disalbe Right click

Friday, March 13, 2020

குற்ற விசாரணை முறைச் சட்டம்-1973, பிரிவு - 190

குற்ற விசாரணை முறைச் சட்டம்-1973, பிரிவு - 190
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
குற்றங்களை நடுவர்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதல்
Cr.P.C. என்று சுருக்கமாக சொல்லப்படுகின்ற குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 1973, அத்தியாயம் 14ல் பிரிவு 190 முதல் பிரிவு 199 வரை  குற்றங்களை நடுவர்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது பற்றிய விளக்கங்கள்  சொல்லப்பட்டுள்ளது. 
குற்ற விசாரணை முறைச் சட்டம்-1973, பிரிவு - 190 (1)
அத்தியாயம் 14ல் குறிப்பிடப்பட்டுள்ள வகைமுறைகளுக்கு உட்பட்டு முதல் வகுப்பு நடுவர் எவரும், 
  • எந்த சங்கதிகள் ஒருங்கே சேர்ந்தால் ஒரு குற்றம் ஆகுமோ, அவற்றை குறித்து ஒருவரிடம் இருந்து முறையீடு புகார்  பெறப்பட்டிருந்தால், அல்லது
  • அந்த  குற்றம் பற்றிய சங்கதிகள் குறித்து காவல்துறை அறிக்கை  பெறப்பட்டிருந்தால் அல்லது
  • அத்தகைய  குற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று காவல்துறை அலுவலர் அல்லாத வேறு யாராவது ஒருவரிடம் இருந்து தகவல் பெறப்பட்டிருந்தால் அல்லது
  • அல்லது அத்தகைய  குற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று நடுவருக்கே  தெரிய வந்திருந்தால், 
அந்த குற்றத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
குற்ற விசாரணை முறைச் சட்டம்-1973, பிரிவு - 190 (2)
அத்தியாயம் 14ல் குறிப்பிடப்பட்டுள்ள வகைமுறைகளுக்கு உட்பட்டு, தலைமை நீதித்துறை நடுவர் அவர்களால் சிறப்பாக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள இரண்டாம் வகுப்பு நடுவரும் மேற்கண்ட குற்றம் எதையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
சாமானியர்கள் வழக்கு தொடுக்க....
மேற்கண்ட பிரிவின் கீழ் சாமானியர்கள் வழக்கு தொடுக்கலாம். அதற்குரிய மாதிரி விண்ணப்பம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.






நீதிமன்ற முறையீடு மாதிரி படிவம் அளித்தமைக்கு திரு A Govindaraj Tirupur அவர்களுக்கு நன்றி.

*********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 13.03.2020

Thursday, March 12, 2020

வாரிசு சான்றிதழ் வழங்குகின்ற அரசு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை

வாரிசு சான்றிதழ் வழங்குகின்ற அரசு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை
ஒருவர் இறந்துவிட்டால், கண்டிப்பாக அவருடைய மனைவி, மக்கள் அல்லது அவரது சொந்தங்கள் அவரது இறப்பை பதிவு செய்து அதற்குரிய இறப்புச் சான்றிதழை கண்டிப்பாக பெற வேண்டும். அதே போல் அவரது வாரிசுதாரர்கள் வாரிசு சான்றிதழை பெற வேண்டும். இறந்தவருக்கு சொத்து இருந்தாலும் சரி; இல்லாவிட்டாலும் சரி; இப்போது இது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வாரிசு சான்றிதழை வழங்குவதெற்கென்று வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சில வரையறைகளை அரசு ஏற்படுத்தி வைத்துள்ளது. அதனை சுற்றறிக்கையாகவும் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் பற்றி ஒவ்வொருவருமே தெரிந்துகொள்ள வேண்டும். வாரிசு சான்றிதழை பெற முயற்சிக்கும்போது  நமக்கு அது பயன் அளிக்கும்.










ஆவண நகல்கள் வழங்கியவர் முகநூல் நண்பர் திரு Ramajayam Advo 12.03.2020

Wednesday, March 11, 2020

ரயிலில் முன்பதிவு; இப்படியும் நடக்கலாம்!

முன்பதிவு செய்து பயணிக்கும் ரயில் பயணி மீது .....
சில சொந்த காரணங்களுக்காக சில நாட்களுக்கு முன் சென்னை செல்ல நேர்ந்தது. வேலைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு எனது மகள் தட்கலில் முன்பதிவு செய்து கொடுத்த காரணத்தினால் சென்னை எக்மோரில் பொதிகை எக்ஸ்பிரஸில் பயணித்து எனது சொந்த ஊருக்கு திரும்பினேன். 10.03.2020 இரவு 08.45 மணிக்கு ரயில் புறப்படும் நேரம் என்று 08.30 மணிக்கெல்லாம் ஸ்டேஷனுக்கு சென்றுவிட்டேன். எனக்கு எஸ்1 கோச்சில் 40வது சைடு பெர்த் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இரவு 09.00 மணிக்குத்தான் ரயில் புறப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் எனது இரவு உணவை முடித்தேன்.
பயணச்சீட்டு பரிசோதகர் விஜயம்
சைடு அப்பர் பெர்த்தில் ஏறி அமர்ந்தேன். ரயில் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார். அடையாள அட்டை கேட்டார். எடுத்துக் கொடுத்தேன். தனது கையில் வைத்திருந்த பேப்பரில் சீட் நம்பர் 40க்கு நேராக இருந்த செல்வம் என்ற பெயரை டிக் அடித்துக் கொண்டார். எனது முகத்தை அவர் பார்க்கவே இல்லை. எனது அடையாள அட்டையில் செல்வம் என்ற பெயர் இருக்கின்றதா? என்பதை பார்ப்பதில் மட்டும்தான் அவரது கவனம் இருந்தது. அவர் ஒருவேளை தாமதமாக வந்திருந்தால், எனது கவனம் திசைமாறி இருக்கும். இந்த கட்டுரையை நான் எழுதி இருக்கவே மாட்டேன். 
அருகில் இருந்த பயணி செய்த வேலை
மேலே அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். என்னிடம் சரிபார்த்ததை போல அருகில் இருந்த பயணிகளிடம் அடையாள அட்டையை வாங்கி  பரிசோதகர் சரிபார்த்துக் கொண்டிருந்தார். அங்கு இருந்த பயணியுடன் மேலும் ஒருவர் இருந்தார். அவரை யார் என பரிசோதகர் கேட்டதற்கு என்னை வழியனுப்ப வந்தவர் என்றும், தாம்பரத்தில் இறங்கிவிடுவார் என்றும் அவரிடம் அந்த பயணி கூறினார். அதை கேட்ட பரிசோதகர் ஒன்றும் கூறாமல் சென்றுவிட்டார்.
தாம்பரத்தில் இறங்கியது யார்?
கண்களை மூடி தூங்க முயற்சித்தேன். முடியவில்லை. ஒரே யோசனையாகவே இருந்தது. மேற்கண்ட அந்த இருவரில் தாம்பரத்தில் இறங்கியது யார்? என்பதை நானும் பார்க்கவில்லை. அந்த பரிசோதகரும் பார்க்கவில்லை. பயணிகள் வேறு ஸ்டேஷன்களில் இருந்து ஏறும் நேரங்களில் அவர்களிடம் அடையாள அட்டையை பெற்று பரிசோதகர் டிக் செய்து அவரது வேலையை முழுமையாக முடித்து அவருக்கென்று தரப்பட்டிருந்த இருக்கையில் போய் அமர்ந்துவிட்டார். எனக்குத்தான் தூக்கமே வரவில்லை.
எனக்கு தோன்றிய சந்தேகம்
திரைப்பட இயக்குநர் திரு சந்திரசேகர் அவர்கள் அவரது ஆரம்பகால படங்களில் நடிக்கின்ற கதாநாயகன் இது போன்ற சாட்சியத்தை அந்த திரைப்படங்களில் உருவாக்கி வைத்துவிட்டு வேறு இடங்களுக்குச் சென்று கொலை செய்வான். அவனை அங்கு பார்த்ததாக கூறுபவர்களை இந்த சாட்சியை வைத்து மடக்கிவிடுவான். 
அதைப்போல ஒருவன் முன்பதிவு செய்துவிட்டு பரிசோதகர் பயணச்சீட்டை பரிசோதிக்கும் வரை இருந்துவிட்டு ரயிலில் இருந்து இறங்கி காரில் சென்று வேறு ஒரு இடத்தில் குற்றச்செயலை செய்துவிட்டு, பின் அது தெரிய வரும்போது, அந்த நேரத்தில் நான் முன்பதிவு செய்து ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன் என்றால் அதை நீதிமன்றம் ஏற்குமா? என்ற சந்தேகம் எனக்கு வந்தது. ஏனென்றால், அந்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு, காவல்துறையினர் விசாரணை செய்வதற்கு சில மாதங்கள் ஆகிவிடும். உடன் பயணித்தவர்களுக்கோ, பயணச்சீட்டு பரிசோதகருக்கோ குற்றவாளியின் முகம் அதற்குள் மறந்திருக்கும். எனவே அதுபற்றிய சங்கதிகளை பற்றி யோசித்தேன்.


விமானப் பயணத்தில் என்ன நடக்கிறது?
  1. விமானத்தில் பயணித்தால் பல சோதனைகளை கடந்துதான் ஒரு பயணியை விமானத்தில் ஏற்றுகிறார்கள். 
  2. வேறு ஒருவரை தன் பெயரில் பயணம் செய்ய வைக்க முடியாது. 
  3. வழியில் அந்த பயணியால் இறங்க முடியாது. 
  4. கண்காணிப்பு கேமிராக்கள் நாலாபுறத்திலும் இருக்கும். 
  5. அந்த பயணி விமான நிலையத்தின் முழு கண்காணிப்பிலேயே இருப்பார்.
இதனால், விமானப்பயணி ஒருவர் குற்றம் நடந்த இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இருந்தார் என்பதை அவர் அந்த நேரத்தில் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார் என்பதை வைத்து நிரூபித்து, அவர் அந்த குற்றத்தை செய்திருக்க முடியாது என்று ஆணித்தரமாக 100% மறுக்க முடியும்.

ஆனால், ரயில் பயணத்தில் என்ன நடக்கிறது?
  1. ரயில் பயணத்தில் சோதணைகள் அதிகம் கிடையாது.
  2. அடையாள அட்டையை வாங்கி பார்ப்பதுகூட ஒப்புக்குத்தான் பார்க்கிறார்கள். 
  3. அதுவும் ஒரே ஒருமுறைதான் பார்க்கிறார்கள்.
  4. அந்த அடையாள அட்டை போலியாகக் கூட இருக்கலாம்.
  5. குற்றவாளி  தனக்கு பதிலாக வேறு நபரை பயணிக்க வைக்கலாம்.
  6. இடையில் எந்த ஸ்டேஷனிலும் அவன் இறங்கிக் கொள்ளலாம்.
  7. வேறு ரயில் நிலையத்தில் அவன் ஏறிக் கொள்ளலாம்.
  8. கண்காணிப்பு கேமிரா இருந்தாலும் அதிகம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை வேலை செய்யாது. (சுவாதி கொலை வழக்கு)
  9. சில ஊர்களில் கண்காணிப்பு கேமிரா  இல்லவே இல்லை.
பயணியின் கையிலுள்ள செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடிக்கலாம் என்றாலும் அதுவும் முழுமையானதல்ல. குற்றவாளி தனது செல்போனை ரயிலில் தனக்கு பதிலாக ரயிலில் பயணிப்பவரிடம் கொடுத்திருந்தால் என்ன செய்ய முடியும்? ஆகையினால், குற்றம் நடந்த அந்த நேரத்தில், முன்பதிவு செய்து நான் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன் அல்லது  முன்பதிவு செய்து 
பேருந்தில்  பயணித்துக் கொண்டிருந்தேன் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூறுவது 100% நம்பிக்கைக்குரியதல்ல என்பதும், இதை மட்டும் வைத்து அவரை நிரபராதி என்று முடிவு செய்யக்கூடாது என்பதும் எனது ஆய்வு! 
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 11.03.2020 

Tuesday, March 10, 2020

போலி ஆவணம் புனைதல்

'பொய் ஆவணம் புனைந்தவர் மற்றும் தயாரித்தவர்களுக்கு 
தண்டனை வாங்கி கொடுக்க என்ன செய்ய வேண்டும்? .
திருமதி. டோர்ஸ் விக்டர் என்பவருக்கு வள்ளியூர் கிராமத்தில் வீட்டு மனைகள் இருந்தது. அந்த சொத்துக்களை ஜவகர்ராஜ் என்பவர் மோசடியாக அபகரித்து கொள்ள வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் உரிமையாளரான டோர்ஸ் விக்டர் என்பவருக்கு பதிலாக வேறொரு பெண்ணை ஆள்மாறாட்டம் செய்து அவர் பெயருக்கு ஒரு பவர் ஆவணத்தை பதிவு செய்து கொண்டார். பின்னர் அந்த மோசடி பவர் ஆவணத்தை பயன்படுத்தி மேற்படி சொத்துக்களை ராஜபாண்டி என்பவரிடம் ரூ. 50,0000/-க்கு அடமானம் வைத்தார்.
மேற்படி தனது சொத்துக்கள் ஆள்மாறாட்டம் மூலம் அபகரிக்கப்பட்ட விஷயத்தை கேள்விப்பட்ட டோர்ஸ் விக்டர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் ஜவகர்ராஜ் மற்றும் ராஜபாண்டி ஆகியோர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420,423,424 465 மற்றும் 109 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்தி இறுதி அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த நிலையில் திருமதி. டோர்ஸ் விக்டர் இறந்து விட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜவகர்ராஜ் பிரிவு 465 ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி 2 ஆண்டு சிறை தண்டனையும், ராஜபாண்டிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து எதிரிகள் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் எதிரிகளை விடுதலை செய்தது.
" இந்த வழக்கில் ஆள்மாறாட்டம் செய்த பெண்ணை பற்றி புலன்விசாரனை அதிகாரி தனது இறுதியறிக்கையில் எதுவுமே கூறவில்லை. முக்கிய குற்றவாளியான ஆள்மாறாட்டம் செய்த பெண்ணை விசாரிக்காமல், அந்தப் பெண்ணால் ஆதாயம் அடைந்த எதிரிகளை மட்டும் வழக்கில் சேர்த்தது தவறு. முக்கிய எதிரிக்கு தண்டனை வழங்காமல் மற்ற எதிரிகளுக்கு தண்டனை வழங்கியதை ஏற்க முடியாது " என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டோர்ஸ் விக்டரின் மகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுகளை தாக்கல் செய்தார். வழக்கை இரு நீதிபதிகள் விசாரித்தனர்.
பொய்யாவணம் புனைதல் என்பதற்கான விளக்கம் 
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 463 லும், பொய்யாவணம் புனைதல் என்கிற குற்றச் செயலுக்குள் எவையெல்லாம் அடங்கும் என பிரிவு 464 லும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு சட்டப் பிரிவுகளிலும் கூறப்பட்டுள்ள காரணிகள் நிரூபிக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஒருவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 465 ன் கீழ் தண்டனை வழங்க முடியும்.
உச்சநீதிமன்றம் " முகமது இப்ராகிம் மற்றும் பலர் Vs பீகார் மாநில அரசு மற்றுமொருவர் (2009-8-SCC-751)" என்ற வழக்கில், ஒரு நபர் பொய்யாவணம் புனைந்தவர் என்று கருதப்படுவதற்கு கீழ்க்கண்ட காரணிகள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
1. ஒருவருக்கு சொந்தமான அல்லது வேறொருவரால் அங்கீக்கப்பட்டுள்ள உரிமை குறித்து ஓர் உரிமையை கோருதல் அல்லது ஓர் ஆவணத்தை புனைதல்
2. ஓர் ஆவணத்தில் மாற்றம் செய்தல் அல்லது மோசடி செய்தல் அல்லது
3. ஏமாற்றி ஓர் ஆவணத்தை எழுதிப் பெறுதல் அல்லது ஒரு நபர் சுயநினைவில்லாமல் உள்ளபோது அந்த நபரிடமிருந்து ஆவணத்தை எழுதிப் பெறுதல்
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 464 ல் விளக்கம் 2 ல் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையில் பார்க்கும் போது, ஓர் பொய்யாவணம் புனையப்பட்டிருந்து அந்தப் பொய்யாவணத்தை புனைந்த நபர்தான் அந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று கருதப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அந்த நபரை பொய்யாவணம் புனைந்தவர் என்று கருத முடியாது.
  1. பொய்யாவணம் என்பது மோசடி என்கிற விளக்கத்திற்குள் வருகிறது
  2. மேற்படி குற்றச்சாட்டுகளை நேரடி சாட்சியங்கள் அல்லது நிரூபிக்கப்பட்ட சங்கதிகள் மூலமாக அனுமானிக்க வேண்டும்
  3. இந்த வழக்கில் எதிரிகள் ஒரு பொய்யாவணத்தை புனைந்துள்ளார்கள் அல்லது ஓர் ஆவணத்தின் ஒரு பகுதியை பொய்யாக புனைந்து அதன் அடிப்படையில் அடமான ஆவணத்தை எழுதியுள்ளார்கள் என்று விசாரணை நீதிமன்றம் கூறவில்லை
  4. எனவே அவர்கள் பொய்யாவணத்தை புனைந்தவர்களாக கருத முடியாது
  5. ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பெண்தான் பொய்யாவணத்தை புனைந்தவர் ஆவார்.
  6. வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பெண் குறித்து எந்த விசாரணையும் செய்யவில்லை
  7. இந்த எதிரிகளுக்கும், ஆள்மாறாட்டம் செய்த பெண்ணுக்கும் உள்ள தொடர்பு குறித்து எதுவும் கூறவில்லை

  1. காவல் ஆய்வாளர் முறையாக விசாரணை செய்யவில்லை என்பதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம் ஆகும். 
  2. காவல் ஆய்வாளர் தன் கடமையை செய்யவில்லை. பொறுப்புடனும் செயல்படவில்லை
  3. ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை கண்டுபிடிக்க காவல் ஆய்வாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
  4. பவர் ஆவணம் டோர்ஸ் விக்டரால் எழுதிக் கொடுக்கப்படவில்லை என்பதும், அந்த பவர் ஆவணத்தின் மூலமாக எதிரிகள் பயனடைந்துள்ளார்கள் என்பதும் வழக்கு ஆவணங்களிலிருந்து தெரிய வந்ததாலும், எதிரிகளுக்கு தண்டனை அளிக்க முடியாது
  5. காவல் ஆய்வாளரின் மோசமான புலன் விசாரணை காரணமாக இந்த வழக்கு பாதிக்கப்பட்டுள்ளது
  6. காவல்துறையினரின் மோசமான செயல்களால் தான் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்
  7. எதிரிகளை விடுதலை செய்வதை தவிர வேறு வழியில்லை. பொய்யாவணத்தை யார் புனைந்துள்ளார்களோ அவர்களுக்கு தான் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 465 ன் கீழ் தண்டனை அளிக்க முடியும் என்று கூறி எதிரிகளை விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றம் CRL. A. Nos - 359&360/2010 Dt - 11.05.2018
ஷீலா செபாஸ்டியன் Vs R. ஜவஹர்ராஜ் மற்றுமொருவர் 2018-3-MLJ-CRL-39

நன்றி : எனது முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan