disalbe Right click

Tuesday, May 22, 2018

மாப் ஆப்ரேஷன்

காவல்துறை துப்பாக்கிச் சூடு - விதிமுறைகள்
பொது இடங்களில் நடத்தும் போராட்டக்காரர்களை கலைப்பதற்கு, காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான தெளிவான நிர்வாக நடைமுறை விதிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்குமாப் ஆபரேஷன்என்று பெயர்
விதிமுறைகள் என்ன?
  • சட்டவிரோதமாகக் கூடியிருக்கும் கூட்டத்துக்கு முன்னதாக 500 மீட்டர் தூரத்தில், முதலில் காவல் படையினர் அணிவகுத்து நிற்க வேண்டும்
  • முன்வரிசையில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை கையாளும் அணியினர் நிற்க வேண்டும் 
  • இரண்டாவதாக லத்தி சார்ஜ்அணியினர் நிற்க வேண்டும்.
  • மூன்றாவதாக  குறைவான எண்ணிக்கையிலான துப்பாக்கி ஏந்திய அணியினர் நிற்க வேண்டும்.
  • இறுதி வரிசையில் முதலுதவி அளிக்கும் அணியினர் நிற்க வேண்டும் 
  • முன்னறிவிப்பாக போராட்டக்காரர்களுக்கு மைக்கில் எச்சரித்து விடுத்து, எச்சரிக்கை கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்
  • அதன்பிறகும் போராட்டக்காரர்கள் கலைந்து போகாவிட்டால் கண்ணீர்ப்புகை குண்டுகளைத் தரையில் படும்படியாக 45 டிகிரி கோணத்தில் வைத்துச் சுட வேண்டும்.
  • தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அவர்கள் மீது ரப்பர் குண்டுகளையும் வீசலாம்
  • அதன் பின்பு லத்தி சார்ஜ் செய்ய வேண்டும்.
  • அதன்பிறகும் கலவரம் அடங்கவில்லை என்றால் துப்பாக்கி அணியினர் இரு வரிசையாக சிறிது முன்னேறி, துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்ப வேண்டும்.
  • காவலர்களில் ஒருவர் 5 அடி முன்னால் சென்று மீண்டும் எச்சரிக்கை விடுக்க வேண்டும்..  
  • இதன் பிற்கு காவல் அதிகாரி குறிப்பிட்ட ஒரு காவலரிடம் கூட்டத்தில் இருக்கும் குறிப்பிட்ட முக்கியமான ஒரு நபரை மட்டும் காலில் சுடும்படி உத்தரவிடுவார். (அந்த நபர் சுடப்பட்டதும் போராட்டக்காரர்கள் கலைந்து ஓடுவிடுவார்கள் என்பது காவல் துறையினரின் கணிப்பு) 
  • அதன் பின்பு உடனடியாக முதலுதவி அணியினர் முன்னேறிச் சென்று குண்டடிப் பட்ட நபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த நடைமுறைகள் ஏனோ இப்போது பின்பற்றப்படுவது இல்லை.
********************************************************** செல்வம் பழனிச்சாமி - 23.05.2018 

Friday, May 18, 2018

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது புகார் அளிக்க

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது புகார் அளிக்க....
மேயர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள் மீதான முறைகேடு புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த 2014-ல், ‘உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்’ ஏற்படுத்தப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் 2014ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13ஆம் நாள் அன்று நடைமுறைக்கு வந்தது.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் முதல் முறைமன்ற நடுவராக முனைவர் சோ. அய்யர், ...()., அவர்கள் 22.04.2015 அன்று பிற்பகலில் பொறுப்பேற்றார். இரண்டாவது முறையாகவும் அவரே மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் தலைமையில் கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் பதவியேற்றுக் கொண்டார். 
இச்சட்டத்தின் கீழ், உள்ளாட்சி அமைப்புகளில் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொதுப்பணியாளர்களால் தொடர்புடைய சட்டத்தின் வகை முறைக்கிணங்க நிர்வாக செயல்பணிகளை செய்துமுடிக்கையில் செய்யப்படும் ஊழல் அல்லது சீர்கேடான நிர்வாகம் அல்லது முறைகேடுகள் எதன் பேரிலுமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணியாளர்கள் என்றால் யார்?
பொதுப் பணியாளர்என்றால் தலைமையர் அல்லது துணைத் தலைமையர், மேயர் அல்லது துணை மேயர் உள்ளடங்களாக உள்ளாட்சி அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் கீழ் பணி செய்து கொண்டிருக்கும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கும்.
அதிகாரங்கள்
(1) முறைமன்ற நடுவர், விசாரணை எதனின் நோக்கத்திற்காக, 1908-ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறை தொகுப்புச் சட்டத்தின்படி உரிமை வழக்கு ஒன்றினை விசாரணை செய்யும் உரிமையியல் நீதிமன்றமொன்றின் மற்றும், குறிப்பாக, பின்வரும் பொருட்பாடுகள் தொடர்பாக, அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருப்பார், அதாவது
(a) முறையீட்டாளரை அல்லது சாட்சி அளிப்பவர்களை வருகை தருமாறு அழைப்பதற்கு மற்றும் கட்டாயப்படுத்துவதற்கு மற்றும் அவரை உறுதிமொழியின் பேரில் விசாரிப்பதற்கு
(b) தொடர்புடைய மற்றும் தேவைப்படும் ஆவணம் எதனையும் கண்டுபிடிப்பதற்கு மற்றும் முன்னிலைப் படுத்துமாறு கேட்பதற்கு
(c) உறுதி ஆவணங்களின் பேரில் சான்றினைப் பெறுவதற்கு
(d) பொதுப் பதிவுரு எதனையும், அல்லது அதனின் நகலை நீதிமன்றம் அல்லது அலுவலகம் எதிலிருந்தும் கேட்டுப் பெறுவதற்கு
(e) சாட்சி அளிப்பவரை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக பணிப்பாணையை வழங்குதல் மற்றும்
(f) வகுத்துரைக்கப்படலாகிறவாறான பொருட்பாடு எதுவும்
(2) முறைமன்ற நடுவர் முறையீடு ஒன்றில் அடங்கியுள்ள குற்றச்சாட்டில் பொருள் எதுவுமில்லை என்று கண்டுணர்கிறவிடத்து அவர் ஆணையொன்றினால், செலவினமாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொகையொன்றினை எதிர் தரப்பினருக்கு வழங்குமாறு முறையீட்டாளரைப் பணிக்கலாம்.
(3) எழுத்து வடிவிலான முறையீடு ஒன்றில் அடங்கியுள்ள குற்றச்சாட்டில் உள்ளாட்சி அமைப்பு நிதியத்தின் இழப்பு பற்றியதாக இருக்கிறவிடத்து, முறைமன்ற நடுவர், விசாரணையின் போது, சான்றினை சேகரித்து இழப்பினை நிச்சயிக்கலாம் மற்றும் அந்த இழப்பை ஏற்படுத்தியதற்கு பொறுப்பாகவுள்ள நபரிடமிருந்து அந்தத் தொகையினைப் பெறுவதற்கு அவருடைய ஆணையில் பணிக்கலாம்.
(4) (2)-ஆம் உட்பிரிவின்படி அல்லது (3)-ஆம் உட்பிரிவின்படி முறைமன்ற நடுவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி செலுத்தத்தக்க தொகை, அவரால் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் செலுத்தப்படாமல் இருக்கிறதென்றால், அந்தத்தொகை, 1864-ஆம் ஆண்டு தமிழ்நாடு வருவாய் வசூலித்தல் சட்டத்தின்படி நிலவருவாய் பாக்கி இருந்தாற்போன்று வசூலிக்கப்படுதல் வேண்டும்.
அலுவலக முகவரி:
தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்,
எண்.100, அண்ணாசாலை,
கிண்டி, சென்னை-600 032.
மின்னஞ்சல்: ombudsmanlocal@tn.gov.in
இணையதளம்: www.tnlbo.tn.gov.in  
தொலை பேசி : 044-22201337
நிகரி 044-22201337
முனைவர் சோ. அய்யர், ...(),
முறைமன்ற நடுவர் 044-22201337
திரு.சீ. சோமுபாண்டியன், எம்.., பி.எல்.,
செயலாளர் 044-22201301
திருமதி . தாமரைச் செல்வி, எம்.எல்.,
சட்ட ஆலோசகர் (துணைச் செயலாளர் - சட்டம்) 044-22201300
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள்:
திரு.மு. சந்திரசேகரன்,
பொதுத் தகவல் அலுவலர்
திரு.மு. பழனிவேல்,
மேல்முறையீட்டு அலுவலர் 044-22201337
புகார் மனு மாதிரி
*********************
https://fb.watch/pkPQzvDAh1/?mibextid=Nif5oz
புகார் மனுவில் 10 ரூபாய்க்கான கோர்ட்ஃபீ ஸ்டாம்ப் கண்டிப்பாக ஒட்டவேண்டும். 
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் - சட்டம் தமிழில்
http://www.tnlbo.tn.gov.in/assets/acts.pdf

நகராட்சி ஆணையர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் மனுதாரருக்கு அனுப்பிய நோட்டீஸ் நகல். 

********************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 18.05.2018 

Thursday, May 17, 2018

வழக்கறிஞர் அல்லாதவர் நீதிமன்றத்தில் ஆஜராகலாமா?

வழக்கறிஞர் அல்லாதவர் நீதிமன்றத்தில் ஆஜராகலாமா?
நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் அல்லாதவர்கள் ஆஜராகலாமா? என்பது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
  • தஞ்சாவூரைச் சேர்ந்தவர் விக்டர் வில்லியம். இவர் அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
  • இவர் 5 பேர்களுடன் இணைந்து ரூ. 20.84 லட்சம் கையாடல் செய்ததாக, தஞ்சாவூர் போலீஸார் கைது செய்தனர்.
  • இந்த வழக்கில் இவர் தஞ்சாவூர் 2-வது நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் பெற்றார்.
  • இந்த வழக்கை முதல் நிலை நடுவர்தான் விசாரிக்க வேண்டும். ஆனால் 2-வது நீதித்துறை நடுவர் 2-ம் நிலை நடுவராக இருப்பதால் அவர் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என இந்த வழக்கை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
  • ஆனால், நீதித்துறை நடுவர்களில் முதல் நிலை, இரண்டாம் நிலை கிடையாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று கூறி மனுவை நடுவர் தள்ளுபடி செய்ததால், அந்த வழக்கை அமர்வு நீதிமன்றத்தில் விக்டர் வில்லியம் மேல்முறையீடு மனு செய்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அல்லாத பி.பாலசுப்பிரமணியன் என்பவர் விக்டர் வில்லியமிற்காக வாதிட்டார்.
  • அமர்வு நீதிமன்றத்திலும் விக்டர் வில்லியமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
  • இதற்குப்பிறகு சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிவாரணங்களை கோரி குற்றவியல் மனுக்களை விக்டர் வில்லியம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
  • இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி பி.என். பிரகாஷ் அவர்கள் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
  • உயர் நீதிமன்றத்திலும் விக்டர் வில்லியமிற்காக பி.பாலசுப்பிரமணியன் வாதிட்டார்.
  • வழக்கறிஞர் அல்லாத நீங்கள் நீதிமன்றத்தில் வாதாடலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, யாருக்காகவும் யார் வேண்டுமானாலும் வாதாடலாம் என வழக்கறிஞர் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என பாலசுப்பிரமணியன் பதில் தெரிவித்தார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
  • வழக்கு தொடர்பவர்களுக்காக வழக்கறிஞராக இல்லாவிட்டாலும், சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர் வாதாடலாம் என வழக்கறிஞர் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
  • ஆனால் பாலசுப்பிரமணியன் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக, போலீஸாருடன் தகராறு செய்ததாக வழக்குகள் உள்ளது.
  • கீழமை நீதிபதிகளின் பெயர்களை குறிப்பிட்டு பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.
  • இதனால் அவரை நீதிமன்றம் ஏற்கனவே கண்டித்துள்ளது.
  • இந்த வழக்கிலும் இவர் தேவையில்லாமல் வழக்குகளை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளார்.
  • இதனால் பி.பாலசுப்பிரமணியனை எந்தவொரு நீதிமன்றத்திலும் வாதாட அனுமதிக்கக்கூடாது என்றும், இந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றும்,. மனுதாரருக்கு விதிக்கப்படுகின்ற ரூ.ஆயிரம் அபராத பணத்தை 2 வாரத்தில் உயர் நீதிமன்ற இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்த வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
(23.04.2016 அன்று வெளியான தி இந்து தமிழ் நாளிதழில் வெளியான செய்தியை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது இந்தப்பதிவு)
https://www.hindutamil.in/news/tamilnadu/76467--1.html

**********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 18.05.2018