disalbe Right click

Sunday, February 16, 2020

காவல்துறை நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்குமா?

காவல்துறை நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்குமா?
காவல் ஆய்வாளர் தயாரித்த பொய்யான அறிக்கை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கல் காவல் ஆய்வாளர் திரு இராஜா அவர்கள் பொய்யான அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக, என்னால் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஒருதலைப்பட்சமான விசாரணை
விருதுநகர் மாவட்ட ADSP அவர்களும், SP அவர்களும் நடத்திய விசாரணையானது, முறையாக நடத்தப்படாமல், குற்றஞ்சாட்டப்பட்ட ஆய்வாளருக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக முடிவுரை எழுதப்பட்டது.
மதுரை மண்டல காவல் துணைத்தலைவருக்கு புகார்!
இதனை ஆட்சேபித்து, புகாரை விசாரித்த விருதுநகர் மாவட்ட ADSP அவர்கள் மீதும், SP அவர்கள் மீதும் குற்றம் சுமத்தி, துரை மண்டல DIG அவர்களே இதனை நேரடியாக விசாரிக்க வேண்டும் என்று DIG அவர்களுக்கு ஒரு புகார் அனுப்பியிருந்தேன்.
டி..ஜி. எடுத்த நடவடிக்கை!
ஆனால், மீண்டும் எனது புகார் விருதுநகர் மாவட்ட SP அவர்களுக்கே மதுரையில் இருந்து அனுப்பப்பட்டது.
எஸ்.பி. மீண்டும் அளித்த அறிக்கை!
விருதுநகர் மாவட்ட SP அவர்களும் வழக்கம் போல அந்த புகாரில் உண்மையில்லை என்று நிராகரித்துவிட்டனர்.
எனது முதல் மேல்முறையீடு
அதனால், மீண்டும் மதுரை மண்டல DIG அவர்களுக்கு புகார் (முதல் மேல்முறையீடு) அனுப்பினேன்.
மீண்டும் அந்தப் புகார் விருதுநகர் மாவட்ட SP அவர்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து சிவகாசி DSP அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக படத்தில் கண்ட கடிதம் தெரிவிக்கிறது.


ஒரு அதிகாரி மீதான புகாரை அவருக்கு கீழ் பணி புரிகின்ற ஒரு அலுவலர் விசாரித்தால் எனக்கு என்ன நீதி கிடைக்கும்?

போகிற போக்கைப் பார்த்தால், விருதுநகர் மாவட்ட SP மீதான புகாரை, திருத்தங்கல் காவல் நிலையத்தில் பணிபுரிகின்ற ஒரு ஏட்டு விசாரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
காவல்துறையினர் பின்பற்றும் இந்த நடைமுறையை நீதிமன்றங்களும் பின்பற்றினால், உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் ஏதும் நிலுவையில் இருக்காது.

******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 17.02.2020

ஸ்மார்ட் கார்டு நகலை இனி எளிதாகப் பெறலாம்!

ஸ்மார்ட் கார்டு நகலை இனி எளிதாகப் பெறலாம்!
ஸ்மார்ட் கார்டு தொலைந்து விட்டாலோ, தகவல்களில் திருத்தம் செய்தாலோ, அதன்   நகலைப் பெறுவது எளிதாகியுள்ளது.
நமது மாநிலம் முழுவதும், 2.06 கோடிக்கும் அதிகமான 'ஸ்மார்ட்'  (ரேஷன்)  கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.  அந்தக் கார்டில் ஏற்கனவே இருந்த தவறான தகவல்களை திருத்தினாலோ, முகவரி மாற்றம் செய்தாலோ, நகல் கார்டு பெறும் வசதி இதற்கு முன்பு ஏற்படுத்தப்படவில்லை.  திருத்தம் செய்த பிறகு இணையதளத்தில் கிடைக்கின்ற, அதற்கான ரசீது மட்டுமே, ஆதாரமாக இருந்தது.
மேலும் கார்டு தொலைந்து விட்டாலும், (Duplicate Card) நகலைப் பெற முடியாமல் இருந்ததுகடந்த, மூன்று வருடங்களாக நிலவிய  இந்த சிக்கலுக்கு, தீர்வு காணும் வகையில், மாவட்டம் தோறும் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' நகல், 'பிரின்ட்' செய்யும் மையம் தற்போது  துவக்கப்பட்டுள்ளது.
நகல் பெற விண்ணப்பிப்பது எப்படி!
  • முதலில் '-சேவை' மையம் சென்று, ஸ்மார்ட் கார்டில், பெயர், முகவரி மாற்றம் உள்ளிட்ட தேவையான திருத்தங்களை  செய்து கொள்ள  வேண்டும்
  • பின் ,tnpds.gov.in என்ற அரசு இணையதள முகவரிக்கு சென்று, பொது வினியோக திட்ட பகுதிக்குள் நுழைந்து, 'நகல் ஸ்மார்ட் அட்டைக்கு விண்ணப்பிக்க' என்ற கட்டத்தை 'க்ளிக்' செய்ய வேண்டும்
  • ரேஷன் கடையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை பதிவு செய்து, கடவு எண்ணையும், 'கேப்சா' குறியீட்டு எண்ணையும் 'டைப்' செய்து, சமர்ப்பிக்க வேண்டும்
  • சமர்ப்பிக்கப்பட்ட 'ஆன்லைன்' விண்ணப்பம், நேரடியாக, நீங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட தனி தாசில்தாருக்கு அல்லது வட்ட வழங்கல் அலுவலருக்கு உடனே சென்று விடும்
  • அவர் அதனை சரிபார்த்து ஒப்புதல் அளித்ததும், மாவட்ட 'எல்காட்' பிரிவு இணையத்துக்கு சென்று, அங்கு ஸ்மார்ட் கார்டு  பிரின்ட் செய்யப்படும்.
  • கார்டுதாரரின் மொபைல் எண்ணுக்கு இதுகுறித்து எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.
  • அந்த செல்போனுடன் தாலுகா அலுவலகம் சென்று, பெறப்பட்ட தகவலை அங்கு காண்பித்து நகல் ஸ்மார்ட் கார்டை எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.
******************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 16.02.2020



Saturday, February 15, 2020

எதிரிடை அனுபோகம் என்றால் என்ன?


எதிரிடை அனுபோகம் என்றால் என்ன?
ஒரு அசையா சொத்தின் மீது எந்தவித உரிமையும் இல்லாத ஒரு நபர் அந்த சொத்தை உரிமையாளர் உட்பட எவருடைய குறுக்கீடும் இல்லாமல், ஊரறிய தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுபவித்து வந்தால் அந்த சொத்து அவ்வாறு அனுபவித்து வருபவருக்கே சொந்தம் என்ற கருத்தின் அடிப்படையில்தான் எதிரிடை அனுபோகம் உள்ளது.
அவ்வாறு சொத்துக்கு உரிமையே இல்லாத ஒருவருக்கு அந்த உரிமை கிடைப்பது அந்த சொத்தின் உண்மையான உரிமையாளருக்கு எதிராக இருப்பதால்தான், இது எதிரிடை அனுபவம் என்று அழைக்கப்படுகிறது.
பல நாடுகளில் உள்ளது!
எதிரிடை அனுபவம் மூலமாக சொத்துக்கு உரிமையில்லாத ஒருவர், அதன் உரிமையை பெறுவது என்பது பல்வேறு நாடுகளிலும் உள்ளது. எத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக அனுபவித்து வர வேண்டும் என்ற காலவரையறை நாட்டுக்கு நாடு வேறுபடும். நம் நாட்டை பொறுத்தவரை அது 12 ஆண்டுகள் ஆகும்.
காலவரையறைச் சட்டத்தின்படி
எதிரிடை அனுபவம் குறித்து காலவரையறை சட்டம் 1963 ல் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் பிரிவுகள் 64 மற்றும் 65 ன்படி, சர்ச்சைக்குரிய அசையா சொத்தின் அனுபவத்திற்கு வழக்கு தொடர நிர்ணயிக்கப்பட்ட காலம் 12 ஆண்டுகள் ஆகும். அதாவது பாதிக்கப்பட்ட நபர் 12 ஆண்டுகளுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிரிடை அனுபோகம் கோருபவர் வழக்கு தொடர வேண்டுமென்றால்....
1. எதிரிடை அனுபவம் கோருபவர் அந்த சொத்தின் உரிமையாளர் அல்லது வேறு எவருடைய குறுக்கீடும் இல்லாமல் சொத்தை அனுபவித்து வந்திருக்க வேண்டும்.
2. அவ்வாறு அனுபவித்து வருபவர் சொத்தை எல்லோரும் அறியும் வகையில் வெளிப்படையாக அனுபவித்து வந்திருக்க வேண்டும்.
3. இடைவெளியே இல்லாமல் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் அனுபவித்து வந்திருக்க வேண்டும்.
4. சொத்தின் உண்மையான உரிமையாளரின் உரிமையை மறுத்து, தான்தான் சொத்தின் உரிமையாளர் என்று கூறும் வகையில் சொத்தை அனுபவித்து வந்திருக்க வேண்டும்.
இதனால் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு சொத்தின் உரிமையாளர், தெரிந்தோ, தெரியாமலோ தனது சொத்தை வேறு ஒருவர் அனுபவிக்க வழி வகுத்துவிட்டு, 12 ஆண்டுகள் வரை அதனை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால்தான், அவ்வாறு உரிமை இல்லாத ஒருவர் எதிரிடை அனுபவ உரிமை கோர முடியும். 12 ஆண்டுகள் சொத்தின் உரிமையாளர் வேறு ஒருவரை அனுபவிக்க விட்டுவிட்டால் உரிமையாளருக்கு சொத்து கிடையாது.
உச்சநீதிமன்றம் பரிந்துரை:
ஆனால் உச்சநீதிமன்றம் இந்த எதிரிடை அனுபோகம் உரிமை என்பது ஆங்கிலேய நாட்டு சட்டம். எதிரிடை அனுபோகம் என்பது சொத்தின் உண்மையான உரிமையாளருக்கு எதிரானது. அதனால் எதிரிடை அனுபோகம் என்ற உரிமையை அடியோடு நீக்க வேண்டும். அதற்கு தேவையான சட்டத் திருத்தத்தை அரசு கொண்டு வர வேண்டும் என்று ஒரு வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : எனது முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan