disalbe Right click

Wednesday, July 6, 2016

காதல் திருமணம் செய்தவர்கள் குடும்ப அட்டை பெற


காதல் திருமணம் செய்தவர்கள் குடும்ப அட்டை பெற
என்ன செய்ய வேண்டும்?

பெற்றோர்களை எதிர்த்து, காதல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு குடும்ப அட்டை பெறுவது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. இதனை உணர்ந்த உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதற்கென ஒரு கடிதத்தை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது இதனை தங்களது விண்ணப்பத்தில் குறிப்பிட்டு குடும்ப அட்டையை வேண்டினால் அதனைப் பெறுவதற்கு இலகுவாக இருக்கும்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் 
                             பாதுகாப்புத் துறை
                             
அனுப்புனர்
திரு க.ராஜாராமன், இ.ஆ.ப.,
ஆணையாளர்
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் ்
நுகர்வோர் பாதுகாப்புத் துறை,
சேப்பாக்கம்,
சென்னை-600 005.

பெறுநர்
1. ஆணையாளர் (நகரம்) வடக்கு, தெற்கு
   உணவுப்பொருள் வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத் துறை,
சேப்பாக்கம்,
சென்னை-600 006.

2. அனைத்து மாவட்ட விநியோக அலுவலர்கள்

ந.க.எண்:இ4/8920/2009, நாள்:20.05.2009

அய்யா, 
          பொருள்:பொது விநியோகத்திட்டம்-குடும்ப அட்டைகள்- காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்- அவர்கள் பெயர்களை பெற்றொர் குடும்ப அட்டையில் இருந்து நீக்குவது - அறிவுரைகள் வழ்ங்கப்படுகின்றன.
                                                         *****************
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்களுக்கு குடும்ப அட்டை பெறுவதற்கு ஏதுவாக, அவர்கள் பெயர்களை அவர்களது பெற்றோர் குடும்ப அட்டையில் இருந்து நீக்க கோரும்போது, சில பெற்றோர்கள் அவர்களது குடும்ப அட்டையினை தர மறுக்கிறார்கள் என தெரிவித்து தங்கள் பெயர்களை தங்கள் பெற்றோர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கி உரிய சான்று வழங்க கோரி இத்துறைக்கு கோரிக்கைகள் தந்துள்ளனர்.

இந்த கோரிக்கைகள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு கீழ்க் கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1) காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆண்களாக இருப்பின் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், பெண்களாக இருப்பின் 18 வயது பூர்த்தி அடைந்தவர்க்ளாக இருப்பின் அவர்கள் அவர்களது பெயரை அவர்கள் பெற்றோர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கம் செய்யக் கோரி மனு செய்யலாம். குடும்ப உறுப்பினர்களின் பெயரை நீக்கி சான்றிதழ் பெற குடும்பத்தலைவர் மனு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளிலிருந்து இந்த இனத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. 

2) இவ்வாறு அளிக்கப்படும் மனுக்களுடன் கீழ்க்கண்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

அ. வயது வரம்பு மற்றும் விண்ணப்பதாரரின் பெற்றோர் பெயர்கள்-இரண்டையும் நிரூபிப்பதற்கான பிறப்புச் சான்றிதழ் நகல் அல்லது கல்விச் சான்று.

ஆ. பெற்றோர் குடும்ப அட்டை நகல் அல்லது குடும்ப அட்டை எண், அங்காடி குறியீடு எண், பெற்றோர் பெயர், குடும்ப அட்டையில் உள்ள முகவரி,  தற்போது பெற்றோர்கள் குடியிருக்கும் முகவரி, திருமண்பதிவு சான்றிதழ் நகல்.

3) இவ்வாறு பெறப்படும் மனுக்களின் மீது நீக்கல் சான்றிதழ் கோரும் மனுக்களுக்குரிய காலக் கெடுவிற்குள் வட்ட வழங்கல் அலுவலர் / உதவி ஆணையாளர் நீக்கல் சான்றிதழ் வழங்க வேண்டும்.

4) குடும்ப அட்டை இல்லாமல் இத்தகைய இன்ங்களில் சிறப்பினமாக நீக்கல் சான்றிதழ் வழங்கப்படுவதால் பெயர் நீக்கப்பட்டதற்கா்ன பதிவுகளை குடும்ப அட்டை்கள் தகவல் கணிணி பதிவில் பெயரை நீக்கம் செய்வதுடன் யூனிட்/நபர் குறைக்கப்பட்ட விவரத்தை அலுவலக மற்றும் அங்காடி அ மற்றும் வழங்கல் பதிவேட்டில் பதிவு்கள் செய்ய வேண்டும். மேலும் இவ்வாறு பெயர் நீக்கம் செய்யப்பட்டு வழங்கப்படும் ஆணையின் நகல் குடும்பத் தலைவருக்கு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

5) இந்த அறிவுரைகள் உடன் அமுலுக்கு வருகின்றன. இக் கடிதத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலை மறு அஞ்சலில் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப் படுகிறது.
                                                                                (ஒம்) க.ராஜாராமன்
                                                                                     ஆணையாளர்
நகல்:-

1. அரசுச் செயலாளர்,
கூட்டுறவு உணவு மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத் துறை
சென்னை-600 009.

2. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்
 சென்னை - 600 010.

3. நிர்வாக இயக்குநர், 
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
சென்னை-600012.

4. அனைத்து உதவி ஆணையாளர்கள்

5. அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள்

6. ஆவண காப்பு அலுவலகத்திலுள்ள 
  அனைத்து்பிரிவுகள்

7. இருப்புக் கோப்பு.

ஆணைப்படி அனுப்புதல்

Tuesday, July 5, 2016

கணக்குப் பாடத்தை கண்மணிகள் விரும்ப


கணக்குப் பாடத்தை கண்மணிகள் விரும்ப 
என்ன செய்ய வேண்டும்?

கசக்கும் கணக்கு… கற்கண்டாய் இனிக்க..!

குழந்தைகளிடம் அவர்களுக்குப் பிடிக்காத விஷயம் என்ன என்று கேட்டால், நிறைய குழந்தைகள் ‘மேத்ஸ்’ என்பார்கள். ஆனால், கணிதம் இல்லாத துறை என்று இன்றைய தேதியில் எதுவும் இல்லை. மேலும், போட்டித் தேர்வுகள், ஆப்டிட்யூட் டெஸ்ட் என்று எதிர்காலத்தை எதிர்கொள்ள, கணிதம் மிகவும் முக்கியம். அப்படியிருக்க, பள்ளிப் பருவத்தில் கசக்கும் கணக்கை உங்கள் குழந்தைகளுக்கு இனிக்கவைக்க, பெற்றோர்களுக்கு சில சூத்திரங்கள் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த மனநல ஆலோசகர் தேவிப்பிரியா.

‘‘சூழ்நிலைதான் பல குழந்தைகளுக்கு கணக்கு என்றால் வெறுப்பு ஏற்படக் காரணம். மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும், ‘மேத்ஸ்ல மார்க் எடுத்தாதான் அறிவாளி’ என்றும், ‘கணக்கு வரலைன்னா மக்கு’ என்றும் பள்ளியில் ஆசிரியர் தொடங்கி வீட்டில் பெற்றோர்வரை சொல்வதுதான், குழந்தைகளுக்கு கணக்கு என்றால் பயமும் வெறுப்பும் ஏற்பட முதல் காரணம். முதலில் அதைத் தவிர்த்து, கணிதத்தின் மீது படர்ந்திருக்கும் அதிமேதாவித்தனத்தை அகற்றி, ‘கணக்கு ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல. மற்ற பாடங்களைப்போலதான்’ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.  

கணக்கை மதிப்பெண் பாடமாக குழந்தைகளுக்கு அறிவுறுத்தி, பயமுறுத்தாமல், அதை வாழ்க் கைப் பாடமாக அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போதும், புரியவைக்கும்போதும் அதன் மீதான மிரட்சி விலகி, ஆர்வம் ஏற்படும். அதற்கு…

 தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களில் பெரும்பாலான குழந்தைகளுக்கு இயல்பாகவே ஆர்வம் இருக்கும். அதில் வரும் கதைகளும் இதற்குக் காரணம். எனவே, பாடப்புத்தகத்தில் இருக்கும் கணக்குகளை குழந்தைகளுக்கு கதைகளாகச் சொல்லித் தீர்க்கச் சொல்லுங்கள். 10+10 என்ன என்பதை, ‘உங்கிட்ட 10 சாக்பீஸ், எங்கிட்ட 10 சாக்பீஸ்… மொத்தம் எத்தனை?’ என்று கேட்கலாம். அதேபோல, பாடப்புத்தகங்கள் தவிர்த்தும் நீங்களாக அவர்களுக்கு சின்னச் சின்ன கணக்குகள் தரலாம்.

 தினசரி வாழ்க்கையில் கணக்கு எங்கெல் லாம் பயன்படுகிறது என்பதை, அவற்றைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களிலேயே அவர்களுக்குப் பொறுமையுடன் எடுத்துச் சொல்லுங்கள். ‘பாலுக்கு எத்தனை டீஸ்பூன் சர்க்கரை போட்டிருக்கேன்?’, ‘நம்ம வீட்டுல இருக்கிற கதவெல்லாம் என்ன வடிவத்துல இருக்கு?’, ‘இந்த சுவர் கடிகாரம் வட்ட வடிவமா, கூம்பு வடிவமா?’, ‘உங்க ஸ்கூலுக்கும் நம்ம வீட்டுக்கும் உள்ள தூரத்தை மீட்டர்னு சொல்வோமா, லிட்டர்னு சொல்வோமா?’ என்பது போன்ற கேள்விகளைக் கேட்பதன் மூலம்… அவர்களுக்கு வகுப்பில் நடத்தப்படும் பாடம் தொடர்பான கணித அம்சங்களை, வீட்டிலும் உரையாடல்கள் வழியாக அறிவுறுத்திக்கொண்டே இருங்கள்.

 மைண்ட் மேப்பிங், பொருட்கள் மூலமாக கணக்கு செய்யவைப்பது என அவர்களின் கற்பனைக்கு வாய்ப்பளியுங்கள்.

 ஒரு விஷயத்தை கேட்பதைவிட, பார்க்கும்போது எளிதாகப் புரியும் (விஷுவல் லேர்னிங்). உதாரணமாக, லிட்டர், கிலோகிராம் போன்ற அளவீடுகளைப் புரியவைக்க, பால் வாங்கும்போது, மார்க்கெட் செல்லும்போது குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். மளிகைக்கடைக்கு அழைத்துச் சென்று, வாங்கும் பொருட்களுக்கு பணம் கொடுப்பதை கவனிக்கவைத்து… கூட்டல், கழித்தல் கணக்குகளைப் புரியவைக்கலாம்.

 வடிவங்கள், அளவீடுகள், கூட்டல், பெருக்கல், கழித்தல் என ஏதாவது ஒரு தலைப்பை எடுத்து, ‘இது சரியா, அது சரியா?’ என்று சுவாரஸ்யமான விவாதங்களாக அதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். இதனால் வகுப்பில் ஆசிரியரின் கேள்விக்குப் பதில் அளிக்கும் தன்னம்பிக்கை அவர்களுக்குக் கிடைக்கும்.

 கணித ஃபார்முலாக்களை பாடல்களாகக் கற்றுக்கொடுங்கள்.

 வீடியோ கேம்ஸ், கணினி பயன்பாடு பழக்கமுள்ள குழந்தைகளுக்கு, ஆன்லைன் மேத்ஸ் கேம்ஸ் அறிமுகப்படுத்தலாம். இதில் ‘டைமிங்’ முக்கியம் என்பதால், விரல்களில் கணக்கு செய்யும் குழந்தைகள் விரைவாக மனக்கணக்குக்கு மாறிவிடுவார்கள்.

  மூளைக்கு வேலை தரக்கூடிய சுடோக்கு, மேத்ஸ் ட்ரிக்ஸ் போன்ற கணித விளையாட்டுகள் அவர்களுக்கு பயத்தை போக்கும்.

மொத்தத்தில், குதூகலமாகக் கணக்குபோடக் கற்றுத் தந்தால் உங்கள் பிள்ளையும் குட்டி ராமானுஜம்தான்!

நன்றி : அவள்விகடன் - 12.07.2016

குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு-155,

குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு-155,
சட்டம் வகுத்தவர்கள் நமது நாட்டில் நடைபெறும் குற்றங்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளனர்.
1) கைது செய்வதற்குரிய குற்றம். (Cognizable offence)
2) கைது செய்ய முடியாத குற்றம். (Non cognizable offence)
கைது செய்தற்குரிய குற்றங்களை செய்தவர்கள் பற்றிய புகாரை நாம், காவல்துறையினருக்கு குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 154 மூலம் தெரிவிக்க வேண்டும். நாம் எழுதும் புகாரின் தலைப்பிலேயே இதனை தெரிவித்தால் புகாரைப்பற்றி எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொள்ள காவல்துறை அலுவலருக்கு உதவியாக இருக்கும்.
கைது செய்ய முடியாத குற்றங்களைப் பற்றி புகார் செய்வதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் குற்ற விசாரணைச் சட்டம் பிரிவு - 155 பயன்படுத்துகிறார்கள்.
குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, (Cr. P.C) பிரிவு : 154
*** ஒரு காவல்நிலைய எல்லைக்குள் கைது செய்ய முடியாத குற்றம் ஒன்று நடைபெற்று உள்ளதாக ஒருவர் புகார் அளிக்கும் போது, அதற்கென்று காவல் நிலையத்தில் வைத்து பராமரித்து வருகின்ற குறிப்பேட்டில் அதனை பதிவு செய்து அந்த வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். புகார் அளித்தவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
*** கைது செய்ய முடியாத வழக்கு ஒன்றை காவல் நிலைய அலுவலராலோ அல்லது காவல்நிலைய அதிகாரியாலோ தன்னிச்சையாக விசாரணை செய்வதற்கும், மேல்விசாரணைக்கு அனுப்புவதற்கும் முடியாது.
*** அதே நேரத்தில் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால், காவல் நிலைய அலுவலர்/அதிகாரி அந்த வழக்கை விசாரணை செய்யலாம்.
*** நீதிமன்ற உத்தரவு பெற்ற பிறகு காவல்நிலைய அலுவலர்/அதிகாரி அந்த வழக்கில், ”கைது செய்வதற்குரிய வழக்கில் உள்ள அதிகாரங்களில்கைது செய்வதைத் தவிர அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருப்பார்.
குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, (Cr. P.C) பிரிவு : 154 (4)
*** ஒரு வழக்கில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட குற்றங்கள் செய்யப்பட்டு இருந்து அதில் ஏதாவது ஒன்று கைது செய்யக்கூடிய குற்றமாக இருந்தால், அந்த வழக்கு கைது செய்யப்படக் கூடிய வழக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

குற்ற விசாரணைச் சட்டம் பிரிவு-160

குற்ற விசாரணைச் சட்டம் பிரிவு-160, என்ன செய்ய வேண்டும்?
அழைத்து விசாரணை செய்வதற்குள்ள அதிகாரம்
ஏதாவது ஒரு காரணத்திற்காக நம்மை அழைத்து விசாரிப்பதற்கு காவல் நிலைய அலுவலர் அல்லது அதிகாரிக்கு கொடுக்கப் பட்டுள்ள அதிகாரம் என்ன? நமக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் என்ன?  என்பதைப் பற்றி இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்நிலையத்தில் யாரோ ஒருவரால் கொடுக்கப்பட்ட புகார் மூலமாகவோ, அல்லது ஒரு வழக்கு நிகழ்வு மற்றும் சூழ்நிலைகளுடன் தொடர்பு உள்ளவர் போல் நாம் இருந்து, காவல்நிலைய அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் நாம் குடியிருந்தால், நம்மை தன்முன் ஆஜராகுமாறு அந்த வழக்கு சம்பந்தமாக புலனாய்வு செய்து வருகின்ற காவல் நிலைய அலுவலர் அல்லது அதிகாரி எழுத்து முலமாக நமக்கு உத்தரவிடலாம்.
xxxxx என்பவர் xxxxx அன்று கொடுத்த புகாரின்படி தங்களிடம் (xxxxx வழக்கு சம்பந்தமாக தங்களை) விசாரணை செய்ய வேண்டியதிருப்பதால் தாங்கள் xxxxx அன்று காலை (அல்லது மாலை) xxxxx மணிக்கு xxxxx காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்த உத்தரவு எழுத்து மூலமாக இருக்க வேண்டும்.
அதில் நிலைய முத்திரையுடன் அதிகாரியின் கையெழுத்தும் இருக்கவேண்டும்.
அழைக்கப்பட்ட எவரும் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
அந்த வழக்குக்கு உரிய ஆவணங்கள் ஏதேனும் நம்மிடமிருந்தாலோ அல்லது இருக்கிறது என்று அவர்கள் நினைத்தாலோ, அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த காவல்துறை அதிகாரி விரும்பினால் அதனை கொண்டுவரும்படியும் அதில் குறிப்பிட வேண்டும்.

அந்த புகார் அல்லது வழக்கு சம்பந்தமாக எதனையும் மறைக்காமல் நமக்கு தெரிந்த அனைத்தையும் அவரிடம் தெரிவிப்பது மற்றும் ஆதாரங்கள் இருந்தால் அவற்றை ஒப்படைப்பது நமது கடமையாகும்.
ஆனால், ஒரு பெண்ணையோ அல்லது பதினைந்து வயதுக்குட்பட்ட ஒரு சிறுவனையோ அந்த புகார் அல்லது வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்வதாக இருந்தால் அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கு சென்றுதான் ஒரு காவல் அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.
ஒருவேளை நாம் அந்த காவல்நிலைய அதிகார எல்லைக்குள் வசிக்காதவராக இருந்து நம்மை அவர்கள் விசாரணைக்கு அழைத்தால், நமக்கு ஏற்படுகின்ற நியாயமான போக்குவரத்து செலவை இந்தப் பிரிவின் கீழ் காவல்துறையினர் கொடுக்க வேண்டும்.
ஆனால், இந்தப்பிரிவில் உள்ளது போல எந்த காவல்நிலைய அலுவலரும் 100% நடந்து கொள்வதில்லை. அதனை அரசும் ஏனோ கண்டுகொள்ளவதில்லை.
பொதுமக்களும் சட்டம் தெரியாததாலும், பயத்தாலும் இதனை வற்புறுத்துவதில்லை.
****************************************  அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

பாஸ்போர்ட் எடுக்க பயனுள்ள 12 யோசனைகள்


பாஸ்போர்ட் எடுக்க பயனுள்ள 12 யோசனைகள்

வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களை அதிக சிரமமின்றி கடக்க உதவும் `ஒரு டஜன் யோசனைகள்’ பகுதியில், இந்தமுறை பாஸ்போர்ட் வாங்குவதற்கான வழிமுறைகள்! விண்ணப்பம், கட்டணம், புதுப்பித்தல், காத்திருப்பு நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதோ...

விண்ணப்பம்

புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிப் பவர்கள்
http://www.passportindia.gov.in
என்ற ஆன்லைன் முகவரி மூலமாகவே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை உறுதிசெய்யும் விதமாக உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் இ-சேவை மையத்தின் முகவரியும், உங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தேதி, நேரமும் உங்களுக்கு பதிலாக கிடைக்கும். பிறகு, நீங்கள் வாங்கும் பாஸ்போர்ட்டுக்கு உரிய கட்டணத்தை இணையதளம் மூலமாகவோ அல்லது எஸ்பிஐ (SBI) வங்கி சலான் மூலமாகவோ செலுத்தி, உரிய நேரம் மற்றும் தேதியில் இ-சேவை மையத்துக்குச் செல்லவும்.

இணைக்க வேண்டியவை!

பிறப்புச் சான்றிதழ் (ஜனவரி 26, 1989-க்குப் பிறகு பிறந்தவர்கள், வருவாய்த்துறை அல்லது பதிவுத்துறை வழங்கிய பிறப்புச் சான்றிதழ்களை மட்டுமே ஆதாரமாகக் காட்ட முடியும்), இருப்பிடச் சான்றிதழ், கல்வித்தகுதிக்கான சான்றிதழ், பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் செலுத்திய ரசீது. மேற்கண்ட ஆவணங்களின் நகல்களை விண்ணப்பத்தாரர் சுயகையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும். இந்த நகல்களின் அசல் ஆவணங்களை, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தன்று கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும்.

வெளியூரிலும் விண்ணப்பிக்கலாம்

வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அப்பகுதியிலேயேகூட பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க லாம். அவர்கள் தங்கிப் படிக்கும் இடத்தின் முகவரியை ‘தற்போதைய முகவரி’யாக அளித்து, அதற்கான ஆதாரத்தை அந்தக் கல்வி நிறுவன முதல்வரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

காத்திருப்பு நேரம்

பொதுவாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து விண்ணப்பம் காவல்துறைக்கு அனுப்பப்படும். நீங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பகுதியில்தான் வசிக்கிறீர்களா, ஏதேனும் குற்ற வழக்குகள் உங்கள் பெயரில் பதிவாகியுள்ளனவா என உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து (5 முதல் 10 நாட்களில்) விசாரித்து, நீங்கள் குற்றமற்றவர் என காவல்துறை அறிக்கை பெற்ற பிறகே, பாஸ்போர்ட் வழங்கப்படும். எனவே, நார்மல் பாஸ்போர்ட் வாங்க குறைந்தது 25 நாட்கள் ஆகும்.

‘நான் உடனே வெளிநாடு செல்ல வேண்டும்’ என்பவர்கள் தட்கல் முறையில் 3 முதல் 5 நாட்களில் பாஸ்போர்ட் பெறமுடியும். ஆனால், காவல் துறையினரின் சரிபார்ப்புக்கு முன்னரே பாஸ்போர்ட்டை உங்கள் கையில் கொடுப்பதால் மூன்று வகையான இருப்பிடச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணமும் கொஞ்சம் அதிகம். போலீஸ் விசாரணைக்கு முன்னரே பாஸ்போர்ட்டை வழங்கினாலும், விசாரணையில் உங்கள் மீது வழக்குகள் இருப்பது தெரிய வந்தால், உடனே பாஸ்போர்ட் முடக்கப்படும்.

கட்டணம்

நார்மல் பாஸ்போர்ட்

(36 பக்கங்கள் கொண்டது) - 1,500 ரூபாய்.

60 பக்கங்கள் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட் (அடிக்கடி வெளிநாடு செல்கிறவர்கள் பயன்படுத்துவது) - 500 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும். தட்கல் - 3,500 ரூபாய்

மைனர் - 1,000 ரூபாய்

டேமேஜ் / லாஸ்ட் - 3,000 ரூபாய்

புதுப்பித்தல்

ஒருமுறை எடுக்கும் பாஸ்போர்ட் 10 ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும். தற்போது பாஸ்போர்ட்டில் வருடங்களை நீட்டித்து ‘ரெனியூவல்’ செய்யப்படுவதில்லை. எனவே, பாஸ்போர்ட் காலாவதியானால் மீண்டும் புது பாஸ்போர்ட்தான் பெற வேண்டும். காலாவதி தேதிக்கு இன்னும் ஓராண்டு இருக்கும்போது தொடங்கி, காலாவதி தேதிக்கு பின் மூன்று ஆண்டுகள் வரை விண்ணப்பிக்கலாம். பழைய பாஸ்போர்ட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். விலாசம் மாறியிருந்தால் அதற்கான சான்றிதழ்களுடன் புதுப்பிக்கலாம். பாஸ்போர்ட் புதுப்பிக்க
http://www.passportindia.gov.in
என்ற இணைய முகவரியில், ரீ-இஷ்யூக்கான காரணத்தை க்ளிக் செய்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இரண்டாவது முறை விண்ணப்பித்தாலும் புதிதாக விண்ணப்பிப்பவர் போலவே பாஸ்போர்ட் சேவை மையங்களை அணுகி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வெளிநாட்டில் தங்கி இருக்கும்போது பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக வேண்டும்.

குழந்தைகளுக்கு

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் எடுக்கும்போது, அவர்களின் பெற்றோருக்கு பாஸ்போர்ட் இருந்தால் காவல்துறை அறிக்கை தேவைப்படாது.

பெயர் மாற்றம்

பாஸ்போர்ட்டில் பெயரில் ஏதேனும் தவறுகள் இருந்தால், பெயர் சரியாக இருக்கும் ஆவணங்களை மீண்டும் சமர்ப்பித்து, பாஸ்போர்ட்டை ரீ-இஷ்யூ செய்துகொள்ளலாம். ‘மேஜர் நேம் சேஞ்ச்’ எனில், மாற்றப்பட்ட பெயரை, தங்களுடைய நிரந்தர முகவரி மற்றும் தற்போதைய முகவரி உள்ள இடங்களில் பிரசுரமாகும் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து, அந்த செய்தித்தாளோடு மற்ற தேவையான ஆவணங்களை இணைத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

திருமணத்துக்குப் பிறகு...

கணவரின் பெயரை தங்கள் பெயருடன் இணைக்க விரும்பும் பெண்கள் நவம்பர் 24, 2009-க்குப் பிறகு திருமணமாகி இருந்தால் திருமணச் சான்றிதழை இணைத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் திருமணச் சான்று அல்லது ஜாயின்ட் நோட்டரி அஃபிடவிட் (Joint Notary Affidavit) இணைக்க வேண்டும்.

பாஸ்போர்ட் தொலைந்தால்...

உடனே காவல் நிலையத்தில் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் உங்களுடைய பாஸ்போர்ட்டை பயன்படுத் தாதவாறு அது முடக்கப்படும். உங்களுடைய பாஸ்போர்ட் கிடைக்காத பட்சத்தில், அவர்கள் ‘Non Traceable’ சான்றிதழ் தருவார்கள். பிறகு பாஸ்போர்ட் ரீ-இஷ்யூவுக்காக விண்ணப்பித்து, தொலைந்த பாஸ்போர்ட்டின் நகல் (இருந்தால்), ‘அனக்சர் எல்’

என்ற உறுதிமொழிப் பத்திரம்,

நோட்டரி பப்ளிக் ஒப்புதல் இவற்றை எல்லாம் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏமாற வேண்டாம்!

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள், ஏஜென்டுகளை நாடும்போது கவனம் தேவை. அவர்கள் இஷ்டம்போல பணம் வசூலிக்கக்கூடும். உங்கள் பகுதியில் (வட்டாட்சியர் அலுவலகத்தில்) உள்ள இ-சேவை மையத்தை அணுகினால், உரிய செலவில் பாஸ்போர்ட் பெறமுடியும்.

மேலதிக தகவல்கள்

பாஸ்போர்ட் தொடர்பான சந்தேகங்களை மேலும் தெளிவுபடுத்திக்கொள்ள
www.passportindia.gov.in
என்ற இணையதள முகவரியையோ அல்லது 1800-258-1800 என்ற டோல்ஃப்ரீ எண்ணையோ தொடர்புகொள்ளுங்கள்.

சு.சூர்யா கோமதி

நன்றி : அவள்விகடன் - 01.12.2015