disalbe Right click

Friday, February 9, 2018

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து

கடந்த 2017ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 16ம் தேதி நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு பாலிடெக்னிக்குகளில் 1058 விரிவுரையாளர் பணிகளுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு, 16.09.2017ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. 2017- நவம்பர் 7ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
எழுந்த குற்றச்சாட்டு 
இந்த முடிவுகளில் விடைத்தாளில் இருப்பதைவிட சிலருக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பேரில் ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்தினர். தேர்வு முடிவுகளை வெளியிட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் உட்பட 8 பேரை அவர்கள் கைதும் செய்தனர்.
196 தேர்வர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் வழங்கி, முறைகேடாக மதிப்பெண் பட்டியல் தயார் செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற விரிவுரையாளர் பணிக்கான போட்டி எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த தேர்வு எப்போது?
மறு தேர்விற்கான விளம்பரம் 2018 மே முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு நடைபெறும் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும்
ஏற்கெனவே நடைபெற்ற தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அவர்கள் தேர்வுக்கான தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
புதிதாக அந்தத் தேர்வை எழுத நினைக்கும் விண்ணப்பதாரர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 09.02.201

Thursday, February 8, 2018

கால தாமதமாக வழக்கு தொடுக்கலாமா?

இன்றைக்கு பெரும்பாலானவர்களுக்கு இருக்கின்ற சந்தேகம் என்ன? குற்றம் நடைபெற்று பல ஆண்டு கழித்து மிகவும் தாமதமாக புகார் அளித்தால் வழக்கு பதிய முடியுமா? என்பதுதான். இதற்குப் பதில், சில நேரங்களில் முடியும். சில நேரங்களில் முடியாது. அது எப்படி?  இதைப் பற்றி கீழே காண்போம். 
Indian Limitation Act  கால வரையறைச் சட்டம் என்ன சொல்கிறது?
ஒருவர் குற்றம் நடந்ததாகப் புகார் தெரிவிக்கவோ அல்லது வழக்கு பதிவு செய்யவோ காலவரையறை இவ்வளவு நாட்கள் என்று எதுவும் கால வரையறைச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
சம்பவம் நடைபெற்று பல நாட்களோ அல்லது பல வருடங்களோ ஆனபிறகும் ஒருவர் தமக்குக் குற்றமிழைத்தவர் மீது புகார் கூறவில்லை என்றால், அவர் அந்த குற்றச்செயலை மன்னித்து விட்டதாகவே சட்டம் கருதுகிறது.
காலதாமதம் ஆனதற்குக் காரணம் தெரிவிப்பது முக்கியம்!
ஒருவர் குற்றம் சம்பந்தமான புகார் தெரிவிக்க கால தாமதமானால், நடைபெற்ற செயலானது, சட்டப்படி குற்றம் என்பது இவ்வளவு நாட்களாக அவருக்குத் தெரியாது என்பதையோ அல்லது என்ன காரணத்தினால் தாமதமானது என்பதையோ குற்றம் சாட்டுபவர் தனது புகாரில் தெளிவுபடுத்துவது நல்லது. அவ்வாறு தெளிவுபடுத்தாவிட்டால், அந்த வழக்கு கோப்புக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 468
நீதிமன்றமானது ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான காலவரம்பு பற்றி  குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 468-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.   
அபராதம் மட்டும் விதிக்கப்படக்கூடிய குற்றங்கள்,  ஆறு மாதம், ஓராண்டுக்கும் குறைவான தண்டனைக் காலம் உடைய குற்றங்கள் மற்றும்  ஓர் ஆண்டு மற்றும் ஓராண்டில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் தண்டனைக் காலம் உடைய குற்றங்கள் ஆகிய வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மூன்று ஆண்டுகள் வரை  காலவரையறை செய்யப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 469
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 469 ல் குற்றம் நடைபெற்ற நாள் அல்லது குற்றம் நடந்தது என்று அந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது காவல்துறை அதிகாரி அவர்களுக்கோ   எந்த நாளில் தெரிந்ததோ அந்த நாள் முதல் அந்த நாள்முதல் காலவரம்பு கணக்கிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலைகளில் அந்தக் குற்றம் செய்தது யார் என்று ஒரு வேளை     பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாவிட்டால் அது யார் என்று பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது காவல்துறை அதிகாரிக்கோ தெரிந்த நாள் முதல் அந்த காலவரம்பு கணக்கிடப்படும் என்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 469 கூறுகிறது.
தண்டனைக் காலம் மூன்றாண்டாக இருந்தால் .................?
மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனைக் காலம் உள்ள குற்றங்களுக்கு, தாமதமாக புகார் கொடுத்தாலும், பெரும்பாலும் அந்த புகாரின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்படுகிறது, இருந்த போதிலும் அந்த இடைப்பட்ட காலத்தில் புகார் பதிவு செய்வதற்கு எதிர்தரப்பினரிடம் இருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல் புகார்தாரருக்கு இருந்திருக்க வேண்டும் என்பதை புகார்தாரர் நிரூபிக்க வேண்டும்.
பொதுவாக மிகவும் தாமதமாக அளிக்கப்படும் புகார்கள் மீது நீதிமன்றத்திலோ அல்லது காவல்துறையிலோ உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. என்ன காரணம்  என்றால் அந்தப் புகார் வேண்டுமென்றே கொடுக்கப்பட்டிருக்கலாம்.  தீய நோக்கங்கள் இருக்கலாம்.. ஆகையால், இத்தகைய நேரங்களில், காலம் கடந்து குற்றம் சாட்டப்பட்டவர்க்கு, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21ல் வழங்கப்பட்டுள்ள தனிமனித வாழ்க்கை மற்றும் சுதந்திரத்துக்கான உரிமைகளும் கணக்கில் எடுத்துக் கொண்டு முடிவு தீர்மானிக்கப்படும்.
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 09.02.2018.  

இனி பிறப்புச் சான்றிதழ் பெற....

குழந்தை நல எண் அவசியம்
நகரங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், தாய் சேய் நலத் திட்டத்தில் செவிலியர்களின் மூலம் கர்ப்பிணிப் பெண்கள் பற்றிய விபரம் பெறப்பட்டு பிக்மி என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதன்பிறகு அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு 12 இலக்கம் கொண்ட பேறுசார் அடையாள எண் வழங்கப்படுகிறது.  இந்த எண்ணை RCH (Rural Child Health) வழங்குகிறது. 
அரசு மருத்துவமனைக்குச் செல்லாதீர்கள்!
இதனைப் பெற கர்ப்பிணிப் பெண்கள் தாங்கள் வசிக்கும் பகுதியின் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மட்டுமே அணுக வேண்டும். அரசு மருத்துவமனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
இந்த எண்ணின் அவசியம் என்ன?
குழந்தையினுடைய பிறப்புச் சான்றிதழ், அரசு வழங்குகின்ற மகப்பேறு நிதியுதவி பெறுவதற்கு இந்த எண் மிகவும் அவசியமாகும். தனியார் மருத்துவமனையில் மகப்பேறு சேவை பெறுகின்ற கர்ப்பிணி பெண்களும் இந்த 12 இலக்க பேறுசார் குழந்தை எண்ணைப் அவசியம் பெற வேண்டும். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் அந்தந்தப் பகுதியில் பணிபுரிகின்ற செவிலியர்களிடம் தங்களைப் பற்றிய விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.  
தொலைபேசி மூலமாகவும் பதியலாம்.
ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பதிய முடியாத (நாடு முழுவதிலும் உள்ள)  கர்ப்பிணிப் பெண்கள் 102 என்ற எண் மூலமாகவும் பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட பின் உங்களது செல்போனுக்கு அவர்கள் 12  இலக்க பேறுசார் குழந்தை எண்ணை அனுப்புவார்கள். .
விருதுநகர் மாவட்டம்
சிவகாசி சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, ராஜபாளயம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஆகிய வட்டாரங்களில் வசித்து வருகின்ற கர்ப்பிணிப் பெண்கள் மேற்கண்ட 12 இலக்க பேறுசார் குழந்தை எண்ணை இதுவரை பெறாமல் இருந்தால் உரிய விபரங்களைப் பெற 04562-255623 என்ற தொலைபேசி மூலமாகவும்87789 64401 என்ற செல்போன் எண் மூலமாகவும் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம்.
************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 08.02.2018