disalbe Right click

Thursday, February 8, 2018

இனி பிறப்புச் சான்றிதழ் பெற....

குழந்தை நல எண் அவசியம்
நகரங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், தாய் சேய் நலத் திட்டத்தில் செவிலியர்களின் மூலம் கர்ப்பிணிப் பெண்கள் பற்றிய விபரம் பெறப்பட்டு பிக்மி என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதன்பிறகு அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு 12 இலக்கம் கொண்ட பேறுசார் அடையாள எண் வழங்கப்படுகிறது.  இந்த எண்ணை RCH (Rural Child Health) வழங்குகிறது. 
அரசு மருத்துவமனைக்குச் செல்லாதீர்கள்!
இதனைப் பெற கர்ப்பிணிப் பெண்கள் தாங்கள் வசிக்கும் பகுதியின் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மட்டுமே அணுக வேண்டும். அரசு மருத்துவமனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
இந்த எண்ணின் அவசியம் என்ன?
குழந்தையினுடைய பிறப்புச் சான்றிதழ், அரசு வழங்குகின்ற மகப்பேறு நிதியுதவி பெறுவதற்கு இந்த எண் மிகவும் அவசியமாகும். தனியார் மருத்துவமனையில் மகப்பேறு சேவை பெறுகின்ற கர்ப்பிணி பெண்களும் இந்த 12 இலக்க பேறுசார் குழந்தை எண்ணைப் அவசியம் பெற வேண்டும். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் அந்தந்தப் பகுதியில் பணிபுரிகின்ற செவிலியர்களிடம் தங்களைப் பற்றிய விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.  
தொலைபேசி மூலமாகவும் பதியலாம்.
ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பதிய முடியாத (நாடு முழுவதிலும் உள்ள)  கர்ப்பிணிப் பெண்கள் 102 என்ற எண் மூலமாகவும் பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட பின் உங்களது செல்போனுக்கு அவர்கள் 12  இலக்க பேறுசார் குழந்தை எண்ணை அனுப்புவார்கள். .
விருதுநகர் மாவட்டம்
சிவகாசி சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, ராஜபாளயம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஆகிய வட்டாரங்களில் வசித்து வருகின்ற கர்ப்பிணிப் பெண்கள் மேற்கண்ட 12 இலக்க பேறுசார் குழந்தை எண்ணை இதுவரை பெறாமல் இருந்தால் உரிய விபரங்களைப் பெற 04562-255623 என்ற தொலைபேசி மூலமாகவும்87789 64401 என்ற செல்போன் எண் மூலமாகவும் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம்.
************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 08.02.2018 

Wednesday, February 7, 2018

ஆதார் எண் பாதுகாப்பு

உங்கள் ஆதார் எண் பாதுகாப்பாக இருக்கிறதா! என்று சோதித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
நம்முடைய ஆதார் எண்ணை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? என்பது இன்றைக்கு எல்லோர்க்கும் எழுகின்ற சந்தேகமாக ஆகிவிட்டது. ஏனென்றால் நமது வங்கி எண், எரிவாயு இணைப்பு எண் என்று நம்மைப் பற்றிய முக்கியமான தகவல்கள் அனைத்தையும் கட்டாயமாக்கி  ஆதாருடன்  மத்திய அரசு  இணைத்துவிட்டது.  அதனால், நமது ஆதார் எண்ணை வைத்து நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் மற்றவர்கள் பெறுகிறார்களோ? என்ற ஒருவித சந்தேக மனப்பான்மையுடன் நாம் இருந்து வருகிறோம். இதனை தீர்க்க  UIDAI இணையதளத்தில்  https://resident.uidai.gov.in/notification-aadhaar என்று புதிதாக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளதுஇந்த லிங்கிற்குச் சென்று நாம் நம்முடைய ஆதார் எண்ணைப் பதிவு செய்து அங்கு கொடுக்கப்பட்டுள்ள ரகசியக் குறியீட்டு எண்ணைப் பதிவு செய்து Generate One Time Password  க்ளிக் செய்ய வேண்டும்.
ஏற்கனவே, ஆதார் அட்டை வாங்கிய போது அதில் பதிவு செய்த உங்களின் செல்போன் எண்ணுக்கு ஒரு One Time Password  வரும். மேலும், அப்போது  திரையில் உள்ள விண்ணப்பத்தில், உங்கள் ஆதார் எண் பற்றிய அனைத்துத் தகவல்களும் வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட காலக்கட்டத்துக்கான தகவல்கள் மட்டும் வேண்டுமா? என்பதை பதிவு செய்து அந்த One Time Password ஐ பதிவு செய்தால் நீங்கள் கேட்ட தகவல்கள் கிடைக்கும்.
அதாவது, உங்கள் ஆதார் எண்ணை நீங்கள் எங்கெல்லாம் பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற அனைத்துத் தகவல்களும் ஒரு பட்டியலாகக் கிடைக்கும்.
உங்கள் ஆதார் எண்ணை வேறு யாரேனும் தவறாகப் பயன்படுத்தியிருந்தால் இதன் மூலம்  உங்களால் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.  அப்படி பயன்படுத்தி இருந்தால், உடனடியாக 1945 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகாரும் அளிக்கலாம்.
***************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.02.2018 

Tuesday, February 6, 2018

பொது நல வழக்குத் தொடர்ந்தவருக்கு அபராதம்!

பொது நல வழக்குத் தொடர்ந்தவருக்கு அபராதம்!
குமரி மாவட்டம் கட்டையன்விளையைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு  ஒன்றைத் தொடுத்துள்ளார். 
அதற்காக அவர் தாக்கல் செய்த மனுவில், 'நாகர்கோவில் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தெரு விளக்குகளும் சரிவர எரிவதில்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணமான நாகர்கோவில் நகராட்சி கமிஷனரை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்' என்று அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதுநாகர்கோவில் நகராட்சியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நாகர்கோவிலில் புதிய நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்ற பின்பு வருமானம் அதிகரித்துள்ளது. எனவே, மனுதாரர் இந்த வழக்கை உள்நோக்கத்துடன் தாக்கல்செய்துள்ளார் என்று வாதாடியுள்ளார் 
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்
'கோரிக்கையை பொதுநல மனுவாக தாக்கல் செய்ய முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
நாகர்கோவில் நகராட்சி கமிஷனர் சிறப்பாகப் பணி புரிந்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உள்நோக்கத்துடன் மனுதாரர் மனுதாக்கல் செய்திருப்பதால், அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தத் தொகையை மதுரை உயர் நீதிமன்ற சட்ட உதவி மையத்தில் வருகிற 19.02.2018-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்' என்று அறிவித்துள்ளனர்.
********************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.02.2018 

Sunday, February 4, 2018

விஜிலென்ஸ் விழிப்புணர்வு முகாம்

பயணியர்களின் அன்பான கவனத்திற்கு.....
தென்னக ரயில்வேயில், விஜிலென்ஸ் பிரிவின் சார்பாக பயணியர்களுக்கு விழிப்புணர்வு முகாம், வருகின்ற 10.02.2018ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
ரயில்வேயில் நடக்கின்ற ஊழல்கள், முறைகேடுகள், உணவு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள், இரயில்வே ஊழியர்களின் அடாவடி மற்றும் ரயில் பயணத்தில் ஏற்படும் பிரச்னைகள் உட்பட, அனைத்து முறைகேடுகளையும், விஜிலென்ஸ்
உதவி மையத்திற்கு, 155210 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இணையதளம் மூலமாக, vigcomplaints@sr.railnet.gov.in என்ற முகவரியிலும் புகாரை பதிவு செய்யலாம். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உதவி மையத்தின் போன் எண் மற்றும் இணையதள முகவரி குறித்து, பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தெற்கு ரயில்வே முழுவதிலும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில், 22.01.2018 முதல் 28.01.2018 வரை, விஜிலென்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, வரும், 10.02.2018 ம் தேதி வரை, முக்கிய ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முழுவதும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 04.02.2018