disalbe Right click

Showing posts with label நீதிமன்றம். Show all posts
Showing posts with label நீதிமன்றம். Show all posts

Sunday, November 19, 2017

எக்ஸ் பார்ட்டி என்றால்......?

எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு
நீதிமன்ற வளாகத்தில் எக்ஸ்பார்ட்டி என்ற வார்த்தை மிகவும் பிரபலமானதுசிலர் சூழ்நிலை காரணமாக தங்கள் பக்கம் நியாயம் இருந்தும் அதனை நீதிமன்றத்தில் சொல்ல முடியாமல், வலுவான ஆதாரங்கள் இருந்தும் அவற்றை நீதிமன்றத்தில் அளிக்க முடியாமல் பாதகமான தீர்ப்பை பெற்று விடுவார்கள். சில நேரங்களில் நேரமின்மை, திட்டமின்மை இல்லாமல்,   அவர்களுடைய வழக்குரைஞரே அதற்கு காரணமாகிவிடுவதும் உண்டு.
இது எந்தெந்த சூழ்நிலைகளில் நிகழ்கிறது?
நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுப்பவரை வாதி (Plaintiff) என்கிறோம். அவர் யார் மீது வழக்கு தொடுக்கிறாரோ அவரை பிரதிவாதி (Defendant) என்கிறோம்.
சிவில் வழக்குகளில் வாதியானவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவுடன், அங்கிருந்து பிரதிவாதிக்கு சம்மன் அமீனா மூலமாகவோ, தபால்துறை மூலமாகவோ அனுப்பப்படும்
இது போன்று வரும் கடிதங்களையோ, சம்மன்களையோ அதற்கு உரியவர்கள் வாங்க மறுக்கக் கூடாது. Refused என்று எழுதி அனுப்பப்பட்டிருந்தாலும் அந்தகடிதத்திலுள்ள அல்லது அந்த சம்மனில் உள்ள விஷயங்களை நீங்கள் முழுமையாக அறிந்து கொண்டதாகத்தான்  நீதிமன்றம் முடிவு செய்யும்.
அதனால், Refused என்று எழுதி அனுப்பப்பட்ட சம்மன்களினால்கூட அந்த வழக்குகளில் உங்களுக்கு எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு வரும்.
நல்ல வழக்கறிஞரிடம் வழக்கை நீங்கள் ஒப்படைத்து இருந்தாலும், குறிப்பிட்ட நாளில், உரிய நேரத்தில் அவர் நீதிமன்றத்தில் ஏதோ ஒரு காரணத்தால் ஆஜராகவில்லை என்றால், அந்த வழக்குகளில் உங்களுக்கு எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு வரும்.
ஒருவர் ஆஜராகாத அன்றே எந்த நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குவதில்லை. சில மாதங்கள் கழித்துதான் தனது தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும்.  ஆஜராகாதவர்கள் அதற்குள் இதற்கு பரிகாரம் தேடிக் கொள்லலாம்.
ஆஜராகாத சூழ்நிலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
எந்த நாளில் ஆஜராகவில்லையோ, அந்த நாளில் இருந்து முப்பது நாட்களுக்குள், ஆஜராகமுடியாத உண்மையான நிலை குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். அது பற்றி வாதியிடம் கருத்து கருத்து கேட்ட பின்னர் நீதிமன்றம் முடிவு செய்யும்.
அந்த முப்பது நாட்களுக்குள் தங்கள் சூழ்நிலையை நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியாத நிலையிலும் சிலர் இருப்பார்கள். அவர்கள் content delay application என்ற விண்ணப்பத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
தங்கள் கோரிக்கை உண்மையாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.  அதற்கு சில வகைகளில் செலவுத்தொகையினை செலுத்த கோர்ட் உத்தரவிடும்
********************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Saturday, August 12, 2017

மாஜிஸ்திரேட் ஜியாவுதீனுக்கு எங்கள் சல்யூட்!

மாஜிஸ்திரேட் ஜியாவுதீனுக்கு எங்கள் சல்யூட்!
(நீதியின் மாறுபட்ட கோணம் இது)
தச்சு வேலைக்காக, மதுரையில் இருந்து, தாராபுரம் வந்த வாலிபர் ஒருவர், பஸ் ஸ்டாண்டில் பசி தாளாமல் அங்கும், இங்கும் அலைந்தார். வேறு வழியின்றி, அங்கிருந்த ஒரு கடையில் பன்னை திருடி சாப்பிட்டார். கடைக்காரர், வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மறுநாள், நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் முன் வாலிபர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு குறித்த விபரத்தை போலீசாரிடம் கேட்டார், மாஜிஸ்திரேட், ஜியாவுதீன். 'ஐயா, பசிக்காக, பன்னை திருடி விட்டான்' என, போலீசார் கூறினர். 
அதை கேட்டு கடுப்பான அவர், 'பசின்னு ஒரு பன்னை திருடி விட்டான்; அதுக்குப் போய் சிறையா' என்றார்.'
இன்னும் புலன் விசாரணை முடியவில்லை' என்றனர், போலீசார். 
அதற்கு, மாஜிஸ்திரேட், 'இதிலே என்னய்யா இன்வஸ்டிகேஷன்' என்றார். வாலிபரை பார்த்த அவர், 'நேத்து காலை, ஒண்ணுக்கு, இரண்டுக்கு போனியா?' எனக் கேட்டார்.
ஆமாங்கய்யா போனேன்' என, வாலிபர் தலையாட்ட, 'அதெல்லாம் சரி, எங்க போன' எனக் கேட்டார், மாஜிஸ்திரேட்.
'போலீஸ் ஸ்டேஷன்லேதான்யா' என, வெட்கத்துடன் சொல்ல, போலீஸ் பக்கம் திரும்பினார், மாஜிஸ்திரேட்.
அப்புறம் இதிலென்னய்யா இன்வஸ்டிகேஷன்; அவன் திருடின பன்னை, உங்க ஸ்டேஷன்லே இன்னைக்கு வேறு விதமா விட்டுட்டு வந்துட்டான். ஆக, திருடு போன, 'பிராபர்ட்டி ரிகவரி' ஆயிடுச்சில்ல. அப்புறம் எதுக்கு ஜெயில்' என, மாஜிஸ்திரேட் கேட்க, இன்ஸ்பெக்டரும், ஏட்டும் 'திருதிரு'வென முழித்தனர்.
பசிக்கு திருடிய வாலிபருக்கு, பெரிய சைஸ் பன்னும், தண்ணீர் பாட்டிலும் வாங்கி தர, மாஜிஸ்திரேட் ஏற்பாடு செய்தார். மேலும், சொந்த ஊர் திரும்ப, பஸ் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பினார்.
நீதி என்பது, வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் தேடும் சட்டப் புத்தகங்களில் இல்லை; இதயங்களில் தான் இருக்கிறது என, அனைவருக்கும் புரிய வைத்த, மாஜிஸ்திரேட்டிற்கு பெரிய வணக்கத்தை தெரிவிப்போம்!
க.அருச்சுனன், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம்
நன்றி : தினமலர் நாளிதழ் - 12.08.2017

Tuesday, July 4, 2017

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிகாரத்தை பறித்த மத்திய அரசு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிகாரத்தை பறித்த மத்திய அரசு
புதுடில்லி: மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக அவ்வப்போது பரபரப்பு உத்தரவுகளை பிறப்பித்து வந்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான விதிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.
நீதிமன்றத்திற்கு இணையாக அதிகாரம்
தேசிய பசுமை தீர்ப்பாயம், 2010 முதல் செயல்பட்டு வருகிறது. இதன் முதன்மை பெஞ்ச் டில்லியில் உள்ளது. இதுதவிர சென்னை உட்பட நாட்டின் நான்கு இடங்களில் இதன் மண்டல பெஞ்ச்கள் உள்ளன. இத்துடன் சிம்லா, ஷில்லாங், ஜோத்பூர் மற்றும் கொச்சியில் சர்க்கியூட் பெஞ்ச்கள் உள்ளன. இந்த தீர்ப்பாயத்திற்கு நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவைகளை நிறுத்தி வைப்பது, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவது போன்றவற்றை இந்த தீர்ப்பாயத்தால மேற்கொள்ள முடியும். தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும். இந்த தீர்ப்பாயத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமன விதிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.
மாற்றப்பட்ட விதிகள்
  1.  தீர்ப்பாயத்தின் தலைவராக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தான் பொறுப்பு ஏற்க முடியும் என முந்தைய விதிகளில் இருந்தது. இது, ஓய்வு பெற்ற நீதிபதிகள் அல்லது 25 ஆண்டுகள் சட்ட அனுபவம் உள்ளவர் இந்த பதவியை ஏற்கலாம் எனக்கூறி விதி திருத்தப்பட்டுள்ளது.
  2. . தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவு தான் இறுதியானது என முந்தைய விதியில் இருந்து. இது, ஐந்து பேர் கொண்ட குழு, தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் என விதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோரை மத்திய அரசு நியமிக்கும்.
  3.  தீர்ப்பாயத்தின் தலைவரை நீக்க வேண்டும் என்றால், தலைமை நீதிபதியின் கருத்தை கேட்ட பிறகு தான் முடிவு எடுக்க முடியும் என முந்தைய விதிகளில் இருந்தது. இது, தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினரை, விசாரணை நடத்திய மத்திய அமைச்சரவை நீக்க முடியும் என விதி மாற்றப்பட்டுள்ளது. 
  4.  தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள்; அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என முந்தைய விதிகளில் கூறப்பட்டு இருந்தது. இது, தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம், மூன்று ஆண்டுகள் மட்டுமே; கிரேடு 1 அதிகாரிக்கு இணையான சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என, விதிகள் மாற்றப்பட்டுள்ளது.
  5.  தீர்ப்பாயத்தின் தலைவர் நியமனம், தலைமை நீதிபதி அல்லது அவரது பிரதிநிதி இடம் பெறும், ஐந்து பேர் கொண்ட குழுவால் தான் மேற்கொள்ளப்படும். இந்த குழுவின் பிற நான்கு உறுப்பினர்களை மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் நியமிக்கும். 
இவ்வாறு பல்வேறு விதிகளை மாற்றி அமைத்து ஜூன், 1ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு சுற்றுசூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 04.07.2017

Monday, May 8, 2017

நீதிபதி கர்ணனுக்கு சிறை... ஊடகங்களுக்குத் தடை! உச்சநீதிமன்றம் அடுத்தடுத்த அதிரடி


நீதிபதி கர்ணனுக்கு சிறை... ஊடகங்களுக்குத் தடை! உச்சநீதிமன்றம் அடுத்தடுத்த அதிரடி

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு, ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நீதிபதி கர்ணனின் உத்தரவுகளை வெளியிடவும் ஊடகங்களுக்குத் தடை விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியவர், சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன். கடந்த ஆண்டு, இவரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம்செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பித்தார் கர்ணன். அதுமட்டுமன்றி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஊழல் செய்வதாக கடிதம் ஒன்றை எழுதி, பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பிவைத்தார்.
நீதிபதி கர்ணன் இவ்வாறு செய்தது நீதிமன்றத்தை அவமதிப்பதாக உச்சநீதிமன்றம் கருதியது. எனவே, உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இதற்கிடையே, நீதிபதி கர்ணனின் மனநலம்குறித்து, கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. மனநலப் பரிசோதனைக்கு கர்ணன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால், கர்ணனுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கர்ணனின் உத்தரவுகளை வெளியிட, ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக பல உத்தரவுகளை கர்ணன் பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : விகடன் செய்திகள் - 09.05.2017

Wednesday, March 8, 2017

உயர்நீதிமன்ற வழக்கு தாக்கல் கட்டணம் உயர்வு


உயர்நீதிமன்ற வழக்கு தாக்கல் கட்டணம் உயர்வு

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், வழக்கு தாக்கல் செய்வதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும்போது, அதற்குரிய கட்டணத்தை நீதிமன்ற வில்லைகளாக (ஸ்டாம்ப்) மனுதாரர் தரப்பில் மனுவுடன் ஒட்ட வேண்டும்.

நீதிப்பேராணை (ரிட்) மனுவிற்கு 200 ரூபாய், 

ரிட் பல்வகை மனுவுக்கு 10, 

கிரிமினல் மேல்முறையீடு, 
கிரிமினல் சீராய்வு, 
கிரிமினல் அசல் மனு, 
ஆட்கொணர்வு மனுக்கு 10, 

அனைத்து பல்வகை வழக்குகளுக்கு 10, 

வக்காலத்துக்கு 10, 

அனைத்து சிவில் பல்வகை மேல்முறையீட்டு மனுக்களுக்கு 50, 

சிவில் சீராய்வு மனுக்களுக்கு 50 முதல் 200 ரூபாய் 

மதிப்புள்ள நீதிமன்ற வில்லைகளை மனுவுடன் ஒட்ட வேண்டும். 

தமிழ்நாடு நீதிமன்ற கட்டணச் சட்டப்படி, தற்போது 

ரிட் மனுவிற்கு 1000 ரூபாய், 

ரிட் பல்வகை மனு 20, 

மறு ஆய்வு மனு 500, 

கிரிமினல் மேல்முறையீடு, 
கிரிமினல் சீராய்வு, 
கிரிமினல் அசல் மனு, 
ஆட்கொணர்வு மனுக்களுக்கு 20, 

அனைத்து பல்வகை மனுக்களுக்கு 20, 

அனைத்து சிவில் பல்வகை மேல்முறையீட்டு மனுக்களுக்கு 2000, 

சிவில் சீராய்வு மனுக்களுக்கு 200 மற்றும் 500 

என உயர்த்தப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் -08.03.2017

Tuesday, January 17, 2017

ஜோக்' கோர்ட் அல்ல சுப்ரீம் கோர்ட் கண்டனம்


ஜோக்' கோர்ட் அல்ல சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடில்லி,":'சுப்ரீம் கோர்ட் என்பது வேடிக்கையான, 'ஜோக்' கோர்ட் அல்ல; எங்கள் உத்தரவை மதித்து நடக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும், பள்ளிகளில் சுகாதாரமற்ற முறையில், மதிய உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதாக கூறி, சுப்ரீம் கோர்ட்டில் தொண்டு நிறுவனம் ஒன்று, பொதுநல வழக்கு தொடர்ந்தது.

வேடிக்கையாக நினைக்கின்றன

இதை, விசாரித்த சுப்ரீம் கோர்ட், பதில் மனு தாக்கல் செய்யும்படி, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், பல மாதங்கள் ஆன பிறகும், தமிழகம், கேரளா உட்பட பல மாநிலங்கள், பதில் மனு தாக்கல் செய்ய வில்லை.இந்த வழக்கு, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர்தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது; அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மாநில அரசுகள், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை வேடிக்கையாக நினைக்கின்றன; இது, வேடிக்கையான, 'ஜோக்' கோர்ட் அல்ல. எங்கள் உத்தரவை, உரிய முறையில் பின்பற்ற வேண்டியது, மாநில அரசுகளின் கடமை.நாங்கள் கோரியபடி, இந்த வழக்கில், உடனடியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்; தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.01.2017

Wednesday, January 11, 2017

வழக்கு தாக்கல் செய்யும் நேரம் மாற்றம்


வழக்கு தாக்கல் செய்யும் நேரம் மாற்றம்

உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் நேரம் மாற்றம்

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு, அதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக காலை 10:00 முதல் மதியம் 3:00 மணிவரை வழக்கு எண் இடப்படும். 

தற்போது ரிட், ஆட்கொணர்வு, கிரிமினல் மேல்முறையீடு, கிரிமினல் சீராய்வு மனுக்களுக்கு மதியம் 1:30 மணிக்குள் வழக்கு எண் இடும் வகையில், பழைய நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மறுநாள் விசாரணைக்கு வரும் வழக்குகள் பட்டியலை விரைந்து அச்சிடவும், அவற்றை உயர்நீதிமன்ற இணையதளத்தில் முதல் நாள் இரவு 8:30 மணிக்குள் பதிவேற்றம் செய்யும் வகையிலும் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நன்றி : தினமலர் நாளிதழ் - 05.01.2017

Thursday, January 5, 2017

உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் நேரம் மாற்றம்


உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் நேரம் மாற்றம்


மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு, அதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக காலை 10:00 முதல் மதியம் 3:00 மணிவரை வழக்கு எண் இடப்படும். 

தற்போது ரிட், ஆட்கொணர்வு, கிரிமினல் மேல்முறையீடு, கிரிமினல் சீராய்வு மனுக்களுக்கு மதியம் 1:30 மணிக்குள் வழக்கு எண் இடும் வகையில், பழைய நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மறுநாள் விசாரணைக்கு வரும் வழக்குகள் பட்டியலை விரைந்து அச்சிடவும், அவற்றை உயர்நீதிமன்ற இணையதளத்தில் முதல் நாள் இரவு 8:30 மணிக்குள் பதிவேற்றம் செய்யும் வகையிலும் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நன்றி : தினமலர் நாளிதழ் - 05.01.2017