disalbe Right click

Showing posts with label வருமானம். Show all posts
Showing posts with label வருமானம். Show all posts

Friday, April 28, 2017

புதிய மாற்றங்கள்... எளிதாகும் வருமான வரி கணக்குத் தாக்கல்!

புதிய மாற்றங்கள்... எளிதாகும் வருமான வரி கணக்குத் தாக்கல்!
த்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் சமர்ப்பிப்பது படிப்படியாகக் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இப்போது வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய ஆதார் எண் தரவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி உள்ளது மத்திய அரசு. வருமான வரிப் படிவத்தில், கணக்குத் தாக்கல் செய்பவரின் வங்கிக் கணக்குத் தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருக்கிறது.
இந்த நிலையில், வருமான வரித் தாக்கலில் ஆதார் எண்ணைப் பதிவு செய்வதன் மூலம், வரி செலுத்துபவரின் ‌வங்கிக் கணக்கு விவரங்கள், நிதி நடவடிக்கைகளை எளிதாக‌ப் பின்தொடர முடியும் என மத்திய அரசு கருதுகிறது‌. இதையொட்டி வருமான வரிக் கணக்குத் தாக்கல் படிவத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மாதச் சம்பளதாரர்களுக்காக புதிய வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் படிவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படிவத்துடன் ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த நடைமுறை 2017 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் படிவத்தில், இரண்டு வருடங்களுக்குமுன்பு அறிவிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் செயலற்றுக் கிடக்கும் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்கள் நீக்கப்பட்டு, மூன்று பக்க விண்ணப்பமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி கணக்குத் தாக்கல் படிவம் சிக்கலாக இருப்பதால், வரி வரம்புக்குள் உள்ள 29 கோடி பேரில் 6 கோடி பேர்தான் தாக்கல் செய்தனர். இப்போது இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 2017-18 மதிப்பீட்டு ஆண்டுக்கான விண்ணப்பப் படிவத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆடிட்டர் லதா ரகுநாதனிடம் பேசினோம்.
இதுவரையில் பக்கம்பக்கமாக இருந்த படிவம், கைக்கடக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் படிவங்கள் ITR 1 – 7 மட்டுமே. 2, 2ஆ என்பது போல இருந்த பல ஆவணங்கள் ஒன்றாக இணைக்கப் பட்டு ஏழு படிவங்களாகக் குறைக்கப் பட்டுள்ளன. இதில் மிக அதிகமாக உபயோகப்படும் படிவம் ITR 1 என்பதால், இது ஒரேயொரு பக்கமாகச் சுருக்கப் பட்டுள்ளது. இதன் இன்னொரு பெயர் சஹஜ்என்பதாகும். மாற்றங்கள் எல்லாப் படிவங்களிலும் உள்ளவை என்கிறபோதும், இந்த சஹஜ்படிவம் அதிகம் உபயோகப்படும் என்பதால், இதுபற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 
யார் உபயோகிக்கலாம்?
சம்பளம், ஒரே ஒரு வீடு மற்றும் வங்கி வட்டி வருமானம் பெரும் தனிநபர்கள் மட்டுமே. அரசாங்கத்தின் பார்வையில் இது இரண்டு கோடி தனிநபர்களுக்கு உபயோகப்படும் என்று சொல்லப்படுகிறது.
செய்யப்பட்ட மாற்றங்கள்
மொத்த வருமானத்திலிருந்து சாப்டர் ஆறு ஏ-வின் கீழ் அனுமதிக்கப்படும் வரிச் சலுகைகள், இப்போது 80சி, 80டி, 80டிடிஏ, 80ஜி போன்ற நான்கு பிரிவுகளின் கீழ் மட்டுமே படிவத்தில் காட்டப்படு கின்றன. இந்த மாற்றத்துக்குக் காரணம், பெரும்பாலான வரி செலுத்துபவர்கள் இந்தவிதமான வரி விலக்கைத்தான் கடந்த பல வருடங்களாகக் கோரி வந்துள்ளனர். இவற்றைத் தவிர, வேறு பிரிவுகளின் கீழ் வரி விலக்குக் கோருபவர்கள் அவற்றைத் தனியே வேறு சிலஎன்பதில் காண்பித்துப் பெறலாம்.
சொத்துகள் பற்றிய விவரங்கள் கொடுக்க, சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றம் இப்போது நீக்கப்பட்டுள்ளது. நவம்பர் 9 முதல் 30-ம் தேதி வரையில், அதாவது பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின், இரண்டு லட்சம் ரூபாய்க்கு  வங்கிகளில் கணக்குக் கட்டப்பட்டிருந்தால், இவற்றைத் தனியாகக் காண்பிக்க ஒரு பத்தி  கொடுக்கப்பட்டுள்ளது. 
கடைசியாக, ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கப்பட வேண்டும். இந்த மாற்றம் எல்லா எண் படிவங்களுக்கும் பொதுவான ஒன்று.
எதற்காக இந்த நடவடிக்கை
இந்தக் கடைசி மாற்றம் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டி இருக்கிறது. இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு சில  முக்கியமான காரணங்கள் உள்ளன. முதலில், வரி ஏய்ப்பை இதனால் தடுக்க இயலும். காரணம், தற்போது ஆதார் எண் எல்லா விதமான தினசரி நடவடிக்கைகளிலும் தரப்படுகிறது. இதனால் நிதிப் பரிவர்த்தனை தொடர்பான ஒருவரது எல்லா நடவடிக்கைகளும் அரசின் பார்வைக்கு வந்து விடும். இவற்றை மறைத்து இனி வரி ஏய்ப்பு செய்வது கடினம். 
சிலர், ஒன்றுக்கு மேலான பான் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு, சில கணக்குகளை மாற்றிக் காண்பித்து வரி ஏய்ப்பு செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. இந்த வகையில், இனி வரி ஏய்ப்பு செய்ய முடியாது. ஏனென்றால், ஆதார் கார்டுடன்  பான் கார்டை இணைப்பது அவசியம்.
மேலும், தற்போது ஆதார் கார்டு வங்கிக் கணக்குகள், பேபால் கணக்குகள் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே இவற்றின் மூலம், வருமான வரிச் செலுத்த மற்றும் ரிட்டர்ன்ஸ் சமர்ப்பிக்க சுலபமாக முடியும். முக்கியமாகடிசம்பர் 30-க்குமுன் இணைப்பைச் செய்யத் தவறினால், பான் கார்டு செல்லாது எனக் கொள்ளப்படும். ரூ.5 லட்சத்துக்குக் குறைவான வருமானம், ரீஃபண்ட் இல்லாதவர்கள் மற்றும் சஹஜ்’-ல் சமர்ப்பிக்கும் 80 வயதுக்கு மேலானவர்கள் இ-ஃபைலிங் செய்வதைவிடமேனுவல் ரிட்டர்ன் தாக்கல் செய்வது நல்லது. அப்படிச் செய்வதால், இந்த இணைப்புப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்என்றார் அவர்.
அனைவரும் ஆதார்எண் தர வேண்டும்
ஆதார்எண் பெறத் தகுதியானவர்கள்  மட்டுமே  வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது, ‘ஆதார்எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் என்று வருமான வரித்துறை விளக்கம் தந்துள்ளது. அதாவது, ‘ஆதார்எண் பதிவு என்பது எல்லோருக்கும் கிடைத்துவிடாது. ஆதார்எண்ணுக்கு விண்ணப்பித்த தேதிக்கு முந்தைய 12 மாதங்களில், 182 நாட்களுக்கு குறையாமல், இந்தியாவில் வசித்த தனிநபர்கள் மட்டுமே இந்தியாவில் வசிப்பவர்களாகக் கருதப்பட்டு, ‘ஆதார்எண் பெறத் தகுதி உடையவர்கள்  என்று ஆதார் சட்டம் கூறுகிறது. எனவே, இந்தியாவிலேயே ஆண்டு முழுக்க வசித்து, ‘ஆதார்பெற்ற  அனைவருமே வருமான வரிக் கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்எண் குறிப்பிடுவது கட்டாயம் என்று வருமான வரித் துறை அறிவித்திருக்கிறது.  
வருமான வரித் துறை கொண்டுவந்துள்ள இந்த மாற்றங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, இனி வரிக் கணக்கினைத் தாக்கல் செய்வோமா?
ஆதார் பான் எண் இணைப்பு: சிக்கலும் தீர்வும்!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா திருத்தத்தின்படி, வருமான வரிக் கணக்குத் தாக்கலின் போது, ‘ஆதார்எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மேலும், வருமான வரி நிரந்தரக் கணக்கு, பான் உடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான இணையதளத்தில் ஆதார்எண்ணை இணைக்க முயலும்போது, சிலருக்குச் சிக்கல் ஏற்பட்டது. காரணம், பான் எண் தொடர்பான ஆவணங்களில், எல்லோரின் பெயரிலும் தந்தை பெயர் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், ஆதார் எண் ஆவணங்களில், தந்தை பெயரின் முதல் எழுத்து (இன்ஷியல்) மட்டுமே குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த முரண்பாடுகளால் பான் எண்ணுடன் ஆதார்எண்ணைச் சிலரால் இணைக்க முடியவில்லை.
இதற்கு வருமான வரித்துறை ஒரு தீர்வைக் கண்டுள்ளது. ஆதார் இணையதளத்தில் சென்று (https://uidai.gov.in/), பெயர் மாற்றத்துக்கான கோரிக்கை விடுத்து, அதற்கு ஆதாரமாக பான் கார்டின் ஸ்கேன் காப்பியை அப்லோட்செய்ய வேண்டும். இதன் மூலம், ஒரே மாதிரியான பெயர் கிடைப்பதால், அதை பான் எண்ணுடன் இணைக்க முடியும் என்கிறார்கள் வருமான வரித் துறை அதிகாரிகள். 
சில பெண்கள் திருமணத்துக்குப்பிறகு கணவர் பெயரைச் சேர்த்திருப்பார்கள். இவர்களுக்கு, ஆதார் எண்ணுக்குப் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ஒன் டைம் பாஸ்வேர்டை (ஓ.டி.பி.) வருமான வரித்துறை அனுப்பும். அப்போது, பான், ஆதார் என இரு ஆவணங்களிலும் அவர்களின் பிறந்த ஆண்டு ஒரே மாதிரியாக இருக்கிறதா என்று வருமான வரித்துறை சரிபார்க்கும். அந்த ஓ.டி.பி-யைப் பயன்படுத்தி, பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க முடியும் என்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் எண் செல்லாது என்கிற நிலை உருவாகியிருக்கிறது. மாதச் சம்பளக்காரர்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தக்கல் செய்ய வேண்டும். வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகும். (பான் எண்ணுடன் ஆதார்எண்ணை இணைக்க: https://incometaxindiaefiling.gov.in/). ஏப்ரல் 19, 2017 வரைக்கும் 1,10,16,997 பேர் பான் எண்ணுடன் ஆதார்எண்ணை இணைத்திருக்கிறார்கள்.
சோ.கார்த்திகேயன்
 சோ.கார்த்திகேயன்



நன்றி : நாணயம் விகடன் - 30.04.2017
·        



Friday, March 31, 2017

வருமான வரியில் மாற்றம்: 10 அம்சங்கள்


வருமான வரியில் மாற்றம்: 10 அம்சங்கள்

புதுடில்லி: அரசு துறைகளில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு, இன்று( ஏப்ரல்1 ) புது நிதியாண்டு பிறந்துள்ளது. மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது வருமான வரி நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதேபோல், பல மாற்றங்களுடன் நிதி மசோதாவும் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் குறித்த, 10 அம்சங்கள்:
1.ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாயில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாய்க்குள் இருப்பவர்களுக்கான வருமான வரி, 10 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் வருபவர்களுக்கு இதன் மூலம், 12,500 ரூபாய் வரித் தொகையில் குறையும். இதேபோல், ஐந்து லட்சம் ரூபாயில் இருந்து, 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, 12,900 ரூபாயும்; ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, 14,806 ரூபாயும் வருமான வரி குறையும்.

புதிய வருமான வரி படிவம்
2. தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை தவிர்த்து, ஆண்டு வருமானம், ஐந்து லட்சம் ரூபாய் வரை உள்ளவர்கள், வருமான வரி கணக்கு செலுத்த, ஒரே ஒரு பக்கம் கொண்ட படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் கீழ் முதல் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் 
செய்யபவர்களை வருமான வரித்துறை ஆய்வு செய்யாது.

3. 2017 - 18 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாமதமாக, 2018 டிசம்பர் 31ம் தேதி தாக்கல் செய்தால், 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அந்த தேதிக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்டால், அபராத தொகை உயரும். எனினும், ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் தாமதமாக தாக்கல் செய்தால், 1,000 ரூபாய் வரை மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.

4. ராஜிவ்காந்தி பங்கு சந்தை சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யபவர்கள், அந்த தொகையை வருமான வரி கணக்கில் காட்டி கழித்து கொள்ளலாம் என, 2012 - 13ல் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், 2018 -19 நிதியாண்டுக்கு பிறகு இந்த சலுகை கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அசையா சொத்து முதலீடு
5. அசையா சொத்துக்களில் முதலீடு செய்பவர்கள், அவற்றுக்கு வரி செலுத்தாமல் மூன்று ஆண்டுகள் வரை வைத்து இருக்கலாம் என்ற நடைமுறை முன்பு இருந்தது. தற்போது, அது, இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல், அசையா சொத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்க, 20 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்.

6. நீண்டகால முதலீடுகள் மூலம் லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கும் புது சிக்கல் வந்துள்ளது. இதற்கான அடிப்படை ஆண்டு, 1981 ஏப்ரல், 1ம் தேதியில் இருந்து, 2001 ஏப்ரல், 1ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. 

7. தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையமான நகாய், ஆர்.இ.சி., ஆகியவற்றின் பத்திரங்களில் முதலீடு செய்யபவர்களுக்கு வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சலுகை மேலும் சில பத்திரங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

8. மாத வாடகையாக, 50,000 ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் தனி நபர்கள், 5 சதவீத டி.டி.எஸ்., பிடித்தம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிக தொகையை வாடகையாக பெறுபவர்களில் ஏராளமானோர் வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள். இது, வரும் ஜூன், 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஆதார் கட்டாயம்
9.ஜூலை, 1ம் தேதி முதல் பான் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களும், வருமான வரி கணக்கு செலுத்துபவர்களும் ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்துடன், ரொக்க பண பரிமாற்ற அளவு, இரண்டு லட்சம் ரூபாய் வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10. தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள தொகையில் ஒரு பகுதியை திரும்ப பெறுபவர்கள், அதற்காக எந்த வரியையும் செலுத்த வேண்டாம். அதாவது பென்ஷன் தொகையில், 25 சதவீதம் வரை அவசர தேவைக்காக, பணி ஓய்வு பெறுபவதற்கு முன்பே திரும்ப பெறலாம். அதே போல், பணி ஓய்வு பெறும் போது, பென்ஷன் தொகையில், வரி ஏதும் இல்லாமல், 40 சதவீதம் வரை திரும்ப பெறலாம்.

இத்துடன், கார், இருசக்கர வாகனம், மருத்துவ காப்பீடு ஆகியவற்றுக்கான பிரிமியம் தொகை, இன்று முதல் அதிகரிக்கிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்து இருப்பவர்கள், குறைந்தபட்ச தொகையை இருப்பு வைக்காமல் இருந்தால், அபராதம் செலுத்தும் திட்டமும், இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

நன்றி : தினமலர் நாளிதழ் -01.04.2017

Tuesday, February 28, 2017

எந்தெந்த வழிகளில் வருமான வரியை குறைக்கலாம்?


எந்தெந்த வழிகளில் வருமான வரியை குறைக்கலாம்?

வருமான வரியை பிரிவு 80சி-ன் கீழ் குறைக்க முதலீடு செய்யும் முன்பு இதை படிங்க..! 

முதலீடு மட்டும் இல்லாமல் வேறு என்ன வழிகளில் எல்லாம் வரியைக் குறைக்கலாம் என்று தெரியுமா உங்களுக்கு? 

வருமான வரி செலுத்தும் அனைவரும் வரியைக் குறைக்க முதலில் தேர்வு செய்வது பிரிவு 80சி-இன் கீழ் முதலீடு செய்வது ஆகும். முதலீடு மட்டும் இல்லாமல் வேறு என்ன வழிகளில் எல்லாம் வரியைக் குறைக்கலாம் என்று தெரியுமா உங்களுக்கு?

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி 

முதலில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் எவ்வளவு பிடித்தம் செய்யப்படுகின்றது என்று சரிபார்க்க வேண்டும். மாத சம்பளம் வாங்கும் ஒருவரின் அடிப்படை ஊதியம் மாதம் 15,000 ரூபாய் என்றால் ஆண்டுக்கு 21,600 அதாவது 12 சதவீத அடிப்படை சம்பளத்திற்கு வரி செலுத்த தேவையில்லை.

பிரிவு 80சி முதலீட்டிற்கு மட்டுமா..? 

இல்லை, பிரிவு 80சி முதலீட்டிற்கு மட்டும் என்று நினைப்பது தவறு.இதில் நாம் செய்யும் பல செலவுகளைக் கணக்கு காண்பிக்க இயலும். குழந்தைகளின் படிப்பு செலவையும் பிரிவு 80சி-ன் கீழ் கணக்கு காண்பித்து வரியைக் குறைக்க இயலும்.

ஹோம் லோன் 

ஒருவர் ஹோம் லோன் மூலம் வீடு கட்டியிருந்தால் அதற்கு மாதம் 20,000 ரூபாய் தவனைச் செலுத்தி வருகிறீர்கள் என்றால் ஆண்டுக்கு 84,000 ரூபாய் வரை வரி விலக்கு பெற இயலும்.

காப்பீடு திட்டங்கள் 

ஆயுள் காப்பீடு திட்டங்கள், மருத்துவக் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் அதற்கும் பிரிவு 80சி-ன் கீழ் வரி விலக்கு பெற இயலும்.

குறிப்பு 

எனவே வரியைக் குறைக்க முதலீடு திட்டங்களைத் தேடி ஓடும் முன்பு நாம் என்ன செலவுகள் எல்லாம் தற்போது செய்து வருகிறோம் என்று கண்டறிதல் மேலே கூரிய படி ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டம், குழந்தைகள் கல்வி பயிற்சிக் கட்டணம், ஹோம் லோன் தவனைப் போன்று பல வழிகளில் வரி விலக்கு பெற இயலும்.

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » பர்சனல் பைனான்ஸ் 30.01.2017

Monday, January 30, 2017

மற்றவர் கணக்கில் பணம் பாய்ந்தது பினாமி சட்டம்

மற்றவர் கணக்கில் பணம் பாய்ந்தது பினாமி சட்டம்

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, மற்றவர் வங்கிக் கணக்கில், பணத்தை செலுத்தியவர்கள் மீது, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், மற்றவர்களுடைய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி, அதற்கு சிறு தொகையை கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளாக பலர் மாற்றினர்.
வருமான வரித்துறைக்கு அதிகாரம்                     

'
இவ்வாறு மற்றவர் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினால், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என,வருமான வரித்துறை எச்சரித்திருந்தது.

கடந்த ஆண்டு, நவ., 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள பினாமி சட்டத்தின் கீழ், கடும் அபராதம் மற்றும் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.

மேலும், சொத்தை பறிமுதல் செய்யவும், வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.

87 பேருக்கு நோட்டீஸ்

இதற்கிடையில், செல்லாத ரூபாய்நோட்டுகளை வங்கிகளில் செலுத்துவதற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு, 2016, டிச., 30 உடன் முடிந்தது. அந்த காலத்தில், வங்கி கணக்குகளில் செய்யப்பட்ட, 'டிபாசிட்'கள் குறித்து வருமான வரித் துறை ஆய்வு செய்து வருகிறது.
Advertisement
அந்த ஆய்வுகளின் அடிப்படையில், பினாமி பெயரில், கறுப்புப் பணத்தை செலுத்தி ஏமாற்றியதாக, 87 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'
மேலும், 42 வழக்குகளில், கோடிக்கணக்கான ரூபாய் உள்ளிட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என, வருமான வரித்துறை நேற்று தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் – 30.01.2017 

Thursday, January 19, 2017

வங்கியில் டெபாசிட்… வருமான வரி நோட்டீஸ் வந்தால்


வங்கியில் டெபாசிட்… வருமான வரி நோட்டீஸ் வந்தால் 

பழைய 500, 1,000 ரூபாய் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பலரும் அதிகத் தொகையை வங்கிகளில் டெபாசிட் செய்திருக்கிறார்கள். ஏறக்குறைய 60 லட்சம் பேர் சுமார்  7 லட்சம் கோடி ரூபாயை வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 3 முதல் 4 லட்சம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருக்கலாம் என வருமான வரித் துறை சந்தேகிக்கிறது.

இந்த நிலையில், நடப்புக்கணக்கில் ரூ.12.5 லட்சம், சேமிப்புக் கணக்கில் ரூ.2.5 லட்சம் தொகைக்கு மேல் டெபாசிட் செய்திருந்தால், அந்த விவரங்களை வங்கிகள், வருமான வரித் துறைக்கு அனுப்பி வருகின்றன. இதுபோன்றவர்களுக்கு வருமான வரித் துறையிடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வர வாய்ப்பு இருக்கிறது.

இப்படி வருமான வரித் துறையில் இருந்து நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும், எப்போதெல்லாம் நோட்டீஸ் வரும் என்பதை சென்னையின் முன்னணி ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார் விளக்கி சொன்னார்.

‘‘கிடைத்த வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் இருப்பது, வருமானத்தைத் தவறாக கணக்குக் காட்டி இருப்பது, செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமல் இருப்பது, குறிப்பிட்டத் தொகைக்கு மேல் வருமானம் வந்தும் வருமான வரித் துறையிடம் வருமான வரித் தாக்கல் செய்யாமல் இருப்பது, தவறாக வரிக் கணக்குத் தாக்கல் செய்வது, தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் தாக்கல் செய்வது போன்ற காரணங்களுக்காக வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வரும். 

இப்படி நோட்டீஸ் வந்தவுடன் பதறவோ, பரபரப்படையவோ வேண்டாம். வருமான வரித் துறையிடமிருந்து தேவை இல்லாமல் யாருக்கும் நோட்டீஸ் வராது. உங்கள் வரவு செலவுக் கணக்கில் வழக்கத்துக்கு மாறாக ஏதோ ஒரு விஷயம் நடந்திருந்து, அதற்கான விளக்கத்தைப் பெற வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்புகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

ஒருவருக்கு நோட்டீஸ் வந்தவுடன், என்ன காரணத்துக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குப் புரியவில்லை எனில், ஒரு ஆடிட்டரிடம் சென்று, இந்த நோட்டீஸ் ஏன் வந்திருக்கிறது என்று கேட்டு, விளக்கம் பெறலாம். வருமான வரித் துறை கேட்கும் கேள்விகளுக்கு என்னென்ன ஆதாரங்கள் உங்களிடம் உள்ளது என்பதை எடுத்துச் சொல்லலாம். 

வரவு செலவுக் கணக்கைப் பொறுத்தவரை, ஆடிட்டரிடமோ அல்லது வருமான வரித் துறையினரிடமோ மறைக்க முயற்சிப்பது குற்றமாகும். எனவே, வரிச் சட்டத்துக்குட்பட்டு, ஆடிட்டர் தரும் யோசனைகளின்படி தகுந்த ஆதாரங்களை எடுத்துக்கொண்டு வருமான வரித் துறை அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளிப்பதன் மூலம் வருமான வரித் துறையினர் அனுப்பும் நோட்டீஸை எந்தப் பதற்றமும் இல்லாமல் எதிர்கொள்ளலாம்.

வருமான வரி வரம்பைவிட சிறிதளவு தொகை மட்டுமே வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் பட்சத்தில், அதற்கான விளக்கத்தை நீங்களே தந்துவிட முடியும் என்று நம்பினால், நேரடியாக வருமான வரித் துறை அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் தரலாம்.

ஆனாலும், வருமான வரி தொடர்பாக சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால், அந்த விஷயங்களைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன்.

  வியாபாரிகளுக்கு!

பொதுவாக, 1 கோடி ரூபாய்க்கு மேல் டேர்ன் ஓவர் இருந்தால், கட்டாயமாக ஒரு ஆடிட்டரிடம் கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். மொத்த கணக்குவழக்குகளை ஆடிட்டர் சரிபார்த்து கையொப்பம் இட்டிருக்க வேண்டும். இதுவே 1 கோடி ரூபாய்க்குக் கீழ் என்றால், வியாபாரிகள் தங்களுடைய வரவு செலவுப் புத்தகங்களைச் சரியாக வைத்திருந்தால் போதும்.

ஓர் உதாரணம் மூலம் இதைப் புரிந்துகொள்ள முற்படுவோம். 

ஒருவரின் நிறுவனம் அல்லது கடையில் மாத டேர்ன் ஓவர் சராசரியாக ரூ.5 லட்சமாக இருந்து வருவதாக வைத்துக் கொள்வோம். திடீரென்று ரூ.5 லட்சத்துக்கு மேல் வியாபாரக் கணக்குகளின் மூலம் கிடைத்ததாக டெபாசிட் செய்தால், வரித் துறையினர் நிச்சயம் கேள்விக் கேட்க வாய்ப்பிருக்கிறது. அப்படிக் கேட்கும்போது வியாபாரிகள் அவர்களின் பிரச்னைகளை விளக்கமாக எடுத்துச் சொல்லலாம். பிசினஸில் ரொக்கத்தின் தேவை எவ்வளவுக்கு இருந்தது என்பதை எல்லாம் வியாபாரிகள்தான் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

  கடன்கள்! 

நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ நீங்கள் கடன் தந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் தந்த பணத்தை கடன் வாங்கியவர் உங்களுக்குத் திரும்பத் தருகிறார். அவர் தந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மொத்தமாக வங்கியில் டெபாசிட் செய்தால், வருமான வரித் துறையினர் கேள்வி எழுப்புவார்கள்.

பொதுவாக, வருமான வரி சட்டப்படி, ரூ.20,000-க்கு மேல் மனைவி, குழந்தை என்று எந்த ரத்தபந்தமாக இருந்தாலும், வங்கி வரையோலை மற்றும் காசோலை அல்லது நெட்பேங்கிங் மூலமாகத்தான் கடன்  கொடுக்க வேண்டும்.  அப்போது தான் கடன் கொடுக்கப்பட்டதாக வருமான வரித் துறையினர் கணக்கில் எடுத்துக் கொண்டு, திரும்பப் பெறும் கடன் தொகையை வருமானமாகக் கருதமாட்டார்கள். அப்படி இல்லாதபட்சத்தில், நீங்கள் கடன் கொடுத்து, திரும்பப் பெற்ற தொகையை வருமானமாகக் கருதி, வரி விதிக்கவே செய்வார்கள்.   

அதுமட்டுமின்றி, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ரொக்கமாகக் கடன் வழங்கி இருப்பது வரித் துறையினருக்குத் தெரியவந்தால், கொடுக்கப்பட்ட கடன் தொகைக்குச் சமமான தொகை அபராதமாக விதிக்கப்படும்.

எனவே, உறவினர்களுக்கு ரொக்கமாக கடன் கொடுத்திருக்கும்பட்சத்தில், வருமான வரித் துறையினருடன் வாக்குவாதம் செய்யாமல், திரும்ப வந்த தொகையை வருமானமாகக் காட்டி, அதற்கான வரியைக் கணக்கிட்டு செலுத்திவிடுவது உத்தமம். இது தனி நபர்கள் மற்றும் வியாபாரிகள் இருவருக்கும் பொருந்தும்.

 சொத்துகள்!

நடுத்தர வருமானப் பிரிவினர் செய்யும் தவறுகளில் மிக முக்கியமானது, வீடு மற்றும் மனை வாங்கும்போது ரொக்கமாகப் பணம் தருவதுதான். தங்கம் தொடங்கி வீடுகள், ரியல் எஸ்டேட் சொத்துகள் வரை எல்லாவற்றையும் ரொக்கமாக வாங்குவதையே நம்மில் பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

வருமான வரிச் சட்டப்படி ரூ.20,000-க்கு மேல் ரொக்கமாகத் தந்து பொருட்களை வாங்கும்போது காசோலை அல்லது வரையோலையாகத்தான் செலுத்த வேண்டும். அதேபோல்,  ரூ.20,000 ரூபாய்க்கு மேல் சொத்துகளை விற்கும்போதும் நாம் பணமாக வாங்காமல், காசோலை அல்லது வங்கி வரையோலையாகத்தான் பெற வேண்டும்.

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 95 சதவிகித மக்களுக்கு இப்படியொரு சட்டம் இருப்பதே தெரியவில்லை. காரணம், இந்திய மொத்த மக்கள் தொகையில் வெறும் 5.17 கோடி பேர்தான் வரிக் கணக்குத் தாக்கல் செய்கிறார்கள்.

 தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்!

தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்று, கையில் ரொக்கமாகப் பணத்தை வைத்திருந்தால், அவை இதர வருமானம் என்று கருதி, 30% வரி விதிக்கப்படும். அதோடு, எந்த நிதி ஆண்டில் சொத்து விற்கப்பட்டதோ, அதற்கு அடுத்த நிதி ஆண்டின் முதல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதத்துக்கும், கட்டவேண்டிய வரிக்கு வருமான வரி சட்டப் பிரிவு 234A, 234B, 234C-ன்படி 1% வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

சொத்துகளை (தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்) காசோலை அல்லது டிடி-யாகப் பெற்றிருந்தால், அதற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 20% செலுத்தும்படி வரித் துறையினர் ஏற்கெனவே அறிவுறுத்தி இருப்பார்கள்.

ஒருவேளை, இப்படி நீங்கள் செய்யாமல் விட்டிருந்தால், இப்போது அந்தப் பணத்துக்கு 20% நீண்ட கால மூலதன ஆதாய வரி மற்றும் எந்த நிதி ஆண்டில் சொத்து விற்கப்பட்டதோ, அதற்கு அடுத்த நிதி ஆண்டின் முதல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதத்துக்கும் 1% வட்டி செலுத்த வேண்டியிருக்கும். 

விவசாயிகளுக்கு!

இதுவே விவசாய நிலமாக இருந்து, அவர்கள் கிராமத்தில் எந்த ஒரு வங்கியும் இல்லாத நிலையில், நிலத்தை விற்றிருந்தால், கிடைத்த தொகையை ரொக்கமாகப் பெற்றிருக்கலாம். ஆனால், விவசாய நிலத்துக்கு இருக்கும் பட்டா மற்றும் சிட்டா போன்றவற்றில் ‘விவசாய நிலம்’ என்று குறிப்பிடப்பட்டு, பயிர் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போது இந்தப் பணத்தை பக்கத்து ஊரில் இருக்கும் வங்கிகளில் சென்று செலுத்தலாம்.

இதுகுறித்து வரித் துறையினர் கேள்வி எழுப்பினால், வங்கி இல்லாத காரணத்தைக் குறிப்பிட்டு, முறையான வருமான வரித் தாக்கல் செய்யவேண்டி இருக்கும். விவசாய நிலங்களுக்கு மூலதன ஆதாய வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

 விளக்கம் போதவில்லை எனில்…?

நோட்டீஸ் வரப் பெற்றவர் கொடுக்கும் விளக்கம், வருமான வரித் துறை அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனில், அதிகாரிகள் விதிக்கும் அபராதத்தையும், வட்டியையும் செலுத்த வேண்டும். அதோடு, தாமதமாக வரி செலுத்தியதற்கு, செலுத்த வேண்டிய வரித் தொகையில் 1%  வட்டியாக கட்ட வேண்டியிருக்கும்.

எனவே, நோட்டீஸ் வரப் பெற்றவர் அளிக்கும் விளக்கங்கள் வரித் துறை அதிகாரிகளுக்கு திருப்தி அளிப்பதாக இருக்க வேண்டும். அப்போதுதான் வரித் துறை அதிகாரிகள், அபராதம் விதிக்காமல் வட்டியை மட்டும் கட்ட அனுமதிப்பார்கள். 

  மேல் முறையீடு!

வருமான வரித் துறை அதிகாரி, வட்டியைக் கட்டச் சொல்லி அறிவுறுத்தியபின், மேலதிகாரிகளிடம் முறையீடு செய்ய முடியாது. எனவே, வரித்  துறை அதிகாரிகளை அணுகும் முன் வரி மற்றும் வட்டியை மட்டும் கட்டிவிட்டு வரும் வகையில் நேர்மையாகப் பதில்களை தயார் செய்துகொண்டு, தகுந்த ஆதாரங்களோடு செல்ல வேண்டும். தவறான பதில்களால் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று முடித்தார் ஆடிட்டர் சதீஷ்குமார்.

சம்பளக்காரர்களாக இருந்தாலும் சரி, தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, வரவு செலவுக் கணக்கை முறையாக மேற்கொள்ளும் பட்சத்தில், எந்தச் சிக்கலிலும் சிக்க வாய்ப்பே இல்லை என்பது மட்டும் நிச்சயம்!

வரியும் வட்டியும்!

வங்கியில் வரவு வைக்கப்பட்ட மொத்தப் பணத்துக்கு இணையாக, வரும் வரிக் கணக்கீட்டு ஆண்டில் வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிட்டால், வருமான வரித் துறையினர் வரியை மட்டுமே கணக்கிடுவர். அபராதம் விதிக்க மாட்டார்கள். ஆனால், தாமதமாக வரி செலுத்துவதால் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். முன்கூட்டியே அதாவது, இந்த நிதி ஆண்டிலேயே வரி செலுத்தியிருந்தால், வட்டி  செலுத்தத் தேவை இருக்காது.

நன்றி : நாணயம் விகடன் - 22.01.2017

Saturday, December 24, 2016

ஒரே பரிவர்த்தனையில் 2 லட்சம்


ஒரே பரிவர்த்தனையில் 2 லட்சம்

ரூ.2 லட்சம் ரொக்க பரிவர்த்தனை: வருமான வரித்துறை புதிய அறிவிப்பு

வர்த்தகர்கள் ரூ.2 லட்சத்துக்கும் மேல் ரொக்கத்தின் மூலமாக வர்த்தகம் செய்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.

வருமான வரி விதிகள் 1962-ல் விதி 114-இ குறித்து பல்வேறு சந் தேகங்கள் வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டன. 

அதிலும் குறிப்பாக ஒரே பரிவர்த்தனையில் 2 லட்ச ரூபாய் மேல் வர்த்தகம் செய்தால் அந்த விவரத்தை வருமான வரித்துறைக்கு சமர்பிக்க வேண்டுமா என்பது போன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இந்த சந்தேகங்களை தெளிவு படுத்தும் வகையில் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் (சிபிடிடி) அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளது. ``விதி 114, உட்பிரிவு 3-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிதிப் பரிவர்த்தனைகள் அறிக் கையை சமர்பிக்கும் போது ஒரே பரிவர்த்தனையில் 2 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் செய்தால் அதற்குரிய ரசீதை சமர்பிக்க வேண்டும்’’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : 'தி இந்து' தமிழ் நாளிதழ் – 24.12.2016





Wednesday, January 27, 2016

வருமான வரி நோட்டீஸ் வந்தால்


வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
- ஜெ.சரவணன் 
இன்னும் இரண்டு மாதங்களில் 2015 - 16-ம் நிதி ஆண்டு நிறைவடைந்துவிடும். மார்ச் 31-ம் தேதிக்குள் எல்லோரும் தங்கள் வருவாய் கணக்கை வருமான வரித் துறைக்கு சமர்ப்பிக்க தயாராக வேண்டும். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் நமக்கெல்லாம் வருமானமாவது வரியாவது என்று சும்மா இருந்துகொண்டிருப்போம். அப்போதுதான் வருமான வரித் துறையிடமிருந்து திடீர் நோட்டீஸ் வரும்.
நோட்டீஸை பார்த்ததும் நமக்கே தெரியாமல் இவ்வளவு வருமானம் நம் கணக்கில் எப்படி வந்தது, எங்கே நாம் தவறு செய்தோம், அச்சச்சோ அபராதம், சிறை தண்டனை இதெல்லாம் இருக்குமோ? என்று பயந்து பதற ஆரம்பித்துவிடுவோம். ஆனால், நாம் செய்ய வேண்டியதை சரியான நேரத்தில் சரியாகச் செய்தாலே இது போன்ற நோட்டீஸ் பிரச்னைகளில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும். 
வருமான வரித் துறையிலிருந்து இதுபோன்ற நோட்டீஸ்கள் வரும் சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும், எதற்காகவெல்லாம் நோட்டீஸ் அனுப்பப்படும், இது போன்ற நோட்டீஸ்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விகளை சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் எஸ்.சதீஷ்குமாரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 
“நோட்டீஸ் வந்ததும் முதலில் அலட்சியப் படுத்தாமல் அதை முழுமையாகப் படிக்க வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள பெயர், பான் எண் போன்ற விவரங்கள் உங்களுடையது தானா என்பதைத் தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். 
பொதுவாக, இதுபோன்ற விவகாரங்களை வருமான வரித்துறையைச் சார்ந்த உளவு மற்றும் குற்றப் புலனாய்வு இயக்குநரகம்தான் கையாண்டு வருகிறது. வரி செலுத்துவோர், வரி செலுத்தாதவர் என்ற பாரபட்சமில்லாமல் அதிக மதிப்பில் பணம் மற்றும் சொத்துப் பரிவர்த்தனை செய்யும் அனைவரின் வருமானம் குறித்த விவரங்களும் இந்தத் துறையிடம் இருக்கும். நமக்கே தெரியாத நம்முடைய முதலீடு, சேமிப்பு போன்றவை மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த விவரங்களும் அந்தத் துறையிடம் இருக்கும். அதனால் வரியிலிருந்து தப்பிக்க முடியாது. 
எதற்கெல்லாம் நோட்டீஸ் வரும்?
வருமான வரி செலுத்தும் நிலையில் உள்ள ஒருவர் தன்னுடைய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டாலும், வரி செலுத்த வேண்டிய மதிப்பில் உள்ள வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் இருந்தாலும் நோட்டீஸ் அனுப்பப்படும். கட்ட வேண்டிய வருமான வரிக்கான வட்டியும் செலுத்துவதுடன் கட்டாயம் அபராதத்தையும் கட்ட வேண்டியிருக்கும். நீங்கள் பெறும் வருமானத்துக்கு வரி பிடிக்கப்பட்டு இருந்தாலும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் நோட்டீஸ் அனுப்பப்படும். 
அதேபோல் கீழே தரப்பட்டுள்ள அதிக மதிப்பிலான பணம் மற்றும் சொத்து பரிவர்த்தனைகளை நாம் கணக்கில் காட்டா விட்டாலும் நோட்டீஸ் அனுப்பப்படும். 
* ரூ.30 லட்சத்துக்கும் மேல் நிலமோ, வீடோ வாங்கினாலும் விற்றாலும் 
* சேமிப்புக் கணக்கில் வருடத்துக்கு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக பரிவர்த்தனை இருந்தால்
*  ஒரே நாளில் ரூ.50,000-க்கும் அதிகமாக அடிக்கடி டெபாசிட் செய்தால்
* வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக கிரெடிட் கார்டுக்குக் கட்டணம் கட்டியிருந்தால்
* நிரந்தர இருப்பு வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமானால் 
* மியூச்சுவல் ஃபண்ட், ஈக்விட்டி பங்குகள் போன்றவை வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமானால் 
அதேபோல், வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றாலும், ஆடம்பரமாக திருமணம் செய்தாலும், ஏன் வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்றாலும், இன்னும் சில காரணங்களுக்காகவும் நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது. 
நீங்கள் ஒரு நிறுவனத்தில் ஊழியராக இருக்கிறீர்கள் என்றால், உங்கள் வருமானத்துக்கான வரிப் பிடித்தம் செய்யப்படும். ஆனால், உங்களுடைய நிறுவனத் தரப்பில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய தவறியிருந்தால் உங்களுக்கு நோட்டீஸ் வரும். 
மேலும், ரூ.50 லட்சத்துக்கும் மேலாக இடமோ, வீடோ வாங்கும்போது, இந்திய குடிமக்களுக்கு 1 சதவிகிதமும், என்ஆர்ஐ-களுக்கு 20 சதவிகிதமும் வரிப் பிடித்தம் செய்யப்படும். விற்றவர் தனது வருவாய்க் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், இருவருக்குமே வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்படும். 
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், நிறுவனங்களின் கடன் பத்திரங்கள், கூட்டுறவு கடன் சங்கம் போன்றவற்றில் வைத்துள்ள முதலீடுகளுக்குக் கிடைக்கும் வட்டி முதற்கொண்டு அனைத்து விவரங்களும் வருமான வரித் துறையிடம் இருக்கும்.
மேலும், ரூ.50,000-க்கும் மேலாக உணவகம் மற்றும் விடுதிகளிலோ, விமானத்திலோ செலவழித்தால், அதற்கு பான் எண் குறிப்பிட வேண்டும். ரூ.2 லட்சம் ரொக்கமாகக் கொடுத்து ஆபரணங்கள் வாங்கினாலும் பான் எண் அவசியம்.  
பொதுவாக, மக்கள் தங்களின் வருமான வரியைக் குறைப்பதற்காக தங்களின் வருவாயைத் தெரிந்தோ, தெரியாமலோ குறைத்துக் காட்டிவிடுகிறார்கள். ஆனால், அவர்களின் சேமிப்புக் கணக்கு, நிரந்தர வைப்புக் கணக்கு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், பங்குகளில் செய்துள்ள முதலீடு மற்றும் அசையாத சொத்துக்கள் என அனைத்து விவரங்களும் வருமான வரித் துறைக்குச் சென்றுவிடும். நாம் வங்கியில் வைத்துள்ள இருப்புக்குக் கிடைக்கும் வட்டியும் வருமானக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
வருமான வரித் துறை, தானாகவே வரி செலுத்துவோரின் விவரங்கள் அப்டேட் ஆகும் வகையில் நன்கு மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் மூலம் விவரங்களையெல்லாம் பராமரித்து வருகிறது. அதனால் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமான வருமானம் வரும் ஒவ்வொருவரின் தகவல்களும் அதில் புதுப்பிக்கப்படும். 
வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கும், தவறாக தாக்கல் செய்தவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். ஒவ்வொரு நிதி ஆண்டு க்கான நோட்டீஸ்களும் இரண்டு நிதி ஆண்டு களுக்குப்பின் அனுப்பப்படும். 
குறிப்பிட்ட நேரத்தில் வரிக் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால், 90% வரை அபராதம் உண்டு. வரி ஏய்ப்பு தொகை மிக அதிகமாக இருந்தால், சிறை தண்டனையும் உண்டு.

நோட்டீஸ் வந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா?
நம்முடைய வருமான வரிக் கணக்கை சரியாக தாக்கல் செய்திருந்தால், நோட்டீஸ் வர வாய்ப்பில்லை. அப்படி நோட்டீஸ் வந்தால், நீங்கள் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கையும், நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள வருமான வரிக் கணக்கையும் ஒப்பிட்டு பாருங்கள். நோட்டீஸில் கூடுதலாக குறிப்பிட்டுள்ள வருமானத்துக்கு நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்திருந்தால் கவலைப்பட தேவையில்லை. 
ஆனால், நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் அனைத்துக்கும் நம்மிடம் பதில் இருக்க வேண்டும். அதாவது, நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள தாக்கல் செய்யப்படாத வருமானத்தை, நாம் ஏற்கெனவே வருமான வரித் தாக்கலில் குறிப்பிட்டிருந்தால், அதற்கான ஆவணத்தின் நகல், தாக்கல் செய்த தேதி, தாக்கல் செய்ததற்கான ஆதாரச் சான்று எண் ஆகியவற்றை அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு குறிப்பிட்ட நபர் நேராக போக வேண்டும் என்று அவசியமில்லை. தபாலிலும் அனுப்பலாம். அதனால் நாம் தாக்கல் செய்த ஆவணங்களைச் சில ஆண்டுகளுக்கு பத்திரமாக வைத்திருப்பது நல்லது.
வரிக் கணக்குக்கான மதிப்பீட்டு நிதி ஆண்டிலிருந்து 6 ஆண்டுகள் வரையில் வருமான வரி அதிகாரிகள் கேள்விகள் எழுப்பக் கூடும். அந்த வகையில் ஒருவர் 7 ஆண்டுகள் வரைக்கும் வருமானம் மற்றும் வரிச் சலுகை முதலீட்டுக்கான ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. 
அதேசமயம், சில நேரங்களில் உங்களுக்கே தெரியாமல் சில வருமானத்தை நீங்கள் குறிப்பிட தவறியிருக்கக் கூடும். நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள வருமானத்தை நீங்கள் குறிப்பிடாமல் இருந்திருந்தால், அதனை உடனடியாக தாக்கல் செய்து, பின்னர் அந்த ஆவணங்களை வருமான வரித்துறைக்கு அனுப்ப வேண்டும். 
இதுவரை வருமான வரிக் கணக்கு தாக்கல் என்றால் என்னவென்றே தெரியாத, புதிய நபருக்கு நோட்டீஸ் வருகிறது என்றால், நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள வருமானத்துக்கு வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். 
அந்தச் சமயத்தில் அனைத்து வருமான விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், அவர் வாங்கிய அல்லது விற்ற சொத்துக்களின் விவரங்கள், தன்னுடைய பான் எண் ஆகியவற்றை ஆன்லைனில் பதிவு செய்து, பின்னர் பதிவு செய்ததும் வரும் 26ஏஎஸ் என்ற ஆவணத்தை நகல் எடுத்து நம்முடைய அனைத்து வருமான விவரங்களையும் ஒளிவுமறைவு இல்லாமல் குறிப்பிட்டு வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும். பிறகு நாம் செலுத்த வேண்டிய வருமான வரியை, அதற்கான அபராதத்தையும் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும்” என்று கூறி முடித்தார்.
இவர் சொல்வதிலிருந்து, நாம் நம்முடைய வருமானத்தில் எவற்றுக்கெல்லாம் வரி செலுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். 
மேலும், அவற்றை மறைக்காமல் குறிப்பிட்டு, சரியான நேரத்தில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால் இதுபோன்ற நோட்டீஸ்கள் வருவதைத் தவிர்க்க முடியும். 

நன்றி : விகடன் ஃபைனான்ஸ் ஸ்லெஷல் - 23.01.2016