன்றத்தில் இருந்து முறைப்படி நான் பெற முடிந்தது. அந்த அறிக்கை எதிர்தரப்பினருக்கு சாதகமாக மோசடியாக தயாரிக்கப்பட்டிருந்தது. மேலோட்டமாக பார்க்கும் போதே அது எனக்குத் தெரிந்தது. அதனை எனது ஆட்சேபனை மனுவில் தெரிவித்தேன். நடுவர் கண்களை மூடிக் கொண்டு எனது வழக்கை தள்ளுபடி செய்தார். எனது கிரிமினல் வழக்கை சிவில் வழக்கு என்று தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை நடுவர் பதிவு செய்தார்.
காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு
மோசடியான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தேன். அதனால், அந்த விசாரணை அறிக்கையில் அவர் செய்திருந்த தவறுகளுக்கான காரணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்  தகவல்களாக பெறுவதற்கு முறைப்படி  மனுச் செய்தேன். 
காவல்துறையில் பொது தகவல் அலுவலர் யார்?
எந்த ஒரு மாவட்டமாக இருந்தாலும் சரி. அந்த மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது எந்த ஒரு காவல் அதிகாரி இடத்திலோ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற வேண்டும் என்றால், நாம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (Additional Superintendent of Police - ADSP) அவர்களிடமே விண்ணப்பிக்க வேண்டும். அவர்தான் பொது தகவல் அலுவலர் ஆவார். அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் (Superintendent of Police - SP) மேல்முறையீட்டு அலுவலர் ஆவார்.
காவல் ஆய்வாளர்  தகவல்கள் தர மறுப்பு
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தகவல்கள் வழங்க முடியாது என்று பதில் வழங்கப்பட்டது. இதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நண்பர் A Govindaraj Tirupur அவர்களின் ஞாபகம் வந்தது. உடனே, அவரது பிளாக் ஸ்பாட்டை https://rtigovindaraj.blogspot.com ஓப்பன் செய்தேன். அந்த ஆவணக் கடலில் நீந்தியது மிக சுகமாக இருந்தது. அடேங்கப்பா எவ்வளவு ஆவணங்கள்? எத்தனை தகவல்கள்?. மலைத்துப் போய்விட்டேன். தனது பொன்னான நேரத்தை மிக மிக அதிகமாக செலவழித்து பல தகவல்களை சேகரித்து வைத்துள்ளார் அவர்.  நன்றி என்ற சொல் மட்டும் போதாது அவரது இந்த சேவைக்கு.
எனது வழக்கைப் போல் ஒரு வழக்கு 
அவரது 5293 வது பதிவு நான் தேடிக் கொண்டிருந்த விடையுடன் எனக்காக காத்துக் கொண்டிருந்தது. அந்தப் பதிவில் ஒரு வழக்கு. ஒரு விசாரணை முடிக்கப்பட்டுள்ளது.  அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடத்தியவர்கள் அதனை மேல் அதிகாரிக்கும் அனுப்பி விடுகிறார்கள். மனுதாரர் அந்த விசாரணை அறிக்கையைப் பற்றி தகவல் கேட்கிறார். தகவல் மறுக்கப்படுகிறது. மேல்முறையீடு செய்கிறார் மனுதாரர். பலனில்லை. இறுதியில் ஆணையத்திற்கு வழக்கு செல்கிறது.  
விசாரணை முடிந்துவிட்டால் அதிலுள்ள தகவல்களை கொடுக்க வேண்டும்
மாநில தகவல் ஆணையர் திரு தி.சீனிவாசன் அவர்கள் வழக்கை விசாரித்து முடிவில், இறுதி ஆணை பிறப்பிப்பது மேல் அதிகாரியின் முடிவாகும். அதற்காக விசாரணை முடிந்த பின் அதன் தகவல்களை அளிக்காதது தவறு என்று ஒரு அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.  அதன் நகலைப் பெற இதனை கிளிக் செய்யுங்கள்.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wclh2QzhicGxGdFE

மேற்கண்ட வழக்கைப் போல மற்றோரு வழக்கின் தீர்ப்பும் உள்ளது. அது https://rtigovindaraj.blogspot.com -ல் 3893 வது பதிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அதில் காவல்துறையில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மனு விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகவே விசாரணை பாதிக்கும் என்று தகவல் மறுத்தது தவறு என்று தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
TNSIC - வழக்கு எண்:29452 / விசாரணை / 2009,  நாள்:30.04.2010. அதன் நகலைப் பெற இதனை கிளிக் செய்யுங்கள்.

****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.08.2018 

Wednesday, October 25, 2017

இலவசமாக RTI தபால்கள் அனுப்பலாம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுதும் விண்ணப்பங்களை அரசு அலுவலகத்திற்கு இலவசமாக எப்படி அனுப்புவது ,அதன் நடைமுறைகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
தபால்துறை மூலம் நமது கடிதங்களை அரசு அலுவலகங்களுக்கு  இரண்டு வழிகளில்  இலவசமாக அனுப்பலாம்,
1.BY POST (தபால் மூலம் அனுப்புவது )
2.BY HAND ( நேரடியாக கையில் தருவது )
BY POST ( தபால் மூலம் அனுப்புவது)
உங்கள் விண்ணப்பத்தை ஒரு கடித உரையில் போட்டு குறைந்தது 5 ரூபாய் அஞ்சல் விலை ஒட்டி உங்கள் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலக போஸ்ட் மாஸ்டர்க்கு அல்லது சூப்பரிண்டண்ட் ஆப் போஸ்ட் ஆபீஸ் அவர்களுக்கு அனுப்பலாம்உங்கள் கடிதத்தை பெற்ற அவர்கள் எந்த துறை முகவரிக்கு உங்கள் கடிதம் அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கு உங்கள் கடிதத்தை அனுப்பி வைத்துவிட்டு ,அதன் விவரங்களை உங்களுக்கும் தெரிவிப்பார்கள்.

BY HAND ( நேரடியாக கையில் தருவது).
நீங்களே நேரடியாக உங்கள் மாவட்ட தலைமை தபால்துறை அலுவலகத்திற்கு சென்று தலைமை போஸ்ட் மாஸ்டர் அவர்களை சந்தித்து உங்கள் விண்ணப்பத்தை மட்டும், (கடித உரைக்குள்  வைக்காமல்) அவரிடம் கொடுத்தால்,   அவர் அதனை பெற்று வட்ட வடிவியல் முத்திரை மற்றும் அவரது முத்திரை குத்தி சூப்பரிண்டண்ட் ஆப் போஸ்ட் ஆபீஸிற்கு அனுப்பி வைப்பார். மேலும், நீங்கள் கொடுக்கின்ற  (அனுப்புகின்ற கடிதத்தின்) நகல் ஒன்றில் அவரது கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை வைத்தும் தருவார்.
அதன் பின்னர், அங்கிருந்து உரிய அரசு அலுவலகங்களுக்கு உங்கள் கடிதம் அனுப்பி வைக்கப்படும்அவ்வாறு அனுப்பி வைத்தவுடன் ,உங்களுக்கு அவைகள் பற்றி விபரங்கள் தபால் துறையில் இருந்து அனுப்பப்படும். மேலும், அவைகள் உரிய அலுவலகத்தில் சேர்ந்தவுடன் அந்த அலுவலகத்தில் இருந்தும் உங்களுக்கு அது சேர்ந்த விபரம் கடிதம் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

பிரிவு 6(1) - தகவல் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பம் .
பிரிவு 19(1) - மேல்முறையீடு செய்ய அனுப்பப்படும் விண்ணப்பம்.
பிரிவு 19(3) - இரண்டாம் மேல்முறையீடு செய்ய அனுப்பப்படும் விண்ணப்பம்.
பிரிவு 2 J (1)- ஆய்வு செய்ய அனுப்பப்படும் விண்ணப்பம்.
இவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களை இலவசமாக அனுப்பி தகவல்களை நீங்கள்  பெறலாம்.
விருதுநகர் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இலவசமாக அனுப்பிய கடிதத்தின் நகலில் சிவகாசி தலைமை அஞ்சலக அதிகாரியின் கையொப்பம் மற்றும் அஞ்சலக முத்திரையை கீழே காணலாம்.

மேலே கண்ட கடிதத்தின் அசலை விருதுநகர் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு இலவசமாக அனுப்பிவிட்டு அந்த தகவலை மனுதாரருக்கு தெரிவித்த சிவகாசி தலைமை அஞ்சலக அதிகாரியின் கடித நகலை கீழே காணலாம்.

*********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Thursday, October 19, 2017

பொது தகவல் வழங்க ஒரே அலுவலகத்தில் 20 அதிகாரிகள்

பொது தகவல் வழங்க ஒரே அலுவலகத்தில் 20 அதிகாரிகள் தமிழகத்தில் முதல் முறை
தமிழகத்தில் முதல் முறையாக, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி..,வில், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்க, 20 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பொது தகவல் வழங்க ஒரே அலுவலகத்தில் 20 அதிகாரிகள்: தமிழகத்தில் முதல் முறை
அங்கீகாரமில்லா மனைப்பிரிவு குறித்து தகவல் கேட்டு, ஆதம்பாக்கத்தை சேர்ந்த, பிரேம் ஆனந்தன் என்பவர், ஜன., 6ல், சி.எம்.டி..,வுக்கு கடிதம் அனுப்பினார். அதற்கு, ஏப்., 27ல் பதில் வந்துள்ளது. பதில் திருப்தி அளிக்காததால் அவர், தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார்.இந்த மனு, தலைமை தகவல் ஆணையர், கே. ராமானுஜம் முன்னிலையில், ஆக., 30ல், விசாரணைக்கு வந்தது.
அறிக்கை அளிக்க வேண்டும்
அப்போது, சி.எம்.டி.., சார்பில், பொது தகவல் அலுவலர், துணை திட்ட அதிகாரி ஆகியோர் ஆஜராகினர். விசாரணையின்போது,ஆஜரான அதிகாரிகள் தெரிவித்த பதில்கள், சி.எம்.டி..,வில் நடக்கும் நிர்வாக குழப்பத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தலைமை தகவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு:
'பொறுப்பை தட்டிக் கழிக்கும் அதிகாரிகளால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதை ஏற்க முடியாது. ஒவ்வொரு பிரிவுக்கும், பொறுப்பான தகவல் அலுவலரை நியமிக்க வேண்டும். தற்போதைய பொது தகவல் அலுவலர், ஒருங்கிணைப்பு அலுவலராக இருப்பார். இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரத்தை, உறுப்பினர்செயலர் அறிக்கையாக அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டார்.
முதன்முறை
இதையடுத்து, சி.எம்.டி..,வில், நிர்வாக பிரிவுபரப்பு திட்ட பிரிவு, வரன்முறை பிரிவு உட்பட, பத்து பிரிவுகளுக்கும், தலா, ஒரு பொது தகவல் அலுவலர் என, 10 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுபோல், 10 பிரிவுகளுக்கும், தலா, ஒரு மேல் முறையீட்டு அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான நிர்வாக உத்தரவை, சி.எம்.டி.., உறுப்பினர் செயலர், விஜயராஜ்குமார் பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில், ஒரு அரசு அலுவலகத்தில், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் அளிக்க, 20 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது, இதுவே முதல்முறை
நன்றி : தினமலர் நாளிதழ் - 20.10.2017 

Thursday, October 12, 2017

ஆவணக் காப்பாளர்


இவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம்!

Friday, August 26, 2016

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005


தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 - என்ன செய்ய வேண்டும்?

ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி?

கேள்வி கேட்பது சுலபம்... பதில் சொல்வதுதான் சிரமம் என்கிறீர்களா? பதில் சொல்லக்கூடிய மாதிரியான கேள்விகளைக் கேளுங்கள். கண்டிப்பாகப் பதில் கிடைக்கும். 

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் (Right To Information Act 2005 - RTI) மூலம் அரசுத் துறை, அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் நமக்கு தேவையான தகவல்களை நாம் பெற முடியும்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒரு தனிநபர் எந்தத் தகவலையும் (விதிவிலக்குகளைத் தவிர) கேட்டுப் பெற முடியும். ‘எனக்கு இந்தக் காரணத்துக்காக அந்தத் தகவல் தேவைப்படுகிறது’ என்று நாம், தேவைக்கான காரணங்களைத் தகவல் கொடுப்போரிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதற்காக. 'என்னுடைய பக்கத்து வீட்டுல இருக்குற ஆசாமி ரொம்ப ஹெல்த்தியா இருக்கான். அவன் என்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்கிறான்னு தெரியலை. கொஞ்சம் கேட்டுச் சொல்றீங்களா... என்று நாம் கேட்க முடியாது; பதிலும் கிடைக்காது. 

இதுபோன்ற ஒரு தனி மனிதனின், தனிப்பட்ட விஷயங்களைக் கேள்வியாகக் கேட்டால் நேரம்தான் வீண்.

ஆர்.டி.ஐ சட்டத்தில் தகவலைக் கேட்டு வாங்க, நாம் அனுப்பும் சம்பந்தப்பட்ட துறை அலுவலரால் தள்ளுபடி செய்ய முடியாதபடி அந்த விண்ணப்பம் இருக்கவேண்டும். மனுவில், நம்முடைய கையெழுத்தும் பெயரும் இருந்தால் போதுமானது. நம்முடைய வேலை, பதவி, பொறுப்பு போன்ற எதையும் குறிப்பிட வேண்டியதில்லை.

மனுவின் தொடக்கத்திலேயே, ‘‘ஏன் அந்தச் சாலையில் ஆறு மாதங்களாகக் கல்லைக் கொட்டி வைத்திருக்கிறீர்கள் என்றோ, எப்படி அந்த இடத்தில் கொட்டினீர்கள் என்றோ அல்லது எப்போது கல்லைக் கொட்டினீர்கள் என்றோ கேள்வியை ஆரம்பித்தால் பதிலை வாங்குவது கடினம். 

கான்ட்ராக்ட் எடுத்தவர், அதை மேல் கான்ட்ராக்ட்டுக்கு பெற்ற நான்கைந்து பேர், கல்லைக் கொட்டிய லோடு லாரி ஓனர், லாரியில் வந்த ஊழியர்கள் (இப்போது அவர்கள் எங்கு கல்லைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்களோ?) என்று பலரைத் தேடிப்பிடித்துப் பதிலை வாங்கித் தரவேண்டும் அல்லவா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள், கேள்வி வடிவத்திலோ, ஆலோசனை வழங்கும் விதத்திலோ இருக்கக் கூடாது. உதாரணத்துக்கு, ‘என்னுடைய தொகுதியில் பல ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அங்கு ஒரு கோழிப்பண்ணை வைத்தால் என்ன’ என்று கோரிக்கை மனுபோல விண்ணப்ப மனு இருத்தல் கூடாது.

தகவலைத் தருகிற பொதுத் தகவல் அலுவலர், இந்த மனுமீது பதிலை தரலாம்... தராமலும் இருக்கலாம். அவர் தகவல் தரவில்லையே என்பதற்காக நாம் அடுத்தடுத்து மனு செய்யலாம்.

ஆனால், நம்முடைய மனுமீது பொதுத் தகவல் அலுவலர் பதில் தரவில்லை என்பதற்காக நாம் அவர்மீது மேல் நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது. 'நான் மனஉளைச்சலுக்கு ஆளாகி நிற்கிறேன். இந்த மனுதாரரை என்னால் சமாளிக்கவே முடியவில்லை' என்று சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர்தான் நம்மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார்.

விண்ணப்பம் செய்வதற்கு ஒரு வெள்ளை பேப்பர் போதும். நீதிமன்ற முத்திரைத்தாள் (கோர்ட் ஸ்டாம்ப்) தேவையில்லை. எழுதுவதைத் தெளிவாக எழுதினால் போதும். கையால் எழுதினால்கூடப் போதும். டைப் செய்து அனுப்புவது நம்முடைய நேரம், விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு மனுவில் எத்தனை தகவல்களைக் கேட்க முடியுமோ, அத்தனை தகவல்களையும் கேட்கலாம். கேள்வி நீளமாக இருந்தால், ஒரே கேள்வியோடு மனுவை முடித்துக்கொள்வது நல்லது.

நாம் தகவலைக் கேட்டு விண்ணப்பிக்கும் பொதுத் தகவல் அலுவலர் யார், நாம் அவருக்குத்தான் மனுவை அனுப்புகிறோமா என்பதைத் தயக்கம் காட்டாமல் பலமுறை உறுதி செய்துகொண்டு, பின் மனுவை அனுப்பலாம். இதனால், ‘அவர் வருவாரா, பதிலைத் தருவாரா’ என்று ஒரு மாத காலம் வரையில் காத்திருப்புப் பாடல் பாடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

பொதுத் தகவல் அதிகாரியின் முகவரி குறித்து நம்மால் அறிய முடியவில்லை என்றால், மாநில அரசாக இருந்தால் நாம் தகவலைக் கேட்கும் மாவட்டத்தில் வருகிற மாவட்ட ஆட்சியருக்கும், மத்திய அரசாக இருந்தால் தலைமைத் தபால் அலுவலருக்கும் மனுவை அனுப்பிவைக்கலாம். ‘அவர் வருவாரா’ என்ற பாடலைப் பாடாமல் மூச்சுக்காற்றை மிச்சப்படுத்தலாம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளும், தலைமைத் தபால் துறை அலுவலக அதிகாரிகளும் நம்முடைய மனுக்களை எங்கு அனுப்பிவைக்க வேண்டுமோ, அங்கே அனுப்பிவைப்பார்கள்.
'திரு. திருவாடானை மெய்யகாத்தான் அவர்கள்' என்று ஆரம்பித்து பின்னர் அந்த அதிகாரியின் பதவி, பொறுப்பைக் குறிப்பிடுவது எப்போதும் சரியாய் வராது. 

நாம் மனுவை அளிக்கும்போது திருவாடானை மெய்யகாத்தான் இடத்துக்கு, வேப்பம்பட்டி வேம்புலிங்கம் வந்திருக்கக் கூடும். அதிகாரிகள் மாறுவர், பதவி, பொறுப்பு, இடம் மாறுவதில்லை. ஆக, எப்போதுமே அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிடாமல், அவர்களின் பதவிப் பொறுப்பையும், குறிப்பிட்ட மாவட்டத்தையும் மட்டும் குறிப்பிடலாம்.

முதன்முறை விண்ணப்பம் அனுப்ப, கட்டணம் 10 ரூபாய். நாம் விண்ணப்பித்துப் பெறும் தகவல் நகலின் பக்கம் ஒவ்வொன்றுக்கும் கட்டணமாக 2 ரூபாய் செலுத்த வேண்டும். குறுந்தகடுகள் வழியில் தகவலைப் பெற கட்டணம் 50 ரூபாய். வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை. ஆனால், இதற்கான சான்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு டிமாண்ட் டிராஃப்ட், பேங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை, கோர்ட் ஸ்டாம்ப்கள், வரையறுக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம்.
மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலகத் துறை, ‘Accounts officer’ என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கேட்புக் காசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம்.

இந்தியக் குடிமகன்கள், அயல்நாட்டு வாழ் இந்திய வம்சாவளியினர், www.epostoffice.gov.in என்ற இணைப்புக்குள் போய், தங்களது பெயர்களை நிரந்தரமாகப் பதிவு செய்துகொள்ளலாம். இதன் பின்னர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி இணையத் தபால் ஆணையை (இ-போஸ்டல் ஆர்டர்) பெறலாம். பிரத்யேகமான எண்கள் இதற்காக வழங்கப்படும். இந்த எண்களைத் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும்.

30 நாட்களுக்கு மேலாகிவிட்டால் தகவலை இலவசமாகத் தரவேண்டும். நேரடியாக நம்முடைய விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டபின், அதற்கான நகல், கட்டணம் செலுத்திய சான்றான ரசீது, அதில் கையெழுத்து, தேதி, அலுவலக முத்திரை போன்றவைகள் உள்ளனவா என உறுதி செய்துகொள்ளுதல் அவசியம்.

பதிவு அஞ்சலுடனான (ரிஜிஸ்டர் போஸ்ட்) பதில் அட்டை (AD)-யில் உள்ள தபால் துறை முத்திரை, நமக்கான ஓர் அத்தாட்சி ஆகும். பதிவு அஞ்சலுடனான அட்டையில் கையெழுத்து, தேதி, முத்திரை சரியாக இல்லையென்றால், தபால் அலுவலகத்துக்குச் சென்று இவற்றையெல்லாம் சரி செய்துகொள்ள வேண்டும்.

கட்டணம் செலுத்திய காசோலை, கேட்புக் காசோலை, அஞ்சலகத் தபால் ஆணை ஆகியவை பற்றிய குறிப்புகளை விண்ணப்ப மனுவின் இறுதியில் தவறாமல் குறிப்பிடுவது மிகவும் அவசியம்.
www.indiapost.gov.in/speednew/trackaspx என்ற இணையதளம் மூலம், நம்முடைய மனு உரிய அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து, அதற்கான அத்தாட்சி சீட்டை பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். தனியார் விரைவு அஞ்சல் சேவை மூலம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது. நாம் அனுப்பிய இடத்துக்கு, அந்த மனுக்கள் சென்று சேர்ந்ததற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.

நாம் அனுப்பும் கேள்விக்குப் பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து 30 நாட்களுக்குள் பதில் கிடைக்கப் பெறவில்லை என்றாலோ, (இணைத் தகவல் உரிமை அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தால் 35 நாட்கள்) அல்லது பதில் திருப்தி அளிக்கவில்லை என்றாலோ, முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அந்தத் துறையின், முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

முதல் மேல்முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தனது பதிலை அளிப்பார். தாமதத்துக்கான காரணங்களை எழுத்து மூலம் அவர் நம்மிடம் தெரிவித்துவிட்டு, அவர் மேலும் 15 நாட்கள் (மொத்தம் 45 நாட்கள்) எடுத்துக்கொள்ளலாம்.

முதல் மேல்முறையீட்டு அலுவலர் வாய்மொழி ஆணை அல்லது எழுத்துப்பூர்வ ஆணை அளிக்க அதிகாரம் பெற்றவர் ஆவார்.

இரண்டாம் மேல்முறையீட்டு மனுவைப் பூர்த்திசெய்து, இதுவரை கிடைக்கப்பெற்ற பதில்களின் நகல்களையும், கட்டணம் செலுத்திய அனைத்து ரசீதுகளையும் இணைத்து அனுப்பலாம்.

இரண்டாம் முறை மேல்முறையீடு செய்ய 
மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு இவரிடம் விண்ணப்பிக்கலாம். அவர், 
மாநில தலைமை தகவல் ஆணையர், 
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம், 
2, தியாகராயர் சாலை, 
ஆலையம்மன் கோயில் அருகில், 
தேனாம்பேட்டை, 
சென்னை-600018
(அல்லது) 

மாநில தலைமை தகவல் ஆணையர், 
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம், 
தபால் பெட்டி எண்: 6405,
தேனாம்பேட்டை, 
சென்னை-600018 

என்ற முகவரிக்கு உரியவர். 

அவருடைய தொலைபேசி எண்: 044-24347590, 
பேக்ஸ்: 044-24357580, 
Email: sicnic.in Web: www.tnsic.gov.in.

மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, 

“CENTRAL INFORMATION COMMISSION,
 II floor, August Kranti Bhavan,
 Bhikaji Kama Place,
 NEW DELHI – 110 066 

என்ற இந்த முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் என்றால்,
 www.rtionline.gov.in/ என்ற தளத்தில்
 மத்திய அரசின்கீழ் வரும் துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

இதே ஆன்லைன் தளத்திலேயே முதல் மேல்முறையீடும் செய்யலாம்.

www.rti.india.gov.in என்ற தளத்தில் இரண்டாம் மேல் முறையீடு செய்யலாம். இதற்கான 10 ரூபாய் கட்டணத்தை கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/எஸ்.பி.ஐ. வங்கியின் மூலம் செலுத்தலாம். மேற்கண்ட தளங்களிலேயே கூடுதல் விவரங்களையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

 ந.பா.சேதுராமன்
நன்றி : விகடன் செய்திகள் - 25.08.2016