disalbe Right click

Monday, December 4, 2017

ஆசிரியர் பணிக்கு தகுதிப்படிப்பு அவசியம்!

கோவை: ”ஆசிரியப்பணியை தொடர விரும்புவோர், மத்திய அரசின், தகுதிப்படிப்பில், வெற்றி பெறுவது அவசியம். இதில் சேர, எவ்வித திணிப்பும் அளிக்கப்படவில்லை,” என, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப்யாதவ் தெரிவித்தார்.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில், ஆசிரியர்களுக்கான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில், தொடக்க வகுப்புகளுக்கு பாடம் எடுப்பவர்கள், ஆசிரியர் பட்டய படிப்புடன், ’டெட்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். உயர்நிலை வகுப்பில் பாடம் எடுப்பவர்கள், பட்டப்படிப்புடன், பி.எட்., முடித்திருப்பதோடு, ’டெட்தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில், ஆசிரியராக பணிபுரிவோர், பள்ளிக்கல்வி இறுதித்தேர்வில், 50 சதவீத மதிப்பெண் இல்லாமலும், ’டெட்தேர்வில் தேர்ச்சி பெறாமலும் இருப்பின், மத்திய அரசின், என்...எஸ்., எனப்படும் தேசிய திறந்தவெளி பள்ளியில், இரண்டாண்டு டிப்ளமோ, ஆசிரியர் பட்டய படிப்பில் சேர, வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்படிப்பை, வரும் மார்ச் 2019 க்குள் முடிக்க, கால அவகாசம் அளிக்கப்பட்டது. தமிழகம் முழுக்க, 26 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுசார்ந்து, கோவையில் நடந்த, தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற, பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ்விடம், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் முறையிட்டனர்.
இதற்கு விளக்கம் அளித்த, பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மத்திய அரசு, ஆசிரியர்களுக்கான தகுதியை மேம்படுத்தி கொள்ள, 2010ல் அறிவுறுத்தியது. ஐந்து ஆண்டு கால அவகாசம் அளித்தும், பலரும் தகுதியை மேம்படுத்தி கொள்ளாததால், தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது, கடைசி பஸ் ஏறுவது போன்றது. வாய்ப்பை தவறவிட்டால், வீட்டுக்கு திரும்புவது உறுதி என தெரிவித்தார். இது, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில், கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் கூறுகையில்,”மத்திய அரசின், என்...எஸ்., தகுதிப்படிப்புக்கு, மாவட்ட அளவில் மையங்கள் அமைத்து, பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடக்க வகுப்புகளுக்கு பாடம் நடத்த, ஆசிரியர் பட்டய கல்வி முடித்திருப்பது அவசியம்.
இப்படிப்பு முடிக்காமல், அதிக கல்வித் தகுதி இருந்தாலும், வகுப்பு நடத்தக் கூடாது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, தகுதிப்படிப்பில் சேர, எவ்வித திணிப்பும் அளிக்கப்படவில்லை. ஆசிரியப்பணியை தொடர விரும்புவோர், உரிய கல்வித்தகுதி பெறுவது அவசியம்,” என்றார்.
நன்றி : தினமலர் (கல்விமலர்) நாளிதழ் - 05.12.201

Sunday, December 3, 2017

தமிழகத்திற்கு மத்திய அரசு நெருக்கடி

வீட்டு வசதி திட்டங்களை கிடப்பில் போட முடியாது 
ஏழை மக்களுக்காக மேற்கொள்ளப்படும் வீட்டு வசதி திட்டங்களை, மத்திய அரசு நேரடியாக கண்காணிக்க துவங்கி உள்ளதால், தமிழக அரசின் வீட்டுவசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய திட்டங்களை தாமதப்படுத்தும் அதிகாரிகளுக்கு, நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஏழை மக்களுக்கான வீட்டுவசதி திட்டங்கள், குடிசை மாற்று வாரியம் வாயிலாகவும், குறைந்த வருவாய் பிரிவினருக்கான திட்டங்கள், வீட்டுவசதி வாரியங்கள் வாயிலாகவும் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், 2015ல், மத்திய அரசு, 'அனைவருக்கும் வீடு' திட்டத்தை அறிவித்தது. இதில், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு இலவச வீடு; நிலம் வைத்துள்ளோருக்கு வீடு கட்ட மானிய கடன்; குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு வீட்டுக்கடனில் வட்டி மானியம் ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் குடிசை மாற்று வாரியம் வாயிலாக, மொத்தம் 8.29 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு, விண்ணப்பங்கள் பெறுவது, பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட பணிகளை, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் உயர் அதிகார குழு, நேரடியாக கண்காணித்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, திட்டப்பணிகளையும் நேரடியாக கண்காணிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், 2017 -- 18ல், 7,000 கோடி ரூபாயில், இரண்டு லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கான பயனாளிகள் விபரங்களை, மத்திய அரசுக்கு அளிக்க உள்ளோம். இதன் அடுத்தகட்டமாக, வீடுகள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், தொழில்நுட்பம் போன்ற விபரங்களையும், முன்கூட்டியே, மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என, உத்தரவு வந்துள்ளது.
திட்டத்தில் கட்டப்படும் வீடு எண்ணிக்கை, அவற்றின் பரப்பளவு, கட்டுமான தொழில்நுட்பம், கட்டுமான பணிகள் துவங்கிய நாள், முடிக்கப்படும் நாள், தேர்வு செய்யப்பட்ட நிலம் மற்றும் திட்டப்பணிகளின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்களுன் கூடிய விபரங்களை, மத்திய அரசுக்கு பட்டியலாக அனுப்ப வேண்டும். இந்த விபரங்களை, மாநில அரசின் இணையதளத்தில் வெளியிட்டு, அதன் இணைப்பு முகவரியையும் அனுப்ப வேண்டும்.
மத்திய அரசின் இந்த உத்தரவால், திட்டப்பணிகளில் எவ்வித மாற்றத்தையும் அதிகாரிகளால் செய்ய முடியாது. மேலும், திட்டங்களின் உண்மை நிலவரம் வெளிப்படையாக மக்களுக்கு தெரியவரும். திட்ட பொறுப்பு அதிகாரிகள், ஒப்பந்ததாரருடன் சேர்ந்து, மோசடி செய்ய முடியாது. இத்தகைய கண்காணிப்பு திட்டப்பணிகளை விரைவுபடுத்துவதுடன், மோசடி அதிகாரிகளுக்கு கடிவாளம் போடுவதாக உள்ளது. இவ்வாறு கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 04.12.201