disalbe Right click

Tuesday, December 18, 2018

மனித உரிமைகள் நீதிமன்றங்களில் வழக்குகள்

மனித உரிமைகள் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்வது எப்படி?
மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் - நிஜமா? மாயத்தோற்றமா?
மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள்
தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் என்ற மூன்று அமைப்புகள் மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ளன.
மனித உரிமை பாதுகாப்பு சட்டம், பிரிவு 30-ன்படி மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் என தமிழகத்தில் அறிவிப்பு செய்யபட்டுள்ளது.
புகார்
மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர் தேசிய ஆணையத்தில், சம்பவம் நடைபெற்ற இடம் உள்ள மாநில ஆணையத்தில் அல்லது மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் புகார் கொடுக்கலாம்.
மனித உரிமை பாதுகாப்பு சட்டம்
வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம், தனி மனித கௌரவம் குறித்த உரிமைகளே மனித உரிமை எனப்படும் என்று மனித உரிமை பாதுகாப்பு சட்டம், பிரிவு 2(d) தெரிவிக்கிறது. இவற்றை தவிர மற்றவை தொடர்பான புகார்களை மனித உரிமை அமைப்புகளில் புகார் கொடுக்க கூடாது.
தேசிய,மாநில ஆணையங்கள் விசாரணை செய்து வழங்கும் தீர்ப்பானது பரிந்துரை மட்டுமே. இவ்வாறான பரிந்துரைகள் பல கிடப்பில் உள்ளன. பல சமயங்களில் மாநில ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக விடப்படுகிறது.
ஆனால் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களுக்கு தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் உண்டு.
தேசிய,மாநில ஆணையங்கள் வெகு தொலைவில் இருப்பவை. மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் அருகே இருப்பவை.
புகார் தாக்கல் முறை 
மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்தில் நேரடியாக புகார் தாக்கல் செய்ய இயலாது. மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர் தமது புகாரை தாமாக அல்லது வழக்கறிஞர் மூலம் தனி புகாராக (private Complaint) தயாரிக்க வேண்டும்.
இப்புகாரானது மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தை மேற்கோள் காட்டி குற்றவியல் விசாரணை முறை சட்டம், பிரிவு 200-ன்படி குற்றம் நிகழ்ந்த இடம் உள்ள பகுதிக்கு ஆள்வரையுள்ள (jurisdiction) குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (Judicial Magistrate Court) தாக்கல் செய்ய வேண்டும்.
புகாரை பெற்ற குற்றவியல் நடுவர் நீதிமன்றமானது, முதலில் அதனை குற்றவியல் விசாரணை முறை சட்டம், பிரிவு 202-ன்படி விசாரணை செய்து, புகாரில் அடிப்படை உள்ளது என முடிவு செய்தால் எதிரிகளுக்கு அழைப்பாணை அனுப்பி புகார் நகலை வழங்கி கேள்வி கேட்டு பின்பு விசாரணைக்கு மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கும்.
மாயத்தோற்றமா?
மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் தமிழகத்தில் கடந்த 1996-ல் அமைக்கப்பட்டது.
கடந்த 1996 முதல் 2010 வரை தமிழகத்தில் இருந்து தேசிய, மாநில மனித உரிமைகள் ஆணையங்களில் மற்றும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் மொத்த எண்ணிக்கை -130233
இதே பதினைந்து ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை -21349
இதே பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை - 108717
இதே பத்து ஆண்டுகளில் தமிழக மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் சமர்பிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை -167
பரிந்துரை அதிகாரம் மட்டுமே கொண்ட ஆணையங்களை நாடிய மக்கள் -99.9%
தீர்ப்பு வழங்கும் அதிகாரம் கொண்ட மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களை நாடிய மக்கள் - 0.1%.
இதற்கு காரணம் என்ன?
மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வின்மை, நடைமுறை பிரச்சினைகள்.
தேசிய, மாநில மனித உரிமைகள் ஆணையங்களில் சிறப்பு புலனாய்வு குழுக்கள் உள்ளன. இதைப்போல பிரிவு 37 -ன்படி உள்ளபடி மாவட்ட அளவில் மனித உரிமைக்கான சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்
மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களில் இதைப்போல பிரிவு 31-ன்படி உள்ளபடி அரசு குற்றஞ்சாட்டுனர்கள் உடனே நியமிக்கப்பட வேண்டும்
மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களுக்கான தக்க விதிமுறைகளும் வழி காட்டுதல்களும உடனே வகுக்கப்பட வேண்டும்
பொது மக்களிடையே மனித உரிமை நீதிமன்றங்கள் குறித்த விழிப்புணர்வை வளர்க்க வேண்டும்.
அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்:
இச் செய்தியை மற்றவர்களும் அறிந்து கொள்ள அனுப்பி வைக்கும்படி வேண்டப்படுகிறது.
கடந்த 2016ம் ஆண்டுப் பதிவு இது

எனது நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan அவர்களுக்கு நன்றி!

வாரிசுரிமை வழக்கின் தீர்ப்பு

வாரிசுரிமை வழக்கின் தீர்ப்பு 
தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற ஒரு இந்துப் பெண்ணிற்கு குழந்தைகள் எதுவும் இல்லாமல் இருந்து, அந்த பெண் இறந்துவிட்ட நிலையில், அந்த சொத்துக்களை பெறுவதற்கு இந்து வாரிசுரிமை சட்டப்படி கணவருக்கு உரிமை உள்ளதா? அல்லது அந்த சொத்துக்கள் அந்த பெண்ணின் தந்தை வழி வாரிசுகளுக்கு சென்றடைய வேண்டுமா?
இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 15
இந்துப் பெண்ணின் வாரிசு பற்றிய பொதுவிதிகள்
பிரிவு 15(1)ன்படி உயில் எழுதாமல் இறந்து போன இந்துப் பெண் ஒருவரின் சொத்தை, பிரிவு 16 ன் குறிப்பிட்டபடி கீழ்க்கண்ட வாரிசுகள் அடைவார்கள்.
1. முதலாவதாக இறந்த பெண்ணின் மகன்கள் மற்றும் மகள்கள் (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உட்பட) கணவனும் அடைவார்கள்.
2. இரண்டாவதாக கணவனின் வாரிசுகள் அடைவார்கள்
3. மூன்றாவதாக தாயும், தந்தையும் அடைவார்கள்
4. நான்காவதாக தந்தையின் வாரிசுகள் அடைவார்கள்
5. கடைசியாக தாயின் வாரிசுகள் அடைவார்கள்
பிரிவு 15(2)ன்படி பிரிவு 15(1) ல் என்ன கூறியிருந்தபோதிலும்,
இந்துப் பெண் ஒருவர் தன்னுடைய தந்தை அல்லது தாயின் வாரிசு என்ற முறையில் அடைந்த சொத்துக்களை, அவளுக்கு மகனோ அல்லது மகளோ (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உள்ளடங்கலாக) இல்லாதபோது, உட்பிரிவு 15(1)ல் குறிப்பிட்டுள்ள மற்ற வாரிசுகளுக்கு பொருந்தாது. ஆனால் தந்தையின் வாரிசுகளுக்கு பொருந்தும்.
அதேபோல் இந்துப் பெண் ஒருவர் தன்னுடைய கணவன் அல்லது மாமனாரின் வாரிசு என்ற முறையில் அடைந்த சொத்துக்களை, அவளுக்கு மகனோ அல்லது மகளோ (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உள்ளடங்கலாக) இல்லாதபோது, உட்பிரிவு 15(1)ல் கூறப்பட்டுள்ள வாரிசுகள் அடைய மாட்டார்கள். அவளது கணவனின் வாரிசுகள் அடைவார்கள்.
இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 16
ஒரு இந்துப் பெண்ணிற்குள்ள வாரிசுகளுக்கிடையே சொத்துக்கள் எப்படி பிரிக்கப்பட வேண்டும்? 
மேலே கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தை தெளிவாக படித்துப் பார்த்தால், இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 15(2) யை, பிரிவு 16 எந்த வகையிலும் கட்டுப்படுத்துவதில்லை. பிரிவுகள் 15(1) மற்றும் 15(2) ஆகியவற்றை படித்து பார்க்கும் பொழுது பிரிவு 15(2) ஒரு விதிவிலக்கான சட்டப் பிரிவாக அமைந்துள்ளது தெரிய வரும். தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்றிருக்கும் ஒரு இந்துப் பெண் இறந்துவிடும் நிலையில், அந்த சொத்துக்களை எவ்வாறு பிரித்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு மாறுபட்ட நடைமுறை பிரிவு 15(2) ல் கூறப்பட்டுள்ளது.
வாரிசுரிமை அடிப்படையில் தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற ஒரு இந்துப் பெண்ணிற்கு குழந்தைகள் எதுவும் இல்லாமல் இருந்தால், அந்த பெண் இறந்ததற்கு பின்னர், அந்த பெண்ணின் தந்தையுடைய வாரிசுகளுக்கு தான் அந்த சொத்துக்கள் சென்றடையும். மாறாக அந்த சொத்து இறந்து போன பெண்ணின் கணவருக்கு சென்றடையாது.
இது குறித்து உச்சநீதிமன்றத்தில்
இராதிகா Vs அக்னுராம் மாத்தோ (1994-5-SCC-761) மற்றும் 
பகவத் ராம் Vs தேஜ் சிங் (1999-2-LW-520)” ஆகிய வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.
எனவே ஒரு இந்துப் பெண் தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற அனுபவித்து வரும் நிலையில் குழந்தைகள் ஏதும் இல்லாமல் இறந்து போனால், மேற்படி சொத்துகள் இந்து வாரிசுரிமை சட்டப்படி அந்த இறந்து போன பெண்ணின் தந்தை வழி வாரிசுகளுக்கு தான் சென்றடையும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
நன்றி..முகநூல் நண்பர் திரு எஸ்.முருகேசன் அவர்கள்

3 நாளில் வில்லங்க சான்று வழங்க அரசு உத்தரவு

3 நாளில் வில்லங்க சான்று வழங்க அரசு உத்தரவு
'ஆன்லைன் முறையில் வரும் விண்ணப்பங்களை, உடனடியாக பரிசீலித்து, மூன்று நாட்களுக்குள் வில்லங்க சான்று வழங்க வேண்டும்' என, சார் - பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
பதிவுத்துறையில், பத்திரப்பதிவுகளை தொடர்ந்து, வில்லங்க சான்று, பிரதி ஆவணங்கள் உள்ளிட்ட சேவைகளுக்கான பதிவுகளை, ஆன்லைன் முறையில் மேற்கொள்ளும், புதிய திட்டம், டிசம்பர், 10ல் துவக்கப்பட்டது. இத்திட்டம், இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதை முன்னிட்டு, சார் - பதிவாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன் பிறப்பித்துள்ள உத்தரவு:  
➽ ஆன்லைன் முறையில் விண்ணப்பம் பதிவான நாளை தவிர்த்து, இந்த காலவரையறை பின்பற்றப்பட வேண்டும்.
➽ சான்றிட்ட பிரதி ஆவண நகல் கோரினால், மூன்று நாட்களில் வழங்க வேண்டும்.
 கணினிமயமாக்கப்பட்ட, பத்திரப்பதிவு தொடர்பான வில்லங்க விபரங்களை, மூன்று நாட்களிலும், மற்ற வில்லங்க விபரங்களை, நான்கு நாட்களிலும் வழங்க வேண்டும்.
➽ ஆன்லைன் முறையில் வில்லங்க சான்று கோரும் விண்ணப்பங்களுக்கு, மூன்று நாட்களில் பதில் அளிக்க வேண்டும்
இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
****************************************************நன்றி : தினமலர் நாளிதழ் - 16.12.2018