disalbe Right click

Showing posts with label தீர்ப்பு. Show all posts
Showing posts with label தீர்ப்பு. Show all posts

Monday, December 18, 2017

வழக்கை விசாரிப்பதில் நீண்ட கால தாமதம்

குற்றவாளிகளுக்குள்ள உரிமை 
சென்னை எழும்பூர் 2 வது பெருநகர நீதிமன்றத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 341,352, 294(b), 323 மற்றும் 506( ii) ஆகிய பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கு நடைபெற்று வந்தது.
அந்த வழக்கு சம்பவம் 23.1.2001 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் வேப்பேரி காவல் நிலையத்தில் 10.2.2001 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 23.4.2001 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு சாட்சி கூட விசாரிக்கப்படவில்லை.
அதனால் வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, நீண்ட காலமாக விசாரிக்காமல் இருக்கும் வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டனர்.
எதிரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், மேற்படி வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாகவும், அதில் அரசு தரப்பில் இன்றுவரை சாட்சியாக யாரும் விசாரிக்கப்படவில்லை என்றும், எதிரிகள் பல ஆண்டுகளாக வழக்கில் ஆஜராகி வருவதாகவும், எதிரிகள் வழக்கை நடத்த தயாராக இருந்தபோதிலும் அரசு தரப்பில் வழக்கை விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 21 ன்படி அளிக்கப்பட்டுள்ள விரைவாக வழக்கை நடத்துவதற்குள்ள உரிமை பறிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், 2வது எதிரி 1.10.2007 முதல் 31.3.2009 வரை நீதிமன்றம் ஆஜராகததால் அவர்மீது நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை நிலுவையில் இருப்பதால் வழக்கை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506(ii) தவிர மற்ற அனைத்து பிரிவுகளும் பிணையில் விடக்கூடிய சட்டப் பிரிவுகளாகும். 2வது எதிரி 1.10.2007 முதல் 31.1.2009 வரை நீதிமன்றத்தில் ஆஜராகததால் அவர்மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாலும் அதற்கு முன்னர் இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். பலமுறை அரசு சாட்சி 1க்கு அழைப்பாணை அனுப்பப்பட்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனால் எதிரிகளால் தான் காலதாமதம் ஏற்பட்டது என்று கூறுவதை ஏற்க முடியாது.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் " அப்துல் ரஹ்மான் அந்துலே Vs R. S. நாயக் (1992-SCC-CRI-93) மற்றும் ராஜ் டியோ ஷர்மா Vs பீகார் மாநிலம் (1998-7-SCC-507) ஆகிய வழக்குகளில் வழக்கை விசாரிப்பதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டால் அந்த வழக்கு சம்மந்தப்பட்ட எதிரிகளை வழக்கிலிருந்து விடுவிக்கலாமென்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே வழக்கை விசாரிப்பதில் நீண்ட கால தாமதம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உள்ள உரிமையை பறிப்பதாகும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. OP. NO - 15896/2011
D. பாஸ்கரன் மற்றும் பலர் Vs மாநில அரசுக்காக
ஆய்வாளர், வேப்பேரி காவல் நிலையம், சென்னை
2010-3-LW-CRL-315 
நன்றி : முகநூல் நண்பர், வழக்கறிஞர் திரு Dhanesh Balamurugan 

Sunday, December 3, 2017

ஒரே நாளில் இரு முரண்பட்ட தீர்ப்பு

வருத்தம் தெரிவித்தது சுப்ரீம் கோர்ட் 
புதுடில்லி: உத்தரகண்ட் உயர் நீதிமன்றம், ஒரே நாளில், ஒன்றுடன் ஒன்று, தொடர்புடைய இரு வெவ்வேறு வழக்குகளில், முரண்பட்ட இரு உத்தரவுகளை பிறப்பித்ததால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 10 ஆண்டுக்கு மேல் தீர்வு கிடைக்காததற்கு, உச்ச நீதிமன்றம் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், ரூர்க்கி நகரை சேர்ந்த பெண், ஷ்யாம் லதா. இவர், 2004ல், ஹரித்துவார் போலீஸ் உயரதிகாரியிடம் அளித்த புகாரில், தன் இரு சகோதரர்கள், தன் கையெழுத்தை போலியாக போட்டு, தனக்கு சொந்தமான கடையில் வாடகைக்கு இருப்பதாக ஆவணம் தயாரித்திருப்பதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதற்கிடையே, குற்றஞ் சாட்டப்பட்ட சகோதரர்களில் ஒருவர், போலியாக தயாரித்த வாடகை ரசீதை தாக்கல் செய்து, கடையில் இருந்து தன்னை காலி செய்யக்கூடாது எனக் கோரி, சிவில் வழக்கு தொடர்ந்தார்.
அதேசமயம், பெண் அளித்த புகாரை விசாரித்த விசாரணை அதிகாரி, வாடகை ரசீதுகளை அனுப்பி, கையெழுத்து நிபுணர் மூலம் சோதிக்க வேண்டும் எனக்கூறி, சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த சிவில் நீதிமன்றம், வாடகை ரசீதில் உள்ள கையெழுத்துகளை புகைப்படம் எடுத்து, சோதனை நடத்த அனுமதி அளித்தது.
இருப்பினும், தடயவியல் துறையை சேர்ந்த கையெழுத்து நிபுணர், வாடகை ரசீதில் உள்ள கையெழுத்துகளை புகைப்படம் எடுக்க நீதிமன்றம் சென்றபோது, அதற்கான அனுமதியை, நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால், வாடகை ரசீதில் உள்ள கையெழுத்தை சோதிக்காமல், போலியான கையெழுத்தை கண்டுபிடிக்க ஆதாரம் இல்லை என, இறுதி அறிக்கையை, விசாரணை அதிகாரி அளிக்க நேரிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண், கையெழுத்தை சோதிக்க அனுமதி மறுத்த சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை ஏற்று, வழக்கின் அனைத்து ஆவணங்களையும், ஜுடிஷியல் நீதிமன்றத்துக்கு மாற்றும்படி, செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, பெண்ணின் சகோதரர், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேசமயம், பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, ஜுடிஷியல் மாஜிஸ்திரேட், விசாரணை அதிகாரியின் விசாரணையை தொடர, அனுமதி அளித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்தும், பெண்ணின் சகோதரர், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் வேறு ஒரு மனு தாக்கல் செய்தார். இதனால், தொடர்புடைய ஒரே வழக்கில், இரண்டு வெவ்வேறு மனுக்கள், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகி இருந்தன.
இந்த மனுக்கள் மீது, 2006ல், ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஒரு நீதிபதி, வாடகை ரசீதில் உள்ள கையெழுத்துகளை புகைப்படம் எடுத்து ஆய்வு செய்ய, கையெழுத்து நிபுணருக்கும், விசாரணை அதிகாரிக்கும், அனுமதி அளித்தார். மற்றொரு நீதிபதி, அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்தார்.
முரண்பட்ட இரு உத்தரவுகளை எதிர்த்து, 2009ல், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்குகளை தொடர்ந்த பெண், தற்போது இறந்து விட்டார். அவரது சட்டரீதியிலான பிரதிநிதி, வழக்கை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆர்.கே.அகர்வால், சஞ்சய் கிஷண் கவுல் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில், ஒரே நாளில், தொடர்புடைய இரு வழக்குகளில், இரண்டு நீதிபதிகள் அளித்த முரண்பட்ட உத்தரவுகளால், கடை உரிமையாளரான பெண்ணுக்கு, அளவுகடந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு, நீதிமன்றம் வருத்தம் தெரிவிக்கிறது. அந்த பெண்ணின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது. வாடகை ரசீதில் உள்ள கையெழுத்துகளை, கையெழுத்து நிபுணர் ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 04.12.2017 

Sunday, November 26, 2017

கட்டுமானத்தை, உடனடியாக பேரூராட்சி இடிக்க வேண்டும்-ஐகோர்ட்.

குடியிருப்பு கட்ட பெற்ற அனுமதியில்
தொழுகை இடம் கட்ட முடியாது: ஐகோர்ட்
சென்னை, 'வீடு கட்ட அனுமதி பெற்று விட்டு, தொழுகை நடத்துவதற்கான இடம் கட்ட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டையைச் சேர்ந்த, அப்துல் அசீஸ், சாதிக் பாஷா ஆகியோர் தாக்கல் செய்த மனு:
  • முத்துப்பேட்டையில், ஜமாத் நலன்களுக்காக, கட்டடம் கட்டுவதற்கு, திட்ட அனுமதி பெறப்பட்டது.
  • அடித்தள கட்டுமானப் பணிகள் முடிந்து, தரைத்தளம் கட்டும் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது, பணிகளை நிறுத்தும்படி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி, 'நோட்டீஸ்' அனுப்பினார்.
  • தொழுகை நடத்தும் இடத்துக்காக, கட்டுமானம் நடப்பதால், திட்ட ஒப்புதலை ரத்து செய்வதாக, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  • கட்டுமானத்தில் விதிமீறல் இல்லை. திட்ட அனுமதியின்படி, கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது.
  • பேரூராட்சி தரப்பில், விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, பேரூராட்சி நிர்வாக அதிகாரியின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
  • முத்துப்பேட்டை பேரூராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,
  • 'தரைத் தளம் மற்றும் முதல் தளம் கட்டுவதற்கு, அனுமதி பெறப்பட்டது.
  • இடத்தை நேரில் ஆய்வு செய்தபோது, தொழுகை நடத்துவதற்கான இடமாக, கட்டுமானம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
  • 'பணிகளை நிறுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியும், கட்டுமானப் பணி தொடர்ந்து நடந்ததால், திட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது' என, கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி, எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.
பேரூராட்சி தரப்பில், சிறப்பு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், அரசு வழக்கறிஞர், அகில் அக்பர் அலி ஆஜராகினர்.
மனுவை, தள்ளுபடி செய்து, நீதிபதி, வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
  • குடியிருப்பதற்கான வீடு கட்டுவதற்கு, திட்ட அனுமதி பெறப்பட்டது; ஜமாத் மற்றும் தொழுகை நடத்துவதற்கான இடம் கட்டுவதற்கு, அனுமதி பெறப்படவில்லை என, பேரூராட்சியின் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
  • வீடு கட்டுவதற்காக திட்ட அனுமதி பெற்று, தொழுகை நடத்துவதற்கான இடம் கட்ட முடியாது.
  • எனவே, பணி நிறுத்த நோட்டீஸ் அனுப்பியதும், திட்ட அனுமதியை ரத்து செய்ததும், சரி தான்.
  • கட்டடத்தை தரைமட்டமாக்க வேண்டும் என்கிற, அரசு வழக்கறிஞரின் வாதத்தில், பொருள் உள்ளது. அதனால், கட்டுமானத்தை, உடனடியாக பேரூராட்சி இடிக்க வேண்டும்.
  • இடிப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி, பணியில் இருந்து நீக்கப்படுவார்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 26.11.2017