disalbe Right click

Sunday, December 3, 2017

தமிழகத்திற்கு மத்திய அரசு நெருக்கடி

வீட்டு வசதி திட்டங்களை கிடப்பில் போட முடியாது 
ஏழை மக்களுக்காக மேற்கொள்ளப்படும் வீட்டு வசதி திட்டங்களை, மத்திய அரசு நேரடியாக கண்காணிக்க துவங்கி உள்ளதால், தமிழக அரசின் வீட்டுவசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய திட்டங்களை தாமதப்படுத்தும் அதிகாரிகளுக்கு, நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஏழை மக்களுக்கான வீட்டுவசதி திட்டங்கள், குடிசை மாற்று வாரியம் வாயிலாகவும், குறைந்த வருவாய் பிரிவினருக்கான திட்டங்கள், வீட்டுவசதி வாரியங்கள் வாயிலாகவும் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், 2015ல், மத்திய அரசு, 'அனைவருக்கும் வீடு' திட்டத்தை அறிவித்தது. இதில், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு இலவச வீடு; நிலம் வைத்துள்ளோருக்கு வீடு கட்ட மானிய கடன்; குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு வீட்டுக்கடனில் வட்டி மானியம் ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் குடிசை மாற்று வாரியம் வாயிலாக, மொத்தம் 8.29 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு, விண்ணப்பங்கள் பெறுவது, பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட பணிகளை, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் உயர் அதிகார குழு, நேரடியாக கண்காணித்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, திட்டப்பணிகளையும் நேரடியாக கண்காணிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், 2017 -- 18ல், 7,000 கோடி ரூபாயில், இரண்டு லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கான பயனாளிகள் விபரங்களை, மத்திய அரசுக்கு அளிக்க உள்ளோம். இதன் அடுத்தகட்டமாக, வீடுகள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், தொழில்நுட்பம் போன்ற விபரங்களையும், முன்கூட்டியே, மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என, உத்தரவு வந்துள்ளது.
திட்டத்தில் கட்டப்படும் வீடு எண்ணிக்கை, அவற்றின் பரப்பளவு, கட்டுமான தொழில்நுட்பம், கட்டுமான பணிகள் துவங்கிய நாள், முடிக்கப்படும் நாள், தேர்வு செய்யப்பட்ட நிலம் மற்றும் திட்டப்பணிகளின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்களுன் கூடிய விபரங்களை, மத்திய அரசுக்கு பட்டியலாக அனுப்ப வேண்டும். இந்த விபரங்களை, மாநில அரசின் இணையதளத்தில் வெளியிட்டு, அதன் இணைப்பு முகவரியையும் அனுப்ப வேண்டும்.
மத்திய அரசின் இந்த உத்தரவால், திட்டப்பணிகளில் எவ்வித மாற்றத்தையும் அதிகாரிகளால் செய்ய முடியாது. மேலும், திட்டங்களின் உண்மை நிலவரம் வெளிப்படையாக மக்களுக்கு தெரியவரும். திட்ட பொறுப்பு அதிகாரிகள், ஒப்பந்ததாரருடன் சேர்ந்து, மோசடி செய்ய முடியாது. இத்தகைய கண்காணிப்பு திட்டப்பணிகளை விரைவுபடுத்துவதுடன், மோசடி அதிகாரிகளுக்கு கடிவாளம் போடுவதாக உள்ளது. இவ்வாறு கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 04.12.201

ஒரே நாளில் இரு முரண்பட்ட தீர்ப்பு

வருத்தம் தெரிவித்தது சுப்ரீம் கோர்ட் 
புதுடில்லி: உத்தரகண்ட் உயர் நீதிமன்றம், ஒரே நாளில், ஒன்றுடன் ஒன்று, தொடர்புடைய இரு வெவ்வேறு வழக்குகளில், முரண்பட்ட இரு உத்தரவுகளை பிறப்பித்ததால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 10 ஆண்டுக்கு மேல் தீர்வு கிடைக்காததற்கு, உச்ச நீதிமன்றம் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், ரூர்க்கி நகரை சேர்ந்த பெண், ஷ்யாம் லதா. இவர், 2004ல், ஹரித்துவார் போலீஸ் உயரதிகாரியிடம் அளித்த புகாரில், தன் இரு சகோதரர்கள், தன் கையெழுத்தை போலியாக போட்டு, தனக்கு சொந்தமான கடையில் வாடகைக்கு இருப்பதாக ஆவணம் தயாரித்திருப்பதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதற்கிடையே, குற்றஞ் சாட்டப்பட்ட சகோதரர்களில் ஒருவர், போலியாக தயாரித்த வாடகை ரசீதை தாக்கல் செய்து, கடையில் இருந்து தன்னை காலி செய்யக்கூடாது எனக் கோரி, சிவில் வழக்கு தொடர்ந்தார்.
அதேசமயம், பெண் அளித்த புகாரை விசாரித்த விசாரணை அதிகாரி, வாடகை ரசீதுகளை அனுப்பி, கையெழுத்து நிபுணர் மூலம் சோதிக்க வேண்டும் எனக்கூறி, சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த சிவில் நீதிமன்றம், வாடகை ரசீதில் உள்ள கையெழுத்துகளை புகைப்படம் எடுத்து, சோதனை நடத்த அனுமதி அளித்தது.
இருப்பினும், தடயவியல் துறையை சேர்ந்த கையெழுத்து நிபுணர், வாடகை ரசீதில் உள்ள கையெழுத்துகளை புகைப்படம் எடுக்க நீதிமன்றம் சென்றபோது, அதற்கான அனுமதியை, நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால், வாடகை ரசீதில் உள்ள கையெழுத்தை சோதிக்காமல், போலியான கையெழுத்தை கண்டுபிடிக்க ஆதாரம் இல்லை என, இறுதி அறிக்கையை, விசாரணை அதிகாரி அளிக்க நேரிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண், கையெழுத்தை சோதிக்க அனுமதி மறுத்த சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை ஏற்று, வழக்கின் அனைத்து ஆவணங்களையும், ஜுடிஷியல் நீதிமன்றத்துக்கு மாற்றும்படி, செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, பெண்ணின் சகோதரர், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேசமயம், பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, ஜுடிஷியல் மாஜிஸ்திரேட், விசாரணை அதிகாரியின் விசாரணையை தொடர, அனுமதி அளித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்தும், பெண்ணின் சகோதரர், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் வேறு ஒரு மனு தாக்கல் செய்தார். இதனால், தொடர்புடைய ஒரே வழக்கில், இரண்டு வெவ்வேறு மனுக்கள், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகி இருந்தன.
இந்த மனுக்கள் மீது, 2006ல், ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஒரு நீதிபதி, வாடகை ரசீதில் உள்ள கையெழுத்துகளை புகைப்படம் எடுத்து ஆய்வு செய்ய, கையெழுத்து நிபுணருக்கும், விசாரணை அதிகாரிக்கும், அனுமதி அளித்தார். மற்றொரு நீதிபதி, அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்தார்.
முரண்பட்ட இரு உத்தரவுகளை எதிர்த்து, 2009ல், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்குகளை தொடர்ந்த பெண், தற்போது இறந்து விட்டார். அவரது சட்டரீதியிலான பிரதிநிதி, வழக்கை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆர்.கே.அகர்வால், சஞ்சய் கிஷண் கவுல் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில், ஒரே நாளில், தொடர்புடைய இரு வழக்குகளில், இரண்டு நீதிபதிகள் அளித்த முரண்பட்ட உத்தரவுகளால், கடை உரிமையாளரான பெண்ணுக்கு, அளவுகடந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு, நீதிமன்றம் வருத்தம் தெரிவிக்கிறது. அந்த பெண்ணின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கிறது. வாடகை ரசீதில் உள்ள கையெழுத்துகளை, கையெழுத்து நிபுணர் ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 04.12.2017 

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் கைது

Image may contain: one or more people
சென்னை: 'சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவரை, 180 நாட்கள் வரை காவலில் வைக்க, மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மார்ச் மாதம், ரிஸ்வான் ஷெரிப் என்பவர் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார். அவ்வப்போது, அவருக்கு காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது. 90 நாட்கள் கடந்த பின், காவல் நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து, ரிஸ்வான் தரப்பில் காவல் நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், 'கைது செய்யப்பட்டு, 90 நாட்கள் முடிந்த பின், காவல் நீட்டிப்பு செய்ய, மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரமில்லை; எனவே, காவல் நீட்டிப்பு சட்ட விரோதமானது' என, கூறப்பட்டது. 
மனுவை, நீதிபதிகள் ஜெய்சந்திரன், பாஸ்கரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. போலீஸ் தரப்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம், 'புலன் விசாரணையை முடிக்க, மாஜிஸ்திரேட்டிடம் அவகாசம் கேட்கப்பட்டது; சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் காவல் நீட்டிப்பு செய்ய, மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது' என்றார்.
அதைத் தொடர்ந்து, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: 
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், 180 நாட்கள் வரை காவல் நீட்டிப்பு செய்ய, மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது. 
காவல் நீட்டிப்பு செய்வதற்கான முகாந்திரங்கள் இருப்பதாக கருதினால் அந்த நடவடிக்கையை, மாஜிஸ்திரேட் மேற்கொள்ளலாம்.
இந்த வழக்கை பொறுத்தவரை, காவல் நீட்டிப்பு செய்வதற்கு தேவையான நடைமுறையை மாஜிஸ்திரேட் பின்பற்றிஉள்ளார். எனவே, காவல் நீட்டிப்பு செய்ததில் நடைமுறை மீறல் எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் – 03.12.2016

Saturday, December 2, 2017

போட்டோ மிக்ஸ்

போட்டோ எடுத்து ரசிப்பது என்பது இன்றைக்கு ஒரு குழந்தை விளையாட்டாக மாறிவிட்டது. சிறுவர்கள் கூட மிக அழகாக போட்டோ எடுக்கும் வகையில், திறன் கொண்ட எளிய டிஜிட்டல் சாதனங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றுடன், அதே அளவிற்குத் திறன் கொண்ட கேமராக்கள் இணைந்த மொபைல் போன்களும் பெருகி உள்ளன. எனவே போட்டோ எடுப்பது என்பது அவ்வளவாக செலவில்லாத ஒரு பொழுது போக்காக மாறிவிட்டது. இவற்றுடன், இன்னும் நம் கற்பனைக்குத் தீனி போடும் வகையில், இந்த போட்டோக்களை மாற்றி அமைக்க, மெருகூட்ட பல அப்ளிகேஷன் புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றான போட்டோ மிக்ஸ் (FotoMix) என்பது குறித்து இங்கு காணலாம்.
இந்த இலவச புரோகிராம் கிடைக்கும் இணைய தள முகவரி: http://www.diphso.no/FotoMix.html. 2.8 எம்.பி. அளவில் கிடைக்கும் இதனை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிது. ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிடுகிறது. புரோகிராம் இயக்கத்திற்குத் தயாராய்க் கிடைக்கிறது. இதன் மூலம், போட்டோக்களின் பின்புலத்தினை மாற்றி அமைக்கலாம். படங்களில் இருந்து நமக்குப் பிடித்த அல்லது பிடிக்காதவர்களை இணைக்கலாம், நீக்கலாம். பல போட்டோக்களை வெட்டி ஒட்டி கொலாஜ் எனப்படும் ஓவிய போட்டோக்களை அமைக்கலாம். வால் பேப்பர்கள், சிடி, டிவிடி கவர்களை உருவாக்கலாம். இறுதியில் கிடைக்கும் போட்டோ இவ்வாறு மாற்றப்பட்டது என அறிந்து கொள்ளாத அளவிற்கு இயற்கையாக எடுக்கப்பட்ட போட்டோ போல காட்சி அளிக்கும். அனைத்தும் முடிக்கப்பட்ட போட்டோக்களை பிரிண்ட் எடுக்கலாம். மின் அஞ்சல் மூலம் அனுப்பலாம். டீ கப், பனியன் ஆகியவற்றில் பிரிண்ட் செய்திடக் கொடுக்கலாம்
விண்டோஸ் இயக்கத்தில் இந்த புரோகிராம் இயங்குகிறது